தொடர்கள்
தொடர்கள்
த்ரிசதீ ஸ்தோத்திரம் -1 -ஜி.ஏ. பிரபா

20260317224609424.jpeg

குணசாலினீ

ககார ரூபா கல்யாணீ கல்யாண குண சாலினீ

கல்யாண சைல நிலையா கமனீயா கலாவதீ ( 1-6 }

ஓம் ககார ரூபாயை நமஹ.

ஸ்ரீதேவி பரிபூரண மங்கள வடிவானவள். பஞ்சதசாக்ஷரியின் முதல் எழுத்தான ககார வடிவாக இருப்பவள். ஜீவன்களின் ஆன்மாவில் பிரகாசமாக இருப்பவள். ஆன்மாவிற்குள் இருக்கும் ஒளியாக இருப்பவள் என்று குறிக்கிறது ககார ரூபாயை என்ற நாமம்.

ஓம் கல்யாண்யை நமஹ.

அம்பிகை மங்கள வடிவாக இருப்பவள். சர்வ மங்கள மாங்கல்யே என்று அவளைத் துதிக்கிறது தேவி மகாத்மியம். மங்கலங்களுக்கு எல்லாம் மேலான மங்கல ஸ்வரூபிணீ.

ஓம் கல்யாண குணசாலின்யை நமஹ.

பரம மங்கலமான குணங்களோடு கூடியவள். குணக் குன்றாய் திகழும் ரூபிண்யை. நல்ல குணங்களில் முக்கியமாய் கருணை வடிவானவள். அதுவே அவளின் அழகையும் அதிகரிக்கிறது.

ஓம் கல்யாண சைல நிலையாயை நமஹ.

ஸ்ரீமேரு மலையின் உச்சியில் இருப்பவள் அம்பிகை. ஸுமேரு மத்ய ஸ்ருங்கஸ்தா என்றுதான் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் கூறுகிறது.

ஓம் கமனீயாயை நமஹ.

ஸ்ரீபுர நாயகியாய் மனத்தைக் கவரும் வடிவுடையவளாக விளங்குகிறாள் தேவி. அழகும்,நற்குணங்களும் நிரம்பிய தோற்றப் பொலிவு எப்போதும் மனதைக் கவரும். அழகியான அம்பிகை அளவற்ற ஜோதி வடிவாக விளங்குகிறாள்.

ஓம் கலாவத்யை நமஹ.

சந்திர, சூர்ய கலைகள் அவளுக்கு அழகு சேர்க்கின்றன. ஞானம் என்னும் கலைகளுடன் பிரகாசிக்கும் அம்பிகை, தன் அடியவர்களுக்கும் அதை அள்ளித் தருகிறாள்.

சிவசக்தி ஐக்கிய வடிவினராக விளங்கும் ஈசனைப் புகழ்ந்து பாடும் போது ஸ்ரீ சங்கரர் “சந்திரகலையை சிரசில் அணிந்தவர்களுமாகிய ஒருவருக்கொருவர் தவப் பயன் அடைந்தவர்கள், மூவுலகுக்கும் மங்களங்களை அருள்பவர்களும் ஆகிய சிவசக்தி ரூபம்” என்று புகழ்கிறார்.

ஓம் கமலாக்ஷ்யை நமஹ.

அம்பிகையின் கண்கள் தாமரைப் பூவைப் போல் மலர்ந்து இருக்கிறது. தன் கடைக்கண் பார்வையால் அருட் செல்வம், பொருட்செல்வம் என்று அனைத்தும் அருளுகிறாள்.

ஓம் கல்மஷக்ன்யை நமஹ.

பாவங்களை நாசம் செய்பவள்.

அம்பிகை மங்களமாக இருப்பவள் மட்டுமல்ல, தன்னை வணங்குபவர்களுக்கும் அதை வாரி வழங்குபவள். அவள் வசிப்பது மகாமேரு என்றாலும், அந்த மேரு நம் இதயத்திற்குள்ளும் இருக்கிறது. அவள் நம் மனசாட்சியாக இருக்கிறாள். ஆணவம், பொறாமை என்பதை எல்லாம் அழித்து, நிர்மலமான மனதுடன் இருந்தால் அவள் நமக்கு சகல சௌபாக்கியங்களையும் அருள்வாள்.

