தொடர்கள்
ஆன்மீகம்
நலம் தரும் நவகிரக நாயகர்கள்..!! - 16 - ஆரூர் சுந்தரசேகர்.

கேது ஸ்தலம் - கீழப்பெரும்பள்ளம் நாகநாத சுவாமி கோயில்

The heroes of the nine planets that bring good luck..!! - 16

பிரசித்தி பெற்ற ராகு ஸ்தலம் - திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோயிலைப் பற்றி இதற்கு முன் உள்ள பதிவில் பார்த்தோம். நவகிரக ஸ்தலங்களில் ஒன்பதாவது ஸ்தலமாக விளங்குவது தமிழ்நாடு, மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம் கீழப்பெரும்பள்ளம் நாகநாத சுவாமி கோயில். இங்கு நாகநாதசுவாமி சிவலிங்கத் திருமேனியாகவும், அம்பாள் ஸ்ரீ சௌந்தரநாயகி என்ற திருப்பெயருடன் அருள்பாலிக்கின்றனர். இது நவக்கிரக ஸ்தலங்களில் கேது பகவானுக்குரிய பரிகாரத் ஸ்தலமாக விளங்குகிறது.
கேது பகவான் பிறப்பால் அசுர வம்சத்தைச் சேர்ந்தவராவார். இவரது இளமைப் பெயர் ஸ்வர்பானு. காசிப முனிவரின் மகன் விப்ரசித்து கேது பகவானின் தந்தை. தாய் சிம்கிகை. இதனால், சம்கிகேயன் என்றொரு பெயரும் கேது பகவானுக்குக் குறிப்பிடப்படுகிறது. இதைத்தவிர, கதிர்பகை, சிகி, செம்பாம்பு போன்ற வேறு பெயர்களும் உண்டு. இந்த ஸ்தலத்தில் கேது பகவான் நாகத்தின் தலையையும் மனித உடலையும் பெற்று, தனது பாவ விமோசனத்திற்காக இத்தல சிவனான நாகநாதரை வழிபட்டுப் பேறு பெற்றார். அதனால்தான் இங்குக் கேது பகவான் மற்ற கோயில்களைப் போலல்லாமல், இறைவனை வணங்கிய நிலையில் அனுக்கிரக மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

The heroes of the nine planets that bring good luck..!! - 16

கால சர்ப்ப தோஷம், கேது தோஷம் நீங்கவும், கல்வி, ஞானம், செல்வச் செழிப்பு பெறவும் பக்தர்கள் இங்கு வந்து வழிபடுகின்றனர்.
இக்கோயில் சோழ மன்னர்களால் 12-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதுள்ள கல் அமைப்புகள் 16-ஆம் நூற்றாண்டில் நாயக்கர் காலத்தில் புனரமைக்கப்பட்டவை.

ஸ்தல புராணம்:
அமுதம் பெற வேண்டி தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தனர். மந்தார மலையை மத்தாகவும், வாசுகி என்ற நாகத்தைக் கயிறாகவும் பயன்படுத்தினர். தொடர்ந்து பாற்கடலைக் கடைந்ததால் வாசுகி நாகம் மிகவும் பலவீனமடைந்தது. ஒரு கட்டத்தில் களைப்பு மிகுதியால் நஞ்சை உமிழ ஆரம்பித்தது. இதனால் முதலில் ஆலகால விஷம் வெளிப்பட்டது. அதில் இருந்து தங்களைக் காப்பாற்றும் படி தேவர்கள், சிவ பெருமானை வேண்டினர். அவரும் விஷயத்தைத் தான் அருந்தி, உலக உயிர்களைக் காப்பாற்றினார். தன் நஞ்சை சிவபெருமான் உண்ணுமாறு ஆயிற்றே என வருந்திய வாசுகி நாகம், ஈசன் அருள் பெற வேண்டி மூங்கில் காடான இத்தலத்தில் தவம் இருந்தது. இதைக்கண்ட சிவபெருமான் பங்குனி மாதம் திருவோண நட்சத்திரத்தன்று வாசுகிக்குக் காட்சியளித்தார். அப்போது வாசுகி நாகம் தான் செய்த பாவத்தை மன்னித்து அருளும்படியும், தான் தவம் செய்த இந்த மூங்கில் காட்டிலேயே கோயில் கொண்டு பக்தர்களுக்கு அருள வேண்டும் என்று வாசுகி நாகம் கேட்டுக்கொண்டது. அதன்படியே இத்தலத்தில் கோயில் கொண்டு, நாகநாதர் என்ற பெயரில் சிவபெருமான் காட்சியளிக்கின்றார் என்பது இத்தல புராணம்.

