குன்றுகளும் குமரன் கோயில்களும் நிறைந்த கொங்கு தேசத்தில் உள்ள திண்டல் மலைக்குத் தனிச் சிறப்பு உண்டு.
தமிழகத்தில் ஈரோடு மாவட்டம் வரலாற்றுச் சிறப்பு மிக்க தேனுலவும் நாககிரி திண்டல்மலை எனப் புகழப்படும் இத்திருத்தலம் ஈரோட்டிலிருந்து பெருந்துறை செல்லும் வழியில் எட்டு கி.மீ. தொலைவில்அமைந்துள்ளது. இங்கு முருகப்பெருமான், தீராவினை தீர்க்கும் வேலுடன் அருள்மிகு வேலாயுத சுவாமியாகக் காட்சி அளிக்கின்றார். பல ஆண்டுகளுக்கு முன்பு சிறிய கோயிலாகக் கட்டப்பட்டு, பின்னர் நாளடைவில் வளர்ச்சி அடைந்து இன்று சிறப்புடன் விளங்குகின்றது. இக்கோயில் முருகன் ஸ்ரீ வேலாயுதசுவாமி, குழந்தை வேலாயுதசுவாமி, திண்டல் மலை முருகன், குமார வேலாயுதசுவாமி எனப் பல பெயர்களால் அழைக்கப்படுகிறார்.
இலக்கியங்களிலும், கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் இடம்பெற்றுள்ள இந்த திண்டல்மலை வேலாயுத சுவாமி கோயில் அருணகிரிநாதரால் பாடல் பெற்ற ஸ்தலம்.
ஸ்தல வரலாறு:
பண்டைய கொங்குநாட்டில் உள்ள 24 நாடுகளில் திண்டலும் ஒன்று. அப்போது சேர மன்னர்களால் ஆண்ட கொங்குநாடு, கடந்த காலத்தில் ஆட்சி வசதிக்காகப் பிரிக்கப்பட்டது. இந்த திண்டல் முருகன் கோயில் திராவிட கட்டிடக்கலை அமைப்பில் கட்டப்பட்டுள்ளது.
ஒரு சமயம், இப்பகுதியை ஒட்டி அமைந்திருந்த பூந்துறை நாட்டில் மழை பொய்த்து பஞ்சம் ஏற்பட்டது. இதனால் பெரும் துன்பத்துக்கு ஆளான வேளாளர்கள் ஒன்றுகூடி, இங்கு சந்நிதி கொண்டிருக்கும் இடும்ப குமாரனைப் பிரார்த்தித்து, மழை வளம் அருளும்படி வேண்டிக் கொண்டார்களாம். அவர்களின் வேண்டுதலை ஏற்று இடும்பன் மழைவளம் அருளியதாக ஸ்தல வரலாறு. இதனைச் சித்திரிக்கும் படங்களும் கோயில் சுவர்களில் தீட்டப்பட்டுள்ளன. இக்கோயில் கடம்பனுக்கு மட்டுமின்றி, அவன் அணுக்கனான இடும்பனுக்கு சிறப்புகள் தரும் ஸ்தலம். இங்குள்ள மக்கள் தங்களது வேண்டுகோளை இடும்பன் மூலம் தெரிவித்து முருகனின் அருளைப் பெற்று வருவது இன்றளவும் நடைமுறையில் உள்ளது.
மலைச்சரிவில் சற்றுத் தாழ்வான பகுதியில் தன்னாசி சித்தர் வாழ்ந்த குகை காணப்படுகிறது. இவர் இங்கு முருகனை நினைத்துத் தவம் செய்ததாகக் கூறப்படுகிறது. இன்றளவும் இந்த சித்தர் பக்தர்களின் மன துயரங்களை நீக்குவதாக நம்பிக்கை. இவ்விடத்தில் தியானம் செய்வதால் மன அமைதி கிட்டுவதாகப் பக்தர்கள் கூறுகின்றனர். அருணகிரிநாதரால் பாடல் பெற்ற 178 ஸ்தலங்களில், இந்த திண்டல்மலை வேலாயுத சுவாமி கோயிலும் ஒன்று.
