தொடர்கள்
கதை
கோணம் ஜி.ஏ. பிரபா

20240613152518315.jpeg

“இன்னைக்கு நாம் அன்பு சிறார் இல்லத்திற்கு போகலாம்” என்றான் ராகவன்..

“இன்னிக்கு ராகவிக்கு பர்த்டே. அங்க போய் என்ன செய்யப் போறீங்க? இன்னொரு நாளைக்கு ஃப்ரீயா போலாமே” என்றாள் சுபா.

“ இல்ல சுபா. இங்கு வசதி உள்ளவர்களை அழைத்து பார்ட்டி வைத்து, அவர்களுக்கு கேக், வயிறார உணவு என்று கொடுப்பதை விட, அதற்கு ஏங்கும் ஏழை குழந்தைகளுக்கு, அனாதை இல்லங்களுக்குக் கொடுத்தால், அன்று ஒரு நாள் அந்த குழந்தைகள் சந்தோஷமாக இருக்கும் அல்லவா?” என்றான் ராகவன்.

சுபா அமைதியாக இருந்தாள்.

ஏனோ அனாதை இல்லங்களுக்குச் செல்லும்போது சுபா அங்கு வர விரும்புவதில்லை. எதோ ஒரு சாக்கு போக்கு சொல்லி அதை தவிர்த்து விடுவாள். ஆனால் ராகவன் தன் மகள் ராகவியின் பிறந்தநாள்,தீபாவளி பொங்கல் சமயங்களில் இந்த மாதிரி இல்லங்களுக்கு சென்று அன்று அவர்களுக்கு பிடித்தமான உணவுகளை சமைத்துத் தந்து, சின்னச் சின்ன பரிசுகள் கொடுத்து, அவர்களோடு உற்சாகமாக இருந்து விட்டு வருவது வழக்கம்.

வளரும் குழந்தைகளுக்கு இப்போதிருந்தே நாம் இந்த வழக்கத்தை கற்பித்தால், தன்னைச் சுற்றியுள்ள மனிதர்களை நேசிக்க வேண்டும், அன்பு காட்ட வேண்டும், கருணையும் மனிதாபிமானமும் நிறைந்து இருக்க வேண்டும் என்ற உணர்வுகள் வரும் என்பது ராகவனின் எண்ணம்.

அவனின் செயல்களுக்கு சுபா மறுப்பு சொல்ல மாட்டாள். ஆனால் தான் மட்டும் வரமாட்டேன் என்று கூறிவிடுவாள். ராகவனும் எத்தனையோ முயற்சி செய்து விட்டான். சுபாவை மாற்ற முடியவில்லை.

ஏன் என்று கேட்டால், இல்லை எனக்கு நிறைய வேலை என்று ஒவ்வொரு முறையும் தவிர்த்து விடுவாள். தீபாவளி, பொங்கல் போன்ற நாட்களில் வீட்டுக்கு உறவினர்கள் வந்து விடுவார்கள். அது ஒரு சாக்கு ஆகிவிடும்.

ராகவிக்கு இப்பொழுது ஏழு வயது ஆகிறது. அவளின் மூன்றாம் வயதிலிருந்து அன்பு சிறார் இல்லத்திற்கு கூட்டிச் செல்கிறான் ராகவன். அங்கு ராகவி எல்லோரிடமும் கலந்து விளையாடுவாள். கொண்டு போன உணவு வகைகளை எல்லாருக்கும் தானே தட்டில் போட்டுக் கொடுத்து அவர்களோடு அமர்ந்து பேசி, சிரித்து விளையாடிவிட்டு கை நிறைய சாக்லேட் இனிப்புகளை அள்ளிக் கொடுத்துவிட்டு வருவாள்.

ராகவனும் தன் நண்பர்களிடமும் சொல்லி அந்த இல்லத்து குழந்தைகளுக்கு படிப்புக்குத் தேவையான புத்தகங்கள், நோட்டு, எழுது பொருட்களை வாங்கித் தருவது வழக்கம். அதையும் ராகவி கையால் கொடுத்துதான் அவர்களுக்கு கொடுக்க வைப்பான்.

ஒரு முறையானும் சுபா தன்னுடன் வந்து இதில் கலந்து கொள்ள வேண்டும் என்பது அவனுடைய ஆசை. சுபாவும் திருமணத்திற்கு முன்பு இந்த மாதிரி இல்லங்களுக்கு சென்று வந்தவள்தான்.

