தொடர்கள்
பொது
மாண்புமிகு மனிதர்கள் -5 -ஜாசன் கராத்தே தியாகராஜன்.

கராத்தே தியாகராஜன்

20220420163315502.jpg

கராத்தே தியாகராஜன் எனக்கு முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக தெரியும்.அவர் ஒரு செய்திச் சுரங்கம்.அவருக்குத் தெரியாத விஷயமே எதுவும் கிடையாது.ஆனால் அதை வெளிக்காட்டிக் கொள்ள மாட்டார். அவருக்கு எல்லா கட்சியிலும் மத்திய மாநில அரசாங்கத்திலும் அவருக்குத் தகவல் சொல்லக்கூடிய ஸ்லீப்பர் செல்கள் இருக்கிறார்கள்.நான் பல செய்திகளை அவரிடம் கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டு எழுதி இருக்கிறேன். அவருக்குத் தெரியாத விஷயமே இல்லை.

20220420163346306.jpg

நடிகர் ரஜினிகாந்த் இவருக்கு நெருங்கிய நண்பர்.இவரது திருமணத்தின் போது பாட்ஷா பட சூட்டிங்கில் இருந்து ஆட்டோ டிரைவர் காஸ்ட்யூம் உடன் வந்து இவரை வாழ்த்தி விட்டுப் போனார் ரஜினிகாந்த்.

திமுக-காங்கிரஸ் கூட்டணி இல்லாமல் இருந்த காலத்தில் 1996ல் திமுக காங்கிரஸ் கூட்டணி அமைய இருந்தது இதற்கு இவர் தான் ஒரு முக்கிய காரணம் முதலில் ஸ்டாலினிடம் பேசினார் பிறகும் முரசொலிமாறன் இருவரையும் எதிர்க்கட்சித் தலைவராக எஸ்.ஆர் பாலசுப்பிரமணியத்திடம் பேச வைத்தார். ஆனால் நரசிம்ம ராவ் மூப்பனாருக்கு தெரியாமல் அதிமுகவுடன் கூட்டணி தொடர முயற்சி செய்ய கோபமடைந்த மூப்பனார் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை ஆரம்பித்தார். அப்போது திமுக தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணி அமைந்தது.அந்தக் கூட்டணியை ரஜினி ஆதரிக்க இவரும் ஒரு காரணம்.அப்போது ரஜினி கருணாநிதி தப்பு செய்ய மாட்டார் அவர் தப்பு செய்யாமல் மூப்பனார் பார்த்துக்கொள்வார் என்று சொன்னார்.கருணாநிதி இதற்கு எந்த வினையும் காட்டாமல் அமைதி காத்தார்.அப்போது அவருக்கு இருந்த நிலைமை அதுதான்.அப்போதைய அரசியல் சூழ்நிலையும் ஒரு காரணம்.

ஜூனியர் விகடன் இதழுக்காக நான் ஜெயேந்திரரை பேட்டி காண பணிக்கப்பட்டேன்.எனக்கு சங்கரமடத்தில் யாரும் தொடர்பு கிடையாது. யாரையும் தெரியாது அப்போது கராத்தே தியாகராஜன் தொடர்பு கொண்டு கேட்டபோது உடனே ஏற்பாடு செய்தார். சங்கரமட சம்பிரதாயங்கள் எல்லாம் தாண்டி சேரிகளுக்கெல்லாம் விசிட் செய்த காலம் நங்கநல்லூரில் ஒரு முதியோர் இல்லத்தில் ஜெயேந்திரரை பேட்டி காண ஏற்பாடானது. அப்போது மத்தியில் பாரதிய ஜனதா ஆட்சி பிரதமர் வாஜ்பாய் அந்த பேட்டியில் பசு வதை தடை சட்டத்தை அமல்படுத்துவதாக பாரதிய ஜனதா எனக்கு வாக்குறுதி தந்தது. ஆனால் அந்த சட்டத்தை இதுவரை அவர்கள் அமல்படுத்தவில்லை என்றார்.

இந்த பேட்டி ஜூனியர் விகடனில் வந்ததும் பாரதிய ஜனதா தலைவர்கள் டெல்லியில் இருந்து வந்து ஜெயேந்தரிடம் பேசினார்கள். அந்தப் பேட்டி தேசிய செய்தியானது.கராத்தே வீரரான தியாகராஜன் மற்றும் அவரது சிஷ்யர்கள் அதிகாலை கடற்கரையில் செய்த சாகசங்களை உட்கார்ந்து ரசித்துப் பார்த்தார் ஜெயேந்திரர் அந்தப் பிரத்தியேக நிகழ்ச்சியை ஜூனியர்விகடன் புகைப்படக்காரர் சிவபெருமாள் படம்பிடித்து ஜூனியர் விகடனில் வெளியானது.

