இந்த வாரம் நக்கீரர், சிவபெருமான் மீது பாடிய திருவெழுக்கூற்றிருக்கை கவியை பற்றி சொல்கிறர் பரணீதரன்.
இந்த கவி ஆலவாய் என்று அழைக்கப்படும் இன்றைய மதுரையில் உள்ள சுந்தரேஸ்வரர் (சிவபெருமான்) மேல் பாடப்பட்ட பதிகம் ஆகும். மதுரையில் சிவபெருமான் நிகழ்த்திய 64 திருவிளையாடல்களில் ஒன்றான “தருமிக்கு பொற்கிழி கொடுத்தல்” சம்பவத்தில் சிவபெருமானின் கோபத்திற்கு ஆளாகி அவருடைய நெற்றிக்கண் திறந்து அதனால் தனது உடல் முழுவதும் வேக ஆரம்பிக்கும் பொழுது, அந்த வேக்காட்டை (உடல் எரிச்சல்) தணிப்பதற்காக நக்கீரர் இந்த கவியை உருவாக்கி சிவபெருமானிடம் வேண்டுகிறார். இந்த ரதபந்தம், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்றும் படமாக உள்ளதை பார்க்கலாம். கோவிலுக்குள் கேமரா மொபைல் போன்ற எலக்ட்ரானிக் கருவிகளுக்கு தடை விதிக்கப்பட்டு இருப்பதால் இந்த பந்தத்துடைய புகைப்படத்தை இங்கே கொடுக்க முடியவில்லை. இப்போது இந்த கவிதையை பார்ப்போம்.
நக்கீரதேவ நாயனார் (நக்கீரன்) - பதினொன்றாம் திருமுறை
ஓருடம்பு ஈருரு ஆயினை ஒன்றுபுரிந்
தொன்றி னீரிதழ்க் கொன்றை சூடினை
மூவிலைச் சூலம் ஏந்தினை
சுடருஞ் சென்னி மீமிசை
இருகோட் டொருமதி எழில்பெற மிலைச்சினை
ஒருகணை இருதோள் செவியுற வாங்கி
மூவெயில் நாற்றிசை முரண்அரண் செகுத்தனை
ஆற்ற முன்னெறி பயந்தனை
செறிய இரண்டு நீக்கி
ஒன்று நினைவோர்க் குறுதி யாயினை
அந்நெறி ஒன்று
மனம்வைத் திரண்டும் நினைவி லோர்க்கு
முன்னெறி உலகங் காட்டினை அந்நெறி
நான்கென ஊழி தோற்றினை
சொல்லும் ஐந்தலை அரவசைத் தசைந்தனை
நான்முகன் மேன்முகம் கபாலம் ஏந்தினை
நூன்முக முப்புரி மார்பில்
இருவர் அங்கம் ஒருங்குடன் ஏந்திய
ஒருவநின் ஆதி காணா திருவர்
மூவுல குழன்று நாற்றிசை உழிதர
ஐம்பெருங் குன்றத் தழலாய்த் தோன்றினை
ஆறுநின் சடையது ஐந்துநின் நிலையது
நான்குநின் வாய்மொழி மூன்றுநின் கண்ணே
இரண்டு நின் குழையே ஒன்றுநின் ஏறே
ஒன்றிய காட்சி உமையவள் நடுங்க
இருங்களிற் றுரிவை போர்த்தனை நெருங்கி
முத்தீ நான்மறை ஐம்புலன் அடக்கிய
அறுதொழி லாளர்க் குறுதி பயந்தனை
ஏழில் இன்னரம் பிசைத்தனை
ஆறில் அமுதம் பயந்தனை ஐந்தில்
விறலியர் கொட்டு மழுத்த வேந்தினை
ஆல நீழல் அன்றிருந் தறநெறி
நால்வர் கேட்க நன்கினி துரைத்தனை
நன்றி இல்லா முந்நீர்ச் சூர்மாக்
கொன்றங் கிருவரை எறிந்த ஒருவன்
தாதை ஒருமிடற்று இருவடி வாயினை
தருமம் மூவகை உலகம் உணரக்
கூறுவை நால்வகை
இலக்கண இலக்கியம் நலத்தக மொழிந்தனை
ஐங்கணை அவனொடு காலனை அடர்த்தனை
அறுவகைச் சமயமும் நெறிமையில் வகுத்தனை
ஏழின் ஓசை இராவணன் பாடத்
தாழ்வாய்க் கேட்டவன் தலையளி பொருத்தினை
ஆறிய சிந்தை யாகி ஐங்கதித்
தேரொடு திசைசெல விடுத்தோன்
நாற்றோள் நலனே நந்தியிங் கிருடியென்
றேற்ற பூதம் மூன்றுடன் பாட
இருகண் மொந்தை ஒருகணங் கொட்ட
மட்டுவிரி அலங்கல் மலைமகள் காண
நட்டம் ஆடிய நம்ப அதனால்
சிறியேன் சொன்ன அறிவில் வாசகம்
வறிதெனக் கொள்ளா யாகல் வேண்டும்
வெறிகமழ் கொன்றையொடு வெண்ணில வணிந்து
கீதம் பாடிய அண்ணல்
பாதஞ் சென்னியிற் பரவுவன் பணிந்தே.
