தொடர்கள்
தமிழ்
கத கேளு கத கேளு தமிழோட கேளு – 9

சென்ற வாரம், “வட்டார வழக்கில் எழுத்துக்களின் மாத்திரைகள் படும் பாடு,” பற்றி கேட்டதற்கு பரணீதரன் ஒரு (ready reference) பட வழிகாட்டி கொடுத்துவிட்டார். அவரே தொடர்கிரார்.

சார்பு எழுத்துக்களின் மாத்திரை கணக்கு

மூன்று உயிரளபு; இரண்டு ஆம் நெடில்; ஒன்றே

குறிலோடு, ஐ, ஒளக் குறுக்கம் ஒற்றளபு;

அரை ஒற்று. இ, உக் குறுக்கம், ஆய்தம்;

கால் குறள் மஃகான், ஆய்தம், மாத்திரை.

20230224190123677.jpg

* பொதுவாக நாம் பேசும் சொல்லின் அளவுதான் நம் மூச்சின் அளவை தீர்மானிக்கும். பெரிய வார்த்தைகளை நாம் பேசும்பொழுது நாம் அதிக மாத்திரை அளவுகளை உபயோகிக்கிறோம் அதனால் நம்முடைய மூச்சின் அளவும் அதிகமாக செலவழிக்கப்படும். இதைக் குறைப்பதற்காக தான் குற்றியலிகரம் குற்றியலுகரம் மற்றும் நான்கு வகையான குறுக்கங்கள் உள்ளது. குறுக்கங்கள் முதலில் வரும் பொழுது தன்னுடைய மாத்திரை அளவுகளில் அதிகமாகவே இருக்கும் ஆனால் அவை சொல்லின் நடுவிலோ அல்லது கடைசியிலே வந்தால் அதனுடைய மாத்திரை அளவுகள் குறைந்து விடும் ஏனெனில் அதற்கு முன்னால் இருந்த சொற்கள் அதிகமான மாத்திரைகளை உபயோகப்படுத்தி இருக்கும்.

கீழே உள்ள சொற்களை நாம் மாத்திரைகளாக பதம் பிரித்து விவரிக்கின்றார்

வரகு - வ ர கு - 1 1 1 - மொத்தம் மூன்று மாத்திரைகள். அதனால் கடைசியில் வரும் ‘கு'வின் மாத்திரையை குறைத்து 1 1 1/2 என்று இரண்டரை மாத்திரைகளாக குறைக்கிறோம்.

பாசு - பா சு - 2 1 - மொத்தம் மூன்று மாத்திரைகள். அதனால் கடைசியில் வரும் ‘சு'வின் மாத்திரையை குறைத்து 2 1/2 என்று இரண்டரை மாத்திரைகளாக குறைக்கிறோம்.

ஔவை - ஔ வை - 2 2 - மொத்தம் நான்கு மாத்திரைகள். அதனால் முதலில் வரும் ‘ஔ’வின் மாத்திரையையும் கடைசியில் வரும் ‘வை’யின் மாத்திரையையும் குறைத்து 1 ½ 1 ½ என்று மூன்று மாத்திரைகளாக குறைக்கிறோம்.

வளையல் - வ ளை ய ல் - 1 2 1 ½ - மொத்தம் நான்கரை மாத்திரைகள். அதனால் நடுவில் வரும் ‘ளை’யின் மாத்திரையை குறைத்து 1 1 1 ½ என்று மூன்றரை மாத்திரைகளாக குறைக்கிறோம்.

பசு - ப சு - 1 1 - மொத்தம் இரண்டு மாத்திரைகள். அதனால் கடைசியில் வரும் ‘சு'வின் மாத்திரையை குரைக்காமல் 1 1 என்று இரண்டு மாத்திரைகளாகவே உச்சரிக்கிறோம்.

