
இந்த கட்டுரை வலையேறும் போது அமெரிக்க தேர்தல் ஏறக்குறைய நிறைவு பெற்றிருக்கும்.
அதென்ன உலகத்தில் இல்லாத தேர்தல் அமெரிக்காவை மட்டும் உலகமே எதிர்ப்பார்க்கிறது என்றால், அது அப்படித்தான்.
அமெரிக்க மக்களை மட்டுமல்லாது உலக மக்களையும் ஏதோ ஒரு விதத்தில் பாதிக்கும் அமெரிக்க தேர்தல்.
அமெரிக்காவில் இரண்டு கட்சிகள். ரிபப்ளிகன்ஸ். டெமோக்ராட்ஸ்.
இப்போதிருக்கும் அதிபர் டிரம்ப் ரிபப்ளிகன். அவரை எதிர்த்து போட்டியிடும் ஜோ பிடன் டெமாக்ரட்.
அமெரிக்க தேர்தலை புரிந்து கொள்ளுமுன் அதன் தேர்தல் முறையை லேசாக பார்த்து விடுவது நல்லது.

ஒரு முறை நன்றாக படித்து விட்டு நான்கு நாட்களில் மறந்து விடுகிறது.
அமெரிக்காவில் மொத்தம் உள்ள மாநிலங்கள் 50. 52 என்றும் சொல்கிறார்கள். பியூர்தோ ரிக்கோ மற்றும் வாஷிங்டன் டி.சி யை மாநிலமாக கருதினால் மொத்தம் 52 என்று சொல்கிறார்கள்.
இதில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் இத்தனை இடங்கள் என்று இருக்கிறது.
உதாரணமாக கலிபோர்னியாவில் 55 இடங்கள். இந்த மாநிலத்தில் டிரம்ப் அதிக வாக்குகள் வாங்குகிறார் என்று வைத்துக் கொள்வோம். அவர் அந்த மாநிலத்தில் உள்ள 55 இடங்களையும் பெற்றார் என்று அறிவிக்கப்படும்.
நம்மூர் போல கலிபோர்னியாவில் 30 டிரம்பிற்கு 20 பிடனுக்கு என்று பிரிப்பதில்லை. அதிக வாக்குகள் அந்த மாநிலத்தில் யார் பெறுகிறார்களோ அந்த மாநிலத்தில் உள்ள மொத்த சீட்டும் ஒரு ஆளுக்கு போய் விடும்.
இது தான் குழப்பம். உதாரணத்திற்கு தேசிய அளவில் சென்ற தேர்தலில் ஹிலாரி கிளிண்டன் வாக்குகள் அதிகம் பெற்றிருந்தாலும், அதிக இடங்கள் என்று டிரம்பிற்கு கிடைத்தது கொஞ்சம் அதிர்ஷ்டம் கலந்த வாக்குக் கணக்கு.
புரியவில்லை இல்லையா ???

சிவப்பு டிரம்பு. நீலம் ஹிலாரி.
ஹிலாரி கிளிண்டனுக்கு கிடைத்த மொத்த வாக்கு 65,853,514 ஆனால் டிரம்பிற்கு கிடைத்த வாக்கு மொத்தம் 62,984,828
அப்படியெனில் ஹிலாரி தானே வெற்றி பெற்றிருக்க வேண்டும் என்றால் அது தான் இல்லை.
எலக்டோரல் வோட் என்பது மாநிலங்களின் ஜனத்தொகையை பொறுத்து அமைவது. மேலே உள்ள படத்தில் இருப்பது போல ஒவ்வொரு மாநிலத்திற்கு இத்தனை சீட்டுகள்.
அப்படிப் பார்த்தால் ரிபப்ளிகன் கட்சி தான் அதிக இடங்களைப் பிடித்தது. டிரம்ப் 304 ஹிலாரி 227 மொத்தம் 531 (மொத்த இடங்கள் 538 அதில் ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ளப்படாத எண்ணிக்கை 7 )
கணக்கு புரிகிறதா ??
இந்த நேரடி அதிபர் தவிர காங்கிரஸ் மற்றும் செனட்டுக்கும் தேர்தல் இருக்கிறது. அது அதிபரின் சட்டங்களை ஒப்புதல் கொடுக்கும் நேரத்தில் தான் பிரச்சினை கொடுக்கும் விஷயம். மற்றபடி அதிபர் தேர்தலை அது பாதிக்காது.
அமெரிக்காவில் இன்னொரு விஷயம். தபால் ஓட்டுக்கள் முன்னரே துவங்கி விடும். அது மட்டுமல்ல ஓட்டு போடும் தினத்திற்கு முன்னமே வந்து கூட வாக்களிக்கலாம்.
இந்த முறை இதுவரை இல்லாது சுமார் 100 மில்லியன் ஓட்டுக்கள் தேர்தல் தினத்திற்கு முன்னரே போடப்பட்டு விட்டதாம்.