ஸ்தல அமைப்பு:
திண்டு போன்று மலையின் அமைப்பு உள்ளதால் திண்டல் என்ற பெயர் பெற்றதாகக் கூறப்படும் இந்த திருக்கோயிலுக்கு ஈரோடு- கோவை நெடுஞ்சாலைகளிலேயே நுழைவாயில் அமைந்துள்ளது. நுழைவாயிலைக் கடந்ததும், குன்றின் அடிவாரத்திலேயே நெடுதுயர்ந்த அரச மரத்தின் கீழ் நாகர்கள் சூழ அமைந்திருக்கும் அரச மரத்தடி விநாயகரையும், அடுத்து இரண்டு நாகர்களுடன் ஸித்தி விநாயகரையும் தரிசிக்கலாம். இந்த விநாயகர் தரிசனம் நாகதோஷங்களைத் தீர்க்கும் என்பது நம்பிக்கை. முன்மண்டப முகப்பில் வேலாயுத சுவாமி சிலை அமையப்பெற்றுள்ளது. இந்த திண்டல் மலை 60மீ உயரத்துடன் நூற்று எட்டு படிகளைக் கொண்டுள்ளது. பக்தர்கள் வெயிலிலும், மழையிலும் பாதிக்கப்படாமல் இருக்க படிகள் முழுவதும் நிழல் மண்டபம் அழகுற அமைக்கப்பட்டுள்ளது. சில படிகள் கடந்ததும் மலைப் பாதையில் நடுவில் அழகிய மண்டபத்துடன் வடக்கு நோக்கிய சந்நிதியாக இடும்பன் சந்நிதி உள்ளது. இடும்பன் மண்டபம் சுற்றியும் இடும்பர் வரலாறு வரையப்பட்டுள்ளது.
இச்சந்நிதிக்கு எதிரில் அழகிய செயற்கை அருவி அமைக்கப்பட்டுள்ளது. மலை உச்சியில் மூன்று நிலை இராஜகோபுரம் அமைந்துள்ளது. கோயிலுக்கு வெளியே ஒரே கல்லால் நீண்டு உயர்ந்து நிற்கும் வண்ணம் தீப ஸ்தம்பம் உள்ளது. பின்னர் உள்ளே நுழைந்தவுடன் தென்மேற்கு மூலையில் விநாயகர் சந்நிதி சுற்று மண்டபத்தின் உட்புறம் அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு முருகப்பெருமான் கருவறையில் கிழக்கு நோக்கி நின்று குழந்தை வேலாயுத ஸ்வாமியாக தீராவினை தீர்க்கும் வேலுடன் அருள்பாலிக்கிறார். அருகே உற்சவர் சந்நிதியில் விநாயகர். வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர், தனியே குழந்தை வேலாயுதனாயும் அருள்பாலிக்கிறார். வடகிழக்கு மூலையில் தங்கரத மண்டபம் உள்ளது. கருவறையின் வடமேற்கு பகுதி மலைச்சரிவில் சற்றுத் தாழ்வான பகுதியில் தன்னாசி குகை உள்ளது. இந்தத் தன்னாசி குகையில் கார்த்திகை தீபத்தன்று சிறப்புப் பூஜைகள் நடைபெறுகின்றன. மலையின் வடகிழக்கு பகுதியில் உள்ள அழகிய இயற்கைச் சுனையில் உள்ள வற்றாத நீரூற்றானது முருகப்பெருமானின் அபிஷேகத்திற்கும் மற்றும் பக்தர்களின் தாகம் தீர்க்கவும் பயன்படுகிறது.
ஸ்தலச் சிறப்பு:
ஈரோடு நகரம் பல்வேறு தொழில் வசதிகளுடன் முன்னேறிச் செல்வ வளம் கொழிப்பதற்கு ஈரோட்டை நோக்கி கிழக்கு முகமாகக் குன்றினில் நின்றிருக்கும் திண்டல் முருகன் அருட் கண்பார்வையில் இந்நகரம் அமைந்திருப்பதே காரணம் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கை.
ஒன்பதாம் நூற்றாண்டில் சோழர்களால் இச்சிறப்புடைய கோயில் சிறிய கோயிலாகக் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. கடந்த 25 ஆண்டுகளில் மிகப்பெரிய அளவில் திருப்பணி செய்யப்பட்டு வளர்ச்சி அடைந்து இன்று சிறப்புடன் விளங்குகிறது.
சில நூற்றாண்டுகளுக்கு முன் இத்தலத்து முருகனைக் குருசாமி புலவர் என்பவர் போற்றி ‘திண்டல் வேலாயுத சுவாமி சதகம்’ எனும் நூலை இயற்றியுள்ளார்.
