தொடர்கள்
பொது
பிட்காயின் எனும் க்ரிப்டோ கரன்சி... - மத்தியரசு தடை.??! - தில்லைக்கரசிசம்பத்

20211026211921102.jpeg

மத்திய அரசு வரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் (நவம்பர் 29) “க்ரிப்டோ கரன்சி மற்றும் அதிகாரப்பூர்வ டிஜிட்டல் நாணய ஒழுங்குமுறை மசோதா 2021” என்று பெயர் சூட்டப்பட்ட மசோதாவை தாக்கல் செய்ய இருக்கிறது. இதில் பிட்காயின் போன்ற க்ரிப்டோ கரன்சி மற்றும் டிஜிட்டல் கரன்சி சட்டத்தை உருவாக்குவதற்கான மசோதாவும் அடங்கும். அத்தோடு இந்திய அரசே, ரிசர்வ் வங்கியின் மூலம் ஒரு அதிகாரப்பூர்வ டிஜிட்டல் கரன்சியை உருவாக்கும் திட்டம் வைத்திருக்கிறது.

முதலில் பிட்காயின் என்றால் என்ன என்று பார்ப்போம். இதை டிஜிட்டல் பணம் என்றும் கூறலாம். இங்கிலாந்தின் பவுண்ட், அமெரிக்காவின் டாலர் மற்றும் இந்தியாவின் ரூபாயை போல் இந்த டிஜிட்டல் பணத்திற்கும் மதிப்புள்ளது.

பிட்காயின் என்றால் படத்தில் பார்ப்பது போல ஒரு பெரிய தங்க நிற காசை நாம் வாங்கி லாக்கரில் வைப்பது போல் அல்ல. இது முற்றிலும் டிஜிட்டல் வகையான பணம். இதை எந்த நாட்டின் அரசுகளோ, அரசு வங்கிகளோ வெளியிடுவதில்லை, நமக்கு பிட்காயின் வேண்டுமென்றால் நம் பெயரில் ஒரு பிட்காயின் கணக்கை தொடங்கி, நாம் டிஜிட்டலாக வாங்கி வைத்து கொள்ளலாம்.

மற்றபடி... இதன் பரிவர்த்தனை பிளாக்செயின் (Block chain) மூலம் நிகழ்கிறது. ப்ளாக்செயின் ஒரு வங்கியின் கணக்கு புத்தகம் போன்றது. இதை கண்காணிக்கும் உரிமை எல்லா முதலீட்டாளர்களுக்கும் உண்டு. ப்ளாக் செயினில் ஒவ்வொரு விவரங்கள் உள்ள கட்டமும் அதன் பக்கத்தில் உள்ள கட்டத்துடன் இணைக்கப் பட்டு இருக்கும். எனவே, ஒன்றில் ஏதேனும் கொடுக்கல் வாங்கல் போன்ற விவரங்களை மாற்றினால், மற்ற எல்லா கட்டங்களிலும் அதற்கேற்ப மாற்றங்களை ஏற்படுத்த வேண்டி இருக்கும். அதனால் இதை யாராலும் ஹேக் செய்யவோ, மோசடி செய்யவோ முடியாது. இதுவே ப்ளாக் செயினின் தொழில்நுட்பம். கடந்த 2009 ஆண்டில் உலகின் முதல் பிட்காயினை ‘சடோஷி நகமோடோ’ என்ற புனை பெயரில் ஒருவர் உருவாக்கி இருந்தார். உருவாக்கியது கூட யார் என்பது இதுவரை தெரியவில்லை. அப்படி ஒரு அநாமதேய மனிதர் உருவாக்கிய அனாமதேய பணம். எதற்காக அனாமதேய பணம் என்று கூறுகிறோம் என்றால்.... பிட்காயினில் என்ன பரிவர்த்தனை நடந்தாலும், எவ்வளவு முதலீடு செய்தாலும் அரசாங்கம் கேள்வி கேட்க முடியாது.

எந்த கொடுக்கல் வாங்கலையும், காவல்துறையால் கண்டுபிடிக்க முடியாது என்பது தான். இதுவே உலகில் பிட்காயினின் அசுர வளர்ச்சிக்கு காரணமாக கருதப்படுகிறது. வெறும் இணைய தொடர்பும், பிட்காயினில் கணக்கும் வைத்திருந்தாலே போதும். வங்கி போன்ற எந்த மைய அமைப்பும் தேவைப்படாமலேயே, பணப் பரிமாற்றம் செய்யலாம். க்ரிப்டோ கரன்சி சிறந்த முதலீடாக கருதப்படுவதால், இந்திய இளைஞர்கள் கூட்டத்தின் இடையே பிட்காயின் மோகம் அதிகமாகவே காணப்படுகிறது. பிட்காயின் மதிப்பு ஏறினால், விற்று லாபம் பார்க்கலாம் என்ற எண்ணத்திலும் பலர் இதில் அதிகமாக முதலீடு செய்கிறார்கள்.

