தொடர்கள்
Daily Articles
மாண்புமிகு மனிதர்கள்...!. - ஜாசன் (மூத்த பத்திரிகையாளர்)

குடும்ப பட்ஜெட்...

20201003200231828.jpeg

அந்தக் காலத்தில் குடும்ப வரவு செலவு பெண்கள் வசம்தான் இருந்தது. பெரும்பான்மை கணவர்கள் “எனக்கு எதுவும் தெரியாது. சம்பளத்தை அப்படியே தந்து விடுவேன். என் செலவுக்கு அவகிட்ட தான் கேட்டு வாங்குவேன்” என்பார்கள். இது பெருமை கலந்த உண்மை.

எங்கள் வீட்டிலும் கிட்டத்தட்ட அதே கதைதான். அப்போதெல்லாம் முதல் தேதி தான் சம்பளம். ரெவின்யூ ஸ்டாம்ப் ஒட்டிய சம்பளப் பட்டியலில் கையெழுத்துப் போடும்போது, ரெவின்யூ ஸ்டாம்ப் காசு தரவேண்டும். இப்போது நள்ளிரவில் நம் வங்கிக் கணக்கில் சம்பளத்தை வரவு வைத்து விடுகிறார்கள்.

சம்பளத்துக்கு முன்தினம் என் அம்மா ஒரு பட்ஜெட் போடுவார். முதலில் மளிகை சாமான் பட்டியல். அதில் முதலில் மஞ்சள் என்று எழுதி அதன் பிறகு வரிசையாக எல்லா மளிகை பொருட்களையும் பட்டியல் போடுவார். எங்கள் குடும்பத்தில் மத்திய - மாநில அரசுகள் பற்றாக்குறை பட்ஜெட் தான். மளிகை சாமான் பாக்கி 475 என்று இருக்கும். என் அம்மா 350 ரூபாய் தான் தருவாள். ஆனால், செட்டியார் எதுவும் பேசாமல் அந்த மாதம் மளிகை பொருளை தந்துவிடுவார். எங்கள் அண்ணன், தம்பி எல்லோருக்கும் மளிகை கடைக்குப் போக பிடிக்கும். காரணம், கொசுரு வெல்லம் கிடைக்கும். பிற்காலத்தில் ரெகுலர் கஸ்டமர்களுக்கு மளிகை கடையில் மாதம்தோறும் இலவசமாக வேர்க்கடலை பர்பி பாக்கெட் அல்லது பேரிச்சம்பழம் பாக்கெட் இலவச இணைப்பாக தருவார்கள். ஆண்டுதோறும் தினசரி காலண்டர் கிடைக்கும்.

எங்கள் வீட்டில் மாதக் கடைசி என்பது 15ஆம் தேதியே துவங்கிவிடும். முதல் பத்து நாட்கள் கூட்டு, பொரியல், சாம்பார், ரசம் என்ற மெனு. பிறகு கூட்டு அல்லது பொரியல், சாம்பார் அல்லது ரசம் என்று சுருங்கிவிடும். என்னம்மா எல்லோருக்கும் சாப்பிட போட்டு விட்டு, கடைசியாக சாப்பிடுவாள். பெரும்பாலும் ஏதாவது ஒரு சாதம் தான் இருக்கும். இதை பலமுறை நான் பார்த்திருக்கிறேன். ஆனால், அவள் அதை ஒரு குறையாக நினைக்க மாட்டாள். மோர் சாதத்தில் நிறைய தண்ணீர் ஊற்றி, கரைத்து சாப்பிடுவாள். அவ்வளவுதான் வசதி எங்களுக்கு. எங்கள் குடும்பம் பெரியது. காலப்போக்கில் என் சகோதரர்கள் சம்பாதிக்க துவங்கிய பிறகு, மளிகை சாமான் காசு கொடுத்து வாங்குவாள், நல்ல வயிறார சாப்பிடுவாள். இதை பார்க்கும்போது எனக்கு சந்தோஷமாக இருக்கும்.

