
" என்னங்க நம்ம நரேனுக்கு மூன்றாவது செமஸ்டர் பணம் நாளைக்கு கட்டணும்" ரூபாய் 45 ஆயிரம் எப்படியாவது ரெடி பண்ணிடுங்க என சொல்லும்போது காலை வேலையில் மனம் அழுத்தமானது ரவிக்கு.
பேருதான் அரசாங்க உத்தியோகம்,சர்வீஸ் முப்பது வருடம், இருந்தும் என்ன? சேமிப்புக் கணக்குல ரூபாய் 20,000 சேர்க்க முடியல.. என வருத்தப்பட்டபடி
தனது தீயணைப்பு நிலையத்திற்கு சீருடையுடன் கிளம்பினார் மூத்த தீயணைப்பு வீரர் ரவி.
SHOவைப் (நிலைய அதிகாரி) பார்த்து வணங்கியவர்,
சார் எனக்கு பர்மிசன் வேண்டும் என கேட்டார் ரவி.
ஏன்?! எதற்கு?
பணம் புரட்டத்தான் என்றார்.
அப்படி என்ன கஷ்டம்ப்பா உனக்கு என்றவரிடம்.
மகனின் செமஸ்டர் பீஸ் கட்டணும் வீட்டு செலவிற்கே காசில்ல சார்,என்றார் பரிதாபமாக.
சரி சரி என்றவர் பரோல் முடிந்து போங்க ரவி என்றார்.
வீரர்களின் பரோல் முடியவும் போன் ஒலித்தது ஓடிச் சென்ற SHO எடுத்திட,
ம்..ம்.. எந்த இடம்? லேண்ட் மார்க் சொல்லுங்க.. என நோட் செய்து,
ரவி! இந்த அட்ரசுக்கு உடனே செல்லுங்கள் வீட்டினுள் பாம்பு புகுந்து விட்டதாகச் சொல்கிறார்கள் என்றதும்,
சார்.. நான் வெளியே... என்று இழுத்ததும்.. ஓகே என வேறொருவரை மாற்றி அனுப்பிவிட்டு
நீ போ என அனுமதி கொடுத்தார் அதிகாரி.
தனது இருசக்ர வாகனத்தை எடுத்து கிளம்பும்போது மீண்டும் போன் ஒலித்திட,
ரவி இங்கே வாங்க! இந்த விலாசம் போங்க,வீடு பூட்டி கிடக்கிறதாம்,
உள்ளே ஒரு மூதாட்டி சிக்கியிருக்காங்க
ளாம், போய் என்னவெனப் பாருங்கள்,துணைக்கு ஒரு ஃபயர்மேனை அழைத்துப்போங்க,
அப்படியே உங்கள் வேலையும் முடித்துவிட்டு வாங்க என இருவரையும் அனுப்பி வைத்தார்.
வளர்ந்தும் வளராத நகர் பகுதி அது. ஆங்காங்கே வயலுக்கு நடுவில் கான்கிரீட் கட்டிடங்களாய் முளைத்திருந்தன.
பக்கத்து வீடு என்பதே குறைந்தபட்சம் நூறு அடிக்கு மேலாகத்தான் இருந்தது.
கையில் இருந்த விலாசம் தேடி,
அக்கம் பக்கம் விசாரிக்கக் கூட ஆளில்லாமல், வாசல் கேட் உட்பக்கமாக பூட்டப்பட்டு, வீட்டின் வாசல் காய்ந்துப் போன வேப்பிலைக்
குப்பைகளால் நிரம்பி,
இரண்டு நாட்களாகப் புழக்கம் இல்லாததைக் காட்டியது.
வாசல் கேட்டினை எகிறி குதித்து வீட்டின் பிரதானக்கதவை
யடைந்து பார்த்தபோது தொட்டிப்பூட்டினால் அது பூட்டப்பட்டிருந்தது
கதவைத் தட்டியும் கூப்பிட்டும் பார்த்ததில்
எந்த ஒரு சப்தமும் இல்லாத்தைக் கண்டு கதவினை உதைத்துப் பார்த்த ரவி,முடியாமல்
தன்னிடம் இருந்த கருவியைக்கொண்டு கதவனை நெம்பிட, சேதாரமாகி திறந்தது கதவு.
பாய்ந்து உள்ளே சென்ற ரவி கீழே விழுந்துக்கிடந்த அம்மையாரை உலுக்கிட எந்த ஒரு அசைவுமின்றி கிடந்தார்.
நாசி அருகே கை வைத்துப்பார்த்ததில் உடல் சூடும் இருந்தது.
108க்கு போன்
செய்ததில்,முப்பது நிமிடங்களாகும், இரண்டு வண்டிகளும் சேவையில் உள்ளதாகச் சொன்னதும்,
தனியார் ஆம்புலன்சு ஒன்றினைக் கொண்டுவர தமது ஜூனியரைப் பணித்தார்.
ஆங்காங்கே மலஜலம் சிதறி இருக்க கட்டியிருந்தப் புடவையையும் நனைந்திருந்தது.
