தொடர்கள்
அனுபவம்
ஆப்கான் மாணவியின் அசராத படிப்பு மாலா ஶ்ரீ

20230503072435595.jpg

ஆப்கானிஸ்தான் நாட்டில் கடந்த 2021-ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் தலிபான்கள் அதிரடி தாக்குதல் நடத்தி, ஆட்சியைக் கைப்பற்றினர். அதன்பிறகு அந்நாட்டு பெண்களின் அனைத்து சுதந்திரங்களும் பறிபோயின. அவர்கள் உயர்கல்வி படிக்கவும் தடை விதிக்கப்பட்டது. இதேபோல், ஆப்கான் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள சர் இ போல் பகுதியை சேர்ந்த மாணவி பெகிஸ்தா கைருதீனின் உயர்கல்வியும் பாதிக்கப்பட்டது.

இதற்கு முன்னதாக, சென்னை ஐஐடியில் எம்.டெக் கெமிக்கல் இன்ஜினீயரிங் படிப்பில் சேருவதற்கு பெகிஸ்தா கைருதீன் விண்ணப்பித்து இருந்தார். பின்னர் நுழைவுத் தேர்வில் அவர் தேர்ச்சி பெற்றும் சென்னை ஐஐடியில் சேர முடியவில்லை.

மாணவியின் அவலநிலையை அறிந்த சென்னை ஐஐடி பேராசிரியர் ஒருவர் உதவிக்கரம் நீட்டினார். அவர், சென்னை ஐஐடி நிர்வாகத்துடன் பேசி, ஆப்கன் மாணவி பெகிஸ்தா ஆன்லைன் மூலமாக உயர்கல்வி பயில ஏற்பாடு செய்துள்ளார். தற்போது ஆப்கன் மாணவி பெகிஸ்தா எம்.டெக் படிப்பில் வெற்றிகரமாகத் தேர்ச்சி பெற்றுள்ளார்.

இதுகுறித்து பெகிஸ்தா கூறுகையில்: "எங்கள் வீட்டில் தாய் டாக்டர். தந்தை பட்டதாரி. எனது சகோதரி, இந்திய ஐஐடியில் பிஎச்டி பட்டம் பெற்றிருக்கிறார். எனது தம்பி பட்டப்படிப்பு பயின்று வருகிறார். எனது தங்கை சட்டம் பயின்றுள்ளார். ஆப்கானிஸ்தானின் ஜோஸ்ஜன் பல்கலைக்கழகத்தில் பி.டெக். படிப்பில் தேர்ச்சி பெற்ற எனக்கு, சென்னை ஐஐடியில் ஆன்லைன் மூலமாக எம்.டெக்கில் சேர்ந்தேன்.

எனக்கு முதல் 2 செமஸ்டர்கள் கடினமாக இருந்தன. எனினும் இரவுபகலாக படித்து, சுயமுயற்சியில் ஆங்கில அறிவை வளர்த்து கொண்டேன். சென்னை ஐஐடி ஆய்வக வசதியை பெற முடியாததால், ஆப்கன் வீட்டிலேயே மாதிரி ஆய்வகத்தை உருவாக்க, மற்றொரு பேராசிரியர் அறிவுறுத்தினார்.

அதன்படி, எனது சகோதரியிடம் இருந்து சமையலுக்கு பயன்படும் மைக்ரோவேவ் ஓவனை பெற்றேன். நகைக்கடையில் இருந்து டிஜிட்டல் ஸ்கேல் மற்றும் குடுவைகளை வாங்கி, வீட்டிலேயே மாதிரி ஆய்வகத்தை உருவாக்கி பயிற்சி பெற்றேன். அதிவேக இணைப்பு இல்லாத வைபை, சாதாரண லேப்டாப்பின் மூலம் எனது எம்.டெக் படிப்பை நிறைவு செய்துள்ளேன்.

சென்னை ஐஐடி பட்டமளிப்பு விழாவில் நேரில் பட்டம் பெற விரும்புகிறேன். ஆனால், அது இங்கு சாத்தியமில்லை. அடுத்து, அங்கேயே பிஎச்டி படிக்க விரும்புகிறேன். ஆப்கான் பெண்கள் வீட்டுச் சிறையில் இருந்தாலும், என்னை போல் தடைகளைத் தாண்டி, வீட்டிலிருந்தே படித்து முன்னேற வேண்டும் என விரும்புகிறேன்!" என்று எம்.டெக் மாணவி பெகிஸ்தா வலியுறுத்தினார்.

ஆப்கானிஸ்தானில் நிலமை மாறி என்று பெண்களும் சரிசமமாக நடத்தப்படுகிறார்களோ அன்று தான் அந்த நாடு முன்னேறும். இதில் சந்தேகமேயில்லை.