முலகாரம்
‘வரலாறுகள், கதைகள், காப்பியங்கள், காவியங்களில் இடைச்செறுகல்கள் அரங்கேறுகின்றன. அவற்றில் பெண்களுக்கான அதீத கட்டுப்பாடுகளும், பிரத்யேக ஒழுக்க நியதிகளும் புகுத்தப்படுகின்றன. அப்படித்தான் பெண் உடல் அரசியல் உருவாகிறது. பெண் என்பவள், அந்தக் குடும்பத்தில் உள்ள ஆண், சம்பாதிக்கிறதில் உபரியாக சேகரமாகிற பொருளை, பணத்தை அவனின் உயிரனுவில் உருவாகிற வாரிசிடம் ஒப்படைக்க வேண்டிய இடைத்தரகராக மாற்றப்படுகிறாள். அதற்காக பெண்களுக்கு மட்டும் கற்பு என்கிற உடம்பு சார்ந்த புனித வாத சித்தாந்தம் உண்டாக்கப்படுகிறது. அதன் நிமித்தமாகவே, பெண்களுக்கான கல்வி மறுக்கப்படுகிறது. சமையல் கல்வி மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.’
முலை வரி அல்லது மார்பு கச்சை வரி என்று சொல்லலாம். இது உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டவொரு ஆவணப்படம். இந்த முலை வரி என்கிற சட்டம் ஒரு காலக்கட்டத்தில் இந்தியாவெங்கும் இருந்திருக்கிறது. குறிப்பாக, தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த பெண்கள் தங்கள் முலைகளை மறைத்துக் கொள்ள வேண்டுமென்றால், மாதாமாதம் அதற்கென முலை வரி கட்ட வேண்டும் என்றிருக்கிறது இந்து மதத்தின் சாதிய கோட்பாடு. இதன் அடர்வு உச்சத்தில் இருந்தது கேரளாவை சேர்ந்த திருவாங்கூர் சமஸ்தானம் என்றால் அது அப்பட்டமான உண்மை.
ஆப்பிரிக்காவை தங்களின் அடக்குமுறைக்கு கீழே கொண்டு வந்த ஆங்கிலேயர்கள், பதினேழாம் நூற்றாண்டு வாக்கில், அங்கே கிறித்துவ மதத்தை பரப்ப, பாதிரிமார்களை அனுப்பி வைக்கிறார்கள். அப்படி அனுப்பப்பட்டவர்கள் பதினேழாம் நூற்றாண்டு வாக்கில், அங்கே எழுப்புகிற தேவாலயம் உள்ளே நுழைய வேண்டுமானால், மார்பு கச்சை இல்லாத பெண்கள் தங்கள் முலைகளை மறைத்துக்கொண்டு தான் வர வேண்டும் என்று சட்டம் இயற்றுகிறார்கள்.
அந்தக் காலத்தில் உள்ள இளவரசிகள், ராஜகுமாரிகள் உட்பட பெண்கள் எவரும் மார்பு கச்சை அணிந்திருக்கவில்லை. அப்படியொரு பழக்கமே உலகமெங்கிலும் இருந்திருக்கவில்லை. காற்றோட்டமாக, சுதந்திரமாகவே உலா வந்திருக்கிறார்கள். அது எந்த மனதின் கண்களையும் உறுத்தவில்லை. ஆபாசமாக பார்க்க அந்த கண்கள் பழக்கப்பட்டிருக்கவும் இல்லை. அதற்கான கற்பிதங்களும் முன்னாளில் தோன்றியிருக்கவுமில்லை.
அதுவரை முலைகள் பாலுறுப்பாக உலகத்தில் கருதப்பட்டிருக்கவில்லை. அது குழந்தைகளின் சிற்றுண்டிச்சாலை. காலங்காலமாக மழலையர் உணவு விடுதியாக மட்டுமே அவை பார்க்கப்பட்டு வந்திருக்கிறது.
