
2026 தமிழ் நாட்டில் ஏப்ரல் 23 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் முடிந்து 10 நாட்களுக்குப் பிறகு மே 04 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளிவரப்போகிறது. இந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க., த.வெ.க. மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகியவற்றுக்கு இடையே நான்கு முனைப்போட்டி உறுதியாகியுள்ளது. வெற்றியைக் கணிப்பதில் வியூகங்கள் ஒருபுறம் இருக்க, ஆன்மீக பலமும் முக்கியம் என நம்பும் வேட்பாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் தீவிரமான வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
முக்கியத் தலைவர்கள் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கும் முன்போ அல்லது முக்கியமான அரசியல் முடிவுகளை எடுக்கும் முன்போ தங்களின் குலதெய்வக் கோவில்களுக்குச் சென்று வழிபடுவது வழக்கம். சிலர், ஜோதிடர்களின் ஆலோசனையின் படி, பரிகார கோவில்களுக்கும் சென்று வழிபாடு செய்து வருகின்றனர். மற்றும் சிலர் கேரள நம்பூதிரிகளை அழைத்து, மந்திர உச்சாடனத்தில் ஈடுபட்டும் வருகின்றனர்.
தமிழகத்தில் நடக்க இருக்கும் சட்டசபைத் தேர்தலுக்கு முன் நாத்திகம் பேசும் அரசியல் கட்சியினர், அவர்களது தனிப்பட்ட ஜாதகம் மட் டுமின்றி மனைவி, மகள், மகன் ஜாதகத்தையும் பார்த்து, அதற்கேற்ப விருப்ப மனு அளித்து, பரிகாரம் செய்கின்றனர்.
தமிழ்நாட்டில், அரசியல் தலைவர்கள் தேர்தல் வெற்றி பெறவும், தங்கள் பதவியைக் தக்க வைத்துக் கொள்ளவும் சில குறிப்பிட்ட கோயில்களுக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
அவற்றில் சில முக்கிய கோவில்கள்…
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில்:
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தேர்தல் வெற்றிக்காக வேண்டி வழிபாடு நடத்தும் அரசியல் பிரமுகர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சிலர் எதிரிகளை வீழ்த்த 'சத்ரு சம்ஹார யாகம்' நடத்தியும் வழிபாடு செய்கின்றனர். இங்குத் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கும் முன்பும், வெற்றி பெற்ற பின்பும் வெற்றிக் கடவுளான முருகனை வழிபடுவது வழக்கம்.
ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயில்:
அரசியல் தலைவர்கள், இக்கோயிலில் சுக்கிரன் வடிவத்தில் இருக்கும் ஆண்டாளைத் தரிசனம் செய்வதால் அரசியலில் ஏற்றமும், செல்வச் செழிப்பும் மற்றும் அதிகாரமிக்க பதவிகள் பெற முடியும்' என்ற நம்பிக்கையில் இங்கு வந்து வழிபாடு செய்கின்றனர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில்:
தென் தமிழகத்தில் பெரும்பாலான அரசியல்வாதிகள் தங்களின் பிரச்சாரத்தை இக்கோயிலிருந்தே தொடங்குகின்றனர்.
சமயபுரம் மாரியம்மன் கோயில்:
திருச்சி பகுதியில் உள்ள இந்தக் கோயில் பெண்களின் செல்வாக்கைப் பெறவும், மக்கள் ஆதரவைத் திரட்டவும் பெரிய அளவிலான வேட்புமனுத் தாக்கலுக்கு முன் அரசியல் தலைவர்கள் இங்குச் செல்வது வழக்கம்.
பிள்ளையார் பட்டி கற்பக விநாயகர் கோயில்
புதிய கட்சி தொடங்குவதற்கும், கூட்டணி அமைப்பதற்கும் இக்கோயிலுக்கு வந்து ஆசி பெறுவதை அரசியல் தலைவர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். காரைக்குடி மற்றும் சிவகங்கை பகுதி அரசியல்வாதிகளின் கோட்டையாக இது விளங்குகிறது.
