தொடர்கள்
பொது
டிராவல் இன்ஸூரன்ஸ் - ராம்

20260214062915660.jpeg

சென்ற வாரத்தில் ஒரு நாள் ஹாங்காங் விமான நிலயத்தில் ஒரு தம்பதி, அமெரிக்கா விமானத்திலிருந்து சென்னை விமானத்திற்கு மாறும் நேரம்.

ஒவ்வொரு நாளும் பயணிகள் ஹாங்காங் வந்து சில மணி நேரம் காத்திருந்து விட்டு சென்னை விமானத்தில் ஏறி தாயகம் திரும்புவது அன்றாடம் நடப்பது தான்.

திடீரென அந்த பெண்மணிக்கு மாரடைப்பு ஏற்பட்டு சில நிமிடங்களில் உயிரழந்தார்.

இது போன்ற நேரம் மிகத் துயரமானது.

அதிர்ச்சியானது. என்ன செய்வது ஏது செய்வது என்று அறியாமல் போகும் தருணம். நல்ல வேளையாக ஹாங்காங்கில் ஹெல்ப் க்ரூப் என்ற ஒரு வாட்சப் குரூப் இருப்பதால் அமெரிக்காவிலிருந்து நண்பர்கள் தொடர்பு கொண்டு வேண்டிய உதவிகளை செய்ய நேர்ந்தது.

இது ஹாங்காங்கில் நடக்கும் மூன்றாவது டிரான்ஸிட் மரணம்.

இதற்கு முன்பும் இது போன்ற ஒரு சம்பவத்தை விகடகவியிலேயே எழுதியிருக்கிறோம்.

அது போலவே ஹாங்காங்கிற்கு கோவிலில் பூஜைக்காக வந்திருந்த இளம் சிவாச்சாரியாரும் மாரடைப்பால் காலமானார்.

இந்த மரணங்கள் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும் அல்லது நிகந்திருக்கக் கூடாது என்பதெல்லாம் நம் கையில் இல்லை.

ஒவ்வொரு மனிதருக்கும் அவரது இறுதி நிமிடம் நொடி, முன்னரே தீர்மானிக்கப்பட்டது என்று சமாதானம் சொல்லிக் கொள்வதை தவிர வேறு வழியில்லை.

ஆனால் சொல்ல வரும் விஷயம் அதல்ல.

யார் பயணம் மேற்கொண்டாலும், வெளிநாடாக இருந்தாலும் சரி, உள்நாடாகவே இருந்தாலும் சரி, பயண காப்பீடு அவசியம்.

இது போல வெளிநாடுகளில் ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் உடலை ஊருக்கு கொண்டு வருவதற்கே ஆறு முதல் பத்து லட்சம் ரூபாய் வரை செலவாகும்.

அது போக உடன் செல்பவர்களின் டிக்கெட், ஹோட்டல் அது இது என்று ஏகத்திற்கும் பண விரயமாகலாம்.

ஒரு வேளை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என்றாலும் அந்த செலவுகள் கற்பனைக்கு அப்பால் இருக்கும்.

இன்னொரு முக்கிய விஷயம் பயண காப்பீடு பல கால அளவுகளில் நம்மூரில் பல வங்கிகள் காப்பீடு நிறுவனங்கள் வழங்குகின்றன. மூன்று மாத காப்பீடு வைத்துக் கொண்டு கடைசி முடியும் நாளில் பயணம் மேற்கொள்ளாதீர்கள். அது ரிஸ்க்.

கால அளவை திட்டமிட்டுக் கொள்ளுங்கள்.

சின்ன உதாரணம் ஹாங்காங்கில் உள்ளூர் வாசிகளுக்கு அரசு மருத்துவமனையில் ஏறக்குறைய இலவசம் போலத்தான். தற்போது இரண்டாயிரம் வரை எல்லா செலவுகள் உட்பட ஆகும் என்றால் வெளிநாட்டுக் காரர்கள் அரசு மருத்துவமனையாக இருந்தாலுமே, முப்பது முதல் நாற்பதாயிரம் வரை ஆகலாம். (மருத்துவ செலவுகள் தனி) எனவே வெளிநாட்டு பயண காப்பீடு மிக மிக அவசியம்.

