தொடர்கள்
பொது
வாரிசுகளுக்கே போயஸ்கார்டன் வேதா நிலையம்.... - ஆர்.ராஜேஷ் கன்னா

அதிரடி தீர்ப்பு...

20211026083610362.jpg

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் இல்லமான வேதா நிலையத்தை அரசுடமையாக்கி பிறப்பித்த உத்திரவு செல்லாது என்றும், வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்ற தடை விதிக்க வேண்டும் என அவரது அண்ணன் மகன் தீபக் மற்றும் மகள் தீபா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தனர்.

முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் வேதா இல்லம்…. அப்படியே ஒரு ப்ளாஷ் பேக்…

ஜெயலலிதாவின் தாயார் சந்தியா என்கிற வேதவள்ளி ஸ்ரீரங்கம் ஆச்சாரமான ஐயங்கார் வகுப்பை சேர்ந்தவர்.

1935 ஆண்டு, சந்தியாவிற்கு 11 வயதாக இருக்கும் போது மைசூர் மகாராஜா அரண்மனையின் ராஜாங்க குடும்பத்து வழக்கறிஞர் ஜெயராமன் என்பவருடன் திருமணம் நடைப்பெற்றது.

சந்தியா மற்றும் ஜெயராமன் தம்பதியினருக்கு ஜெயக்குமார் மற்றும் ஜெயலிலிதா என்ற இரு பிள்ளைகள் பிறந்தனர்.

சந்தியாவின் வயது 26 ஆக இருக்கும் போது, அவரது கணவர் ஜெயராமன் மறைந்தார். தன் குடும்பத்தினை காப்பாற்ற சந்தியா 1953 ஆண்டில் நடிக்க ஆரம்பித்தார். பெரும்பாலும் தனது நடிப்புலக வாழ்க்கையில்... சந்தியா, துணை நடிகையாகவே அதிகம் நடித்து தனது குடும்பத்தினரை பாதுகாத்து வந்தார்.

சந்தியாவிற்கு தெரிந்த நடிப்பு தொழிலை, அப்போது தனது மகள் ஜெயலலிதாவிற்கு, நடனம் பயிற்றுவித்து சினிமா துறையில் நடிகையாக நுழைய செய்தார். ஜெயலலிதா அதன்பின் சினிமா உலகில் யாரும் எட்டமுடியாத உச்ச நடிகையாக, அப்போதைய பிரபல கதாநாயகர்களுடன் நடித்த படங்கள் அமோகமாக பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டானது.

1967 ஆண்டில், போயஸ்கார்டனில் 24000 ஆயிரம் சதுர அடிகள் பரப்பளவு கொண்ட 10 கிரவுண்ட் இடத்தினை அப்போதைய நடிகை சந்தியாவும், அவரது மகள் ஜெயலலிதாவும் ரூபாய் 1.32 லட்சத்திற்கு தங்கள் பெயரில் கிரயம் பெற்றனர். அதன்பின் அதில் கட்டிடம் எழுப்பி, அதற்கு வேதா நிலையம் என்ற பெயர் சூட்டி 1972 ஆண்டில் கிரஹபிரவேசம் நடந்ததாக தகவல் உண்டு.

அப்போததைய முதல்வர் எம்.ஜி.ஆரின் அதிமுக கட்சியில் ஜெயலலிதா இணைந்து பணியாற்றி வந்தவர். எம்.ஜி.ஆரின் மறைவிற்கு பிறகு, அதிமுகவின் தலைவியாக மாறி தமிழகத்தின் முதல்வர் நாற்காலியில் அமர்ந்து அலங்கரித்தவர்.

20211026084413215.jpg

போயஸ்கார்டனில் இருக்கும் வேதா நிலையம் எப்பொழுதும் பரபரப்புடன் காணப்படும். செல்வி ஜெயலலிதா வேதாநிலையத்தின் தனது முதல் மாடியிலிருந்து தொண்டர்களுக்கு கையசைத்து சைகை காட்டுவதை தனது வழக்கமாக கொண்டிருந்தார். இதனால் வேதா நிலையத்தில் செல்வி ஜெயலலிதா தமிழக முதல்வர் ஆன பிறகும், அவர் இறக்கும் வரை வசித்து வந்தார்.

ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு வேதா நிலையத்தை, எடப்பாடி தலைமையிலான தமிழக அரசு அவசர கோலத்தில் அரசுடமையாக்கி அறிவிப்பு வெளியிட்டு, வேதா நிலையத்தை கைப்பற்றியது.

