
உலக பெண்கள் கிரிக்கெட் கோப்பையை இந்திய வீராங்கனைகள் கைப்பற்றி, இந்தியாவே கொண்டாட்டத்தில் இருக்கும் போது, அந்த மகிழ்ச்சியை முழுமையாக அனுபவிக்க முடியாத வகையில், கோயம்பத்தூரில் கல்லூரி மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
சென்ற ஞாயிறன்று , கோவை கல்லூரியைச் சேர்ந்த மாணவி தன் ஆண் நண்பருடன் கோவை விமான நிலையத்தின் பின்புறம் உள்ள இருள் சூழ்ந்த பிருந்தாவன் நகர் பகுதியில் காரில் அமர்ந்து பேசிக் கொண்டு இருக்கும் போது மூன்று நபர்கள் அந்த நண்பரை அரிவாளால் வெட்டி விட்டு, மாணவியைப் புதரில் தூக்கிச் சென்று மூவரும் சேர்ந்து கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.மயக்கம் தெளிந்த நண்பர் போலீசுக்குத் தகவல் தர, காவல் துறை இருவரையும் மீட்டு, இருவருக்கும் இப்போது சிகிச்சை தரப்படுகிறது.
உடனடியாக காவல்துறை ஏழு தனிப்படைகளை அமைக்கிறது. தீவிரமாக்கப்பட்ட தேடுதல் வேட்டையில் ஒரே நாளில் குற்றவாளிகள் காலில் சுடப்பட்டு பிடிபட்டனர். சம்பவம் நடந்த மூவரும் மது போதையில் இருந்ததாகவும், மூவரும் குற்றப்பின்னணி கொண்டவர்கள் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
தொடர்ந்து நிகழும் இது போன்ற சம்பவங்கள், குற்றங்கள் அனைவருக்கும் கவலையை , பயத்தைத் தருகிறது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உடல் அளவில்.மன அளவில் பெரும் துன்பத்தை, அதிர்ச்சியைத் தந்துள்ளது.அவரது பெற்றோர் நிம்மதியை இழந்துள்ளனர் இப்பெண்ணின் நண்பருக்கு ஏழு இடங்களில் பலத்த காயம். அவர் உடம்பில் 26 இடங்களில் தையல் போடப்பட்டுள்ளது. உடலும் ,மனமும் நொறுங்கி இருக்கிறார்.
இந்த வலிகளில் இருந்து இருவரும் விரைவில் மீண்டு வர வேண்டும் என்பதே நாம் பிரார்த்தனை.
இது போன்ற வன்கொடுமைகள் தொடர்ந்துக் கொண்டே இருக்கின்றன .
சில மாதங்களுக்கு முன் சிட்லபாக்கம் அரசு இலவச விடுதியில் 13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு , கால் முறிந்த நிலையில் சிகிச்சைக்கு சென்றார். அதற்கு முன் ஓடும் ரயிலில் திருப்பூரைச் சேர்ந்த கர்ப்பிணி பெண்மணி பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்கப்பட்டு, இணங்க மறுத்து போராடிய போது ரயிலில் இருந்து தள்ளி விடப்பட்டார். கருக்கலைந்து நடைப்பிணமானார் அவர். அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை வழக்கு இன்னும் நடந்துக் கொண்டு இருக்கிறது.
பார்க்கில் விளையாடிக் கொண்டு இருந்த ஏழு வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற யஷ்வந்த் என்ற குற்றவாளி சட்டத்தின் ஒட்டையைப் பயன்படுத்தி வெளியில் வந்த போது மக்கள் சட்டத்தின் மீதும், நீதித்துறை மீதும் நம்பிக்கையை இழந்தனர்.
பள்ளியில் , பல்கலைக்கழகத்தில், பயணத்தில் ,பொது இடங்களில் என்று எங்கும் பெண்களுக்கு பாதுகாப்பில்லாத சூழல் தொடர்கிறது.பெண்களின் பாதுகாப்பு பெரிய கேள்விக்குறியாகி விட்டது .
இது போன்ற வன்கொடுமை சம்பவங்கள் நடக்கும் போதெல்லாம் அரசு, காவல்துறை, மதுவின் ஆதிக்கம், மாறி வரும் தனி மனித ஒழுக்க மதிப்பீடுகள், ஆண் மனதின் வக்கிரம் என்று காரணங்கள் வரிசைப்படுத்துவது நடக்கிறது.
கோவை சம்பவம் நம்முள் பல கேள்விகளை எழுப்புகிறது.
