
ஜனநாயகம் மக்களுக்கு தந்துள்ள மிகப்பெரிய உரிமை ஓட்டளிப்பது. இதை நாம் சரியாக நிறைவேற்றாமல் அரசை குறை கூற நமக்கு எந்த தகுதியும் இல்லை. 100% ஓட்டுப்பதிவு என்பதுதான் தேர்தல் ஆணையத்தின் கோரிக்கை, கனவு, வேண்டுகோள் எல்லாமே. இதற்கான எல்லா வசதி வாய்ப்புகளையும் தேர்தல் ஆணையம் செய்து தந்திருக்கிறது.
தமிழகத்தைப் பொறுத்தவரை சிறப்பு வாக்காளர் திருத்தத்துக்கு பிறகு நடக்கும் தேர்தல். எனவே அதிக அளவு வாக்களிப்பதற்கான வாய்ப்பு இந்த முறை அதிகம் தான். இதை ஒன்பதாம் தேதி புதுவையில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் கிட்டத்தட்ட 90 சதவீதம் வாக்களித்து தமிழகத்துக்கு வழிகாட்டி இருக்கிறார்கள்.
பெரும்பாலும் கிராமங்களை விட நகரங்களில் தான் ஓட்டளிப்பு சதவீதம் குறைவாக உள்ளது. படித்தவர்கள் அரசியல் பேசுவார்கள் ஆட்சியை விமர்சனம் செய்வார்கள். ஆனால், தேர்தல் நாளன்று ஓட்டு போடாமல் அந்த நாளை விடுமுறை தினமாக கொண்டாடுவார்கள். ஜனநாயகம் நமக்கு தந்த கடமையை செய்யத் தவறிய இவர்களை ஜனநாயகத்தின் எதிரிகளாகத்தான் பார்க்க வேண்டும்.
அரசியல் தலைவர்கள் வாக்குக்கு பணம் தந்தால் அதை உறுதியான மனத்துடன் வேண்டாம் என்று மறுப்பு சொல்லி நாம் கட்டாயம் ஓட்டு போட வேண்டும். அப்போதுதான் நாம் விரும்பும் ஆட்சி அமையும்.

Leave a comment
Upload