தொடர்கள்
அனுபவம்
ஊர்ப்புறத்துப் பறவைகள் - இந்துமதி கணேஷ்

ஊர்ப்புறத்துப் பறவைகள்

ஆசிரியர் : கோவை சதாசிவம்

பால்கனியில் அமர்ந்து புத்தகம் வாசிப்பதென்பது எனக்கு மிகவும் பிடித்த விஷயம், அப்படி அமர்ந்திருக்கும் போதெல்லாம் எதிரில் இருக்கும் பூங்காவில் எண்ணற்ற பறவைகளின் ஒலிகளை கேட்டிருக்கிறேன், இரண்டு வருடங்களாக அவை என்னென்ன பறவைகள் என்று அறிந்து கொள்ள தொடங்கி இருந்தேன். "ஊர்ப்புறத்துப் பறவைகளை" வாசித்த பிறகு இந்த பறவைகள் எதை உண்கின்றன, அவற்றின் இனச்சேர்க்கை மாதங்கள் என்னென்ன, எதனால் அவை ஓசையிடுகின்றன, எப்படி அவை தங்கள் கூடுகளை வடிவமைக்கின்றன என்பது பற்றியெல்லாம் தெளிவாக தெரிந்து கொள்ள முடிந்தது. சரி எதற்காக நாம் இந்த பறவைகளை தெரிந்து கொள்ள வேண்டும்? மனிதர்கள் இல்லாத பூமியில் பறவைகளால் வாழ்ந்து விட முடியும், ஆனால் பறவைகள் இல்லாத பூமியில் மனிதனால் வாழ் முடியாது என்பதே அறிஞர்களின் கூற்று, இது எந்த அளவுக்கு உண்மை ? பறவைகள் நமக்கு என்ன செய்கின்றன என்பது குறித்து கடைசியில் சொல்கிறேன். நூலில் நம்மைச் சுற்றி வாழும் இருபத்தி ஐந்து பறவைகள் குறித்த தகவல்கள் நிறைந்திருக்கிறது.

எங்கள் வீட்டில் ஒரு பொன்னரளி மரம் இருக்கிறது, அதில் பூத்துக் குலுங்கும் பூக்களில் தேனருந்த கட்டை விரல் அளவே உள்ள சிறிய ஊதா தேன்சிட்டு வரும், அவற்றின் சத்தம் தெளிவாக கேட்கும். உடனே நான் ஜன்னல் வழி எட்டிப் பார்ப்பேன், முதலில் என்னால் அவற்றை சரியாக காண முடிந்ததில்லை, நான் பார்ப்பதற்குள் அவை பறந்து சென்றுவிடும். பிறகு பொறுமையாய் அவை வரும் நேரம் காத்திருந்து பார்க்கத் தொடங்கினேன், இவை தான் காக்கை, புறா தவிர நான் கண்டு அதிசயித்த முதல் பறவைகள். ஒவ்வொரு பூவிலும் அமர்ந்து அவை தேனருந்தும் போது அவற்றின் அடர் நீல வண்ணம் சூரிய ஒளியில் மின்னுவதை பார்க்க பார்க்க தெவிட்டியதில்லை. இந்த தேன்ச் சிட்டுகள் பூவில் தேனருந்தும் போதே மகரந்த சேர்க்கைக்கு உதவும் விதத்தை விவரிக்கிறார் ஆசிரியர். தாவர வளர்ச்சிக்கு இவற்றின் பங்கு அளப்பரியது, எனவே கட்டை விரலைப் போல இதுவும் இயற்கைக்கு அவசியமான ஒரு பறவை என்கிறார், அவற்றின் கூட்டையும் கூட ஒருமுறை பார்த்திருக்கிறேன், ஆனால் குஞ்சுகளை தான் காண முடியவில்லை.

கிட்டத்தட்ட தேன்ச்சிட்டின் அதே அளவுக்கு, பழுப்பு நிறத்தில் பூக்களில் தேனருந்தும் சிட்டுக்களையும் நான் கண்டிருக்கிறேன், அவை தன் சிறிய வாலை மேல் தூக்கி வைத்துக் கொண்டு சத்தமெழுப்புவதை பார்க்கவே அலாதியாக இருக்கும். அவையும் தேனிச்சிட்டில் ஒரு வகை தான் போலும் என்று நினைத்திருந்தேன், அவற்றை பற்றி ஐயா எழுதி இருப்பதை வாசித்த பிறகு தான் அவை தையல் சிட்டுக்கள் என்பது எனக்கு புரிந்தது. தையல் சிட்டுகள், இலைகளைக் கொண்டு நேர்த்தியாக கூடமைப்பதை குறித்தும் இயற்கைக்கு அவற்றின் பங்களிப்பை குறித்தும் நிறைய தகவல்கள் நூலில் உண்டு.

