சென்னையின் அடையாளமான உழைப்பாளர் சிலை,
என் வாழ்விலும் பெரிய அடையாளம் தான்.
இந்த உழைப்பாளர் சிலைக்குக் கீழேதான் நானும் என் ஒன்றுவிட்ட மாமாவும் 1981 அக்டோபரில் அமர்ந்திருந்தோம்.
“மாமா! உங்களை ஒண்ணு கேப்பேன். என் மேல் கோபிக்கக் கூடாது…..”
“உன்மேலே எனக்கென்னடா கோபம் வர்றதுக்கு இருக்கு!”
“இல்லே மாமா! நான் சொல்றதைக் கேட்டு கோபப்பட வாய்ப்பிருக்கு”
“வாய்ப்பிருந்தாலும் கோபிக்க மாட்டேன். யாரையாவது லவ் பண்றியா? என் அக்கா கிட்டே தூது போகணுமா?”
கொஞ்சம் மௌனம் காத்தேன்.
“இப்போ என்னன்னு நீ சொல்லப் போறியா இல்லையா?”
“மாமா… வந்து…”
“சொல்லு மோகன் “
“மாமா… உங்க பொண்ணு ஜெயந்தியை கல்யாணம் பண்ணிக்க ஆசைப் படறேன். அதான் மாமா”
இப்போது மௌனம் காத்தல் மாமாவின் முறை. இன்னும் கொஞ்சம் நிதானமா நான் சொல்லியிருக்கணுமோ?
“மோகன்.. நீ கேட்டது தப்பில்லை தான். இதுக்கு ஜெயந்தியும், ருக்மணி அக்காவும் என்ன சொல்வாங்களோ?”
“இன்னைக்கு உங்க கிட்ட பேச வந்ததே ஜெயந்தி சொல்லித்தான் மாமா!”
“அவ்வளவு நடந்துடுச்சா? எவ்வளவு நாளா?”
“நாலு வருஷமா மாமா”
கோபமா? ஆச்சரியமா! என்று புரியாத குரலில் மாமா படபடத்தார்…
“எனக்குத் தெரியாம என் பொண்ணு இவ்வளவு வேலை பண்ணியிருக்காளா? அக்கா மகன்தான் வரேன்னு சந்தோஷமா தானே இருந்தேன்? இப்போ அக்காவுக்கு என்ன பதில் சொல்றது நான்? போன தரம் பாக்கிறப்போ மோகனுக்கு நல்ல பொண்ணாப் பாருடான்னு என் கிட்டயே சொன்னாளே?”
“சாரி மாமா! ஜெயந்தியே நல்ல பொண்ணு தானே மாமா?”
“என் பொண்ணு குறித்து என் கிட்டயே சர்டிபிகேட் தர்றியா மோகன்?”
“அப்படி இல்லே மாமா. பொதுவா சொன்னேன்…”
“அக்கா கிட்ட எந்த முகம் வச்சிகிட்டு கேப்பேன்னு யோசனையா இருக்கு. “
“அம்மாவை என் அப்பா சமாளிச்சுடறேன்னு சொன்னார் மாமா!”
“ஓஹோ… பாவாவும் உனக்கு உடந்தையா”
“உங்க சம்மதம் இருந்தா போதும். அம்மாவை சமாளிச்சுக்குவேன் மாமா!”
“நான் சம்மதிக்கல்லேன்னா?”
“எப்படியோ எங்க அம்மாவை சமாளிச்சு உங்ககிட்டே பொண்ணு கேட்கச் சொல்வேன் மாமா. எங்க அம்மாவை உங்களால் தட்ட முடியாதில்லையா?”
“உம். சரி போலாம் வா“என்று எதிரே எழிலகம் ஆவின் கடைக்கு என் கையைப் பிடித்துக் கூட்டிப் போனார்.
இரண்டு பேருக்கும் பால் ஆர்டர் செய்தார். கண்ணாடி ஜாடியிலிருந்த பால் கோவா பாக்கெட் வாங்கிப் பிரித்து ஒரு விள்ளலை என் வாயில் ஊட்டினார்.
ஆஹா! சிங்கம் சம்மதம் சொல்லிடுச்சு. சந்தோஷம் தாங்காமல் ‘ஐ லவ் யூ மாமா’ என்றேன்.
“லவ்வையெல்லாம் ஜெயந்தியோட நிறுத்திக்கோ. இரண்டு பேரும் வெளிய எங்கும் சுத்த வேண்டாம் தெரிஞ்சுதா? ஞாயித்துக்கிழமை கடலூர் வரேன். அக்கா கிட்ட பேசினப்புறம் தான் என்ன பண்ணுனும்னு யோசிக்கணும்”
சொன்னபடி மாமா கடலூர் வந்தார். அம்மாவிடம் திட்டு வாங்கினார். அக்காவும் தம்பியும் சேர்ந்து என்னையும் திட்டினார்கள்.
அம்மா ‘உங்க வேலை தானா?’ என்று அப்பாவைத் தனியே அழைத்து டோஸ் விட்டாள்.
பேசி முடித்தார்கள். தடபுடலாக மாமாவுக்கு விருந்து வைத்தாள் அம்மா.
“கல்யாணம் பேச வந்துட்டு கை நனைக்கலாமோ ருக்கு” என்று அம்மாவைக் கேட்டார் மாமா.
“ரொம்பத் தான்டா பண்றே.. பால்கோவா ஊட்டி விட்டியாம் என் பிள்ளைக்கு?!”
“அதையும் மோகன் சொல்லிட்டானா? சந்தோஷத்துல என்ன பண்றேன்னு தோணாம ஊட்டி விட்டுட்டேன்க்கா”
“நானும் அதே சந்தோஷத்தில தான் சமைச்சேன். ஒழுங்கா இப்போ சாப்பிடப் போறியா இல்லையா?”
ஏதோ சொல்லலாம் என வாயெடுத்தேன்.
‘சும்மாயிரு’ என ஜாடை காட்டி அப்பா கண்சிமிட்டினார்.
வாழையிலையோரம் அம்மா பால் பாயசத்தை முதலில் வைத்தாள்.
இன்னும் என்னன்னா கேக்குறீங்க…
அப்புறமா உழைப்பாளர் சிலை பக்கம் நான் போகவேயில்லை!
Leave a comment
Upload