இரவு நேரம், தனிமை, சட்ட விரோத சம்பவங்கள் நடக்கும் இடம் எல்லாம் தெரிந்த பின்னும் அம்மாணவி தன் நண்பரைச் சந்திக்க அந்த இடத்தையும் , நேரத்தையும் தேர்நதெடுத்தது ஏன்? அல்லது ஏன் ஆண் நண்பர் அந்த இடத்துக்கு அழைத்தார் ? பொது இடங்கள், மக்கள் சேரும் இடங்கள் , காபி ஷாப்கள் போன்ற இடங்களில் சந்தித்து இருக்கலாமே. இயல்பாக இருக்க வேண்டிய தற்காப்பு உணர்ச்சி இரு பாலருக்கும் இல்லையா?
இருவரும் அங்கு சந்திப்பதைக் குற்றவாளிகள் எப்படி தெரிந்துக் கொண்டு , அரிவாள் சகிதம் பின் தொடர்ந்துச் சென்றனர் ? மாணவி படிக்கும் கல்லூரி விடுதியில் மாணவ, மாணவியர் இரவில் நெடு நேரம் வெளியில் தங்க அனுமதி உண்டா ? அந்தப் புகழ் பெற்ற கல்லூரியில் விடுதி மாணவருக்கான விதிமுறைகள் இல்லையா ? என்று நிறைய கேள்விகள் நம்முள் எழுகின்றன?
நம் பாதுகாப்பு நம் கையில். இது ஆணுக்கும் பொருந்தும், பெண்ணுக்கும் பொருந்தும். சூழ்நிலை பாதகமானால், ஆணாக இருந்தாலும் , பெண்ணாக இருந்தாலும் தனித்து போராட முடியாத நிலை ஏற்படும்.
இங்கு பெண் உரிமை, பெண் விடுதலை அதிகமாகவே பேசப்படுகிறது. ஆனால் அவற்றைத் நிஜமாக்கும் 'பெண்கள் பாதுகாப்பை' நம் இளைஞர்கள் மறந்து விடுகிறார்கள். நமது இடமும், சூழலும் மாறவில்லை. மனதின் வக்கிரம் குறையவில்லை.. மகள்களிடம் 'பாதுகாப்பாக இருக்க' கற்றுத்தரும் பெற்றோரும், மகன்களிடம் 'பெண்களை மரியாதையுடன் நடத்த கற்பிக்க தவறி விடுகிறார்கள்.
இங்கு 'காதல்' என்னும் மெல்லிய உணர்வைக் கையாள முடியாமல் ஒரு தலைமுறை தடுமாறுவதைக் காணும் போது நமக்குக் கவலை ஏற்படுகிறது. நமது கல்வி அமைப்பும், குடும்ப அமைப்பும் வாழ்க்கையோடு ஒட்டி வாழவும், எதார்த்தங்களைப் புரிய வைக்கவும் வேண்டும் என்ற ஆவல் ஏற்படுகிறது .
பெண்களுக்கு எதிரான ஒரு கொடுமை நடந்த உடன் முதல்வர் என்ன செய்கிறார் என்று கேட்கிறோம். போலீஸ் பாதுகாப்பு, பெண்கள் பாதுகாப்புக்கு அவர்தான் பொறுப்பு என்றாலும், சினிமாவில் வருவது போல் குற்றம் நடக்கும் இடத்தில் எல்லாம் வந்து குதிப்பதற்கு அவர் என்ன எம்.ஜி.ஆர். படம் போல ஹீரோவா ???
ஆனாலும் கோவை கமிஷனர் சொன்ன கருத்து பாராட்டுக்குரியது. ஒவ்வொருவருடைய பிரவைசி முக்கியம் என்ற ரீதியில் அவர் சொன்ன கருத்துக்கு நெட்டிசன்கள் பாராட்டை குவிக்கிறார்கள்.
அது ஒரு புறம் இருக்க.....
மக்கள் தான் எந்த இடம் பாதுகாப்பான இடம், அல்லது ஆபத்தான இடம் என்று புரிந்து நடந்து கொள்ள வேண்டும்.
நம் பாதுகாப்பு நம் கையில் தான் இருக்கிறது. இது மிருகங்கள் சூழந்த, கயவர்கள் நிறைந்த பூமி. அதிலும் தமிழ்நாடு போதையில் தள்ளாடும் ஒரு மாநிலம். இங்கு போதை சுயநினைவில் செய்ய முடியாத செய்யக் கூடாத விஷயங்களை அநாயசமாக செய்ய வைக்கும்.
மக்கள் தான் பாதுகாப்பாக விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்.
"நடந்தவை நடந்தவையாகவே இருக்கட்டும்,
இனி நடப்பவை நல்லதாக இருக்கட்டும்" என்ற ஆதங்கத்தில் எழுதப்பட்டதே இக்கட்டுரை, எவரையும் குறை சொல்வதற்காகவோ, புண்படுத்தவோ இல்லை.

Leave a comment
Upload