நாடுயாது - நாடியாது - நாடு என்கிற சொல்லில் உள்ள டு குற்றியலுகரமாக இருந்தாலும் அதன் பின்னால் வரக்கூடிய ‘யா’வுடன் சேரும்பொழுது நமக்கு உச்சரிப்பதற்கு சிறிது சிரமமாக இருக்கும். அதனால் நாம் மூச்சுக்காற்றை சற்று அழுத்தமாக விட வேண்டி இருக்கும். அதை குறைப்பதற்காக ‘டு' என்ற எழுத்தை ‘டி’யாக மாற்றி விட்டோம். இப்பொழுது இந்த சொல்லை நாம் கூறுவதற்கு சிரமம் இருக்காது. இதுதான் குற்றியலிகரம்.

அளபெடையில் மட்டும் இந்த மாத்திரை அளவு குறையாது. ஏனெனில் அளபெடை பொதுவாக இசை தமிழிலேயே வரும் பாடுவதற்கு ஸ்வரங்கள் மற்றும் தாள அளவு மிகவும் முக்கியம். இந்த தாள அளவினை சரி செய்வதற்காகவே அளபெடை வருகிறது. நமது வடிவேலுவின் பிரபலமான டயலாக் ஆன ‘அவனா நீயி’ என்று சொல் தொடரை பாருங்கள். இது ‘அவனா நீ’ என்று வந்திருக்க வேண்டும். ஆனால் அந்த சொல்லிற்கு எமோஷனை கூட்டுவதற்காக நீயி என்பது போல் வடிவேல் கூறுவார். அவர் கூறும் இந்த சொல்லே பாட்டு போல தான் இருக்கும். இதுதான் அளபெடை. அதனால்தான் இங்கு மாத்திரை குறையாமல் அதனுடைய இனமும் சேர்ந்து வருகிறது. இனம் என்றால் ‘நீ’ என்ற எழுத்தை பிரித்தால் ‘ந்’ + ‘ஈ’. ‘ஈ’க்கு இன எழுத்து ‘இ’. ‘யி' என்ற எழுத்தை பிரித்தால் ‘ய்’ + ‘இ'. இலக்கணம் சரியாக வருகிறது அல்லவா. இப்படித்தான் நமக்கு தெரியாமலேயே நாம் மேலே உள்ள அனைத்து விதமான சொற்களையும் சரியான இலக்கணத்தில் சொல்லிக் கொண்டிருக்கிறோம்.

20230224190226849.jpg

ஊத்துக்காடு க்ருஷ்ணர்

20230224190309593.jpg

பாம்பு பொதுவாக மூச்சினை இழுத்து படம் எடுத்து ஆடும். படம் எடுத்து முடிந்த உடன் மூச்சினை விட்டு இயல்பாக மாறும். பாம்பிற்கும் மூச்சிற்கும் நிறைய சம்பந்தம் உண்டு. ஒருவர், பாடல் அல்லது செய்யுள் பாடுவதற்கோ அல்லது நடனம் ஆடுவதற்கோ மூச்சு பயிற்சி மிகவும் அவசியம். இதையும் க்ருஷ்ணர் தன்னுடைய ஆட்டத்தில் காட்டி இருக்கிறார். இதை மனதில் வைத்து தான் ஊத்துக்காடு வெங்கட சுப்பையர் தன்னுடைய பல பாடல்களில் இந்த கோலத்தை பாடி இருப்பார். நமது மொழி கூட மூச்சின் அடிப்படையில் உருவானது தான். அதை விளக்கவே இந்த படம்.

பொதுவாக slang என்று கூறப்படும் வட்டார வழக்கு (ஒவ்வொரு ஊரிலும் பேசப்படும் தமிழ் சொற்களின் மாறுபாடு) இலக்கணப்படி தான் வருகிறதா என்பதை அடுத்து பார்ப்போம்.