பதினேழாம் நூற்றாண்டிற்கு பிறகு கிறித்தவ மதவாதிகளால் அந்தச் சட்டம் கொண்டு வரப்படுகிறது. பின்னர் பத்தொன்பதாம் நூற்றாண்டில், அதற்கு எதிராக பல பெண்கள் கலகக்குரல் எழுப்புகிறார்கள். திறந்த மார்போடு ஊர்வலம் வருகிறார்கள். பிற்பாடு, ஆங்கிலேய அரசு, பெண்களுக்கு மட்டும் மார்பை மறைக்க வேண்டும் என்கிற பாரபட்சமான சட்டத்தை திரும்ப பெற்றுக் கொண்டு விட்டது. பெண்கள் தங்கள் முலைகளை மார்பு கச்சைகளால் மறைப்பது அவர்களின் சௌகர்யத்திற்காக மட்டுமே இனிமேல் இருக்கும். மார்பு கச்சை அணிவதும், அணியாததும், அவர்களின் தனிப்பட்ட விருப்பத்தை சார்ந்தது, என்று சட்டத்தை மாற்றி அமைக்கிறார்கள்.
இப்படியான ஒரு எதிர்வினையாகவே 90-களில் பிரோத்திமா பேடி மும்பை ஜுகு பீச்சில் நிர்வாண ஓட்டம் நடத்திக் காட்டினார். என் உடம்பு, என் உரிமை. என் உடம்பின் மீதோ, மனதின் மீதோ எந்த ஒரு ஆணும் உரிமை கொண்டாட முடியாது. ஆதிக்கம் செலுத்த முடியாது என்பதன் வெளிப்பாடே இப்படியான அதிரடி செயல்கள்.
இதன் நீட்சியாகவே இந்தியன் பீனல் கோட் ஐ.பி.சி செக்சன் 497 – ஐ உச்சநீதிமன்றம் நீக்கியிருக்கிறது. இதன் மூலம் திருமணம் ஆகாத, ஆன எந்தவொரு ஆணும், பெண்ணும் சுயவிருப்பத்தின் பெயரில் உறவு வைத்துக் கொண்டால், அது குற்றமாகாது. இந்த செக்சன் ஆண்-பெண் சமத்துவத்தை கேள்விக்குள்ளாக்குவதாக, அதை நீக்குகிறபோது, நீதிபதிகள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.
இங்கே கிட்டத்தட்ட அதே காலக்கட்டத்தில் திருவாங்கூர் சமஸ்தான பகுதியில் வாழ்ந்து வந்த நங்கேலி என்கிற தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த இளம்பெண், தன் தோழியோடு சேர்ந்து ஒரு முடிவு எடுக்கிறாள். தங்களின் முலைகளை, என்னவோ காணாததை, கண்டது போல, அப்படி வெறித்துவெறித்து பார்க்கிற உயர்த்தப்பட்ட சாதியினர்களின் கண்களில் இருந்து தங்களின் மார்பகங்களை மறைக்க நினைக்கிறார்கள். அப்படியாக நங்கேலி தண்ணீர் எடுக்கப்போக, தென்னங்கீற்று வேயப்போக, என்று வெளியே தன் தோழியோடு செல்கிற போதெல்லாம், மார்பு கச்சை அணிந்தபடி செல்ல ஆரம்பிக்கிறாள்.
மேட்டுக்குடி நம்பூதிரி, நாயர் இளந்தாரிகளுக்கு அது கண்ணை உறுத்துகிறது. அவர்கள் பஞ்சாயத்து தலைவரை அழைத்துக்கொண்டு வந்து, அடுத்த மாதம் 1-ந் தேதியிலிருந்து முலைவரி கட்ட வேண்டும் என்று மிரட்டி விட்டுச் செல்கிறார்கள்.
