தொடர்கள்
தமிழ்
அமிழ்தமிழ்து தமிழமிழ்து 40 – மோகன் ஜி


20260817060301926.jpg

கச்சியப்ப சிவாச்சாரியர் எனும் அருளாளர் பனிரெண்டாம் நூற்றாண்டில் காஞ்சிபுரத்தில் வாழ்ந்தவர். அங்குள்ள குமரக்கோட்ட முருகனிடம் மாளாத பக்தி கொண்டவர்.

அவருடைய கனவில் முருகன் தோன்றி கந்த புராணத்தை தமிழில் எழுதுமாறு ஆணையிட்டார்.

தயங்கிய கச்சியப்பருக்கு, ‘திகட சக்கரம் செம்முகம் ஐந்துளான்’ என்று முதலடியும் எடுத்துக் கொடுத்து முருகன் மறைந்தார்.

முருகனருள் பூரணமாக இருக்க, தினந்தோறும் நூறு பாடல்கள் இயற்றி முருகன் காலடியில் வைப்பாராம். அடுத்த நாள் காலையில் அவற்றில் பிழைகளேதும் இருந்தால் திருத்தப் பட்டிருக்குமாம். இவ்வாறாக கந்த புராணத்தை

ஆறு காண்டங்களாகப் பகுத்து 10346 பாடல்கள் இயற்றினார். கந்த புராணத்தில் இல்லாதது எந்தப் புராணத்திலும் இல்லை என்ற பெருமை பெற்றது இந்த நூல்.

கச்சியப்பர் எழுதிய இந்த நூலை அரங்கேற்றும் நாளும் வந்தது. அவர் முதற்பாடலைப் பாடியவுடன் திகடச் சக்கரம் என்ற பதத்திற்கு புலவர்கள் ஆட்சேபம் தெரிவித்தனர் . அதற்கு திகழ் +தச+கரம் என்று பிரித்துப் பொருள் கொள்ள வேண்டுமென்றார் கச்சியப்பர்.

சந்தி இலக்கணப்படி ‘ழ’கரத்துடன் ‘த’கரம் சேர்கையில் ‘ட’கரம் தோன்றாது என்று அதை புலவர்கள் ஏற்க மறுத்தனர். தொல்காப்பியத்திலும் இதற்கான சந்தி விதி இல்லை என்று வாதிட்டனர். அடுத்த நாள் கச்சியப்பரை தக்க சான்றோடு வருமாறு சொல்லிச் சென்றனர்.

திகடச் சக்கரம் என்ற பதம் முருகனே அடியெடுத்துக் கொடுத்ததாயிற்றே என்று கச்சியப்பர் கலங்கினார். அன்றிரவு அவர் கனவில் தோன்றிய முருகன், அடுத்த நாள் தானே வந்து பிரச்னையைத் தீர்த்து வைப்பதாக உறுதியளித்தார்.

மறுநாள், தேஜஸ்வியான இளம் புலவர் ஒருவர் கையில் வீர சோழியம் எனும் சுவடிக் கட்டுடன் அரங்கேற்ற சபைக்கு வந்து, அதில் சந்திப்படலத்தைப் பிரித்து அதன் 18வது செய்யுளைப் பார்க்குமாறு புலவர்களிடம் தந்தார்.

அந்த செய்யுளில் ‘திகழ்’ மற்றும் ‘தசக்கரம்’ சேர்கையில் திகடச் சக்கரம் என சந்தி சேரும் என்ற குறிப்பு இருந்தது. புலவர்கள் அதை ஏற்றுக் கொண்டு அந்த இளம் புலவரை பாராட்ட முனைகையில்,அவர் அங்கிருந்து மறைந்து விட்டார். முருகனே ஐயம் தீர்க்க வந்ததில் கச்சியப்பரின் பெருமை உயர்ந்தது. அவரும் அரங்கேற்றத்திற்குப் பின் கௌரவிக்கப் பட்டார்.

முருகனே அடியெடைத்துக் கொடுத்த அந்த விநாயகர் காப்புச் செய்யுளை இன்று பார்க்கலாம்.

பாடல்:

திகட சக்கரச் செம்முக மைந்துளான்

சகட சக்கரத் தாமரை நாயகன்

அகட சக்கர வின்மணி யாவுறை

விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவாம்.

பொருள்:

அழகுறத் திகழ்கின்ற பத்துக் கரங்களை உடையவர் ;

செம்மையான ஐந்து முகங்களுடன் திகழ்பவர்;

சக்ராயுதம் ஏந்தியவர்;

தாமரை மலரின் மேல் அமர்ந்திருப்பவர்;

பூவுலகிலும் விண்ணுறை உலகங்களிலும்

நிறைந்து விளங்கும் ஒப்பில்லாத மணி போன்றவர் ;

விகடச் சக்கரனாக விளங்கும் விநாயகப் பெருமானின் மெய்யாகும் திருவடிகளைப் போற்றி வணங்குவோம்

மேல் விளக்கம்:-

ஐந்து முகங்களும் பத்துக் கரங்களும்:-

விநாயகருக்கு 32 வடிவங்கள் உண்டு. அவற்றுள் ஹேரம்ப கணபதி சொரூபம் ஐந்து முகங்களும் பத்துக் கரங்களும் கொண்டு விளங்குவது. கரும்பச்சை வண்ணம் கொண்டவர். சிங்க வாகனத்தில் பவனி வருபவர். வேறு சந்தர்ப்பத்தில் கணபதி சொரூபங்கள் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.

விகடச் சக்கரன்:-

சிவனார்க்கு அவிர்ப்பாகம் மறுத்து தட்சன் மேற்கொண்ட வேள்வியை வீரபத்திரர் அழித்தார். அதனால் வெகுண்ட திருமால் தன் சக்கராயுதத்தை அவர் மேல் பிரயோகித்தார். அந்தச் சக்ராயுதத்தை வீரபத்திரர் அணிந்திருந்த கபால மாலையில் பதக்கமாக இருந்த மண்டையோடு கவ்விக் கொண்டது.

திருமாலின் அணுக்கத் தொண்டரும் தண்டநாயகருமான விஷ்வக்சேனர் வீரப்பத்திரரின் கபால மாலை வசமிருந்த சக்கரத்தை ஒருவாறு மீட்கையில் அது தவறி கீழே விழுந்தது. அந்த சக்கரத்தைக் கவர்ந்து கொண்ட பாலகணபதி திருப்பித் தர மறுத்தார்.

விஷ்வக்சேனர் கணபதியின் முன் விகடம் பல செய்து அவரை மகிழ்விக்கவே அவரும் மனம் மகிழ்ந்து சக்கரத்தை திருப்பித் தந்ததாக ஒரு நிகழ்வைச் சொல்வர். இதன் காரணமாக கணபதி விகடச் சக்கரன் எனும் பெயர் பெற்றார்.