20211026083714256.jpg

செல்வி ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமார் மறைந்து விட்டாலும், அவருடைய மகன் தீபக் மற்றும் மகள் தீபா இருவரும் இரண்டாம் தரப்பு வாரிசுகள் ஆவார்கள். ஜெயலலிதாவின் அண்ணன் வாரிசுகளுக்கு போய் சேரவேண்டிய செல்வி ஜெயலலிதாவின் இல்லத்தினை, தமிழக அரசு அவசர கோலத்தில் சட்டத்தினை பின்பற்றாமல் நிலம் கையகபடுத்தியதை ரத்து செய்ய வேண்டும் என்றும், வேதா இல்லத்தினை தங்களுக்கு திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனுவிணை தாக்கல் செய்தனர். இத்துடன் இரண்டு வெவ்வேறு சிவில் வழக்குகளையும் தமிழக அரசிற்கு எதிராக தாக்கல் செய்து இருந்தனர்.

செல்வி ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை, அப்போது ஆட்சியிலிருந்த அதிமுக அரசு அரசுடமையாக்கியது செல்லாது என்ற வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இறுதி விசாரணைக்கு வந்தது. சென்னை உயர்நீதிமன்றம் இருதரப்பு வாதங்களையும் கேட்டு, தீர்ப்பினை வெளியிட்டது. நீதியரசர் என்.சேஷசாயி தீர்ப்பில் உள்ள சாரம்சங்கள் இதோ….

போயஸ்கார்டனில் இருக்கும் வேதா நிலைய சொத்திற்கு அதிபதியான ஜெயலலிதா சாதாரண நபர் இல்லை. நடிகையாக இருந்து, அரசியலுக்குள் வந்து படிப்படியாக முன்னேறி முதல் அமைச்சர் பதவிக்கு வந்தவர். ஜெயலலிதாவிற்கு திருமணம் ஆகாததால் அவருக்கு நேரடி வாரிசுகள் இல்லை . அரசு முறையில் ஜெயலலிதாவின் உடல் அடக்கம் செய்தபோது, அவரது இறுதி சடங்கை அவரது அண்ணன் மகன் ஜெ.தீபக் செய்தார்.

ஜெயலலிதாவின் இரண்டாம் தர வாரிசு (Class 2 legal heirs) சான்றிதழ் கேட்டு, உரிய தாசில்தார் அலுவலகத்தில் அவரது அண்ணன் மகன் ஜெ.தீபக் மனு செய்தார். ஜெயலலிதாவின் இறப்பு சான்றிதழ் மனுவுடன் இணைக்கபடவில்லை என்று மறுக்கப்பட்டது. இதனால் ஜெயலலிதாவின் வாரிசு என சான்றிதழ் கேட்டு 2017 ஆண்டு கோர்ட்டை அனுகினார். இதனை வைத்து தன்னையும், தன் தங்கை தீபாவையும் ஜெயலலிதாவின் வாரிசுகள் என அறிவிக்க கோரி நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார். இதனால் ஜெ.தீபக் தேவையின்றி நீதிமன்றத்திற்கு வரும் நிலை ஏற்பட்டுள்ளது.

அப்போது அதிமுக நிர்வாகிகளாக இருந்த புகழேந்தியுடன், ஜானகிராமன் என்பவர் போயஸ்கார்டனில் இருக்கும் ஜெயலலிதா இல்லமான வேதா நிலையத்தின் நிர்வாக அதிகாரம் தங்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர.. அந்த வழக்கினை தனி நீதிபதி தள்ளுபடி செய்தார். தனி நீதிபதியின் உத்திரவினை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு, அது நிலுவையிலுள்ளது.

இதற்கிடையே தீபக் செய்திருந்த வழக்கில்… ஜெயலலிதாவின் வீட்டை பொது பயன்பாட்டிற்காக கையகப்படுத்த அரசிற்கு அதிகாரம் உள்ளது என்று அட்வகேட் ஜெனரல் தன் வாதமாக நீதிமன்றம் முன்பு வைத்தார். இந்த வழக்கில் யார் பிரச்சனை செய்வது? பிரச்சனை எங்கிருந்து புறப்பட்டது என்ற கேள்விகள் எழுகிறது.

இதற்கு முன்பு அப்போது இருந்த அரசும், அதிமுக கட்சி நிர்வாகிகளையும் தவிர வேறு யாரும் ஜெயலலிதாவின் வீட்டின் மீது உரிமை கோரி முன்வரவில்லை என்பதை மனதில் கொள்ள வேண்டும். அரசு ஒரு சொத்தை பொது பயன்பாட்டிற்கு கையகப்படுத்தினால், நில கையகபடுத்தும் சட்டப்படி 60 நாட்களுக்கு முன்பு உரிமையாளர்ககு நோட்டீஸ் அனுப்பி, அவரது முன்னிலையில் தான் நிலத்தினை கையகப்படுத்த வேண்டும் என்ற நடைமுறையினை பின்பற்றபடவில்லை என்பது தெளிவாகிறது.

ஆனால், ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்திற்கு தீபாவும், தீபக்கும் உரிமையாளர்கள் கிடையாது. வேதா நிலையம் வாரிசு இல்லா சொத்து என்பது போல் தான் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

ஆட்சியில் இருக்கும் அரசியல் கட்சி, தங்களது தலைவியை கவுரவிக்க எடுத்த நடவடிக்கைகள் எல்லாம் புரிந்து கொள்ளக்கூடியது தான். ஆனால், இந்த வழக்கில்... தலைவியின் வீட்டின் உரிமையையே நில ஆர்ஜிதபடுத்திய அதிகாரிகள் வேறுபடுத்தி காட்டி விட்டனர்.