என்னங்கண்ணே - மதுரை பாஷை - எ ன் ன ங் க ண் ணே - 1 ½ 1 ½ 1 ½ ½ - 5 மாத்திரை

என்னங்கண்ணா - கோவை பாஷை - எ ன் ன ங் க ண் ணா - 2 ½ ½ ¼ ½ ¼ 1 - 5 மாத்திரை

மதுரை பாஷையில் பொதுவாக ஒரு சொல்லை சுருக்காமலும் விரிக்காமலும் பொதுவாக பேசுவார்கள். கோவை பாஷையில் ஒரு சொல்லை பேசும்பொழுது முதலில் இழுத்து பின்னால் சுருக்குவார்கள். திருநெல்வேலி பாஷையில் முதலில் குறைத்து பின்னால் இழுப்பார்கள். சென்னை பாஷையில் ஒரு சொல்லின் உடைய முற்பகுதி பிற்பகுதி இரண்டையும் குறைத்து நடுவே எழுப்பார்கள். ஆனால் மாத்திரை அளவுகள் ஒன்றாகவே வரும்.

அந்த காலத்தில் தமிழ் மொழியில் உள்ள அனைத்து வகையான இலக்கண இலக்கியங்களும் செய்யுள்களாகவே இருந்தன. இயல் தமிழ் வடிவத்தில் இருந்த நூல்கள் மிகவும் குறைவே. இப்படி செய்யுள்களாக இருந்த தமிழ் நூல்களை, புலவர்கள் நல்ல தாளம் மற்றும் ராகம் ஆகிவற்றை போட்டு இசையமைத்து பாடுவார்கள். இப்படி பாடப்படும் பாடல்களுக்கு மாத்திரை அளவுகளை சரியாக வைத்து அதற்கான யாப்பிலக்கணம் வகைகளை வகுத்து அதை அந்த செய்யுளிலேயே கூறி விடுவார்கள். இதைப் பாடுவதற்கு என்றே பாணர்கள், கூத்தர்கள், விரலியர்கள் என்று பல பிரிவுகளில் கலைஞர்கள் இருந்தார்கள்.

இதற்கென ஒரு அழகான உதாரணத்தைத் தருகிறார்.

20230224191218150.jpg

இசைத்தமிழில் ஒரு பாடலை பாடும் பொழுது சில பாடகர்கள் அந்த பாடலை இழுத்தும் சில பாடகர்கள் அந்த பாடலை சுருக்கியும் சில பாடகர்கள் இரண்டையும் சேர்த்தும் கூட செய்வார்கள். எடுத்துக்காட்டாக ஊத்துக்காடு வெங்கடசுப்பையர் பாடலான ‘அலைபாயுதே கண்ணா’ (அலைபாயுதே படத்தில் ஷாலினி அவர்கள் இந்த பாடலை பாடுவது போல காட்டி இருப்பார்கள்). இதில் முதல் வரி சற்று பொறுமையாக ஆரம்பிக்கும் அடுத்த வரி மிகவும் வேகமாக ஓடும். ஆனால் இரண்டு வரிகளுமே தாளத்திற்கு (மெட்டிற்கு) ஏற்ற ஏற்ற மாதிரி சரியாக பாடப்பட்டிருக்கும். இப்படித்தான் மாத்திரைகள் நாம் பேசும் சொற்கள் நாம் பாடும் பாடல்கள் ஆகிய அனைத்திலும் சரியான அளவிலேயே வரும். இதை நமக்கே தெரியாமல் நாம் சரியாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

இப்படியாக மூச்சு விடுதலை வைத்து மாத்திரை அளவை அளப்பது வடமொழியிலும் அல்ப ப்ராணா (ஒரு எழுத்தை உச்சரிக்கும் பொழுது குறைந்த மூச்சை பயன்படுத்துவது), மஹா ப்ராணா (ஒரு எழுத்தை உச்சரிக்கும் பொழுது அதிகமான மூச்சை பயன்படுத்துவது) மற்றும் மாத்ரா(மாத்திரை) என்ற பெயர்களில் கூறப்படுகிறது.

அடுத்த வாரம் சுட்டெழுத்துக்கள் மற்றும் வினா எழுத்துக்கள் ஆகியவை பார்ப்போமே என்று விடை பெறுகிறார்.