தொடர்கள்
follow-up
T20 உலகக் கோப்பைவெற்றிக்குப் பின்னால் - பால்கி

20240609224012533.jpg
இந்த உலகக் கோப்பை வெற்றியின் சிற்பிகள் வெறும் பேட்ஸ்மேனோ, பந்து வீச்சாளரோ, ஃபீல்டரோ கோச்சோ மட்டும் காரணம் இல்லை, மைதானத்தில் ஆடும் வீரர்களுக்கு திரைக்குப் பின்னால் போவ்லிங்க் ப்ராக்டீஸ் பேட்டிங்க் ப்ராக்டீஸ் கொடுத்து உதவிடும் உதவி செய்பவர்களும் பெரும் பங்கு வகிக்கிறார்கள். இப்போதெல்லாம், ஆட்டக்காரர்கள் 16 பேர் என்றால் அவர்களுக்கு உதவிட கோச் டாக்டர் சகிதம் 15 பேர் செல்கிறார்கள்.

20240609224054425.jpg

அந்த வகையில் இந்த கோப்பையின் வெற்றிக்கு ஒருவரின் பெயர் படு வேகமாக வைரலாகிவிட்டது. அவர் தான் ராகவேந்திர த்விவேதி. இவர் நம்து டீம் பேட்ஸ்மேன்களுக்கு பந்து வீசி பேட்டிங்க் ப்ராக்டீஸ் கொடுக்கும் த்ரோடௌன் ஸ்பெஷலிஸ்ட்.

அவர் யார்?

வெறும் ரூ21 யுடன் இருபத்தினாங்கு வருடங்களுக்கு முன் வீட்டை விட்டு வெளியேறிய இவர் இன்று இந்தியாவின் உலகக் கோப்பை வெற்றிக்குக் ஒரு காரணமாக மதிப்பிடப்படுகிறார் என்றால் இவர் தனது கனவு மெய்ப்பட எடுத்துக்கொண்ட முயற்சி தாண்டி வந்த கரடுமுரடான ஒரு நிலையில்லா பாதைதான் காரணம்.

பத்து நாளுக்கு முன்னர், ஐசிசி டி20 உலகக் கோப்பையை இந்தியா கைப்பற்றியபோது, ​​குங்கும நெற்றியுடன் ஒருவரும் வெகு அடக்கமாய் மைதானத்தில் அமைதியாகக் கொண்டாடிக்கொண்டிருந்தார்.

ஆம். அந்த மனிதர் தான் நாம் கூறும் இந்த மனிதர், வட கர்நாடகாவின் கும்தா என்னும் சிறு நகரத்தைச் சேர்ந்த ராகவேந்திர த்விவேதி.

இவரது இந்த நிலை இவர் பெறும் வரை நடந்தவை ஒரு அசாதாரணமான கதை.

அவரது உறுதிப்பாடு, ஆர்வமும் இவரது வற்றிக்குக் காரணம்.

ஆரம்பகால போராட்டங்கள் மற்றும் உறுதிப்பாடு

சுமார் 24 ஆண்டுகளுக்கு முன்பு, வீட்டை விட்டு ஓடி வந்த இவருக்கும் எல்லா இளைஞரைப் போலவே கிரிக்கெட் வீரராக வேண்டும் என்று கனவு கண்டார், ஆனால் அவரது கையில் ஏற்பட்ட எலும்பு முறிவு அந்த கனவை சிதைத்தது. மனம் தளராத ராகவேந்திரா கிரிக்கெட் உலகில் புதிய பாதையை அமைக்க முடிவு செய்தார்.

வீட்டில் தந்தையோ ராகவேந்திராவின் கிரிக்கெட் ஆசைக்கு வில்லன்.ஆனால் அதுவே ராகவேந்திரா எல்லாவற்றுக்கும் மேலாக கிரிக்கெட்டைத் தேர்ந்தெடுத்த ஒரு தீர்க்கமான தருணத்திற்கு வழிவகுத்தது. அவர் அருகிலிருக்கும் பெரிய நகரமான ஹூப்ளிக்குப் புறப்பட்டார், அங்கு அவர் பேருந்து நிலையம், ஒரு கோயில் மற்றும் இறுதியில் ஒரு சுடுகாட்டில் தூங்குவது உட்பட மோசமான சூழ்நிலையில் வாழ்ந்திருக்கிறார். சுடுகாட்டில் கைவிடப்பட்டிருந்த கட்டிடத்தை தனது இருப்பிடமாகக் கொண்டு, கிரிக்கெட் பாயை தனது போர்வையாகப் பயன்படுத்தி இப்படியாக சுமார் நான்கரை ஆண்டுகளைக் கழித்திருக்கிறார்.

ஒரு திருப்புமுனை

அவர் எதிர்கொண்ட கஷ்டங்கள் இருந்தபோதிலும், ராகவேந்திராவின் கிரிக்கெட் மீதான ஆர்வம் ஒன்றே அவரது குறிக்கோளான போது எதிர்கொண்ட பிரச்சினைகளைக் கண்டு இவர் மலைக்கவோ மருளவோ இல்லை. மாறாய் வைராக்கியம் மிகவும் அதிகமானது.