மைனாக்களை கண்டவுடன் அவற்றின் ஜோடியை தேடுவது எனக்கொரு ஒரு பழக்கமாகிவிட்டது, ஏனோ ரெட்டை மைனாவை பார்த்தால் வெற்றி என்றும் ஒத்தை மைனாவை பார்த்தால் அன்று நினைத்த காரியம் நடக்காது என்றொரு மூட நம்பிக்கை சின்ன வயதிலிருந்தே எனக்குண்டு. ஜோடியைத் தேடும்போது பெரும்பாலும் மைனாவின் ஜோடி அருகிலேயே நின்றிருக்கும், மைனாக்களை கூட்டமாகவே நான் பலமுறை பார்த்திருக்கிறேன், அவற்றிற்கு நாகணவாய் என்று அழகான தமிழ் பெயர் இருப்பதை இந்த நூலில் தான் தெரிந்து கொண்டேன், என்னுடைய மூட நம்பிக்கையில் இருந்து வெளிவந்துவிட்டேன் என்று சொல்லவும் வேண்டுமா!

20260211150855940.png

வசந்த காலத்தில் இடைவிடாமல் இசைக்கும் குயிலின் குரல் அவ்வளவு இனிமையாக இருக்கும், ஆனால் அப்படி கூவுவது பெண் குயிலை கவர நினைக்கும் ஆண் குயில் தானென்பதை சூழலியலாளர் மாதவன் அவர்களின் நூலின் மூலம் அறிந்து கொண்டேன். ஆண் குயிலும் பெண் குயிலும் பார்க்க வெவ்வேறு பறவைகள் போல தெரிவதும், அவற்றின் தோற்றத்திலுள்ள மாறுதல்களையும் அழகாக சொல்லி இருக்கிறார் ஆசிரியர், எம் வீட்டு தோட்டத்திற்கு அடிக்கடி இவை ஜோடியாக வருவதால் ஒரே பறவையில் ஆணும் பெண்ணும் இப்படி தான் இருக்குமென்பது நான் பிரமிப்புடன் பார்த்து தெரிந்து கொண்டேன்.

ஒரு நாள் ஏரிக்கு நடைப்பயிற்சி சென்ற போது தன் சிறகுகளை விரித்தபடி சலனமின்றி வெயிலில் அமர்ந்திருந்த அந்த பெரிய பறவையை படம் பிடித்துவிட்டு வந்தேன், அது தான் சிறிய நீர்க்காகம் என்பதை கூகுள் லென்ஸ் எமக்கு எடுத்துச் சொன்னது. அது எதற்காக அப்படி சிறகை விரித்து வைத்து அமர்ந்திருக்கிறது என்றால் அது நீர்ப்பறவையாக இருந்தாலும் அதன் சிறகுகளில் எண்ணெய் சுரப்பி இல்லாத காரணத்தால் சிறகை உலர வைத்தால் தான் அவைகளால் பறக்க இயலும் என்பதை ஆசிரியர் விவரித்திருக்கிறார். நீர்நிலைகளில் அளவுக்கு அதிகமாய் பெருகும் உயிரினங்களை கட்டுக்குள் வைத்திருக்கும் முக்கியமான நீர்வாழ் பறவைகளில் ஒன்று நீர்க்காகங்கள் என்கிறார் ஆசிரியர்.

