சுசீலா சமையலரைல இருந்து கத்தினா,”காபியை குடிச்சிட்டு பேசாம ரெஸ்ட் எடுங்க, இந்த மழைல சட்டையை மாட்டிட்டு வெளியே கிளம்பிடாதீங்க”
எனக்கே அந்த ஐடியாதான் படிக்காம விட்டுப் போன புஸ்தகத்தை முடிக்கணும் இன்னிக்குனு.ஆனா சுசீலா ஆர்டர் போட்டா மீறரதுல ஒரு கெத்து. சட்னு எழுந்து சட்டையை மாட்டினேன்,”சுசீ கொஞ்சம் வரதனை பாத்துட்டு வரேன்”
சுசீ, ”தெரியுமே சொன்னா , கூட கொஞ்சம் டிராமா பண்ணுவீங்கனு, அந்த வரதன்தான் மூணு நாள் முன்னால ஹைதராபாத் போயிருக்கான்னு சொன்னீங்களே”
“ அதான் வந்துட்டானானு பாக்கப் போறேன்”
“இந்த மழைல அப்படி என்ன அவசரமாம், குடையாவது எடுத்துட்டு போங்க”
அவசரமா கையில் எடுத்த குடையை மூலைல சாத்திட்டு ரெயின் கோட் மாட்டிட்டு கிளம்பினேன்.
மழை வலுத்தது, திரும்பிடலாமானு பாத்தேன் ஆனா திரும்பினா சுசீ கேலியா பாப்பாளே, மழை செய்த குழிகளை தாண்டி தாண்டி போறப்ப கோமதி விலாஸ்ல இருந்து சாம்பார் வாசனை இழுத்தது. சட்டைப் பையை தொட்டு பாத்து பணம் இருக்கானு உறுதி செய்துக்கிட்டேன். ஹோட்டலுக்குள்ளே ரெண்டு மூணு பேர்தான்.
கல்லால உக்காந்திருந்த ஹரிகரன் வாங்க சார்னு வரவேற்றான்.அவன் அப்பாவோட மாணவன்.வீட்டுக்கு அப்பா கிட்ட ட்யூஷனுக்கு வந்திருக்கான்.கிட்டத்தட்ட என் வயசுதான்.
“இன்னிக்கு ஸ்பெஷல் ரவா கிச்சடி, மல்லி சட்ணி சார்.”சர்வர் பணிவா சொன்னான்.
“அடப் பாவி உப்புமாவுக்கு இது கெளரவப் பெயரா? ரோடு வரை சாம்பார் வாசனை தூக்கிச்சேப்பா”
“ அது அந்த ராயர் வீட்ல இருந்து சார்”
“எனக்கு டிபனே வேண்டாம் ஒரு காபி ஸ்டிராங்கா கொடு.”
காபி பரவாயில்லை நல்லாதான் இருந்தது. ஆத்திக் குடிக்கறப்பவே கால் ரெண்டும் ஜில் ஜில். கீழே குனிந்து பாத்தா
கணுக்கால் வரை மழைத் தண்ணி.
ஹரிகரன்,” எல்லாரும் கொஞ்சம் சீக்கிரம் கிளம்புங்க
பெரிய ஏரி உடைப்பு எடுத்துக்கிச்சாம்,கடை மூடணும்”அவன் சொல்றப்பவே தண்ணீர் மளமளனு முழங்கால் வரை.
தண்ணீர் மட்டம் மளமளனு ஏறரதை பாத்து ராயர் தன் வீட்டு கதவை திறந்து மொட்டை மாடிக்கு போக அனுமதித்தார்,அவர் வீட்டுக்குள் குபுகுபுனு தண்ணீர் புகுந்ததை சட்டை பண்ணாமல். சுமார் 15 பேர் அந்த மாடியில் தஞ்சம் புகுந்தோம். பாத்திட்டிருக்கும் போதே தெருவில் இடுப்பளவு தண்ணி. சுசீலாவை கான்டாக்ட் பண்ண வழியில்லை, ஆனா எங்க வீடு 4 வது ஃபிளோர் அதனால ஜாஸ்தி பயமில்லை.
நேரம் ஆக ஆக தண்ணீர் மட்டம் கூடியது. பயர்ஸ்டேஷன் ஆட்கள் சின்ன சின்ன படகுகளுன் உதவ வந்தார்கள். மத்யானம் ராயர் மாமி சுடச்சுட சாதமும் சாம்பாரும் கொடுத்தார்.
தொட்டுக்க ஏதும் இல்லையானு கேட்டு கூட இருந்தவர்களிடம் வாங்கிக் கட்டிண்டேன். மாமி சிரித்தபடி ஊறுகாய் பாட்டிலை கொண்டு வந்து வச்சா.
4 மணி வாக்குல ஒரு சின்ன பிளாஸ்டிக் போட் என்னை வீடு கொண்டு சேர்த்தது.ராயர் மாமி சாயந்தரம் சூடா வாழைக்கா பஜ்ஜி தருவார்னு நினைச்சு ஏமாந்தேன்.
லிப்ட் வேலை செய்யலை, கரண்ட் போச்சு. படியேறி என் பிளாட்டுக்கு போனேன். எங்க வீட்டுக்குள்ளே எட்டு பேர்.கீழ் போர்ஷன் ரெண்டு குடும்பம் நம்ம வீட்ல தஞ்சம். எல்லாருக்கும் சுசீலா சூடா உப்புமா கிண்டி கொடுக்கறா. ராயர் வீட்டு மாடிலயே இருந்திருக்கலாமோ!
Leave a comment
Upload