இருக்கன்குடி மாரியம்மன் கோயில்:
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இந்தக் கோயில், தென் மாவட்ட அரசியல்வாதிகளுக்கு மிக முக்கியமானது. அரசியல்வாதிகளின் பதவிக்கு வரும் ஆபத்துகள் நீங்கவும், எதிரிகளை வீழ்த்தவும் இங்கு விசேஷ பூசைகள் செய்யப்படுகின்றன.
சோளிங்கர் யோக நரசிம்மர் கோயில்:
அரசியலில் எதிர்ப்புகளை முறியடிக்கவும், இழந்த பதவியை மீண்டும் பெறவும் நரசிம்மர் வழிபாடு மிக முக்கியமாகக் கருதப்படுகிறது.
வழக்கறுத்தீஸ்வரர் கோயில் (காஞ்சிபுரம்):
அரசியல் மற்றும் சட்ட ரீதியான வழக்குகளில் இருந்து நிவாரணம் பெற இக்கோவிலுக்குச் செல்வது தலைவர்களிடையே பிரபலமானது.
புரதம்மா கோயில் (பெங்களூரு - தமிழ்நாடு எல்லை):
தேர்தல் நேரத்தில் வேட்பாளர்கள் வெற்றி வேண்டி இந்த அம்மனைத் தரிசனம் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
இதைத்தவிர சங்கரன்கோவில் கோமதி அம்மன் கோயில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில், சிதம்பரம் நடராஜர் கோவில், மற்றும் கரூர் கல்யாண வெங்கட்ரமண சுவாமி & ஆஞ்சநேயர் கோயில் போன்ற இடங்கள் தேர்தலில் வெற்றி பெறவும், பதவியைத் தக்கவைக்கவும் பரவலாக வழிபடப்படுகின்றன.
தமிழக அரசியல்வாதிகள் தமிழ்நாட்டிற்கு வெளியேயும் சில கோயில்களைப் பதவி காக்க நாடுகின்றனர்….
திருப்பதி ஏழுமலையான் கோயில்(ஆந்திரா):
தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் தங்களின் முக்கிய முடிவுகளுக்கு முன்பும், வெற்றிக்குப் பிறகும் இங்கு நேர்த்திக்கடன் செலுத்தச் செல்கின்றனர். அகில இந்திய அளவிலும், தமிழக அளவிலும்
பெரிய பதவிகளை ஏற்பதற்கு முன் இங்கு வந்து தரிசனம் செய்வது ஒரு மரபாகவே மாறிவிட்டது.
கொல்லூர் மூகாம்பிகை கோயில்(கர்நாடகா):
கலைத் துறை மற்றும் அரசியல் செல்வாக்கு உயர இங்கு 'சண்டயாகம்' வளர்ப்பது அரசியல் வட்டாரத்தில் பிரபலம்.
சபரிமலை ஐய்யப்பன் கோயில் (கேரளா):
தெற்கு மாவட்ட அரசியல் சூழலில், வெற்றி வாய்ப்பைத் தீர்மானிக்கும் முக்கியத் தலமாகச் சபரிமலை பார்க்கப்படுகிறது.
காமாக்கியா கோயில் (அஸ்ஸாம்):
இந்தக் கோயிலில் தேர்தல் நேரத்தில் தமிழகம் உட்படப் பல மாநில அரசியல்வாதிகள் திரண்டு வந்து பூஜை செய்கின்றனர்.
பகளாமுகி கோயில் (மத்தியப் பிரதேசம்):
வெற்றி மற்றும் எதிரிகளை வெல்லும் சக்தியாகக் கருதப்படும் பகளாமுகி கோயிலில், தமிழகத்தில் இருந்தும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் ரகசியமாகவும் நேரிடையாகவும் இங்கு வந்து சிறப்பு யாகங்களைச் செய்துள்ளனர்.

Leave a comment
Upload