The heroes of the nine planets that bring good luck..!! - 16

தேவர்களும், அசுரர்களும் இணைந்து பாற்கடலைக் கடைந்து அமிர்தத்தை எடுத்தபோது, அங்குத் தோன்றிய திருமால், மோகினி உருவில் அசுரர்களுக்கு அமிர்தம் கிடைக்காதவாறு தேவர்களுக்கு மட்டும் பரிமாறிக் கொண்டிருந்தார். அப்போது, அங்கிருந்த ஸ்வர்பானு என்ற அசுரன் தேவ வடிவமெடுத்து, அமுதம் அருந்தியதால் திருமாலால் தலை துண்டிக்கப்பட்ட அசுரன், மீண்டும் உயிர் பெற வேண்டி இத்தலத்தில் உள்ள நாகநாத சுவாமியை நோக்கித் தவமிருந்து வழிபட்டார். இவரது தவத்திற்கு ஈசன் இரங்கி அருள்பாலித்ததால், இத்தலம் கேதுவின் பரிகாரத் தலமாகப் போற்றப்படுகிறது.

ஸ்தல அமைப்பு:

The heroes of the nine planets that bring good luck..!! - 16

இந்த கோயிலுக்கு இராஜகோபுரம் இல்லை. கிழக்கு நோக்கி அமைந்துள்ள ஒரு முகப்பு வாயில் மட்டும் உள்ளது. முகப்பு வாயில் மேற்புறத்தில், ரிஷபாரூடராக சிவபெருமான் சுதை வடிவில் காட்சி தருகின்றார். முகப்பு வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் பலிபீடம், நந்தியைக் காணமுடியும். வாசுகிக்கு அளித்த வரத்தின்படி, கேது தோஷ நிவர்த்தி அளிக்கும் மூலவராக நாகநாதர் கிழக்குத் திசை நோக்கி அருள் புரிகின்றார். அம்பாள் சௌந்தரநாயகி தென்திசை நோக்கித் தனி சந்நிதியில் காட்சியளிக்கிறார். இக்கோயில் ஒற்றை பிரகாரத்தைக் கொண்டது. பிரகாரத்தின் மேற்கு மூலையில் விநாயகர் சந்நதியும், பிரகார நடுப் பகுதியில் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியரும் உள்ளனர். அடுத்து, துர்க்கையும், லக்ஷ்மி சமேத நாராயணரும் அமைந்துள்ளனர். அதன் பின்னர் கஜ லஷ்மியும், சண்டிகேஸ்வரரும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர். கிழக்கு பிரகாரத்தில் கேது பகவானும், சனி பகவானும் தனி சந்நதி கொண்டுள்ளனர். பைரவர், சூரியன், ஞானசம்பந்தர் சந்நிதிகளும் உண்டு. மற்றும் நடராஜர்,பஞ்ச மூர்த்திகள், உற்சவ மூர்த்திகளும் உள்ளனர்.

The heroes of the nine planets that bring good luck..!! - 16

கேதுவுக்கு அதிபதி விநாயகப் பெருமான். இத்தலத்தில் உள்ள விநாயகர் அனுக்கிரக விநாயகர் என்ற திருநாமத்தில் அருள்பாலிக்கிறார். ஶ்ரீகேது பகவான் சிவபெருமானை நோக்கி கரம் கூப்பிய நிலையில், பாம்புத் தலையுடனும், மனித உடலுடனும் சிம்ம பீடத்தில் மேற்கு திசை நோக்கி, அனுக்கிரக மூர்த்தியாக நமக்குக் காட்சியளிக்கிறார். கோயிலின் கிழக்குப் புறத்தில் வாசுகி தவமிருந்த மூங்கில் தோப்பு உள்ளது. இடைப்பட்ட பகுதியில் கோயிலின் தீர்த்தமான நாகதீர்த்தக் குளம் அமைந்துள்ளது. நாகதீர்த்தத்தின் மேற்குக் கரையில் நாகர் பிரதிஷ்டையுடன் அரசும் வேம்பும் உள்ளன.
ஸ்தல தீர்த்தம் : நாகதீர்த்தம்
ஸ்தல விருட்சம் : மூங்கில்

ஸ்தல பெருமை:

The heroes of the nine planets that bring good luck..!! - 16

இக்கோயிலில் கேது பகவானுக்கு இராகுகாலம் மற்றும் எமகண்டத்தில் விசேஷ அபிஷேகம் மற்றும் பூஜை நடக்கிறது. அப்போது, 16 வகையான அபிஷேகம் மற்றும் ஹோமம் செய்தும், கொள்ளுப்பொடி, உப்பு, மிளகு கலந்த சாதத்தை நைவேத்யமாகப் படைத்தும், பல வர்ண வஸ்திரம் சாத்தியும், நல்லெண்ணெய் விளக்கு ஏற்றியும் வழிபடுகிறார்கள். கொள்ளு சாத பிரசாதத்தை இங்கேயே விநியோகித்துவிட வேண்டும். வீட்டிற்கு எடுத்துச்செல்லக்கூடாது. இதைக் கோயிலிலேயே செய்து தருகிறார்கள். சனி, திங்கள் மற்றும் ஜென்ம நட்சத்திரத்தில் இவரை வழிபடுவது விசேஷம்.
இரட்டை சூரியன்: கேது இங்குப் பிரதான மூர்த்தி என்பதால் நவக்கிரக சந்நிதி இல்லை. கேது சந்நிதிக்கு அருகில் சூரிய பகவானின் சிலைகள் இரண்டு இருக்கின்றன. அத்துடன் சனீஸ்வரர் சிலையும் உண்டு. தை மாதம் முதல் ஆனி மாதம் முடிய உள்ள உத்தராயண காலத்தில் ஒரு சூரியனுக்கும், ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை உள்ள தட்சணாய காலத்தில் மற்றொரு சூரியனுக்கும் தனிப்பட்ட விசேஷ பூஜைகள் நடத்தப்படுகிறது.

The heroes of the nine planets that bring good luck..!! - 16

திருவிழாக்கள்:
கீழப்பெரும்பள்ளம் நாகநாத சுவாமி (கேது) கோயிலின் மிக முக்கிய திருவிழா கேது பெயர்ச்சி விழா கோலாகலமாக இங்கு நடைபெறும். ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒருமுறை கேது பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு இடம்பெயரும் போது சிறப்பு அபிஷேகம், ஆராதனை மற்றும் வீதி உலாவும் நடைபெறும். மேலும், பங்குனி மாதத்தில் நடைபெறும் முக்கிய திருவிழா வாசுகி உற்சவம், இதைத்தவிர மகா சிவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம், மார்கழி திருவாதிரை மற்றும் பங்குனி உத்திரம் ஆகியவை இங்குக் கொண்டாடப்படும் பிற முக்கிய திருவிழாக்களாகும்.
மாதாந்திர விழாக்கள்: பிரதோஷம், அமாவாசை, கிருத்திகை, பௌர்ணமி, சதுர்த்தி மற்றும் வாராந்திர சோமவாரம்/சுக்கிரவாரம் வழிபாடுகள். கேது தோஷ நிவர்த்திக்காக, செவ்வாய் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இங்குப் பக்தர்கள் அதிகளவில் வந்து செல்கின்றனர்

The heroes of the nine planets that bring good luck..!! - 16

பிரார்த்தனை:
இந்த கோயிலில் நரம்பு, வாயு தொடர்பான நோய்கள் நீங்கவும், பயம் நீங்கவும், தொழில், வியாபாரம் சிறக்க, தம்பதியர் ஒற்றுமையுடன் இருக்க, ஆயுள் அதிகரிக்கவும், குடும்பத்தில் எப்போதும் ஐஸ்வர்யம் நிலைக்கவும், தலைமுறை சிறக்கவும் இறைவன் நாகநாதரையும், கேது பகவானையும் வழிபாடு செய்கின்றனர். ஜாதகத்தில் கேது திசை நடப்பவர்கள் அவர்களது ஜென்ம நட்சத்திர தினத்தன்று இத்தலம் வந்து பாலாபிஷேகம் செய்து, நேர்த்திக் கடனாகப் பக்தர்கள் கேது பகவானுக்கு கொள்ளு சாதம் படைத்து, பல வர்ண வஸ்திரம் சாத்தி வழிபடுகிறார்கள்.

கோயில் திறந்திருக்கும் நேரம்:
இந்த கோயில் தினமும் காலை 6.00 மணி முதல் மதியம் 12.30 மணி வரையிலும், மாலை 3.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும். விசேஷ நாட்கள் மற்றும் திருவிழா காலங்களில் நேரங்கள் மாறுபடலாம்.

எப்படிச் செல்வது:
மயிலாடுதுறையில் இருந்து சுமார் 24 கி.மீ. தொலைவிலும், சீர்காழியிலிருந்து 21 கி.மீ. தொலைவிலும், பூம்புகாரிலிருந்து 2 கி.மீ தொலைவிலும் உள்ளது. பூம்புகார் அருகே உள்ள தர்ம குளத்தில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது. மயிலாடுதுறையிலிருந்து பேருந்து வசதிகள் அதிகம் இல்லாததால் கார் மற்றும் ஆட்டோ மூலம் செல்லலாம்.

கேது தோஷங்கள் நீங்கி, நல்ல வாழ்க்கை அமைய கீழப்பெரும்பள்ளம் நாகநாத சுவாமி கோயிலுக்குச் சென்று வழிபடுவோம்..!!