தொடர்கள்
பொது
"நூல் விலையேற்றம்... திணறும் திருப்பூர்...” - ஸ்வேதா அப்புதாஸ்

உலகத்தின் மிக முக்கிய வியாபார ஸ்தலங்களில் திருப்பூர் மிக முக்கியமானது...
பனியன் தயாரிப்பு தொழிலில் உலகத்தை தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்த ஒரு டாலர் சிட்டி.... யார்ன் சிட்டி... தற்போது நூல் விலையேற்றத்தால் திணறி தத்தளித்து கொண்டிருக்கிறது.

20211025104929456.jpg
கடந்த ஒரு வருடத்திற்கு மேல் பருத்தி நூல் விலையேற்றம், பனியன் உற்பத்தி தொழிலை மிகவும் பாதித்துள்ளது. திருப்பூர், கோவை, ஈரோடு, நாமக்கல், திண்டுக்கல், கரூர், காங்கேயம் என்று விசை தறி தொழில் மிகவும் பாதிக்க பட்டுள்ளது...

இதற்கு முக்கியக் காரணம்... பின்னலாலடைகளின் மூல பொருளான பஞ்சை, நம் நாடு ஏற்றுமதி செய்வது தான். இதற்கு முன் பருத்தி ஆடைகளை நம் நாட்டிலே உற்பத்தி செய்து... அமெரிக்கா, ஐரோப்பியா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வந்தனர். பெரிய அளவில் உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்ததின் விளைவு உலக அளவில் மிகப் பெரிய இடத்தை பிடித்தது திருப்பூர் பகுதி.

பனியன் உற்பத்தியாளர்கள், ஏற்றுமதியாளர்கள் மிக பெரிய வளர்ச்சியை அடைத்தனர். லட்ச கணக்கில் தொழிலாளிகள், இந்த தொழிற்ச்சலைகளில் பணிபுரிந்து வருகின்றனர்...

20211025111629226.jpg
அவர்களுடைய வாழ்வாதாரம் முழுவதும் பருத்தி, ஜவுளி தொழிலை நம்பி தான்.
திருப்பூர், ஈரோடு, கோவை, நாமக்கல், திண்டுக்கல் ஆகிய பகுதிகள் அபார வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பருத்தி தொழிலை இணைத்து, ஏகப்பட்ட கல்வி நிறுவனங்கள் உருவாகி விட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

2021102511243259.jpg
தற்போது பருத்தி நூல் விலையேற்றத்தால் என்ன செய்வது என்று புரியாமல் விழிபிதுங்கி திணறி தத்தளித்து கொண்டிருக்கின்றனர் இப்பகுதி தொழிலாளிகளும், வியாபாரிகளும், மற்றும் உள்ளூர் வாசிகளும்.

திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்கத்தை சேர்ந்த முத்துரத்தினத்திடம் பேசினோம்...

20211025112758760.jpg
“தற்போது எங்களை பாதித்துள்ள விலையேற்றம், வரலாறு காணாத ஒன்று. மாதந்தோறும்... முதல் வாரத்தில் நூல் விலை எவ்வளவு என்று நிர்ணயித்து வெளியிடப்படும். கொஞ்சம் ஏற்றம் இறக்கம் இருக்கும்... கடந்த ஒரு வருடமாக ஒவ்வொரு மாதமும் விலையேற்றம் தான்.

ஐம்பது ரூபாய் என்று எகிறிக்கொண்டே போகிறது. ஒவ்வொரு மாதமும் விலையேற்றம் என்றால் எப்படி சமாளிப்பது. ஏற்றுமதிக்கு 27 கோடி, 30 கோடி என்று இருந்த நிலைமை, இப்பொழுது தலை கீழ் தான். ஜனவரி மாதம் ஒரு கிலோ 130 ஆக இருந்தது, தற்போது 360 என்று உயர்ந்து விட்டது. உலகளவில் பின்னலாடை ஏற்றுமதியில் நாம் தான் உயர்ந்திருந்தோம். பங்களாதேஷில் உற்பத்தி குறைவு தான். நம்மிடம் பஞ்சு வாங்கி, உற்பத்தியை அவர்கள் உயர்த்தில் கொண்டிருக்கிறார்கள். நம் ஜவுளி தொழில் நலிவடைகிறது. அதே சமயம்... அந்நிய செலாவணியை ஈட்டி தரும் ஒரு சிறந்த தொழில் என்பதை அரசு மறந்து விட்டதா?..