நங்கேலியின் கணவனும் அவளின் துணிச்சலான எண்ணத்திற்கு துணை நிற்கிறான். முலை வரி கட்டாமல், எதிர்ப்பை காட்டுவதென நங்கேலி எடுத்த முடிவிற்கு, அவனின் சமத்துவ மனது வழிமொழிகிறது.
சொல்லி வைத்தாற் போல், அடுத்த மாதத்தின் முதல் நாள் முலை வரி கேட்டு, அந்த அதிகார வர்க்கம் அவள் வீட்டு வாசல் வந்து நிற்கிறது. உண்மையில் எவ்வளவோ முயன்றும் அவள் கணவனால் அதற்கான பொருளை ஈட்ட முடியவில்லை. அவள் மௌனமாக சமைந்து போய் நிற்கிறாள். வரிப்பணம் எவ்வளவு என்பதை தீர்மானிக்க, முலையின் அளவை பார்வையால் அளக்க வேண்டும் என்கிறார்கள். அவள் தன்னுடைய முண்டை அவிழ்த்து அவர்களுக்கு தன் மார்பை காட்டுகிறாள். அவர்கள் பிரமிக்கிறார்கள். ஆபாச மனதால் அதன் மீது அரூபமாய் பாவுகிறார்கள். அது விரிந்து நிமிர்ந்திருந்ததால், கூடுதலாக முலை வரி தர வேண்டும் என்று உத்தரவிடுகிறார்கள். அவள் உறைந்து போய், வரிப்பணத்தை எடுத்து வருவதாக சொல்லி, தன் குடிசைக்கு உள்ளே சென்றவள், தன் இரண்டு கொங்கைகளையும் அறுத்து, ஒரு வாழை இலையில் வைத்து, அவர்கள் முன் நீட்டுகிறாள்.
மிரண்டு போய் அந்தக் கூட்டம் தெறித்து ஓடுகிறது. நங்கேலி வெட்டுண்ட மரமாய் தரையில் சரிகிறாள்.
கணவன் அவளை எரியூட்டுகிற போது, மனம் பொறுக்காமல் அந்த நெருப்பிலேயே அவனும் பாய்ந்து உடன்கட்டை ஏறுகிறான். இந்தியாவில் உடன்கட்டை ஏறிய முதல் ஆண் அவன் தான். அதுவும் காதலின் நிமித்தம்.
அந்த பிராந்தியமெங்கும் நங்கேலியின் வீரமரணம் கொந்தளிப்பை ஏற்படுத்துகிறது. நங்கேலி விசயம் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கவனத்திற்கு செல்கிறது. ராஜா அதிர்ந்து போகிறார். உடனே முலை வரி சட்டத்தை, தங்கள் சட்ட புத்தகத்திலிருந்து நீக்கும்படி ஆணை இடுகிறார்.
இப்போதும் பல நாடுகளில் வாழ்கிற பழங்குடி பெண்கள் மார்பு கச்சை அணிந்து கொள்வதில்லை தான். அதை அங்குள்ள எந்த ஆண்களும் ஆபாசமாக பார்ப்பதில்லை. உடம்பில் உள்ள பல உறுப்புகளில் அதையும் ஒன்றென தான் பார்க்கிறார்கள். ஆபாசத்தை அப்படி குறிப்பிட்ட உறுப்புகளுக்குள் புகுத்துவதென்பது ஆணாதிக்க சமூக கற்பிதம் மட்டுமே. தாய்மை, பெண்மை என்று மிகுவுணர்ச்சி ததும்ப பல விசயங்களை சொல்வார்கள். அவை எதையும் இந்த ஆணாதிக்க சமூக மனநிலை கொண்டவர்கள் பின்பற்றுவதுமில்லை செயல்படுத்துவதுமில்லை.