சும்மா மூன்றே நாட்களுக்குத் தான் வியட்நாம் சென்றோம். தம்மாத்தூண்டு உயரத்திலிருந்து கால் எடுத்து வைக்கையில் என் மனைவி காலை உடைத்துக் கொண்டாள். அதற்கான நேரவிரயம் ஒரு புறம், செலவு தலைக்கு மேல் சென்றது. பயண காப்பீடு இருந்ததால் ஓரளவு சமாளிக்க முடிந்தது.

ஐரோப்பிய நாடுகள் பயண காப்பீடை அடிப்படை தேவையாக வைத்திருக்கிறது. எல்லா நாடுகளுக்கும் இது கட்டாயமல்ல.

கட்டாயமோ இல்லையே அதில்லாமல் பெட்டியை பாக் செய்யாதீர்கள்.காலை எடுத்து வெளியே வைக்காதீர்கள்.

ஏ.ஐ கேட்டால் இதை சொல்கிறது....

இந்தியாவில் பயண காப்பீடு வாங்குவது மிகவும் எளிது. இதோ சில வழிகள்:

காப்பீடு நிறுவனங்கள்*:

இந்தியாவில் பல காப்பீடு நிறுவனங்கள் உள்ளன, அவை பயண காப்பீடு வழங்குகின்றன. சில பிரபலமான காப்பீடு நிறுவனங்கள்:

- ICICI Lombard

- HDFC Ergo

- Tata AIG

- Reliance General

- Bajaj Allianz

ஆன்லைன் காப்பீடு தளங்கள்*:

ஆன்லைன் காப்பீடு தளங்கள் மூலம் பயண காப்பீடு வாங்கலாம். சில பிரபலமான ஆன்லைன் காப்பீடு தளங்கள்:

- PolicyBazaar

- Insure

- Coverfox

- MakeMyTrip

- Yatra

விமான நிறுவனங்கள்*:

சில விமான நிறுவனங்களே பயண காப்பீடு வழங்குகின்றன. உங்கள் விமான டிக்கெட்டை புக் செய்யும்போது கேட்டு பாருங்கள்.

பயண காப்பீடு வாங்கும்போது, உங்கள் பயண திட்டம், பட்ஜெட், மற்றும் காப்பீடு நிறுவனத்தின் சேவைகளை கருத்தில் கொள்ளுங்கள்.

பயண காப்பீடு என்னென்ன சேவைகளை வழங்குகிறது?

- பயணத்தின் போது ஏற்படும் விபத்துக்கள்

- பயணத்தின் போது ஏற்படும் நோய்கள்

- பயணத்தின் போது ஏற்படும் பொருள் இழப்பு. பாஸ்போர்ட்டை தொலைத்தால் வெளிநாட்டில் பெரும் செலவு நேரும்.

- பயணத்தின் போது ஏற்படும் தாமதங்கள். பட்ஜெட் விமான நிறுவனங்கள் தாமதித்து தொலைத்தால் ஹோட்டல் செலவை யார் தருவார்கள்.

- பயணத்தின் போது ஏற்படும் ரத்து. ஃபிளைட் கான்சல் ஆனாலும் இதே நிலைமை தான்.

உடல் ரீதியான பிரச்சினைகள் மட்டுமன்றி பொருட் சேதம் அல்லது தொலைந்து போனாலும் பயண காப்பீடு மிக மிக அவசியம்.

அடுத்த முறை இதுக்கு ஏண்டா செலவு பண்ணனும் என்று யோசிக்காமல் பயண காப்பீடு இல்லாமல் விமானம் ஏறக் கூடாது.