இது பெரும்பாலான நடுத்தர குடும்பத்தில் நடப்பதுதான். எனக்கு தெரிந்த ஒரு தாசில்தார் எங்கள் தெருவில் இருந்தார். குடும்ப நிர்வாகத்தையும் அவர் தான் பார்ப்பார். வீட்டுக்கு தேவையான மளிகை பொருள் உள்பட சகலமும் அவரே வாங்கி வருவார். எல்லாவற்றையும் ஒரு ரூமில் பத்திரப்படுத்தி வைத்து, தினந்தோறும் தேவையானவற்றை அவர் மனைவிக்கு அவரே எடுத்துத் தருவார், ரொம்பவும் சிக்கனம். மனைவி விருப்பப்படி சமைக்க முடியாது, குழந்தைகள் ஆசைப்பட்டதை அம்மாவால் வாங்கித் தர முடியாது, செய்து தரவும் முடியாது. அவர் சிகரெட் பிடிப்பார். சிகரெட்டையும் தீப்பெட்டியையும் எடுத்து மறைத்து வைத்து, அதை கடையில் தந்து, குழந்தைகளுக்கு ஆசைப்பட்டதை அந்த அம்மா வாங்கித் தருவார்

என் அலுவலகத்தில் பெரும்பாலும் மதியம் சாப்பாட்டிற்குப் பிறகு, விலைவாசி, ஸ்கூல் பீஸ், கத்தரிக்காய் விலை பற்றியெல்லாம் ஊழியர்கள் பேசி அங்கலாய்ப்பார்கள். நான் இதைப்பற்றி என் மனைவியிடம் சொன்னால் விலைவாசி எவ்வளவு உயர்ந்துவிட்டது என்று உங்களுக்கு தெரிந்து போயிடுச்சா... அதற்கு தான் சொல்கிறேன்... பொறுப்பாய் இருங்க, சிக்கனமாக இருங்கள் என்று போதனை செய்ய ஆரம்பித்து விடுவாள். அதன்பிறகு உஷாராய் ஆபீஸ் வாதத்தை வீட்டில் பேசவே மாட்டேன்.

குருராஜன் என்று ஒரு கடை நிலை ஊழியர். அவர் மாதம் துவங்கியவுடன் 5ஆம் தேதியே எல்லோரிடமும் கடன் வாங்குவார். 20 ரூபாய், ஐம்பது ரூபாய், நூறு ரூபாய் என்று இருக்கும். ஆனால் சம்பளம் வாங்கியவுடன் உடனே எல்லோருக்கும் தேடிப்பிடித்து தந்துவிடுவார். சம்பளப் பட்டுவாடா பிரிவு உபச்சார விழா வசூல், ஊழியர் வீட்டு திருமணம் வசூல் எல்லாம் நடக்கும். இதற்கென்றே ஒருவர் இருப்பார். அவர்தான் இதை எப்போதும் எடுத்து செய்வார். அவர் வசூல் செய்யும் விஷயத்தில் கில்லாடி. சிலர் இருபது ரூபாய் தருவார்கள், சிலர் பெருமைக்கு ஐநூறு ரூபாய் தருவார்கள். முதலில் 500 ரூபாய் ஆளைதான் பிடிப்பார். அவரிடம் வாங்கியவுடன் தான் மற்றவரிடம் வசூல் நோட்டை நீட்டுவார். அதற்கு அவர் சொல்லும் காரணமே சூப்பர்... “சார் முதல்ல 20 ரூபாய் கிராக்கிகிட்ட வாங்கினா, எல்லோரும் அதே 20 ரூபாய் போட்டுடுவாங்க... அதனால நான் அவர்கிட்ட கடைசியா தான் வாங்குவேன். சிலசமயம் அவரே இந்தாப்பா என்று ரூபாயை நீட்டினால் கூட... உங்க பணம் பேங்க்ல இருக்கிற மாதிரி, அப்புறம் வாங்கிக்கிறேன்” என்று தவிர்த்து விடுவேன் என்றார். சிலர் வெள்ளிக்கிழமை என்பார்கள்.. சிலர் வீட்ல போய் பூஜை அறையில் சம்பளக் கவர் வைத்துவிட்டுத்தான் சம்பள கவரை பிரிப்பேன் என்பார்கள். அவர்களிடம் எல்லாம் மறுநாள் காலை போய் வசூல் செய்வார். இதெல்லாம் நடுத்தர ஊழியர் குடும்ப பட்ஜெட்டில் தவிர்க்கமுடியாது. இதேபோல் பஞ்சப்படி, சம்பள உயர்வு போன்ற விஷயமெல்லாம் தொலைக்காட்சி செய்திகள் சுட சுட ஒளிபரப்பாகி வருகிறது. எனவே யாரும் மனைவியை ஏமாற்ற முடியாது. சில குடும்பத்தலைவிகள் இந்த மாதம் உங்கள் சம்பளம் இவ்வளவு கூடுகிறது என்று கணக்குப் போட்டு சொல்லும் கேட்கும் அளவுக்கு இருக்கிறார்கள். காரணம் வாட்ஸப்பில் எல்லா விஷயங்களும் பொதுவுடமை ஆகிவிடுகிறது. எனவே குடும்பத் தலைவியை ஏமாற்ற நினைத்தால், அந்த கணவர் ஏமாந்துதான் போவார்.