அவள் ஈசனோடு இணைந்தவள். பிரிக்க முடியாத ஆதிப் பரம்பொருள். உலகிலுள்ள அனைத்து ஞானங்களின் வடிவாக இருக்கிறாள் அவள். அந்த அறிவை நமக்கும் அளிப்பவள் ஸ்ரீலலிதை. ஆதிசங்கரர் சௌந்தர்யாலஹரி மூலமாக ஸ்ரீவித்யா உபாசனையை அளிக்கிறார். அதன் மந்திர ரூபமாக த்ரிசதீ விளங்குகிறது.

“சர்வ சைதன்ய ரூபம் தாம் ஆத்யாம் வித்யாம் தீமஹி

புத்திம் யா ந: ப்ரசோதயாத்” என்கிறது தேவி பாகவதம்.

ஆனந்த ரூபமாக இருப்பவள் அம்பிகை. எங்கு ஆனந்தம் நிலவுகிறதோ அங்கு அழகு பூரணமாக இருக்கும். உள்ளத்தில் மகிழ்ச்சி, கருணை என்று எப்போதும் ஆனந்தமாக இருப்பவள் அம்பிகை. எனவேதான் அவள் சௌந்தர்யமாக, மங்கள வடிவமாக இருப்பவள்.

அவள் அழகைச் சொல்ல வார்த்தைகள் ஏது?

“பத்து விரல் மோதிரம் எத்தனை பிரகாசமது, பாடகத் தண்டை கொலுசும், பச்சை வைடூரியம் இச்சையாய் இழைத்திட்ட, பாதச் சிலம்பினொளியும், முத்து மூக்குத்தியும், இரத்தின பதக்கமும், மோகன மாலையழகும், முழுவதும் வைடூரியத்தினால் முடிந்திட்ட தாலியழகும், என்று அவள் அணிந்திருக்கும் நகைகளையும் அதில் ஜொலிக்கும் அவளின் அழகையும் வருணிக்கிறது காமாட்சி அம்மனின் விருத்தம்.

ஆனால் அதை விட அற்புதமாய் ஜொலிக்கிறது அவளின் முக அழகு.

சுத்தமாய் இருக்கின்ற காதினில் கம்மல், கையில் பொன் கங்கணம், சிறுகாது கொப்பும் அணிந்து இந்த உலகே பொலிவுறும் வண்ணம் காட்சி அளிக்கிறாள் அம்பிகை. மாயவன் தங்கையான சக்திசிவரூபத்தை அடியனால் சொல்லத் திறமில்லை என்கிறார் விருத்தம் பாடியவர்.

அவளின் அழகு மட்டுமல்ல, அவளின் கருணையும் அதிசயமானது. இந்த உலகம் முழுவதும் நிறைந்து நிற்கிறாள் அவள்.

இந்தப் படைப்பே அவளுக்குள் அடங்கியுள்ளது. அதன் உயிர் சக்தியாக அவள் இருக்கின்றாள்.

“ஒன்றாய் அரும்பி, பலவாய் விரிந்து இவ்வுலகெங்குமாய்

நின்றாய், அனைத்தையும் நீங்கி நிற்பாய் எந்தன் நெஞ்சினுள்ளே’ என்கிறது அபிராமி அந்தாதி. அவள் நம் மனசுக்குள், எண்ணமாக, செயலாக இருக்கிறாள்.

அம்பிகை இருக்கும் இதயத்தை நாம் அழகாக வைத்துக் கொள்ள வேண்டும். அழகு என்றால் எப்படி? தீய எண்ணங்கள் நீக்கி, நல்ல எண்ணங்கள், குணங்கள், செயல்களுடன், அனைத்து உயிர்களிலும் அம்பிகை இருக்கிறாள் என்ற உணர்வுடன் நடக்க வேண்டும். அப்போது அவள் பரிபூரணமாக நமக்குள் அமர்ந்து விடுவாள்.

அதுதான் அவள் வசிக்கும் ஸ்ரீபுரம்.