அப்படி ஒரு இல்லத்தில் பார்த்துதான் அவளை பிடித்துப் போய் பெற்றவர்களிடம் சொல்லி திருமணம் ஆனது. ஆனால் குழந்தை பிறந்து, ராகவி அங்கு போக ஆரம்பித்த பிறகு சுபா அங்கு வருவதை நிறுத்திவிட்டாள்.

“எனக்கு ரொம்ப வருத்தமாக இருக்கிறது” ராகவன்.

சுபாவுக்குப் புரிந்தது.

“ இன்று நீ எதனால் வர மறுக்கிறாய் என்பது எனக்கு தெரிந்தாக வேண்டும்”

சுபா பதில் சொல்லவில்லை

“நீ சொல்லவில்லை என்றால் இனி நமக்குள் எந்த ஒரு பேச்சு வார்த்தையும் கிடையாது” என்று சீறினான்.

சுபா கண்ணீர் மல்க அவனை ஏறெடுத்துப் பார்த்தாள்.

“ நீயும் ஒரு குழந்தைக்குத் தாய். அந்தக் குழந்தைகள் தாய் இல்லாதவர்கள். நீ அங்கு வந்தால் உன்னுடைய அன்பும் அரவணைப்பும் அந்த குழந்தைகளுக்கு எவ்வளவு ஆறுதலாக இருக்கும்?”

“ அதற்குத்தான் நான் வரவில்லை”--- சுபா

“என்ன சொல்கிறாய்?”

“ அங்கு நான் வந்தால் ராகவி என்னை அடிக்கடி அம்மா என்று அழைப்பாள். நான் அவளிடம் பேசும் போதும், பழகும் போதும் அந்த குழந்தைகளுக்கு தாங்கள் அம்மா என்று அழைக்க தாய் இல்லையே என்ற ஏக்கம் அதிகரிக்கும். அதற்கு நான் காரணமாகக் கூடாது என்றுதான் வரவில்லை. மேலும் இந்த மாதிரிச் செய்வதன் மூலம் நீ அனாதை, அனதை என்று அந்தக் குழந்தைகளிடம் உரத்துச் சொல்வது போல் இருக்கிறது. நான் ஒரு தாயான பிறகுதான் ஒரு குழந்தையின் ஏக்கம் எனக்குப் புரிய ஆரம்பித்தது. எனவேதான் நான் அங்கு வருவதை நிறுத்திவிட்டேன்.” சுபா

ராகவன் நெகிழ்ந்து போனான்.. தொண்டை அடைத்துக் கொள்ள எட்டி அவளைத் தன் தோளோடு அணைத்துக் கொண்டான்.

“உன் உணர்வு புரிகிறது சுபா. ஆனால் நீ ஒன்றை நினைத்துப் பார். ஒரு குழந்தை உன்னை அம்மா என்று அழைப்பதை விட 100 குழந்தைகள் உன்னை அம்மா என்று அழைக்கும் போது அவர்கள் மனதில் எத்தனை ஒரு மகிழ்ச்சி பிறக்கும்? அதையேன் நீ தரக்கூடாது? அங்கு வா. குழந்தைகளுக்கு இனிப்புகள் கொடு. ஒரு தாயாராய் இருந்து அந்த குழந்தைகளுக்கு உன் கையால் சோறு பரிமாறு. அங்கு ஒவ்வொரு குழந்தையும் உன்னை அம்மா என்று அழைக்கும் போது, அந்தச் சொல்லுக்கு உண்டான கருணையும், அன்பையும் நீ காட்டு. இது ஒரு மிகப்பெரிய விஷயம் இல்லையா?” - ராகவன் குரல் சுபாவை அசைத்தது.சிந்திக்க வைத்தது.

“ஸாரிங்க. நான் என் கோணத்தில் இருந்துதான் சிந்தித்தேனே தவிர அந்த குழந்தைகளின் நிலையில் நின்று பார்க்கவில்லை. எனக்கு இப்பொழுது புரிகிறது/ நானும் வருகிறேன். ராகவியோடு சேர்ந்து அந்த இல்லத்து குழந்தைகள் அனைத்தும் என்னை அம்மா என்று அழைக்கட்டும்.”-- குரல் உடைந்தது சுபாவுக்கு.

அன்போடு அவள் தோளைத் தட்டிக் கொடுத்தான் ராகவன்.