தேர்தல் நாளில் நேரில் வந்து தேர்தல் பூத்தில் ஓட்டுப் போடுவது தான் கிளைமாக்ஸ். அதற்குப் பின் ஓட்டுப் போட முடியாது.
ஆக நவம்பர் 3ந் தேதி அதாவது நம்மூர் கணக்கிற்கு கிட்டத்தட்ட முடிந்து விட்டது தேர்தல்.
டிரம்பா பிடனா ?? என்ற ஒரு கேள்வியில் உலகமே அமெரிக்க தேர்தலை உற்றுப் பார்துக் கொண்டிருக்கிறது.
ஆருடம் சொல்ல நான் தயாரில்லை.
ஆனால் கடைசி சில தினங்கள் வரை டிரம்ப் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
ஆனால் இன்றைய நிலவரப்படி முள் எந்தப் பக்கம் வேண்டுமானாலும் சாயும் என்று சொல்கிறார்கள்.
அமெரிக்க தொழிலதிபர் ஒருவருடன் பேச்சுக் கொடுத்தேன்.
யார் வந்தால் நல்லது ??
அவர் சொன்னார்
“அது யாருக்கு என்பதை பொறுத்து இருக்கிறது.
உதாரணத்திற்கு சென்ற முறை டிரம்ப் ஜெயிப்பார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. ஏன் அவரே எதிர்பார்க்கவில்லை.
டிரம்பை பொறுத்தவரை வியாபாரத்திற்கு நல்லது.
என்னைப் போல வியாபாரிகளுக்கு லாபத்தில் வரி என்பது 40 சதவிகிதம் தான் வரும். ஆனால் அதுவே ஜோ பிடன் கட்சி வந்தால் அது 68 சதவிகிதம் வரை போகும்.
இதனால் வியாபாரம் செய்ய வேண்டும் என்ற உந்துதல் இல்லாமல் அமெரிக்க வியாபாரிகள் சோம்பேறிகளாகி விடுவார்கள். இதனால் யாருக்கு என்ன லாபம்.
இன்றைய தேதிக்கு அமெரிக்க பொருளாதாரம் ஆரோக்கியமாகவே இருக்கிறது.
அதே நேரம் டிரம்ப் கொஞ்சம் நிறவெறி கொண்டவர்.
அது மக்களை பாதிக்கும்.
இன்னொரு விஷயம் டிரம்ப் போல கடுமையான சட்ட திட்டங்கள் போடவில்லையெனில் அமெரிக்காவில் குடியேறும் மக்களின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் போகும் அபாயம் இருக்கிறது.
நிறவெறி இருந்தாலும் டிரம்ப் தான் என்னைப் போன்ற ஆட்களுக்கு தேவலை.
ஆனால் டிரம்பிற்கு முன்னர் ஒரு நிலை இருந்தது. அதாவது குழந்தைகளை தைரியமாக பள்ளிக்கு அனுப்பலாம், நண்பர்களுடன் பழக அனுமதிக்கலாம், ஆனால் இப்போது நிலமை வேறு. அமெரிக்கர்கள் அல்லாத என்னைப் போன்ற கிறிஸ்துவ மதமல்லாத ஆட்களுக்கு இப்போது கஷ்ட காலம் தான்.”
யார் ஜெயிப்பார்கள் என்பதை ஸ்விங் ஸ்டேட் என்று சொல்லப்படும் மாநிலங்கள் தான் முடிவு செய்யும்.
மிச்சிகன், நிவேதா, வின்கான்சின், ஃபிளோரிடா, ஜியார்ஜியா, ஐயோவா, ஓஹாயோ, ஹாம்ப்ஷைர், டெக்ஸாஸ்,அரிசோனா, நார்த் கரோலினா, பென்சில்வேனியா மாநிலங்கள் தான் இழுபறி நிலமை. இந்த பன்னிரண்டு மாநிலங்களைப் பொறுத்து தான் அமெரிக்காவின், ஏன் உலகின் தலை விதி என்று கூட சொல்லலாம், அமையும்.
மத்திய அமெரிக்காவில் வெள்ளையர்கள் அதிகம் இருப்பதால் டிரம்ப் அங்கு சுலபமாக வந்து விடுவார்.

(கமலா ஹாரீஸ் மற்றும் டிரம்பின் துணை அதிபர் மைக் பென்ஸ்)
ஜோ பிடனைப் பொறுத்தவரை கமலா ஹாரீஸ் (அவருக்கு சுத்தமாக இந்திய பாசம் இல்லாவிட்டாலும்) துணை அதிபர் என்று முன்னே காய் நகர்த்தி அமெரிக்க இந்தியர்களின் ஓட்டை அள்ளி விடலாம் என்று நினைக்கிறார். அது சில மாநிலங்களில் முடிவை மாற்றும் என்பதால் அதுவும் கூர்ந்து கவனிக்கப்படுகிறது.
இந்தியாவைப் பொறுத்தவரை டிரம்ப் தான் சரி வரும் என்று சொல்கிறார்கள்.
ஜோ பிடனுக்கு பாகிஸ்தான் மீது கொஞ்சம் ப்ரீதி அதிகமாம்.
பிடன் ஜெயித்தாலும் ஜனவரியிலிருந்து தான் அதிபர். அதுவரை டிரம்ப் தான் தொடர்வார்.
அமெரிக்காவில் நம்மூர் போல கள்ள வோட்டு, ஓட்டுச் சாவடி அராஜங்கள் இல்லையா ? அதெல்லாம் ஏராளமாக புகார்கள் இருக்கிறது. அது தனி கதை.
ஆனாலும் உலகக் கோப்பைகள் போல நான்கு வருடத்திற்கு இல்லாமல் ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை என்று தேர்தலை வைக்கலாம்.
அமெரிக்காவில் இரண்டு முறைக்கு மேல் ஒருவர் அதிபராக இருக்க முடியாது.
சாதரணமாக அடுத்த நாளே ஓரளவுக்கு முடிவுகள் தெரிந்து விடும். ஆனால் இந்த வருடம் சில நாட்கள் அல்லது வாரங்கள் கூட ஆகுமாம்.
காரணம் தபால் ஓட்டுக்களும் முன்னரே போடப்பட்ட ஓட்டுக்களும்.
ஆகட்டும். அது வரை (அமெரிக்க) ஊடகங்களுக்கு தீனி வேண்டாமா ???
ராம்
நிறைய வலைதளங்களும் தொலைக்காட்சிகளும் இருந்தாலும் சட்டென தேர்தல் நிலவரம் தெரிந்து கொள்ள.....

Leave a comment
Upload