கிரிப்டோ கரன்சிகளின் விலை எப்போது ஏறும், எப்போது இறங்கும் என்றெல்லாம் சாதாரண முதலீட்டாளர்கள் கணிக்க முடியாது. அதன் நுட்பங்களை புரிந்து கொள்வது கடினம் என்பதால் இதற்காகவே ஏஜெண்டுகள் எனப்படும் தரகர்கள் செய்ல்படுகிறார்கள். தென்தமிழகத்தில் நெட் வொர்க் மார்கெட்டிங் (MLM) ஸ்டைலில் இந்த ஏஜென்சிகள் ஊர் ஊராக சென்று “5000 ரூ போட்டால் கூட போதும், பிட்காயின் பங்குதாரர் ஆகிடுவீங்க. ஒரே வருஷத்துல 50,000 பாக்கலாம்...!” என மூளைச்சலவை செய்து ஆள் பிடித்து கொண்டு இருக்கிறார்கள். நம் சென்னையில் கூட அப்படிப்பட்ட ஏஜென்சிகள் இயங்கி வருகின்றன. இருந்தாலும் புற்றீசல் போன்று பெருகி வரும் ஏஜன்சிகள் நம்பகத்தன்மை உடையதா என்பதை முதலீட்டாளர்கள் அறிவது கடினம். இது போன்ற விஷயங்கள் சாதாரண முதலீட்டாளர்களுக்கு மேலும் சிக்கலாக்குகிறது. இதற்கு உதாரணமாக, 2017ஆம் ஆண்டு நடந்த நிகழ்வாக, சுமார் 20,000 டாலராக இருந்த ஒரு பிட்காயினின் விலை, 2018ல் திடீர் என்று விலை சரிந்து வெறும் 3,122 டாலர் அளவுக்கு வந்தது. கிரிப்டோ சந்தையில் முதலீடு செய்தவர்களின் பல லட்சம் கோடி ரூபாய் காணாமல் போனது. இது போன்ற ரிஸ்க்குகளையும் முதலீட்டாளர்கள் எதிர்கொள்ள வேண்டும்.

கிரிப்டோ கரன்சி என்பது வெறும் பிட்காயின் மட்டுமில்லாமல்.... எத்திரியம் (Ethereum), ட்ரான், டோஜ் (Dogecoin), ஷிபா, ரிப்பிள் , லைட்காயின் என சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கிரிப்டோ கரன்சிகள் தற்போது புழக்கத்தில் உள்ளன.

இதில் அதிக மதிப்பு பிட்காயினுக்கு தான். இந்திய மதிப்பின் படி... 1 பிட்காயின் என்பது ரூபாய் 44 லட்சத்துக்கு சமம்.

பிட்காயினை பொறுத்தவரையில், 21 மில்லியன் எண்ணிக்கை தான் வரைமுறை. தற்போது 17 மில்லியன் பிட்காயின்கள் புழக்கத்தில் உள்ளன.

உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், தனது டெஸ்லா கார் நிறுவனம் 150 கோடி டாலருக்கு பிட்காயினை வாங்கியுள்ளதாக அறிவித்தார். இந்த முதலீட்டுக்கு பின் பிட்காயினின் மதிப்பு பெரிய அளவில் உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.

“டெஸ்லா காரை பிட்காயின் கொடுத்து வாங்கலாம்!” என்கிறார் எலான் மஸ்க். “எசமான்..! நீங்க இங்கேயும் வந்துட்டீங்களா.?!” என்று கேட்கும் வகையில், செவ்வாய் கிரகத்திலிருந்து பூமியின் கிரிப்டோ கரன்சி வரை இவர் கால் பதிக்காத இடமே இருக்காது போல...

இப்படிப்பட்ட பெரிய முதலாளிகளும் கிரிப்டோ கரன்சி முதலீட்டில் இறங்குவதால், சர்வதேச முதலீட்டாளார்களையும் ஈர்க்கிறது.