பணிந்தேன்நின் பாதம் பரமேட்டீ பால்நீ
றணிந்தால வாயில் அமர்ந்தாய் - தணிந்தென்மேல்
மெய்யெரிவு தீரப் பணித்தருளு வேதியனே
ஐயுறவொன் றின்றி அமர்ந்து
மேலே உள்ள எண்களை தனியாக எடுத்து ஒரு படமாக வரைந்தால் கீழே உள்ள தேர் வடிவத்தில் வரும். முதல் ஏழு அடிகளை மேலிருந்து கீழாகவும், அதே ஏழு அடிகளை கீழிருந்து மேலாகவும் மாற்றி போட இந்த ரதபந்தம் என்னும் தேர் பந்தம் உருவாகும். அப்படி உருவாக்கப்பட்ட படத்தினை கீழே கொடுத்துள்ளேன்.
இப்பொழுது பாடலின் அடிகளையும் இதுபோல நாம் உருவாக்கினால் பல கோவில்களில் வரையப்பட்டிருக்கும் தேர்பந்தங்கள் போல உருவாகும்.
இப்போது இந்த கவியின் பொருளை பார்ப்போம்.
ஒரே உடம்பில் இரண்டு உருவங்களாக (அர்த்தநாரீஸ்வரர்) ஆகி ஒரு திருவிளையாடலை புரிந்து, அந்த விளையாட்டிற்குள் நீயே ஒரு புலவராக ஒன்றி, இரண்டு இதழ்கள் கொண்ட கொன்றை மலர்களை சூடினாய். மூன்று இலைகள் போன்ற வடிவுடைய சூலத்தை ஏந்தி இருக்கிறாய். ஒளியை தரக்கூடிய தலையின் மேலே இரண்டு முனைகளும் ஒன்று போலவே உள்ள ஒரு நிலவை சூடி இருக்கிறாய் (1 2 1)(1 2 3 2 1)
ஒரு அம்பை இரண்டு தோள்களும் காதுகளும் நேர்பட வைத்து அதை ஏவி திரிபுரம் என்று அழைக்கப்படும் முப்புரத்தை நான்கு திசைகளும் கெடுமாறு மிகவும் பலம் வாய்ந்த அரண்களை (கோட்டைகளை) அழித்து வென்றாய். அனைத்து செயல்களுக்கும் முன்மாதிரியாக இருக்கிறாய். நல்வினையாகிய புண்ணியத்தையும் தீவினையாகிய பாவத்தையும் விட்டுவிட்டு முக்தியை(பரபிரம்மத்தை) மட்டும் நினைக்கும் அன்பர்களுக்கு உறுதுணையாகவும் அவர்களின் காரியங்கள் வெற்றி பெறுவதற்கு உறுதியையும் கொடுக்கிறாய். (1 2 3 4 3 2 1)
அந்த நெறியானது ஒன்றே ஒன்றுதான். அதுதான் சத்தியம் (கடவுள்). “ஏகம் சத் விப்ரா பகுதா வதந்தி” என்ற வடமொழி கூற்றிற்கேற்ப, இறைவனாகிய உண்மை ஒன்றுதான் அதை மகான்கள் மற்றும் கற்றறிந்த சான்றோர் அதனை பல்வேறு விதமாக அழைக்கிறார்கள். அதைத்தான் இங்கே நக்கீரரும் அந்த நெறி ஒன்று தான் என்று கூறுகிறார்.
இரண்டு விதமான நினைவு இல்லாதவர்களுக்கு, அதாவது அந்த சத்திய நெறியை மட்டுமே நினைவில் கொண்டவர்களுக்கு, முக்தி அல்லது வீடு பேரினை அருளுகின்றாய். உண்மைத் தன்மை ஏறி இறங்குவதை காட்டுவதற்காக நான்கு யுகங்களை (சத்ய யுகம், திரேதா யுகம், துவாபர யுகம், கலி யுகம்) உருவாக்கி அதன் பிறகு அழித்தாய். தர்மத்தையும் உண்மையையும் ஒரு காளை மாடாக உருவகப் படுத்தினால், சத்திய யுகத்தில் தர்மம் மற்றும் சத்தியம் நான்கு கால்களில் முழுவதுமாக இருக்கும். திரேதா யுகத்தில் மூன்று கால்களுடனும், துவாபர யுகத்தில் இரண்டு கால்களுடனும், கலியுகத்தில் ஒரு காலுடனும் இருக்கும். அதாவது யுகங்கள் மாற மாற சத்தியம் மற்றும் தர்மம் ஆகிய இரண்டும் குறைந்து கொண்டே வரும். சிறப்பு மிக்க ஐந்து தலை பாம்பினை உனது கழுத்தில் ஆட வைத்துக்கொண்டு நீ ஆடிக் கொண்டிருக்கிறாய். (1 2 3 4 5)
இந்த கவியின் மீதி விளக்கத்தை வரும் வாரம் பார்ப்போமே என்கிறார் பரணீதரன். ஏனென்றால் பாடல் பெரியதல்லவா?.
Leave a comment
Upload