Cotton corporation of India தான் பஞ்சு ஏற்றுமதியை ஊக்கப்படுத்துகிறது. இதனால் இடைத்தரகர்கள் விலை நிர்ணயம் செய்கிறார்கள், நாம் தான் பாதிக்க படுகிறோம். திருப்பூரில் மட்டும்... 12 லட்சம் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். வடநாட்டு தொழிலாளிகள் 3 லட்சம் பேர் பாதித்து, இடத்தையே காலி செய்து விட்டனர். திருப்பூரின் வளர்ச்சியே பனியன் தொழில் தான்........ நேற்றைய தொழிலாளி, இன்றைய முதலாளியாக உருவாகுவது தான் எங்க ஊர் ஸ்பெஷாலிட்டி. பனியன், மில், நிட்டிங், பிரிட்டிங் எல்லாம் இங்கு தான் நடக்கிறது... இந்தக் கட்டமைப்பை காப்பாற்றவில்லை என்றால், சிறு குறு தொழில் அழியும். அரசு, இதை புரிந்து செயல்பட வேண்டும்.

நெல் கொள்முதல் போல தான் பஞ்சும். விவசாயத்திற்கு அடுத்து ஜவுளி தொழில். தமிழக அரசு, வாரியம் அமைத்து உதவிட வேண்டும். இந்த விலையேற்றத்தில், தொழில் சிக்கி தத்தளித்து கொண்டிருக்க... மத்திய அரசு ஜிஎஸ்டி வேறு வசூல் செய்வதை என்னவென்று சொல்லுவது. முதல்வர் திருப்பூர் வந்தார்... அவருக்கு கொதித்து கொண்டிருக்கும் இந்தப் பிரச்சனை குறித்து தெரியுமா என்ற கேள்வி எழுகிறது. அமைச்சர் சாமிநாதன் எங்க ஊர் அமைச்சர், நாங்கள் முதல்வரை பார்க்க நேரத்தை கூட அவர் உருவாக்கி தரவில்லை.... இப்படி நூல் விலையேற்றம் தொடர, போராடுவதை தவிர வேறு வழியில்லை” என்று முடித்தார்.

20211025113616358.jpg

சி.ஐ.டி.யு பொது செயலாளர் சம்பத்தை தொடர்பு கொண்டு பேசினோம்...

“நூல் விலை அபரிமிதமாக கடுமையாக எறியுள்ளது. அரசின் கொள்கையால், எந்த மாற்றமும் வராமல் இருக்கிறது. அரசு எங்கள் மேல் எந்த அக்கறையும் காட்டுவதாகத் தெரியவில்லை. இதனால் திருப்பூர், நாமக்கல், கோவை, ஈரோடு, மேற்கு மாவட்டங்கள் பாதித்துள்ளன... தொடர் போராட்டம், உண்ணாவிரதம் என்று போராடி அரசின் கவனத்தை திருப்ப இருக்கிறோம். நூல் விலை, மாதந்தோறும் உயருவதை தான் ஜீரணிக்க முடியவில்லை. ஒரு கிலோ ரூபாய் 310-க்கு துவங்கி, இந்த மாதம் 370-க்கு வந்து நிற்பதால்... எல்லாமே வீழ்ச்சியில் நிற்கிறது.