அந்தக்கால பெரும்பாலான நடுத்தர குடும்பப் பெண்கள், கணவர் தரும் சம்பளத்தை ஊதாரித்தனமாக செலவிடுவதில்லை. கணவருக்கு தெரியாமல், கொடுத்த பணத்தில் சிக்கனம் செய்து, சீட்டு கட்டி, தீபாவளி, பொங்கல் குழந்தைகள் பள்ளி கூட செலவுகளை சமாளிப்பார்கள். இந்த வருட போனஸ் பணத்தில், நீங்க கண்ணாடியை மாற்றிக் கொள்ளுங்கள் என்று இரக்க சுபாவம் உள்ள மனைவிகளும் இந்த கலியுகத்தில் நிறையவே இருக்கிறார்கள்.

இப்போதெல்லாம் ஆன்லைன் ஷாப்பிங் வந்துவிட்டது. கொத்தமல்லி, கருவேப்பிலை கூட ஆன்லைனில் ஆர்டர் செய்தால் வந்து தருகிறார்கள். என்ன கொஞ்சம் காஸ்ட்லி. இதேபோல் குடும்ப பட்ஜெட் எல்லாம் மெல்ல காணாமல் போய்விட்டது. பற்றாக்குறை என்றால் கிரெடிட் கார்டு மூலம் வாங்கிக் கொள்ளலாம். கிரெடிட் கார்ட் நமது பணத்தை மூடி மறைக்கிறது. ஆனால் மூன்று மாதம் பணம் கட்டாமல் விட்டால், முதலில் போனில் நினைவுபடுத்தி விட்டு, அதன் பிறகு வீட்டுக்கு வந்து ஒரு பேமென்ட் ஆவது தந்தால் தான் ஆச்சி என்று கழுத்தில் கத்தி வைக்காத குறையாக வந்து வசூல் செய்யும் போது... முதலில் கிரெடிட் கார்டை முடிக்கணும் என்று நினைப்போம். ஆனால் அடுத்த வாரம் உங்கள் கிரெடிட் கார்டில் உங்கள் கடனுக்கான அளவு 20 ஆயிரத்தில் இருந்து 30 ஆயிரமாக உயர்கிறது என்று குறுஞ்செய்தி வரும்போது, பணம் கட்டாமல் அசிங்கப்பட்டது, கிரெடிட் கார்டை ஒழிக்க வேண்டும் என்ற சபதம் எல்லாம் நமக்கு மறந்து போகும். அதுதான் ஒரு நடுத்தர வர்க்கத்தின் அடையாளம்.