சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே கல்வராயன் மலைப் பிரதேசத்தில், மேல்நாடு ஊராட்சிக்கு உட்பட்ட கரியகோவில் வேலம்பட்டு கிராமத்தை சேர்ந்த பழங்குடியின தம்பதி பூச்சான்-ராஜம்மாள் தம்பதியின் 17 வயது மகள் சுகன்யா. இவரது தாய் மின்னல் தாக்கி இறந்த நிலையில், அவரது பெரியம்மா சின்னப்பொண்ணு பராமரிப்பில் இருந்து வருகிறார். போதிய அடிப்படை வசதிகள் இல்லாத மலைக்கிராமமான கரியகோவில் கிராம அரசு பள்ளியில் சுகன்யா பிளஸ் 2 வரை படித்துள்ளார்.
அதே சமயம், ஏத்தாப்பூரில் உள்ள ஏகலைவா உண்டுஉறைவிட பள்ளியில், தமிழக அரசின் சார்பில் அளிக்கப்பட்ட இலவச ஜேஇஇ நுழைவுத் தேர்வுக்கான பயிற்சியை சுகன்யா பெற்றுள்ளார். பின்னர் பிளஸ் 2 முடிந்ததும், சேலத்தில் ஜேஇஇ நுழைவு தேர்வை சுகன்யா எழுதியுள்ளார். இதில், மாநில அளவில் சுகன்யா முதலிடம் பிடித்து, திருச்சியில் உள்ள என்ஐடி கல்லூரியில் படிக்க தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
இதுகுறித்து மாணவி சுகன்யா கூறுகையில், ‘‘என்னை கடந்த 13 ஆண்டுகளாக பெரியம்மா மற்றும் பள்ளி ஆசிரியர்கள், ஏத்தாப்பூரில் ஏகலைவா உண்டு உறைவிட பள்ளியில் அரசு இலவசமாக அளித்த ஒரு மாத ஜேஇஇ நுழைவு பயிற்சி போன்றவை எனக்கு உறுதுணையாக இருந்தது. இதுவே நான் ஜேஇஇ நுழைவு தேர்வில் முதலிடம் பெற்றதற்கு காரணம்!’’ என்று மகிழ்ச்சி தெரிவித்தார்.
இதேபோல் திருச்சி மாவட்டம், துறையூர் அருகே பச்சைமலை வண்ணாடு ஊராட்சி, சின்ன இலுப்பூர் கிராமத்தில் பழங்குடியின மக்களின் குழந்தைகள் படிப்பதற்கு உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் பிளஸ் 2 முடித்த 17 வயதான மாணவி ரோகிணி, சமீபத்தில் நடைபெற்ற ஜேஇஇ நுழைவு தேர்வில் பங்கேற்றார். இதைத் தொடர்ந்து, கடந்த சில நாட்களுக்கு முன் வெளியான தேர்வு முடிவில், ரோகிணி 73.8 சதவிகித மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார். இதன்மூலம் திருச்சி என்ஐடி கல்லூரியில் கெமிக்கல் இன்ஜினியரிங் படிப்பதற்கு தேர்வாகியுள்ளார்.
இதுகுறித்து மாணவி ரோகிணி கூறுகையில், ‘‘ஜேஇஇ நுழைவு தேர்வுக்காக சிறப்பு பயிற்சிகள் எதுவும் மேற்கொள்ளவில்லை. எங்கள் பள்ளியில் நடத்திய பாடப்பிரிவுகளையே படித்தேன். அதுமட்டுமின்றி எங்கள் குடும்பத்தினர், ஆசிரியர்கள் உறுதுணையாக இருந்தனர். நான் என்ஐடியில் தேர்வாகியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது!’’ என்று தெரிவித்தார்.
கடந்த 60 ஆண்டுகளில் முதன்முறையாக பழங்குடியினத்தை சேர்ந்த 6 மாணவர்கள் இம்முறை ஜேஇஇ நுழைவு தேர்வில் சிறப்பிடம் பிடித்துள்ளனர் எனக் குறிப்பிடத்தக்கது.
Leave a comment
Upload