நீரெடுத்து முகத்தில் தெளித்ததும்,லேசாக உடல் அசைந்தது. அம்மையாரின் கழுத்திலும் கையிலும் அணிந்திருந்த நகைகளைப் பார்த்த ரவி அதனைக் கழட்டி எடுத்து தனது பைகளில் போட்டுக் கொண்டார். அம்மாவின் பாதுகாப்பினைக் கருதி போடப்பட்டிருந்த கண்காணிப்புக்
கேமிரா ஒன்று தன்னைக் கவனிப்பதை ரவி கவனிக்கவில்லை.
நடந்ததை நிலைய அதிகாரியிடம் சொன்ன ரவி,
சார் அந்தம்மாவை அரசு மருத்துவ மனையில் சேர்த்திருக்கிறேன் சார் என்றார்.
உங்க மொபைல் எண்ணை அவங்க மகள்கிட்டே கொடுத்திருக்கேன்,
அவங்க பேசுவாங்க டீடெயல்ஸ் நீங்க அவங்களிடம் சொல்லிடுங்க என்றார் அதிகாரி.
சோதித்த அரசு மருத்துவர்கள் நீர்சத்து குறைந்துள்ளது(Dehydration) உடனடியாக தனியார் மருத்துவ மனைக்குச்
செல்லுங்கள் என்றதால், தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளேன் என்கிற தகவலை அம்மையாரின் மகளுக்கும், அதிகரிக்கும் சொன்ன ரவி,தனது பேண்ட் பையில் கை விட வெறும் கை வெளியே வர உடல் வியர்த்தது.
"சார் தயவு செய்து கொஞ்சம் பக்கத்திலிருந்து பார்த்த்துக்
கொள்ளுங்கள் நான் தற்போதுதான் கன்னடாவிலிருந்து கிளம்புகிறேன் ப்ளீஸ் சார் என்றாள் மகள்.
சரிங்க...என்ற ரவியின் மனசு முழுவதும்
நகை எங்கே போனது? என கவலை தொற்றிக்கொண்டது.
இரண்டு நாட்கள் மன உளைச்சலோடு, அம்மையாரின் அருகில் இருந்தும், வீட்டிலிருந்து சாப்பாடு கொடுத்து,பார்த்துக்கொள்வதில் மகனின் செமஸ்டர் பீஸ் மறந்து போனது ரவிக்கு.
ஈரான் - அமெரிக்கா இடையே போரினால் இரண்டு நாட்கள் கழித்து இந்தியாவிற்கு வந்த மகள் ஊருக்கு வந்து தாயை உயிரோடுப் பார்த்ததில் மகிழ்ந்து ரவிக்கு நன்றி கூறினாள்.
"எங்கள் கடமை" என்ற ரவியிடம், தொலைவில் உள்ள சொந்தங்களை அழைத்தும் யாரும் முன்வராதபோது, நீங்கள் உயிரை மீட்டதோடில்லாமல் அருகே இருந்து ஒரு மகனைப்போல பார்த்துக் கொள்வதெல்லாம் சேவையின் உச்சம் சார் என ரவியடம் நெகிழ்ந்தாள்.
அப்புறம் உங்க அம்மாவின் நகைகள்...என்று ரவி வார்த்தைகளை மென்று முழுங்கியவரிடம்,
ம்..கொடுங்கள் என்றாள்.
இல்ல, அது வந்து நான்தான் கழட்டினேன் ஆனால்...எங்கோ தொலைந்துவிட்டது என்றார் ரவி.
பராவாயில்லை.. போகட்டும் விடுங்கள் அம்மாவை விட அது ஒன்றும் பெரிதல்ல என்ற மகளிடம் மன்னிப்புக்கோரினார்
செய்யும் கடமையில் அதிகப்படியான சில செய்கைகள் அவமானமாத்தை உண்டாக்கிவிடும் என்பதை புரிய வைத்தது ரவிக்கு.
சார் இந்த நகைகள் உங்களோடதுதான் சார் பாருங்க.. இன்றைக்குதான் வண்டியை சுத்தம் செய்தேன், கடைசியாக வந்த கேசு நீங்கதான், இது சீட்டிற்கு கீழே கிடந்தது என ஆம்புலன்சு ஓட்டுநர் கொடுக்க அதை வாங்கி அப்படியே அவரிடம் கொடுத்ததில்,
அது ரவியின் உடைமையில்லை,
ஆனாலும் ரவியின் மனசு பஞ்சு போன்று லேசானது.
"சரியான நேரத்திற்கு இங்கே வந்ததால் இப்போது நல்லா இருக்காங்க,நீங்கள் அம்மாவை வீட்டிற்கு கூட்டிப் போகலாம் என்ற மருத்துவர்,
ரவியைப்பார்த்து, நீங்க இங்கே சேர்த்து விட்டதோடு இல்லாமல் கூடவே இருந்து பெற்ற தாயைப்போல பார்த்துகிட்டதை
எங்கள் பணியாளர்கள் என்னிடம் சொல்லி உங்களைப் புகழ்ந்தார்கள், அதனால் நானும் உங்களைப்பற்றி விசாரித்தேன், உங்கள் மகன் எங்க கல்லூரியிலேதான் படிக்கிறார் என்றார்கள், இனி வரும் ஆண்டுகளில் நீங்கள் பீஸ் கட்டவே வேண்டாம் என்றார் மகிழ்ச்சியாக...

Leave a comment
Upload