20220420163416716.jpg

படம் : மேப்ஸ்

ராஜீவ் காந்தி படுகொலையின் போது மூப்பனார் உடன் அந்த இடத்தில் கடைசி வரை இருந்த ஒரே காங்கிரஸ் பிரமுகர் கராத்தே தியாகராஜன் தான். அப்போது அங்கிருந்து ஐஜி.ராகவனை சட்டையைப் பிடித்து அவர் தொப்பியை தட்டி விட்டு காலால் மிதித்து என் தலைவனை கொன்னுட்டீங்க என்று அவரிடம் சண்டை போட்டுக் கொண்டிருந்தார் கராத்தே, ராகவன் நல்லா அடிங்க உங்க தலைவர் போயிட்டாரு அந்த கோபம் வருவது நியாயம்தான் என்று சொல்லிக்கொண்டிருந்தார் .அப்போது மூப்பனார் வந்து கராத்தே வை விலக்கிவிட்டார் .இந்த நிகழ்வையும் ராஜீவ் காந்தி படுகொலை கட்டுரையில் எழுதி இருந்தேன். ஆனால் கராத்தே ராகவன் மீது நடத்திய அத்துமீறல் ராகவனுக்கு சாதகமாக போனது. அப்போது உயர் அதிகாரிகளிடம் ராகவன் உட்பட அங்கு யாருமே இல்லை எல்லோரும் ஓடி விட்டார்கள் என்ற தகவல் சொல்லப்பட்டிருந்தது. ஆனால் அந்த செய்தி புகைப்படம் இரண்டும் அவர் அங்கு தான் இருந்தார் என்பதை உறுதிப்படுத்தியது ராகவனுக்கு ஏற்பட்ட சங்கடம் விலகியது மறைமுகமாக ராகவனுக்கு கராத்தே நல்லதுதான் செய்திருந்தார்.

தற்போது பாரதிய ஜனதாவில் இருக்கும் மாநில செயலாளராக இருக்கும் கராத்தே ஒரு காலத்தில் ஸ்டாலினுக்கும் நெருக்கமாக இருந்தவர் தான் . இப்போது ஸ்டாலினை எதிர்த்து அறிக்கை பேட்டி வெளியிடுவது தனிக்கதை.

20220420163759776.jpg

சென்ற மாதம் சென்னை வந்த மலேசிய அமைச்சர் முதலமைச்சர் ஸ்டாலினை மரியாதை நிமித்தம் கோட்டையில் சந்தித்துவிட்டு நேராக போனது அடையாறு காந்தி நகரில் உள்ள கராத்தே வீட்டுக்கு தான் போனார். இந்த செய்தி கேள்விப்பட்ட ஸ்டாலினுக்கு மலேசிய அமைச்சருக்கும் கராத்தேவிற்க்கும் என்ன சம்பந்தம் அவரை எப்படி தெரியும் என்று அருகில் இந்த அமைச்சரை கேட்க அந்த அமைச்சர் அவருக்குத் தெரியாத விஷயமோ தெரியாத தலைவரோ யாருமில்லை அண்ணே என்று சொன்னார். அதுதான் தியாகராஜன்.ஆனால் இது எல்லாம் ஒரு பெருமையாக என்றும் பேசிக் கொண்டது கிடையாது. விருந்தோம்பலில் அவருக்கு ஈடு அவர்தான். ஆனால் எளிமையாகத் தான் இருப்பார்.

ஆனந்த விகடன் எம்.டி வீடு, இவர் வீட்டுக்கு அருகில் தான் இருந்தது. ஒரு நாள் மாலை எம்.டி வீட்டில் கரண்ட் கட் ஆனது என்ன காரணம் என்று தெரியவில்லை.நிருபர்கள் பலர் மின்சார அமைச்சர் உள்பட பலரிடம் எம்டி வீட்டுக்கு கரண்ட் வர முயற்சி செய்தார்கள் .ஆனால் எந்த பயனும் இல்லை எதுவும் நடக்கவில்லை. அப்போது தேர்தல் நேரம் நான் கோயம்புத்தூரில் இருந்தேன். ஜூனியர் விகடன் பொறுப்பாசிரியர் அசோகன் என்னை தொடர்புகொண்டு இதுபற்றி சொல்ல அடுத்த நொடி கராத்தே தியாகராஜனிடம் விஷயத்தை சொன்னேன்.சில நிமிடங்களில் மின் வாரிய அதிகாரிகளை அழைத்து வந்து எம்டி வீட்டுக்கு கரண்ட் வர செய்துவிட்டார். எம்.டி ஆச்சரியப்பட்டுப் போனார்.யார் யாரிடமோ பேசினோம் எதுவும் நடக்கவில்லை, இப்போது பார்த்த சில நிமிடங்களில் முடிந்து விட்டது ஆச்சரியப்பட்டு, அவருக்கு நன்றி சொன்னார். பாவம் எம்டி மின்சாரம் இல்லாததால் ஏசி மின்விசிறி இல்லாமல் ரொம்பவும் அவதிப்பட்டு இருந்தார்.எல்லாம் சில நிமிடங்களில் சரியானது மறுநாள் காலை 7 மணிக்கு ஆபீஸ் போன எம் டி கராத்தே தியாகராஜனுக்கு நன்றி தெரிவித்து ஒரு கடிதம் தனது உதவியாளரிடம் கொடுத்து அனுப்பியிருந்தார்.கராத்தே தியாகராஜன் அப்போது சென்னை மாநகராட்சியின் பொறுப்பு மேயராக இருந்தார் எந்த பந்தாவும் காண்பிக்காமல் தன் வீட்டுக்கு வந்து சரி செய்ததில் எம்டி மிகவும் மகிழ்ந்து போனார் அதனால்தான் இந்த நன்றி கடிதத்தை அனுப்பினார்.என்னைப் பொறுத்தவரை கராத்தே தியாகராஜன் அன்றும் இன்றும் என்றும் ஒரு ஜென்டில்மேன் தான்.