
சென்ற நவம்பர் மாதம் அனைவரையும் பதற வைத்த கோவை வன்கொடுமை சம்பவம் நினைவில் இருக்கிறதல்லவா?
அங்குள்ள பிரபல கல்லூரியில் படிக்கும் மாணவி அவரது நண்பருடன் இரவு வேளையில் கோவை விமான நிலையத்துக்கு அருகில் உள்ள தனி இடத்தில் காரில் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த மூன்று நபர்கள் அந்த ஆண் நண்பரைத் தாக்கி மயக்கமடைய வைத்து விட்டு மாணவியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய சம்பவம் தமிழகத்தை உலுக்கியது.
நமது விகடகவி இதழில் இது பற்றி விவரமாக எழுதி இருந்தோம் https://www.vikatakavi.in/magazines/451/15245/kelvikuriyaakum-pengal-paathukappu.php
அவ்வழக்கு இந்த வாரத்தில் முடிவுக்கு வந்துள்ளது . கோவை மகளிர் நீதிமன்றத்தில் அந்த மூன்று குற்றவாளிகளுக்கும் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியைச் சேர்ந்த கருப்பசாமி அவரது சகோதரர் காளிஷ்வரன் மற்றும் அவர்களது உறவினரான தவசி ஆகிய மூவருக்கும் கூட்டு வன்முறையில் ஈடுபட்ட குற்றத்துக்காக வாழ்நாள் சிறை தண்டனையை நீதிமன்றம் வழங்கியுள்ளது.
நீதிபதி சுந்தர்ராஜன் குற்றம் சாட்டப்பட்ட மூவரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்து BNS (Bharatiya Niyaya sanhita ) சட்டத்தின் உட்பிரிவு 70(1) படி தண்டனை வழங்கி உள்ளார். இச்சட்டத்தில் கூட்டு வன்முறைக்கு குறைந்த பட்ச தண்டனை 20 ஆண்டுகள் என்பதால் வாழ்நாள் கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு மிகவும் முக்கியமான வழக்காகவே கருதப்படுகிறது. வழக்கு தொடங்கிய 125 நாட்களுக்குள் தக்க ஆதாரங்களுடன் குற்றம் நிரூபிக்கப்பட்டு, தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது சிறப்பு,
இவ்வழக்கில் நீதித்துறையின் ஒத்துழைப்புடன் காவல் துறை விரைந்து செயல்பட்டு, குற்றவாளிகள் தப்பிக்க இயலாத அளவுக்கு சட்ட நடவடிக்கையை மேற்கொண்டனர், பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது நண்பரின் வாக்குமூலத்தை வைத்து விசாரணை துவங்கினாலும் , cctv படங்கள் மட்டுமன்றி அறிவியல் பூர்வமான ஆதாரங்கள், மற்றும் DNA மாதிரி திரட்டப்பட்டு , வழக்கின் உண்மைத்தன்மைக்கு வலு சேர்த்தனர். சம்பவம் நடந்த 24 மணி நேரத்தில் குற்றவாளிகளை சுட்டு கைது செய்ததும், குற்றப்பத்திரிகையை விரைவில் தாக்கல் செய்ததும் நம் காவல் துறையின் திறமைக்கு சான்றாக விளங்குகிறது.
மூன்று நபர்களும் ஏற்கனவே குற்றப்பின்னணி கொண்டவர்கள் என்றாலும் இவ்வழக்கில் தான் அவர்கள் தகுந்த ஆதாரங்களுடன் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு, தண்டனை பெற்றுள்ளனர்.
வழக்கமாக இது போன்ற பாலியல் வன்கொடுமை .வழக்குகள் தக்க விதத்தில் நிரூபிக்க முடியாமல் , தாமதம் ஏற்படும். ஆதாரங்கள் திரட்டி, தண்டனை தருவதற்குள் ஆண்டுகள் உருண்டோடி விடும். முதல் முறையாக ஒரு பாலியல் வழக்கு விரைவாக முடிக்கப்பட்டுள்ளது அனைவருக்கும் நிம்மதியும் , நீதித்துறையின் மேல் நம்பிக்கையும் தருகிறது.
இச்சம்பவத்தால் உடலாலும் , மனதாலும் நொறுங்கிப் போன கல்லூரி மாணவி துணிச்சலுடன் நீதிமன்ற படிகளை ஏறியதும், வழக்குக்கு ஒத்துழைப்பு தந்ததும் பாராட்டுக்குரியது . இந்த வழக்கு விசாரணைக்காக அவரது ஆண் நண்பர் பெற்றோரின் அனுமதியுடன் தங்க வைத்து பார்த்துக் கொண்டிருக்கிறார்.
இருவரும் திருமணம் செய்துக் கொள்ள முடிவெடுத்துள்ளனர். மாணவிக்கு 7 லட்சமும், அவர் நண்பருக்கு இரண்டு லட்சமும் அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
இருவரது உடல் காயங்கள் ஆறி இருந்தாலும் உள்மன காயங்களும் விரைவில் குணமாகி புது வாழ்க்கை தொடங்க வாழ்த்துக்கள்.
மறதி மனிதனுக்கு இருக்கும் அதிசய ஆற்றல். நடந்ததை மறந்து புது வாழ்வை துவங்கட்டும்.

Leave a comment
Upload