
திருப்பரங்குன்றம்
மதுரையில் இருந்து மேற்கே 7 கி.மீ. தொலைவில் திருப்பரங்குன்றம் அமைந்துள்ளது. இக்கோயில் மலை அடிவாரத்தில் உள்ளது. மலையைக் குடைந்து செதுக்கப்பட்ட சிற்பங்கள் அழகுறத் திகழ்கின்றன. இங்கு முருகன் வடக்கு நோக்கி அருள்பாலிக்கின்றார்.
இத்திருப்பரங்குன்றம் நீர்வளமும், நில வளமும் நிறைந்தது. இங்குள்ள மக்கள் முருகப் பெருமானின் அருளால் எல்லா வளமும் பெற்றுச் செழிப்புற இன்பமுற வாழ்கின்றனர் என்பதை உணர்த்தும் விதமாக நக்கீரர், தாமரைப் பூவில் துயில்கின்ற வண்டுகள் வைகறையில் நெய்தல் பூவிலுள்ள தேனையருந்திப் பகலவன் தோன்றியபின் சுனைமலரின்கண் ஆரவாரிக்கும் என நிலவளத்தின் பெருமையை உவமையாக இங்குத் திறம்பட விளக்கியுள்ளார்.
ஞான நிலை : திருப்பரங்குன்றத்தில் முருகனுடைய உருவம் முதலியன சொல்லப்படாமல் மலமாசு நீங்கப் பெற்ற தூய ஆன்மாக்கள் சூழ இருக்கின்றான் என்னும் கருத்தை யுணர்த்தும் 'வண்டின் அரிக்கணமொலிக்கும் குன்றமர்ந்துறைதலும் உரியன்” என்றே சொல்லி யிருத்தலின், அங்கு ஞானசக்தி மேற்பட முருகப் பெருமான் ஞான நிலையில் விளங்குகின்றான் என்பதையே விளக்கினார் என்று கொள்ளலாம். ஞானமே வடிவாய ஆன்மாக்களால் சூழப் பெறுதல் ஞானநிலைக்கே பொருத்தமாதல் காண்க.
திருச்சீரலைவாய்
திருநெல்வேலியில் இருந்து 54 கி.மீ. தொலைவில் திருச்செந்தூர் அமையப்பெற்றுள்ளது. இதன் பழமையான பெயர் செந்தில் ஆலைவாய் என்பர்.
“சீரலைவாய் உறைசெந்தில் நாதன்”(திருமுருகாற்றுப்படை)
ஓங்கி உயர்ந்த மலையின்மேல் ஆறுமுகங்களோடும் பன்னிரு கரங்களோடும் முருகன் வீற்றிருக்கின்றார். ஆறு முகனின் தோற்றத்தைத் திருமுருகாற்றுப்படையில் அழகுற விளக்குகிறார். இவ்வுலகம் அறியாமை என்னும் இருளில் மூழ்கிக் கிடக்கிறது. அதனை ஒளியுடையதாக ஆக்க வேண்டும் என்ற அருளால் குமரனின் ஒருமுகம் அறிவாகிய ஒளிக்கதிர்களைப் பரப்பி அந்த ஒளியின் எல்லைக்குள் வந்தவர்கள் அறியாமை என்னும் பேரிருளிலிருந்து விலகி ஞான ஒளியை அடைவார்கள் என்பதை நக்கீரர்
“மாயிருள் ஞானம் மறுவின்றி விளங்கப்
பல்கதிர் விரிந்தன்று ஒருமுகம்” (திருமுருகாற்றுப்படை, 91-92)
என்றும் மேலும் “ஆர்வலர் ஏத்த அமர்த்தினிது ஒழுகிக்
காதலின் உவந்து வரம்கொடுத்தன்று” (திருமுருகாற்றுப்படை, 94-95)
முருகப்பெருமானிடம் அன்பர்கள் எவ்வளவு அதீத ஈடுபாட்டுடன் திகழ்கின்றார்களோ அந்த அளவுக்கு அவர்களுக்கு எல்லா வளங்களையும் அருளுகின்றான் என்பதை நக்கீரரின் வழி திருமுருகாற்றுப்படையில் காணமுடிகின்றது.
கிரியை நிலை : திருச்சீரலை வாயில், முருகப் பெருமானுடைய ஆறுதிருமுகங்கள் செய்யும் தொழிலையும் பன்னிரு கரங்கள் செய்யும் தொழிலையுமே விரிவாகக் கூறியிருத்தலாலும், முருகன் யானைமேலூர்ந்து செல்லும் செயலையே சிறப்பாகக் கூறியிருத்தலாலும், முருகனது செயலாற்றல் விஞ்சிய கிரியாசக்தி நிலையே விளக்கப்பட்டது என்பதையுணரலாம்.
திருவாவினன்குடி
திருவாவினன்குடியும் பழனியும் வெவ்வேறான அடுத்தடுத்த இரண்டு தலங்களாகும். பழனி மலையின் அடிவாரத்தில் இருப்பது திருவாவினன்குடி. மிகப் பழமை வாய்ந்த தலம். இக்கோயிலை வேள்குலத்தில் தோன்றிய ஆவி என்பவன் அரசாண்டான். அவனது ஆட்சிக்கு உட்பட்ட எல்லா ஊரும் திருஆவினன்குடி. பிறகு இப்பெயர் ஆவினன்குடி என்று மாறியது. பழனியைச் சுற்றி இருக்கின்ற பகுதியைத் திருஆவினன்குடி என்றும் அழைப்பர்.