ஒரு கவிஞனுக்கு பெண்ணின் மார்பகம் என்பது குழந்தைகளின் சிற்றுண்டி சாலையாக படுகிறது. மற்றொருவருக்கோ ஆபாசம் ததும்பும் பாலுறுப்பாக படுகிறது. இந்த அவலை நிலை சமூக கற்பிதங்களின் நீட்சியாகவே ஸ்தாபிதம் கொள்கின்றன.
பாலி தீவில் வாழ்கிற பழங்குடியின பெண்கள் மார்பு கச்சை அணிந்ததேயில்லை. இதை அறிந்த நடிகர் சார்லி சாப்ளின் அங்கே சென்று அவர்களோடு பழகி, அவர்களின் எளிய, மகிழ்ச்சியான, ஆபாசமற்ற வாழ்க்கை முறையை ஆவணப்படமாக எடுத்திருக்கிறார். அந்த ஆவணப்படம் யூ டியூபில் காண கிடைக்கிறது.
மார்பகம் என்பதில் அப்படி என்ன தான் இருக்கிறது? ரத்தம், சதை, நரம்புகளால் ஆன ஒரு உறுப்பு. ஆண்களுக்கும் மார்பகம் இருக்கிறது. பெண்களை விட சற்று சிறியதாக இருக்கிறது. பெண்களுக்கு சற்று பெரியதாக இருப்பதற்கான காரணம் குழந்தைகளுக்கு உணவளிக்கிற பாகமாக அது பங்காற்றுகிறது. அதன் நிமித்தமே பரிணாம வளர்ச்சியில் மார்பகங்கள் ஆண்களை விட பெண்களுக்கு சற்று பெரிய அளவில் இருக்கிறது. அவ்வளவு தான்.
பிறகெப்படி அது பாலுறுப்பாக பாவிக்கப்படுகிறது. ஆணாதிக்க சமூக கற்பிதமே இதற்கான காரணம். இப்படித்தான் இப்போது இடுப்பு, தொப்புள் முதலான பாகங்களை பாலுறுப்பாக கற்பிதம் செய்ய வைத்து, அறியாமையில் இருக்கிறவர்கள் மனங்களில் ஆணியடித்து, அதை பதிய வைத்து படிப்படியாக பழக்கப்படுத்துகிறது இந்த ஆணாதிக்க சமுதாயம்.
இங்கே பல வகையான பாடி ஷேம்கள் (body shaming) உண்டு.
தமிழ் கலாச்சாரம், பண்பாடு, நாகரீகம் தொன்மையானது. காதலிலும், காமத்திலும், தெய்வீகத்தை உணர்ந்த நாகரீகம் தமிழ் நாகரீகம். அதனாலேயே, நிர்வாண ஓவியங்களை, ஆண் - பெண் விதவிதமான பாலுறவு நிகழ்வுகளை கோவில்களில் பண்டைய தமிழர்கள் கலை சிற்பங்களாக வடித்திருக்கிறார்கள். அந்நாளில் இருந்தவர்களின் பார்வையில் இந்த உறுப்புகள் எல்லாம் ஆபாசப்படுத்தப் பட்டிருக்கவில்லை. அதனால் நிர்வாணம் என்பது வெளிப்படை, தூய்மை என்கிறதன் படிமமாகவே இருந்திருக்கிறது.
நிலவுடமை சமூகமும், ஆணாதிக்கம் வடிவமைத்த சமனற்ற குடும்ப அமைப்பும் தோன்றி பிறகே, பெண்களின் அங்கங்கள் ஒவ்வொன்றாக பாலுறுப்பாக கற்பிதம் செய்யப்பட்டு, அதன் மூலமாக அவள் ஒரு பண்டமாக படிப்படியாக மாற்றப் பட்டிருக்கிறாள்.