எப்படியாவது எங்கள் படுக்கையறையில் இருக்கும் காற்றாடியில் கூடு கட்டிவிட முயற்சி செய்த அந்த குட்டிக் கொண்டை வைத்த குருவியின் பெயர் சின்னான் என்பதும், கூட்டமாய் நாலைந்து பறவைகள் ஒன்றாய் வந்து சமையலறை கழிவுகளை உண்ண வரும் தவிட்டு குருவி தான் வெண்தலைச் சிலம்பன் என்பதும் இந்த நூலை வாசித்து தான் தெரிந்து கொண்டேன். கொண்டலாத்தியை பார்க்க வேண்டுமென்ற பேராவல் எழுந்துள்ளது, அந்த ஆசை எப்போது கைகூடுமா ! கிட்டத்தட்ட ஆசிரியர் பட்டியலிட்டிருக்கும் இருபத்தி ஐந்தில் பத்தொன்பது பறவைகளை நான் அன்றாடம் கண்டு கொண்டிருக்கிறேன் என்பது எனக்கு மிக பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. இவை அனைத்திற்கும் முக்கிய காரணமாக விளங்குவது பூங்காவில் உள்ள மரங்களின் இருப்பு தான் என்பதே மிக பெரிய உண்மை.

ஆந்தையை பற்றிய மனிதனின் மூட நம்பிக்கைகளை பட்டியலிடும் ஆசிரியர், அது விவசாயிகளின் நண்பனாக எப்படி இருக்கிறது என்பதை எடுத்துரைக்கிறார், ஆந்தைகளுக்கு பகலில் கண் தெரியாது என்ற நமது நம்பிக்கை உண்மையா ? பொய்யா ? என்று அறிந்து கொள்ள நூலை வாசித்தால் தெரிந்து கொள்ளலாம். இன்னும் ஊர் பருந்து, செம்போத்து, பனங்காடை, செம்மூக்கு ஆள்காட்டி, கிளி, காக்கை, சிட்டுக்குருவி, கரிச்சான் என்று பல பறவைகளை பற்றிய சுவாரஸ்யமான குறிப்புகள் நூலில் உண்டு.

சரி இந்த பறவைகள் இல்லாத உலகத்தில் எதனால் மனிதனால் வாழ முடியாது என்பதற்கான காரணங்களை சொல்லிவிடலாம். இதெல்லாம் அவுட் ஆப் சிலபஸ் என்றாலும் ஆசிரியரின் பிற புத்தகங்களை வாசித்து தெரிந்து கொண்டவை தான் என்பதால் இங்கு பகிர்கிறேன். முதலில் பறவை என்பது விதைப் பரவலுக்கு ஒரு பெரிய காரணமாக இருக்கிறது. அதுவும் குறிப்பாக, தானியம் மற்றும் பழம் சாப்பிடுகிற பறவைகள் எல்லாம் அதன் எச்சத்தின் வழி விதைகளை பூமிக்கு பரப்புகின்றன. இதன் மூலம் பெரும் பசும் பரப்பை உருவாக்குகின்றன.

இன்னொரு புறம் அது பூச்சிகளைக் கட்டுப்படுத்துகிற ஆதார உயிரினமாக இருக்கிறது. தாவர வளர்ச்சிக்குப் பெரும் உதவி புரிகின்றன. இன்னொன்று, மகரந்தச் சேர்க்கைக்கு பறவைகள் உதவுகின்றன. சில பூக்கள், பறவைகள் மகரந்தச் சேர்க்கை செய்தால் மட்டுமே மலர்ந்து, காய்த்து கனியாகும் படியாகப் படைக்கப்பட்டிருக்கின்றன. அடுத்ததாய், பறவைகள் இந்த பூமியின் தூய்மையாளர்கள். இதற்கு உதாரணமாக பாறு கழுகுகளையும் காக்கைகளையும் கூறலாம். தினம் ஒரு பறவையை பற்றி அறிந்து கொண்டிருக்கிறேன், அவற்றை நம் பகுதியில் பார்க்க முடியுமா என்று தேடுகிறேன், எதிர்பாராமல் வேறு ஒரு பறவையை பார்த்தால் அதை பற்றிய தகவல்களை தெரிந்து கொள்கிறேன், இந்தத் தேடல் என்னை உற்சாகமாக வைத்திருக்கின்றது. இத்தனை நன்மைகளை நமக்குச் செய்கின்ற பறவைகளை நாமும் அறிந்து கொண்டு அடுத்து வரும் சந்ததிகளுக்கு எடுத்துக் கூற வேண்டியது அவசியமல்லவா... அவசியம் இந்த நூலை நாமும் வாசித்து குழந்தைகளையும் வாசிக்க வைப்போம்.

பதிப்பகம் : குறிஞ்சி

பக்கங்கள் : 96

இந்துமதி கணேஷ்