தொடர்கள்
கவிதை
கவிதை- புதுவை ரா. ரஜனி

20260318050954322.jpeg

கவிழ்ந்த ஆட்டுரலின்மேலே

சாயம்போன தொட்டியில்

இன்றோ நாளையோ

மடியப்போகும் ரோஜா செடி...!

புதுக்குடியிருப்பாய் ஒதுங்கிச் சேர்ந்துவிட்ட

பழைய செருப்புகளின் தொகுப்பு...!

சில்வியா விழுந்தெழுந்து

ஓட்டிப்பழகிய

ஒருக்களித்த பேபி சைக்கிள்...!

சிறு கவுச்சல் வாசனையாய் வண்ணக் கற்களோடு வீரல்விட்ட

மீன்தொட்டி...!

பழுதாகிப்போன கம்ப்யூட்டர் மானிட்டர்...

அதன்மேலே

கால்மிதித் தடுக்கு...!

பழைய அட்டை, நாளேடுகளின் இடுக்குகளில்

அவ்வப்போது ஓடி மறையும் அழுக்கு பல்லிக் குஞ்சுகள்...!

மழைக்காலத்தில்...

திடீர் விருந்தாளியாய் தவ்விப்போகும்

எச்சில் தவளைகள்...

இப்படித்தான் இருக்கிறது

அனேகரது வீட்டுப்

பால்கனியும்...!