சீனா, தன் உற்பத்தியை உலகளவில் உயர்த்தி கொண்டிருக்கிறது. நம் நாடு பஞ்சை ஏற்றுமதி செய்கிறது. அதனால், சிறு குறு தொழிலாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். உள்நாட்டு தேவையும் பூர்த்தி ஆகுவது இல்லை. Cotton Corporation of India, பருத்தியை கொள்முதல் செய்வதில் எங்களுக்கு அதிருப்தி தான். இதனால் பதுக்கல், விலையேற்றம் தொடர்கிறது. இந்தத் தொழிலை நம்பி இருப்பவர்களின் வாழ்வாதாரம் அழிந்து கொண்டிருப்பதை மாநில அரசும் கவனிக்க வேண்டும்” என்று முடித்தார்.

20211025113913455.jpg
பருத்தி பின்னலாடை ஏற்றுமதி சங்கத்தின் தலைவர் ராஜஷண்முகம் கூறும் போது...

“இந்த நூல் விலை பிரச்சனை ஒரு உலகமயமான பிரச்சனை என்று தான் சொல்லவேண்டும். தேவைக்கேற்ற உற்பத்தியை பெருக்கி, பொருளை விற்க வேண்டும். அதிலும்... வாங்குபவரிடம், உற்பத்திக்கு ஏற்றபடி விலையேற்றத்தை நிர்ணயிக்க வேண்டிய காட்டாயம் உண்டு. அதை விட்டுவிட்டு... உள் நாட்டில் விலையை ஏற்றி விட்டு, ஏற்றுமதியில் அதே விலையில் விற்றால், எப்படி லாபம் கிடைக்கும். உள்நாட்டு உற்பத்திக்கு ஏற்றபடி பின்னலாடையின் விலையை ஏற்ற வேண்டும். அப்படி செய்யவில்லை என்றால் நஷ்டத்தில் இயங்க வேண்டியது தான்...

பஞ்சு விலை மற்ற நாடுகளை விட இந்தியாவில் குறைவு தான். இதை மற்ற நாடுகளுக்கு புரிய வைக்க வேண்டும்...

இங்கு பெரிய அரசியலும் நடக்கிறது... மத்திய - மாநில அரசு ஒன்றும் செய்ய முடியாது. காரணம்... வெளிநாடுகளில் எந்த விலை கொடுத்து, பஞ்சு மற்றும் பின்னலாடைகளை வாங்குகிறார்களோ, அதில் விலையற்றம் தேவை... அதை பின்பற்ற வேண்டும். அப்படி செய்தால், நூல் விலையேற்றம் இங்கு குறையும். போரட்டம் போன்ற விஷயங்கள் எடுபடாது.... அதே வேளை... அரசும் தன் உதவி கரத்தை நமக்கு கொடுக்க வேண்டும். அதிலும்... மத்திய அரசு தான் உதவிட வேண்டும்.

கொரோனா வந்தவுடன்... வெளிநாடு செல்லும் கண்டைனர் வாடகை 300 ஈரோவில் இருந்து 1500 ஈரோ மற்றும் 2000 ஈரோ என உயர்ந்தது. அதுவே தற்போது... 5000 ஈரோ வாக உயர்த்து விட்டது. அமெரிக்காவில் 2500 மற்றும் 1500 ஆக உயர்ந்தது. இதுவும் நூல் விலை ஏற்றத்தை தவிர்க்க முடியாததாகி விட்டது. விரைவில் ஒரு நல்ல முடிவு வரும் என்று காத்து கொண்டிருக்கிறோம்” என்று முடித்தார்.

20211025115449333.jpg

ஈரோடும் மிக பெரிய போராட்டத்தில் குதித்துள்ளது...

20211025114803799.jpg
சர்பேஸ்வரா பிராசஸ் மற்றும் ரோட்டரி பிரின்டிங் உரிமையாளர் சிவகுமாரை தொடர்பு கொண்டு பேசினோம்...

