தொடர்கள்
அனுபவம்
பிச்சைக்காரன் பார்ட் 3 - நிஜ கதை. மாலா ஶ்ரீ

20260819002728708.jpg

மும்பை மாநகராட்சியில் வார்டு கவுன்சிலராக இருந்த கோடீஸ்வரரான பராக் ஷாவுக்கு, கடந்த 2024-ம் ஆண்டு மகாராஷ்டிரா மாநில சட்டமன்றத் தேர்தலில், காட்கோபர் தொகுதியில் போட்டியிட பாஜ சீட் வழங்கியது. இத்தேர்தலில் காட்கோபர் தொகுதியில் பராக் ஷா வெற்றி பெற்று எம்எல்ஏவானார். மேலும் இவர் தனது வேட்புமனு தாக்கலின்போது, இவரது குடும்பத்தின் மொத்த சொத்து மதிப்பு ரூ.3,383 கோடி என்று பிரமாணப் பத்திரத்தில் பராக் ஷா குறிப்பிட்டுள்ளார்.

அதுமட்டுமின்றி, 'மேன் இன்ஃப்ரா' என்ற நிறுவனத் தலைவராகவும் பராக் ஷா உள்ளார். இந்நிறுவனத்தின் மொத்த மதிப்பு ரூ.5 ஆயிரம் கோடிக்கும் அதிகம் என்று கூறப்படுகிறது. இப்படி பெரும் கோடீஸ்வரராக இருக்கும் பாஜ எம்எல்ஏ பராக் ஷா, ஆன்மிகத்தின்மீது அதீத நம்பிக்கை கொண்டவர். இவர் சமீபத்தில் சமண மத குரு ஒருவரை சந்தித்து பேசினார்.

அப்போது அந்த சமண மதகுரு, தற்போது நடைபெறும் சமண பாரம்பரிய புனித மாதத்தில் ஒருநாள் நீங்கள் பிச்சைக்காரராக மாறி, யாசகம் கேட்டு உணவருந்தினால் நல்லதே நடக்கும் என்று பராக் ஷாவிடம் கூறியுள்ளார். இதையடுத்து, கடந்த சில நாட்களுக்கு முன் ஒருநாள் முழுவதும் மும்பை நகர சாலையோரம் அழுக்கு உடையில் கோடீஸ்வர பராக் ஷா அமர்ந்து, பிச்சைக்காரராக மாறி வாழ்ந்தார்.

மேலும் அவ்வழியே நடந்து சென்ற பாதசாரிகளிடம் பிச்சைக்காரர் போல் யாசகம் கேட்டுள்ளார். இதில் சிலர் சிறுதொகையாகவும் பலர் பன், பிஸ்கட் போன்ற சிறிய அளவிலான உணவுப் பொருட்களை வாங்கி தந்துள்ளனர். அன்று மாலை தனது பிச்சைக்காரர் வேடத்தைக் கலைத்துவிட்டு, தனது சொகுசு காரில் ஏறி கோடீஸ்வர பாஜ எம்எல்ஏ பராக் ஷா சிட்டாக வீட்டுக்குப் பறந்துவிட்டார்.

இதுகுறித்து கோடீஸ்வர பாஜ எம்எல்ஏ பராக் ஷா கூறுகையில், ''என்னை தினமும் சந்திக்க வரும் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். எனினும், நான் இப்போது அந்த மக்களை தேடி சென்றேன். உண்மையில், என்னைவிட பொதுமக்கள் மிகப் பெரியவர்கள். நான் பிச்சை எடுத்தபோது, ஒருவர் எனக்கு ரூ.20 கொடுத்து சாப்பிட செல்லும்படி கூறினார்.

அங்கு சமோசா விற்றவரிடம் நான் சமோசா வாங்கிச் சாப்பிட பணம் இல்லை என்று கூறினேன். அவரும் சிரித்தபடியே எனக்கு இலவசமாக சமோசா கொடுத்துவிட்டு சென்றார். உண்மையில் அந்த சமோசா வியாபாரி மிகவும் ஏழை. எனினும் அவர் பண்பாக நடந்து, என்னிடம் சும்மாவே சமோசா வழங்கிவிட்டு சென்றார்.

உண்மையில், மும்பையில் உள்ள ஏழை மற்றும் நடுத்தர மக்கள், ஒருவருக்கொருவர் உதவி செய்வதற்கு எந்நேரமும் தயாராக உள்ளனர். இதனால் எனது தலைக்கனம் மறைந்து, பிறருக்கு எவ்வகையிலாவது உதவி செய்ய வேண்டும் என்ற மனிதாபிமான உணர்வு மேலோங்கியது!'' என்று பராக் ஷா நெஞ்சம் நெகிழ தெரிவித்தார்.

மாலாஶ்ரீ