இயற்கையோடு இணைந்தால்
உலகம் முழுதும் அழகு!
கவலை யாவும் மறந்தால் – இந்த
வாழ்க்கை முழுதும் அழகு!
-நா.முத்துக்குமார்
வெயில் காலத்தில் கொடுமையான வெயில் சுட்டெரிக்கிறது. மழைக்காலத்தில் மேகவெடிப்புப் போன்ற காரணங்களால் பெருமழை கொட்டி நகரங்கள் மூழ்குகின்றன அல்லது மழையே பொழியாமல் பயிர்கள் வாடுகின்றன. குளிர்காலத்தில் பருவம் தப்பிப் பெய்யும் மழையால் நோய்கள் பரவுகின்றன.
இப்படி, காலநிலை மாற்றங்கள் வருத்தம் தருகின்றன. ஒருபுறம் மரம் நடுகின்றோம். அவற்றை வளர்க்கிறோமா தெரியாது. ஆனால், மறுபுறம் பைங்குடில் வாயுக்களை (Green Houses gases) வெளியிட்டு உயிர்வளிப் படலத்தை (ஓசோன் படலம்) அழித்துவருகிறோம். இதனால் சூரியனின் புற ஊதாக்கதிர்கள் வடிகட்டப்படாமல் நேரடியாக நம்மை வந்தடைந்து பல்வேறு வகையான தோல்நோய்களை ஏற்படுத்துகின்றன. புவியின் வெப்பம் அதிகரிக்கின்றது. இதன் காரணமாக துருவப் பகுதிகளில் உறைந்துள்ள பனி மலைகள் உருகி கடல்நீர் மட்டம் உயர்கின்றது. இவையாவும் சூழலியலில் நாம் எதிர்கொள்ளும் பெரும் பிரச்சனைகள்.
சென்ற நூற்றாண்டில்தான் சூழலியல் (Ecology) என்றொரு துறை தனியே உருவானது. சூழலியல் என்பது, உயிர் வாழ்க்கையின் பரவல் பற்றியும், உயிரினங்களுக்கும் அவற்றின் இயற்கைச் சூழலுக்கும் இடையிலான வினைகள் பற்றியும் அறிவியல் அடிப்படையில் ஆய்வு செய்யும் துறையாகும்.
இதை இன்னும் எளிமையாக, புலிட்சர் விருதுபெற்ற அமெரிக்க எழுத்தாளரான லூயி ப்ரோம்ஃபீல்டு (Louise Broomfield) கீழ்க்கண்டவாறு விளக்குகிறார்.
‘சூழலியல் என்பது தாவரங்களுக்கும் விலங்குகளுக்கும் மற்றும் மனிதர்களுக்கும் சுற்றுச் சூழலுக்குமான உறவு. மேலும், பருவகாலங்கள், மழைப்பொழிவு, காலநிலை மற்றும் மனிதனால் ஏற்படுத்தப்படும் மாற்றங்கள் ஆகியவற்றாலும் சுற்றுச்சூழலில் ஏற்படும் மாற்றங்கள் பற்றியதாகும்’ என்கிறார் அவர்.
இவ்விடத்தில் நின்று நாம் தொல்காப்பியத்தை உற்றுநோக்குவது தகும் என நினைக்கிறேன்.
'கைக்கிளை முதலாகப் பெருந்திணை இறுவாய்
முற்படக் கிளந்த எழுதிணை என்ப.'
-தொல் - பொருள்: 1
இப்பாடலில் அகத்திணையைக் கைக்கிளை, குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம், நெய்தல் மற்றும் பெருந்திணை என்று ஏழு வைகையாகப் பிரிக்கிறார் தொல்காப்பியர்.
'அவற்றுள்
நடுவண் ஐந்திணை நடுவணது ஒழியப்
படுதிரை வையம் பாத்திய பண்பே'
-தொல் - பொருள்: 2
மேற்கூறிய ஏழுதிணைகளுள் நடுவில் இருக்கும் ஐந்து திணைகளின் நடுவில் இருக்கும் பாலை தவிர்த்த மீதமுள்ள நான்கு திணைகளும் கடல் சூழ்ந்த இந்த உலக நிலப்பரப்பைப் பகுத்திருக்கும் வகைகள் ஆகும் என்பது பொருள். (குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல்)
அடுத்த பாடலில் முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என்னும் மூன்றுவகைப் பொருள்கள் அந்நிலப்பரப்புக்கு உரியனவாகச் சொல்லப்பட்டிருக்கின்றன என்கிறார்.