திரு-ஆ-இனன்-கு-டி என்று பிரித்துத் திருமகள்-காமதேனும்-ஞாயிறும்-நிலம்-தீக்கடவுள் என அனைவரும் வழிபட்ட தலம் என்று புராணங்களும் சான்றோர்களும் குறிப்பிடுகின்றனர். ஆவினன்குடியில் முருகனைக் காண அடியவர்கள் மட்டும் வரவில்லை. முனிவர், தேவர்கள், திருமால், சிவபெருமான், இந்திரன் போன்றோர்களும் காண வந்தார்கள் என்றும் குறையிருந்தவர்களுக்கு அருளுவதற்காகவே தெய்வானையுடன் திருவாவினன்குடியில் முருகப்பெருமான் குடிகொண்டுள்ளார்.
இச்சை நிலை : திருவாவிநன்குடியில், திருமால் முதலிய தேவர்கள் வணங்க "மடந்தையொடு சின்னாள் தங்குவதாகக் கூறப்படுவதால் இச்சைநிலை விளக்கப்பட்டதாகக் கொள்ளலாம். மடந்தையொடு தங்குவதற்குக் காரணம் இச்சையேயாதல் தெளிவு.
திருவேரகம்
முருகனின் நான்காம் படைவீடு மிக அழகுடைய ஊர் ஏரகம். ஏரகம் என்பது எந்தத் திருத்தலம் என்பதில் கருத்து வேறுபாடு அனைவருக்கும் உண்டு. சீர்கெழு செந்திலும் செங்கோடும் வெண்குன்று, ஏரகம் நீங்கா இறைவன் என இளங்கோவடிகள் குறிப்பிடுகிறார்.
“சீர்கெழு செந்திலும் செங்கோடும் வெண்குன்று
ஏரகமும் நீங்கா இறைவன்” (சிலம்பு)
“ஏரக வெற்பனும் அற்புத மிக்க சுவாமிமலைப்பகுதி”
என்பது அருணகிரிநாதரின் அருள்வாக்கு. அந்த அருள்வாக்கினால் சுவாமிமலை என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை. சிவபெருமான் பிரணவ மந்திரப் பொருளைக் கேட்க முருகன் தந்தைக்கு உபதேசம் செய்து குருவாகவும் தகப்பன் சாமியாகவும் சுவாமிநாதனாகக் காட்சியளிப்பது சுவாமிமைலை எனும் திருவேரகமாகும் என்று அருணகிரியார்
“அருணதள பாத பத்மம் அனுநிதமுமே துதிக்க
அரியதமிழ் தானளித்த மயில்வீரா
அதிசமய் அநேகமுற்ற பழநிமலை மீதுதித்
அழகு திருவேரகத்தின் முருகோனே” (அருணகிரியார்)
முருகப் பெருமானின் பெருமைகளைப் பாடுகிறார். மேலும் இறைவனை எவ்வாறெல்லாம் வழிபட வேண்டும் என்பதை நக்கீரர்
“ஆறெழுத்தடங்கிய அருமறைக் கேள்வி
நாஇயல் மருங்கில் நவிலப்பாடி” (திருமுருகாற்றுப்படை, 186-187)
சரவணபவநம, குமாராய என்ற ஆறெழுத்து மந்திரங்களை அந்தணர்கள் ஓதுகின்றனர். நாஇயல் மருங்கில் நாவில்பாடும் ஓதும்போது பிறரின் காதில்விழாதபடி மெதுவாக ஓத வேண்டும். இறைவனை நாம் வணங்கும்போது இறைவனிடம் மனம் உருகி வழிபடுவோம். அவை மற்றவர்கள் காதில் விழும்போது அவர்களுக்கு இடையூறாக இருக்கும் என்பதற்காக நக்கீரர் தன்பாடலில் வெளிப்படுத்துகிறார்.
ஞான வழிபாடு : திருவேரகத்தில், அந்தணர் ஆறெழுத்தடங்கிய அருமறையை நாவியல் மருங்கின் நவிலப்பாடி வழிபடுவதாகச் சொல்லப்படுவதால் அவ்வந்தணர் முருகனை ஞானத்தால் வழிபடுகின்றார் என்பது விளங்கும்.
குன்றுதோறாடல்
குறிஞ்சி நிலத் தெய்வம் முருகன். குன்றுகள் அனைத்தும் அவன் வீற்றிருக்கும் தலங்களாகும். அவ்விடங்களில் குறவர்கள் அதிகமாக வாழ்ந்தனர். குறவர்கள் முருகனை வேலன் என்று அழைத்தனர். ஒவ்வொரு குன்றிலும் வாழ்பவர்கள் குரவைக்கூத்தாடி மகிழ்வார்கள். அங்கு வேல் வைத்து ஆடுகின்ற பூசாரியும் இருப்பான். அப்பூசாரி வேலன் என அழைக்கப்படுவான். அவ்வேலன் தலையில் கண்ணி அணிந்துள்ளான். அக்கண்ணி பச்சிலைமாலைக்குள் சாதிக்காயையும் தாக்கோல காயையும் காட்டு மல்லிகை மலர்களையும் வெண்மையான கூதாள மலர்களையும் சேர்த்துக் கட்டிய தலை மாலையை அணிந்து மக்களுக்குக் காட்சியளிக்கின்றான்.
கிரியை வழிபாடு : குன்று தோறாடலில், வேலன், முருகன் வேடந்தாங்கி, மகளிரொடு கூடிக் குரவையாடி வழிபட்டதாகச் சொல்லப்படுவதால் அவ்வேலன் கிரியையால் வழிபட்டமை தெளிவாம். ஆடல் கிரியையாதல் தெளிவு.

Leave a comment
Upload