பெண்ணியம் பற்றிய முதல் நூலை எழுதியவர் சிமோன் டி பூவார். அதன் பெயர் இரண்டாம் பாலினர். இவர் பிரான்ஸ் தேசத்தை சேர்ந்த இருத்தலியல்வாதி. அதில் இவர் முக்கியமாக குறிப்பிடுகிற ஒரு விசயத்தை இங்கே சொல்லாமல் இருக்க முடியவில்லை. தாய்மை, பெண்மை என்கிற இரண்டு வார்த்தைகளும் இந்த ஆணாதிக்க சமூகத்தில் உண்மையில் நாடகத்தனமானது. ஆணாதிக்க சமூகத்தால் கட்டமைக்கப்பட்டது. அப்படி அவர்கள் மிகைப்படுத்தி சொல்கிறாற்போல் அப்படியான அர்த்தம் உண்மையில் அந்த பதங்களுக்கு இல்லை. அது ஒரு பிரமை. அது படிப்படியாக ஆணாதிக்க சமூகத்தினால் கட்டமைக்கப்பட்டு, நிஜம் என நம்ப வைக்கப்பட்டிருக்கிற வார்த்தைகள் என்கிறார். அந்த வார்த்தைகளை வைத்து பெண்களை இரண்டாம் தர பிரஜைகளாக இந்த சமூகத்தில் அனைவரையும் நம்ப வைப்பதற்காகவே இப்படியான கருத்தியல் அரங்கேற்றம் நிகழ்ந்திருக்கிறது என்கிறார்.
மாராப்பு ஒதுங்கினாலே ஆபாசம் என்று சொல்கிற அளவிற்கு இந்தச் சமூகத்தின் பார்வை ஆபாசப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதே கசப்பான உண்மை. எந்த ஒரு ஆணும் வெற்று மார்போடு நடந்து போனால் அது ஒரு காட்சி பொருள் ஆவதில்லை. அதுவே ஒரு பெண் என்றால், காட்சி பொருளாகி விடுகிறது. அந்த பெண் மனநிலை பிறழ்ந்தவளாக இருந்தால் கூட, காணாததை கண்டது போல ஆணாதிக்க மனநிலை கொண்டவர்களை வேடிக்கை பார்க்க வைக்கிறது.
அழுக்கு உடைகளில் அல்ல. மனங்களில், அதன் பார்வைகளில் இருக்கிறது. பெண் அங்கங்களை பாலுறுப்புகளாக பார்த்து ஆபாசப்படுத்துகிற பார்வையில் தான் குறைபாடு இருக்கிறது. பெண்களின் அங்கங்களிலோ, ஆடைகளிலோ அல்ல. அந்த குறைபாடு ஆணாதிக்க சமூகம் விதைத்தது. அதை படிப்படியாக வேரறுக்கிற போதே, பெண் விடுதலை முழுமை கொள்ளும்.
மார்பகம் என்பது ஒரு அங்கம். அவ்வளவு தான். பெண் ஆணுக்கு இணையான ஆறறிவு படைத்த மானுடத்தின் சரிபாதி. அங்கங்களை ஆபாசப்படுத்தி, பெண் இனத்தை அடுப்படியிலேயே தங்கி விட நடக்கிற நெடுநாளைய சதி அது. பெண் உடல் யாருக்குமான உடமை அல்ல. அது, அவளுக்கேயான அவளின் உடமை. அவள் மனம், அவளின் உரிமை. பெண் உடல் தடை அரசியலில் இருந்து பெண் சமூகம் வளர்ந்த நாடுகளை போல எப்போது விடுபடுகிறதோ, அப்போதே இங்கே உண்மையான பெண்ணியம் தழைக்கும். ஆண் - பெண் சமத்துவம் நிலைக்கும்.
உணர்வே அறம். சமத்துவமே இலக்கு. என் உடம்பு, என் உரிமை. உடை போடுவதும், போடாததும் கூட என் உரிமை தான். எந்த ஒரு நபரும் இதுபற்றி கேட்க கூடாது. அதற்கு அவர்களுக்கு எந்த தகுதியும் கிடையாது என்பதன் ஆணித்தரமான நிரூபணமே நங்கேலி.
Leave a comment
Upload