முதலில் இந்த பிட்காயின் பெறுவதற்கு, நமக்கு பொது சாவி மற்றும் தனி சாவி வேண்டும். இந்த பொது சாவி, நாம் வைத்திருக்கும் பணத்தின் மேல் நமது உரிமையை உறுதி செய்கிறது. பிட்காயினை யாருக்காவது அனுப்ப வேண்டுமென்றால் இந்த பொது சாவி முகவரி நம்மிடம் இருக்க வேண்டும்.

ஆனால் இந்த பொதுசாவி பெறுவதற்கு தனிச்சாவி அவசியம். தனிச்சாவிக்கு ரகசிய கடவு சொல் மிக அவசியம்.

தனிச்சாவியில் இருந்து தான், பொது சாவி உருவாக்கப்படுகிறது.

பிட்காயின் சாவி என்றவுடன் கடந்த 2020 நவம்பரில் பெங்களூரில் நடந்த காமெடி திரில்லர் சம்பவம் ஞாபகத்திற்கு வருகிறது. இப்படி தான் பிட்காயின் வாங்கி வைத்திருந்த ஸ்ரீ கிருஷ்ண ரமேஷ் என்பவர் பிட்காயின்களுக்கான நிழல் வலையமைப்பைப் (DarkNet) பயன்படுத்தி, போதைப் பொருளை வாங்க முயன்றார் என்ற குற்றச்சாட்டில் பெங்களூரில் கைதானார். “எவ்வளவு பிட்காயின் வைத்திருக்கிறீர்கள்?” என காவல்துறை கேட்டதற்கு 31.8 என்று கூறி கணக்கை காண்பித்திருக்கிறார் ரமேஷ். “31 ஆ..!” என வாயை பிளந்தது காவல்துறை. “இதை வாங்க ஏது பணம்..?” என்று கிடுக்கிப்பிடி போட... “அவ்வளவு பணம் எல்லாம் இல்லைங்க ஐயா.. சும்மா... மத்த நபர்களின் க்ரிப்டோ அக்கவுன்ட்களில் ஹேக் பண்ணி நுழைஞ்சு, என் கணக்குக்கு மாத்திக்கிட்டேன் சாமி..!” என்று கூற... காவல் அதிகாரிகள் அதிர்ந்து போயினர். இவ்வளவு பெரிய மோசடியா என்று அந்த பிட்காயின்களை கையகப்படுத்தும் நோக்கில் காவல் துறை தங்களது பெயரில் ஒரு பிட்காயின் கணக்கை தொடங்கி, ரமேஷின் கணக்கை எட்டி பார்க்க... அங்க 31 காயின்களுக்கு பதிலாக 186.811 பிட்காயின்கள் இருந்ததை கண்டு மயக்கம் போட்டு விழாத கதையாக கடும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த விவகாரம் அரசியல் ரீதியாகவும் சூடு பிடிக்க, ஆளும் பாஜக அரசை முன்னாள் முதல்வர் சித்தராமையா முதற்கொண்டு அனைவரும் கழுவி கழுவி ஊற்றினார்கள். பாஜக தலைவர்களுக்கு இந்த மோசடியில் பங்கு இருக்கிறது என்று நிலைமை களேபரமாக, பாஜக அரசு தவித்து போனது.

பிறகு, சைபர் கிரைம் நிபுணர்களை வைத்து ஆராய்ந்தபோது, தன்னுடைய கணக்கு என ரமேஷ் சொன்னது உண்மையில், ஒரு பிட்காயின் எக்சேஞ்ச். அதற்கான தனிப்பட்ட சாவி ரமேஷிடம் இல்லை என்பதும் அவர் சொன்ன ஹேக்கிங் விஷயம் பொய் என காவல்துறைக்குப் புரிந்து அசடு வழிந்தனர்.

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால்.... பிட்காயின் மோசடி உண்மையில் நடந்திருந்தால் கூட, அந்த மோசடி பணத்தை கையகப்படுத்துவதற்கு காவல்துறையும் ஒரு பிட்காயின் கணக்கை தொடங்க வேண்டி இருந்தது என்பது தான். இது போன்ற முறைக்கேடுகள் நடந்தால், விசாரிப்பதில் பல நடைமுறை சிக்கல்கள் இருக்கின்றன. அத்தோடு கட்டுப்பாடற்ற கிரிப்டோ சந்தைகள், பண மோசடி மற்றும் பயங்கரவாத செயல்களுக்கான நிதிக்கு பயன்படுத்தப்படலாம் என்று அரசு கருதுகிறது. இது குறித்த முறைகேடுகள், புகார்கள் இந்தியாவிலும் அதிகரிக்க ஆரம்பித்திருக்கும் வேளையில் தான் அரசு இந்த மசோதாவை கொண்டு வருகிறது.