“நூல் விலை ஏற்றம் எங்களையும் பாதித்து விட்டது... முக்கியமாக.. ஏற்றுமதி பனியன்கள் அனைத்திற்கும் பிரின்டிங் வேலை நாங்கள் தான் செய்து கொடுப்போம். நல்ல பிசினஸ் செய்து கொண்டிருந்தோம், தற்போது நாங்களும் பாதிக்கப்பட்டுள்ளோம். பின்னலாடைகள் முழுவதுமாக இங்கு தயாரித்து,
ஏற்றுமதி செய்வது தான் நமக்கும் நம் நாட்டிற்கும் நல்லது. அந்நிய செலாவணியை ஏற்படுத்தி தரும்... இந்த விலை ஏற்றத்தால், எங்க தொழில் பாதிக்கப்பட்டு ஈரோட்டில் மட்டும் ஐயாயிரம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தற்போது தொடர் போராட்டத்தில் இருக்கிறோம். மத்திய அரசு தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்று முடித்தார்.

20211025115729662.jpg

பின்னலாடை பிரின்டிங் தொழில் நடத்தி கொண்டிருக்கும் ராஜ்குமார் கூறும்போது....

20211025120111801.jpg

“நூல் விலையின் ஏற்றத்தால், பிரின்டிங் தொழிலும் முழுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. எல்லோரும் ஒரு வருட ஆர்டர் ரெடி செய்துவிடுவோம்... அதே போல.. சரக்கை வாங்குபவர்களும் ஆறு மாதத்திற்கு முன்பே ஆர்டர்கள் பிக்ஸ் ஆகிவிடும். அப்பொழுதுள்ள நூல் விலையை கருத்தில் கொண்டு தான் விலை நிர்ணயிக்கப்படும். மாதம் ஒரு முறை நூல் விலையை ஏற்றுவதால், நஷ்டம் உற்பத்தியாளர்களுக்கு தான். மாதம் மாதம் விலை ஏறி, 175 ருபாய் இருந்தது.. பின் 250 ஆக உயர்ந்து, 350 என்று உயர்ந்து தற்போது 380-ல் நிற்கிறது. அடுத்த மாதம்... நினைத்தாலே பயமாக இருக்கிறது. இதனால் எங்க தொழிலாளர்களை நிறுத்த வேண்டிய நிலமையும் உருவாகியுள்ளது. இந்த நிலையில் ஜிஎஸ்டி வேறு தலைவலி. 5 சதவிகிதமாக இருந்தது, தற்போது 12 சதவிகிதமாக உயர்த்தியுள்ளது அரசு. ஒரு பத்து லட்சத்திற்கு 12 சதவிகிதம் என்றால், எங்களுக்கு ஏகப்பட்ட நஷ்டம் தான். ஒரு விஷயம்... திருப்பூர் பின்னலாடை தொழில் முழுவதும், இந்தத் தொடர் நூல் விலை ஏற்றத்தால் அழிவை நோக்கி தான் சென்று கொண்டிருக்கிறது. குட்டி ஜப்பான் என்று அழைக்கப்படும் திருப்பூருக்கு, இந்த நிலைமை வந்தது மிகவும் வருத்தமான ஒன்று. மத்திய அரசு எங்களை காப்பாற்ற உடனடியாக முன் வர வேண்டும்” என்று கூறினார்.

20211025120258369.jpg
முன்னால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பஞ்சு மூல பொருள் ஏற்றுமதி செய்வதை தடை செய்யவேண்டும், நூல் விலையை குறைக்க வேண்டும், ஜிஎஸ்டி வரியை ரத்து செய்யவேண்டும், கைத்தறி பின்னலாடை உற்பத்தி தொழிலாளர்களை பாதுகாக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்.
உலக அந்தஸ்தை பெற்றுள்ள திருப்பூர் பனியன் உற்பத்தி தொழிலை, நலிவடைய செய்யாமல் மேலும் உயர்த்த மத்திய அரசு முன் வரவேண்டும். இவர்களின் நியாமான கோரிக்கைகளை ஏற்று நூலிழையில் இருக்கும் இவர்களின் எதிர்காலத்தை காப்பாற்றுமா நம் மத்திய அரசு?!...