தொடர்கள்
அழகு
பண்டரிபுரம் ஆஷாட சுக்ல ஏகாதசி– பால்கி

20240612193358354.jpeg
வரும் ஜூலை 17 ஆம் தேதி...... பண்டரிபுரத்தில் ஆஷாட சுக்ல ஏகாதசி கொண்டாட்டம். ஒரு பக்தி வெள்ளம் பெருக்கெடுக்கப்போகிறது. அன்று அந்த சின்ன கிராமம் சுமார் 25 லட்ச பக்தர்களை, பாண்டுரங்க பக்தர்களை எதிர்கொள்ளப்போகிறது.

கடந்த ஐன்னூறு ஆண்டுகளுக்கு மேலாகவே....மகாராஷ்டிராவின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த ஆஷாட ஏகாதசி அன்று சோலாப்பூர் மாவட்டத்தின் பண்டர்பூர் என்று அழைக்கப்படும் பண்டரிபுரத்தில் உள்ள விட்டல் பகவான் கோயிலுக்கு வருகைருகின்றனர்.

பூனாவிற்கருகில் இருக்கும் ஆலந்தி என்னுமிடத்திலிருந்து சந்த் ஞானேஷ்வர் மஹராஜின் பாதுகைகளை ஏந்திய பால்கியும் (பல்லக்கு) தேஹூ என்னுமிடத்திலிருந்து ஜூன் 28. 2024 அன்று ஆஷாதி வாரிக்காக சந்த் துக்காராம் மஹராஜின் பால்கி தேஹுவிலிருந்தும் பண்டரிபுரத்திற்கு புறப்பட்டன. அவற்றிர்க்குப் பின்னால் அபங்கங்களைப் பாடிக்கொண்டு சுமார் 20 லட்ச பக்தர்களும் பாத யாத்திரையாக ஆஷாட சுக்ல ஏகாதசி அன்று பாண்டுரங்கனின் கோவிலில் கூடுவர்.

பக்தர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு டோல் கட்டணம் இல்லை

கோயில் நகரமான பந்தர்பூருக்கு பக்தர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு கட்டண விலக்கு அளிப்பதாக மகாராஷ்டிர அரசு ஜூலை 3ஆம் தேதி அறிவித்தது.

சையான்-பன்வேல் நெடுஞ்சாலை, மும்பை-புனே விரைவுச்சாலை, மும்பை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, புனே-சோலாப்பூர் மற்றும் புனே-சதாரா-சோலாப்பூர் நெடுஞ்சாலைகள் உட்பட பண்டரிபுரத்திற்குச் செல்லும் சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளை சரிசெய்யுமாறு அதிகாரிகளுக்கு அரசாங்கம் ஏற்கெனவே உத்தரவிட்டது.

லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கும் பயணம், 'வாரி' (கால்நடை யாத்திரை) என்று அழைக்கப்படுகிறது.

பாண்டுரங்கனைத்தான் விட்டலன் என்று பக்தர்கள் அழைக்கின்றனர்.

ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஒருத்தி மகனாய் வளர்ந்து ….த்வாபர யுகத்தில் கிருஷ்ணன் பெற்றோருடன் இருக்கும் பாக்கியத்திற்கு ஏங்கினான்.

வா என்னுடன் இந்த காலத்திலும் பெற்றோரைக் கண்ணும் கருத்துமாக கவனித்துக்கொள்ளும் புண்டலிகனைக் காண்பிக்கிறேன் என்று துவாரகைக்குச் சென்ற நாரதர் ,கிருஷணனை அழைக்க ருக்மிணி தேவியும் உடன் வந்துவிட்டாள் பண்டரிபுரத்திற்கு. துவாரகாவை ஆண்டதால் கிருஷ்ணனை த்வாரகாதீசன் என்ற பெயருடன் இருக்கும் கோவில் இன்றும் பண்டரிபுரத்தில் உண்டு.

ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்……சத்தமிடாதே! பெற்றோரை கவனித்து விட்டு வருகிறேன்..இந்தா இந்த செங்கல் மீது நின்னுக்கோ என்று செங்கல்லை (விட் = செங்கல்) வீச, தெய்வீக தம்பதியர் சிரத்தை பக்க வாட்டில் இருத்தியவாரே புண்டலீகலின் பெற்றோருக்கான பணிவிடைகளில் மாய்ந்து போயினர். செங்கல்லின் மீது நின்றதால் விட்டலன் என்ற பெயரும் இவனுக்கு உண்டு.