இந்த மசோதா கொண்டுவரப்பட்டால் இந்தியாவில் கிரிப்டோ சந்தைக்கும், கிரிப்டோ சந்தை முதலீட்டாளர்களுக்கும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். இந்தியாவில் 1 கோடிக்கும் அதிகமான பேர், தோராயமாக 6 லட்சம் கோடிகளுக்கு மேல் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்துள்ளதாக கூறப்படுகிறது. தடை வந்தால், முதலீடு செய்தவர்களின் கதி என்னவாகும் என்ற கேள்வி எழுந்தாலும், முதலீடு செய்தவர்கள் தங்கள் பணத்தை வெளியில் எடுக்க அரசு ஒரு குறிப்பிட்ட கால அளவு கெடு கொடுப்பார்கள் என விவரம் அறிந்தவர்கள் கூறுகிறார்கள்.

சரி, அப்படியே தடை விதிக்கும் பட்சத்தில்... இனி இந்தியாவில் யாரும் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்ய முடியாதா? என்றால்...

இந்திய வங்கிகளைப் பயன்படுத்தி, ஒரு சாதாரண முதலீட்டாளர் இனி தனியார் கிரிப்டோவை வாங்க முடியாது. வேண்டுமானால் வெளிநாட்டில் கறுப்புப் பணம் வைத்திருக்கும் இந்தியர்கள், அந்தப் பணத்தை பயன்படுத்தி வெளிநாடுகளில் இருந்து கொண்டு வாங்கலாம்.

இந்த மசோதா பற்றிய தகவல் செவ்வாய்கிழமை வெளியானவுடன், கிரிப்டோ சந்தைகளில் பெரும் சரிவு ஏற்பட்டது. முக்கிய கிரிப்டோ கரன்சிகளான ‘பிட்காயின்’ 17 %, ‘எத்திரியம்’ 15 %, ‘டெதர்’ 18 %க்கு மேலாக வீழ்ச்சி அடைந்துள்ளன.

இந்தியாவைப் பொருத்தவரை க்ரிப்டோ கரன்சி பரிவர்த்தனைகளோ அதில் செய்யப்படும் முதலீடுகளோ அரசால் அங்கீகரிக்கப்பட்டவையல்ல.

முக்கியமான ஒன்று...

செலாவணி என்பது எப்போதுமே அரசுக்கு உரிமையானது. அதனால் தனிப்பட்ட டிஜிட்டல் கரன்சியை ஏற்றுக்கொள்ள எந்த நாடும் விரும்பாது. அரசின் நிதி சார்ந்த கொள்கைகளின் கீழ், தனியார் க்ரிப்டோ கரன்சிகளை வைக்க வேண்டும் என்ற நோக்கில் அதன் மீது கட்டுப்பாட்டை கொண்டு வர அரசு திட்டமிடுகிறது.

அரசு கட்டுப்பாட்டில் இல்லாத சீட்டு நிறுவனங்களில் முதலீடு செய்கிற மக்களின் பணத்தை, அந்த நிறுவனங்கள் ஸ்வாஹா செய்துவிட்டு காணாமல் போகிறார்களோ... அதேபோல் தான், முறைப்படுத்தாத க்ரிப்டோ கரன்சியை வைத்துள்ள முதலீட்டாளர்கள் பாதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன என்று இந்திய ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் எச்சரிக்கிறார். இந்திய அரசு க்ரிப்டோ கரன்சிக்கு எதிராக மசோதா கொண்டு வரப்போகிறது என்று செய்தி வெளியானவுடன், அனைத்து க்ரிப்டோ கரன்சிகளின் மதிப்பு தடாலடியாக குறைந்தாலும்....

“யார் என்ன சொன்னால் என்ன.. கிரிப்டோ கரன்ஸி கையில் வைத்திருப்பதே ஒரு கெத்து தான்..” என்று கோடீஸ்வரன் ஆகும் கனவில் தைரியமாக கடந்த இரு நாட்களாக அதையும் வாங்கிக்கொண்டு இருக்கிறார்கள் பல இந்தியர்கள். கனவு பலிக்குமா என்பது தான் இப்போதைய முக்கிய கேள்வியாக இருக்கிறது.