கொங்கு நாட்டு ஆலயங்களில் தனிப்பட்ட ஓர் அமைப்பு தீபஸ்தம்பத்தைக் கோயில் வெளியே நிறுத்திக் கட்டுவதாகும். அது போன்ற தீபஸ்தம்பம் திண்டல் மலையில் அமைக்கப்பட்டுள்ளது சிறப்பு. ஸ்தம்பத்தில் அடிப்புறத்தில் நான்கு புறத்திலும் சமயத் தொடர்பான சிற்பங்கள் செதுக்கப்பட்டிருக்கின்றன. திருக்கார்த்திகை அன்று இந்த தீப ஸ்தம்பத்தில் தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள்.
இங்கு ஒவ்வொரு நாளும் இரவு 7.00 மணிக்குத் தங்க ரதத்தில் குழந்தை வேலாயுத ஸ்வாமி மலை மேல் சுற்றி வலம் வருகின்றார்.
திருவிழாக்கள்:
இந்த கோயிலில் சித்திரைத் திருவிழா, வைகாசி விசாகம், ஆடிப் பெருக்கு, ஆடிக் கிருத்திகை, ஆடிவெள்ளிகள், ஆவணி அவிட்டம், விநாயக சதுர்த்தி, கந்த சஷ்டி, சூரசம்ஹாரம், சுவாமி திருக்கல்யாண உத்ஸவம், கார்த்திகை தீபம், மார்கழி மாத பூஜை, ஆங்கில புத்தாண்டு, தைப்பொங்கல், தைப்பூசம், சிவராத்திரி, பங்குனி உத்திரம் ஆகியவை வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன.
பிரார்த்தனை, நேர்த்திக்கடன்:
செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் திண்டல் வேலாயுதசாமி கோயிலுக்கு வந்து வழிபடும் பக்தர்கள் எலுமிச்சை பழத்தை முருகனின் காலடியில் வைத்து வேண்டிக் கொள்கின்றனர். இதனால் எண்ணிய எண்ணங்களை எண்ணியபடியே வேலாயுத ஸ்வாமி நிறைவேற்றுகிறார்.
வேண்டுதல் நிறைவேறியதும் முருகனுக்கு அபிஷேகம் செய்தும், புது வஸ்திரம் சார்த்தியும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
புதிய வாகனங்கள் வாங்குவோர் திண்டல் மலைக்கு வந்து சிறப்புப் பூஜை செய்கின்றனர்.
திண்டல் முருகனுக்கு திரிசதை அர்ச்சனை விசேஷம்
திரி - மூன்று; சதம் - நூறு. 300 பீஜமந்திரங்களாலும், 300 செந்நிற மலர்களாலும் அர்ச்சனை செய்தலே "திரிசதை அர்ச்சனை' எனப்படும். இந்த வழிபாட்டின் மூலம் திருமணத் தடை, செவ்வாய் தோஷம், எதிரிகளால் தொல்லை, காரியத் தடங்கல், தீராத நோய்கள் முதலியவை நீங்கும். மேலும் இங்கு முருகனுக்கு எலுமிச்சைப் பழம் சமர்ப்பித்து வேண்டிக்கொண்டால் வேண்டியவை நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை
கோயில் திறந்திருக்கும் நேரம்:
தினசரி காலை 6.00 மணி முதல் மதியம் 12.30 வரை
மாலை 4.00 மணி முதல் இரவு 8.30 மணி வரையில் கோவில் திறந்திருக்கும். செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் காலை 6.00 மணி முதல் 1.00 மணி வரையும், மாலை 4.00 மணி முதல் 9.00 மணி வரை நடை திறந்திருக்கும்.
கோயிலுக்குச் செல்லும் வழி:
இந்த கோயில் ஈரோடு - பெருந்துறை மார்க்கத்தில் ஈரோட்டில் இருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் உள்ளது. ஈரோடு மற்றும் திருச்சியில் இருந்து சாலை வழியாக எளிதில் செல்லலாம். அருகிலுள்ள இரயில் நிலையம் ஈரோடு சந்திப்பு ஆகும். அருகிலுள்ள விமான நிலையம் கோயம்புத்தூர் சர்வதேச விமான நிலையம்.
தீராவினை தீர்க்கும் திண்டல்மலை முருகப்பெருமானைத் தரிசித்து அவரது அருளினைப் பெறுவோம்!!
https://youtu.be/xZ748wmDTX8
Leave a comment
Upload