
இவர் எங்கள் ஏரியாவில் துப்புரவுப் பணி செய்பவர். பெயர் கிருஷ்ணவேணி. ஏரியாவாசிகளுக்கு "கிருஷ்ணவேணி அக்கா" நான் காலை வெளியில் செல்லும்போது அவரை பார்த்து ஒரு புன்னகை செய்வேன். பதிலுக்கு புன்னகைப்பார். தன் தொழில் மீது கவனமாய் இருப்பார்.
நான் என்னால் முடிந்த நாள்களில் காலை உணவு வாங்கி கொண்டு வந்து தருவேன். சிரித்த முகத்தோடு வாங்கி தன் துப்புரவு வண்டியில் மாட்டிக்கொள்வார். எப்பொழுது சாப்பிடுவார் என்று தெரியாது. ஒரு நாள் அவர்கள் நிறுவனத்திலிருந்து சாப்பாடு கொண்டு தருவதை பார்த்தேன். நான் பார்ப்பதை அவரும் பார்த்தார். என்னிடம் சொன்னார் " நீங்க தர்ற சாப்பாட்டை வீட்டுக்கு எடுத்துட்டு போய் என் அம்மாவுக்கு கொடுப்பேன். அன்னிக்கு மதியம் சமைக்க மாட்டேன்." என்றார். அவரோடு பேசியதிலிருந்து அவரின் அம்மாவை அவர் தான் பார்த்துக்கொள்கிறார், அதனாலேயே திருமணம் செய்து கொள்ளவில்லை என்பதும் தெரிய வந்தது. " என் தங்கச்சி பசங்க தான் என் குழந்தைங்க , நான் தான் அவங்கள படிக்க வைக்கிறேன் " என்றார். "கிருஷ்ணவேணி" குப்பைகளின் நடுவே நான் கண்ட மாணிக்கம் .

Leave a comment
Upload