தொடர்கள்
அனுபவம்
ஐ சி யூவில் ஆறு நாட்கள்-   ஒரு நிஜ அனுபவம் - 3              -  பொன் ஐஸ்வர்யா

20260212122837859.jpg

(புகைப்படம் AI)

இரவு பகல் எல்லா நேரத்திலும் ஐ.சி.யூ வில் பதட்டமான சூழல்தான். சிலருக்கு உடல்நலம் திடீரென்று பாதிக்கும். சிலருக்கு மனசு பாதிக்கும். நேற்று இரவு இரண்டு மணிக்கு வலதுபுறப் படுக்கையில் இருந்த நோயாளி “இப்போதே நான் என் மனைவியிடன் பேச வேண்டும், வீடியோ கால் போடுங்கள்” என்று ரகளையில் ஈடுபட்டார். “இந்த நேரத்தில் கூப்பிடக் கூடாது, காலையில் பேசலாம் “ என்றாலும் கேட்க வில்லை. “எனக்கு பயமாக இருக்கிறது, நான் இப்போதே இறந்து போகப் போகிறேன்” என்று கத்தி கூச்சலிட்டவரை சமாதானம் படுத்த செவிலியர்கள் போராடியது ஒரு கதை என்றால், அதிகாலை நான்கு மணிக்கு இளநீர் வேண்டுமென்று அடம்பிடித்த அடுத்த நபரின் கதை வேறொன்று.

என்னதான் காலை, மாலை பிசியோதெரப்பி பயிற்சிகள் கொடுத்து, ரெஸ்பிரோ மீட்டரை ஊதினாலும், நுரையீரல் செயல்பாடு இன்னும் சீராகவில்லை என்று சோதனை முடிவுகள் வந்தன. இருதய அறுவை சிகிச்சையில், இடையில் மாட்டிக்கொண்டு அவஸ்தைப் படுவது, ஒரு பாவமும் அறியாத இந்த நுரையீரல்தான். இதயத்தின் உற்றதோழன் நுரையீரல் என்பதால் துன்பத்திலும் சரிபங்கு எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது போலும்.

நுரையீரல் செயல்பாட்டை சீராக்க உயர் அழுத்த ஆக்ஸிசன் மாஸ்க் வரவழைக்கப்பட்டு, முகத்தில் இறுக்கமாய் பொருத்தப் பட்டது. இது நுரையீரலுக்குள் அதிக வேகத்தில் ஆக்ஸிசனை பம்ப் செய்யும் கருவி. ஒரு மணி நேரம் உண்டு இல்லை என்று வேர்க்க விறுவிறுக்க நுரையீரலை ஆட்டிப் படைக்கும் கொடூரமான டிரில் மாஸ்டர் இது எனலாம். ஒவ்வொரு முறையும், “ஐயா சாமி ஆளை விட்டால் போதும்” என்றாகி விடும்.

மாஸ்க்கை எடுத்ததும் லொக்கு லொக்கு என்று இருமல். மார்பில் போட்டிருக்கும் தையல் பிய்ந்து விடுமோ என்கிற பயம் ஒரு புறம், கவ்வி இழுக்கும் வலி மறுபுறம். “நெஞ்சிலும் அடிவயிற்றிலும் கைகளை வைத்துக் கொண்டு பயப்படாமல் இருமித் துப்புங்கள், ஒன்றும் ஆகாது” என்று தைரியமூட்டும் செவிலியர். ஒவ்வொரு நாளும் பேண்டேஜைப் பிரித்து, அழுத்தி சுத்தம் செய்து, தொற்று வராத காரத்துணியில் மருந்தை வைத்து இறுக்கமாய் கட்டிவிடும் சிறப்பு செவிலியர்கள். இரத்த நாளங்கள் வெட்டப்பட்ட கால்களிலும் முழநீள பேண்டேஜ்கள்.

ஒரு வழியாய் ஆறு நாட்களும், நூறு சோதனைகளும் முடிந்த பிறகு, இதயத்தை அறுத்து பழுது பார்த்த தலைமை மருத்துவர் ஐயா வந்து சோதித்து விட்டு "நன்றாக தேறி வருகிறீர்கள், உங்களை வார்டுக்கு மாற்றுகிறோம். அங்கு இன்னும் இரண்டு நாட்கள் இருந்து பார்த்த பிறகு, வீட்டுக்குப் போகலாம்” என்று திருவாய் மலர்ந்தருளினார்.

வீல் சேரில் பொறுமையாய் உட்கார வைத்து, பாதுகாப்பு பட்டைகளை ஒவ்வொன்றாய் இறுக்கி இணைத்து, பிரைவேட் வார்டுக்கு என்னை அழைத்து செல்ல ஆயத்தப் படுத்திக் கொண்டிருந்தார் சஃபாரி அணிந்த வார்ட் பாய். ஐசியூவிலிருந்த அனைவருக்கும் கைகூப்பி நன்றி தெரிவித்து, ஐ.சி.யூவை விட்டு வெளியே வந்தோம். லிஃப்டுக்கு காத்திருக்கும் இடைவெளியில் சஃபாரி தோழர் மெல்லிய குரலில் பேச்சுக் கொடுத்தார்.

“ஐ.சி.யூக்கு வந்த முதல் நாள், நீங்கள் வலியில் துடித்துக் கொண்டிருந்தீர்கள். அன்றைக்கு ட்யூட்டியில் நானும் இருந்தேன். யூரின் கலெக்ட் செய்ய உங்கள் பெட் அருகே வந்த என்னையும் பார்த்து, “ரொம்ப வலிக்கிறது, ஏதாவது செய்யுங்கள்” என்று கதறினீர்கள். எனக்கு மிகவும் சங்கடமாய் போய் விட்டது. அன்றைக்கு வீட்டுக்கு போகும் வழியில், பிள்ளையார் கோயிலுக்குப் போய் உங்களுக்காக வேண்டிக் கொண்டேன். ஐ.சி.யூ வார்டுக்குள் எதுவும் கொண்டு வரக்கூடாது என்பதால் என் பாக்கெட்டிலேயே வைத்திருந்தேன். இப்போது இந்த விபூதியைப் பூசிக் கொள்ளுங்கள் சார்… எல்லாம் சரியாகிவிடும்” என்றார்.

இந்த வார்த்தைகளால் அத்தனைத் துன்பமும் அந்த நேரம் கணாமல் போனது. “நீங்களே பூசி விடுங்கள்” என்றேன் நெகிழ்ச்சியாய்.

“அன்றைக்கு உங்களுக்கிருந்த மயக்கத்தில், என்னை டாக்டர்ன்னோ, உறவுக்காரன்னோ நினைத்து குழம்பி போயிட்டீங்க தானே.” என்றார் மெல்லிய புன்னகையோடு.

“நீங்களும் ஒரு வகையில் மருத்துவர்தான். என் வலி போக்க கோவிலுக்குச் சென்று பிரார்த்தனை செய்த நீங்கள் நிச்சயம் எனது உறவுக்காரர்தான், அதில் என்ன சந்தேகம்” என்றேன்.

இருவர் கண்களும் துளிர்ப்பதை ஒருவருக்கொருவர் பார்த்துக் கொள்ள முடிந்தது.

-நிறைந்தது