‘முதல் எனப்படுவது நிலம் பொழுது இரண்டின்
இயல்பென மொழிப இயல்புணர்ந் தோரே’
-தொல் - பொருள்: 4
என்று கூறி முதற்பொருள் என்பது நிலமும் பொழுதும் என்கிறார். நிலம் என்பது மலை, காடு, வயல், கடல் மற்றும் அவை சார்ந்த இடங்களெனக் குறிக்கப்படுகின்றது. அவைதாம் முறையே குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் எனக் குறிக்கப்படுகின்றன. இவற்றுள் குறிஞ்சியும் முல்லையும் தம் இயல்பில் திரிந்து உண்டாவது பாலை என்கிறது சிலப்பதிகாரம் (காடுகாண் காதை, 64-66).
அடுத்ததாக, பொழுது. இது பெரும்பொழுது, சிறுபொழுது என்று இரு பிரிவாகக் குறிப்பிடப்படுகின்றது.
பெரும்பொழுது என்பது ஓர் ஆண்டை ஆறாகப் பிரித்துக் கணக்கிடப்படுவது. இது கார்காலம், கூதிர்காலம், முன்பனிக் காலம், பின்பனிக் காலம், இளவேனிற் காலம், முதுவேனிற் காலம் என ஆறுவகைப்படும்.
சிறுபொழுது என்பது ஒரு நாளை ஆறாகப் பிரித்துக் கணக்கிடப்படுவது. இது வைகறை, விடியல், நண்பகல், எற்பாடு (பிற்பகல்), மாலை, யாமம் (நள்ளிரவு) எனக் குறிக்கப்படும்.
'தெய்வம் உணாவே மாமரம் புட்பறை
செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ
அவ்வகை பிறவும் கருவென மொழிப'
-தொல்- பொருள்: 20
இப்பாடலில், அந்தந்த நிலத்துக்குரிய தெய்வம், உணவுகள்(தானியங்கள்), விலங்குகள், மரங்கள், பறவைகள், பறை, பூக்கள், நீர்நிலைகள் ஆகியவை கருப்பொருள்கள் எனப் பகுத்துக்கூறப்பட்டுள்ளன.
'புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல்
ஊடல் அவற்றின் நிமித்தம் என்றிவை
தேருங் காலைத் திணைக்குரிய பொருளே'
-தொல்-பொருள்:16
இப்பாடலில் ஐந்திணைக்கும் உரிய உரிப்பொருள்களாக மனித உணர்வுகளான புணர்தல், பிரிதல், இருத்தல், இரங்கல், ஊடல் மற்றும் அவற்றின் நிமித்தமாக இருத்தல் ஆகியவை கூறப்பட்டுள்ளன.
ஒட்டுமொத்தமாக முதல், கரு, உரி என்னும் இந்த முப்பொருள்களைப் பார்க்கும்போது மேற்சொன்ன லூயி ப்ரோம்ஃபீல்டு அவர்களின் கூற்று கண்முன்னே மின்னி மறைகின்றது.
மனிதர்கள், தாவரங்கள், விலங்குகள், பருவ காலங்கள், சுற்றுச்சூழல் ஆகிய இவற்றுக்கிடையேயுள்ள உறவையும், அவற்றில் ஏற்படும் மாற்றங்களையும் அறிவதுதான் சூழலியல் ஆராய்ச்சி என்றால், அச்சூழலியல் ஆய்வைப் பேணும்விதமாகத்தான் தமிழர்கள் ஐந்திணைகளைப் பகுத்து அவற்றின் முதல், கரு மற்றும் உரிப்பொருள்களைத் தனித்தனியே விளக்கிவைத்திருக்கிறார்கள் என்றால் அதை மறுக்கமுடியுமா!.
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது தொல்காப்பியம். அதற்கும் முந்தைய காலத்து இலக்கியங்களில் சொல்லப்பட்டவற்றை வைத்துத் தொல்காப்பியர் எழுதிய இலக்கணம்தான் தொல்காப்பியம். அதனால்தான், பல இடங்களில் 'என்மனார் புலவர்', 'பாடலுட் பயின்றவை நாடுங் காலை', 'மொழிப' என்றெல்லாம் குறிப்பிடுகிறார்.
ஆக, சூழலியல் கோட்பாடு அறிந்த, தொல்காப்பியருக்கும் முற்பட்ட காலத்தைய, அந்தப் பெயர் தெரியாப் புலவர் பலருக்கும் இந்தவாரத் தமிழ்முத்தம் தந்தோம்.
அவர்கட்கும், நமக்கும், யாவர்க்கும் நற்சூழலாய் அமைந்த நம் தமிழுக்கு இது பதினேழாவது முத்தம்.
முத்தங்கள் தொடரும்.
Leave a comment
Upload