இதே சென்னை உயர்நீதிமன்றம், சென்ற வருடம் ஜனவரி மாதம் ஜெயலலிதா இல்லத்தில், அரசு நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கி, நிகழ்ச்சி முடிந்ததும் வீட்டின் சாவியை சென்னை கலெக்டரிடம் ஒப்படைக்க உத்திரவிட்டது.

20211026084335803.jpg

ஏற்கனவே ஜெயலலிதாவிற்கு 80 கோடியில் மெரினா கடற்கரையில் நினைவகம் கட்டப்பட்டுள்ளது, அப்படி இருக்கும்பட்சத்தில் அடுத்து சில மைல் தொலைவில் உள்ள அவரது போயஸ்கார்டன் இல்லத்தில் எதற்கு மற்றொரு நினைவகம் அமைக்க வேண்டும். இதனால் மக்களின் வரிப்பணம் தான் வீணாகிறது. முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது பல திட்டங்களை கொண்டு வந்திருந்தாலும், அவரது தனிப்பட்ட பண்புகளை ஆராய இந்த நீதிமன்றம் விரும்பவில்லை. எதற்காக 2-வது ஒரு நினைவகம் உருவாக்கப்படுகிறது. அரசாங்கம் இது போல பல கோடி ருபாய் செலவு செய்ய முற்படும் போது, இந்த நீதிமன்றம் விதுரன் அரசவை போல் கண்களை மூடிக்கொண்டு இருக்க முடியாது.

நாட்டின் வளங்களை பாதுகாப்பது மட்டுமல்ல, பொதுமக்களின் வரிப்பணத்தையும் பாதுகாப்பது தான் அரசாங்கத்தின் கடமை என பொது மக்கள் வைக்கும் நம்பிக்கை. பல கோடி இழப்பீடு கொடுத்து, வேதா நிலையத்தை அரசு கையகப்படுத்துவதில் எந்த ஒரு பொது பயன்பாடும் இருப்பதாக தெரியவில்லை .

எகிப்தை ஆண்ட மன்னர்கள் பிரமிடுகளை அமைத்தனர். முகலாய சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கிய பேரரசர் ஷாஜகான் தாஜ்மஹாலை கட்டினார். தற்போது எகிப்து அந்த ஆட்சியாளர்களிடமோ, இந்தியா முகலாய பேரரசர்களிடமோ இல்லை. இந்தியா, மக்களுக்கு சொந்தமானது.

எனவே ஜெயலலிதாவின் இல்லமான வேதா நிலையத்தை அரசு கையகப்படுத்திய 2017 முதல் 2020 அரசின் உத்திரவுகளை நீதிமன்றம் ரத்து செய்கிறது. இந்த சொத்திற்கு இழப்பீடு நிர்ணயம் செய்து மாவட்ட கோர்ட்டில் தமிழக அரசு டெபாசிட் செய்துள்ள தொகையினை அரசு திரும்ப பெற்றுகொண்டு, ஜெயலலிதாவின் வேதா இல்லத்தினை இந்த உத்திரவு கிடைத்த 3 வாரங்களுக்குள் அவரது இரண்டாம் தர வாரிசுகளான ஜெ.தீபக் மற்றும் ஜெ.தீபாவிடம் சாவியை ஒப்படைக்க வேண்டும்.ஜெயலலிதா வைத்துள்ள வருமான வரி பாக்கிகளை உரிய நடைமுறைகள் படி வசூலிக்கலாம் என்று நீதிபதி தனது தீர்ப்பில் அறிவித்துள்ளார்.

எனது அத்தை ஜெயலலிதாவின் ஆன்மா என்னை கைவிடவில்லை என நினைக்கிறேன், எங்கள் குடும்ப சொத்தை நாங்கள் அனுபவிக்க வேண்டும் என்பது என் அத்தை மற்றும் பாட்டியின் விருப்பம். இந்த வழக்கில் தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் மேல்முறையீடு செய்ய மாட்டார் என நம்புகிறேன். என் சகோதரர் தீபக் உள்ளிட்டவர்களிடம் கலந்து பேசிய பின், அத்தையோட வீட்டிற்கு செல்வது குறித்து முடிவு எடுப்பேன் . வேதா நிலையத்தை மியூசியமாக அல்லது நினைவகமாகவோ மாற்றும் எண்ணம் ஏதுமில்லை என்று தீபா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.செல்வி ஜெயலலிதாவின் வாரிசுகளாக அவரது அண்ணன் மகன் ஜெ.தீபக் மற்றும் ஜெ.தீபா நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டு இருப்பதால், அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ வாய்ப்பு இருப்பதாக அரசியல் விமர்சகர்களின் கருத்தாக உள்ளது.