ஹூப்ளியில் கிரிக்கெட் வீரர்களின் பயிற்சி அமர்வுகளின் போது பந்துகளை வீசுவதன் மூலம் அவர் உதவத் தொடங்கினார். அவரது அர்ப்பணிப்பைக் கண்ட அவரது நண்பர் இவரை பெங்களூரில் கர்நாடகா கிரிக்கெட் நிறுவனத்தினிடம் அனுப்பி வைத்தார். அங்கு கர்நாடக அணியின் கிரிக்கெட் வீரர்களுக்கு பந்துகளை வீசியும் மற்றும் பந்துவீச்சு இயந்திரத்திற்கு உதவுவதுமாக தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.

அவரது இடைவிடாத முயற்சி அவருக்கு கை கொடுத்தது. முன்னாள் கர்நாடக விக்கெட் கீப்பரும் தற்போதைய 19 வயதுக்குட்பட்டோருக்கான தேர்வுக் குழுத் தலைவருமான திலக் நாயுடு ராகவேந்திராவின் அர்ப்பணிப்பை பாராட்டும் விதமாக அவரை முன்னாள் கர்நாடக கிரிக்கெட் வீரரான ஜவகல் ஸ்ரீநாத்துக்கு அறிமுகப்படுத்தினார். அவரது நேர்மை மற்றும் கடின உழைப்பால் ஈர்க்கப்பட்ட ஸ்ரீநாத், ராகவேந்திராவை கர்நாடக ரஞ்சி அணியில் சேர அழைத்தார். இந்த வாய்ப்பு அவரது வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

ராகவேந்திராவின் பயணம் சின்னசாமி ஸ்டேடியத்திற்கு அருகிலுள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் (NCA) தொடர்ந்தது, அங்கு அவர் பல ஆண்டுகளாக ஊதியம் இல்லாமலே பணியாற்றியிருக்கிறார், அடிக்கடி உணவு சாப்பிடக்கூட பணம் இல்லாமல் இருந்திருக்கிறாராம்.

இருப்பினும், அவரது கடின உழைப்புக்கு பலன் கிடைத்தது, அவர் பிசிசிஐ லெவல்-1 பயிற்சி வகுப்பை முடித்ததும், பயிற்சிக்கு வந்த இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு பிடித்தமானவராக மாறினார். அவரது திறமையை சச்சின் டெண்டுல்கர் மெச்சிட அதுவே, 2011 இல் இந்திய கிரிக்கெட் அணியில் பயிற்சி உதவியாளராக நியமிக்கப்பட உதவியாயுமிருந்தது.

இந்திய அணியின் முக்கிய தூண்

கடந்த 13 ஆண்டுகளாக, ரகு என்று அழைக்கப்படும் ராகவேந்திரா, இந்திய டிரஸ்ஸிங் ரூமில் முக்கியமான நபராக இருந்து வருகிறார். ஒரு த்ரோடவுன் நிபுணராக, அவர் பயிற்சி அமர்வுகளின் போது குறைந்தது 1 மில்லியன் பந்துகளை வீசியுள்ளார். அவரது பந்து வீச்சுகள், மணிக்கு 150 கிமீ வேகத்தையும் மிஞ்சும். அது விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா போன்ற வீரர்களின் திறமைகளை மெருகேற்றியுள்ளது. கோஹ்லி ஒருமுறை குறிப்பிட்டார், "ரகுவின் 150 கிமீ வேகத்தில் வீசப்படும் பந்துகளை வலைகளில் எதிர்கொள்வது, நிஜ போட்டியில் வேகப்பந்து வீச்சாளர்கள் பந்துகள் நடுத்தர வேகப்பந்துகள் போலவே தோன்றுகின்றன."

விளையாட்டு மற்றும் இந்திய கிரிக்கெட் அணி மீதான அவரது அர்ப்பணிப்பு, உண்மையான ஆர்வமும் அர்ப்பணிப்பும் எந்தத் தடையையும் சமாளிக்கும் என்பதை நிரூபித்து, அவரைப் புகழ்பெறாத ஹீரோவாக மாற்றியுள்ளது.

விராட் கோலியின் வார்த்தைகளில், "இன்றைய எனது வெற்றியில் இந்த மனிதருக்கு மிகப்பெரிய பங்கு உள்ளது, ஆனால் அவரது கடின உழைப்பு சில நேரங்களில் உலகத்தால் கவனிக்கப்படாமல் போகிறது."

இந்திய அணியின் த்ரோடவுன் ஸ்பெஷலிஸ்ட் ராகவேந்திரா பற்றி வெகு சில ரசிகர்களுக்கே தெரியும். பயிற்சி அமர்வுகளின் போது வீரர்களுக்கு 'த்ரோடவுன்களை' வழங்கும் அரிய திறமை ரகுவுக்கு உள்ளது. ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா போன்ற இடங்களில் காணப்படும் ஆடுகளங்களின் வேகம் மற்றும் பவுன்ஸ் ஆகியவற்றை சரிசெய்ய இது அவர்களுக்கு உதவுகிறது.

வாழ்க்கையில் எல்லாம் முடிந்துவிட்டதாக நினைப்பவர்கள் ராகவேந்திராவின் இந்த எழுச்சியூட்டும் கதையைக் கேளுங்கள்.