பாரிஸ் நகரில் நடைபெற்று வந்த ஒலிம்பிக் போட்டிகள் நிறைவடைந்தன.
உலக நாடுகள் அனைத்தும் ஒன்றுபட்டு கொண்டாடும் ஆரவாரமான, ஆரோக்கியமான விளையாட்டுத் திருவிழா ஒலிம்பிக். 16 நாட்கள் நடந்த 33 வது ஒலிம்பிக் போட்டி இம்மாதம் 11 ஆம் தேதி நிறைவு பெற்றது.
துவக்க நாள் முதல் திட்டமிடப்படியே விளையாட்டுப் போட்டிகள் முழு உற்சாகத்துடன் நடைபெற்றன. போன ஒலிம்பிக் போட்டியைப் போலவே இந்தப் போட்டியிலும் அமெரிக்கா முன்னிலை வகித்து 126 பதக்கங்களை வென்று வெற்றிக் கொடி நாட்டியுள்ளது . இரண்டாம் இடத்தை 91 பதக்கங்கள் வென்று சைனா கைப்பற்றியது. மூன்றாம் இடத்தில் இருப்பது ஜப்பான் .மொத்தம் 45 பதக்கங்களை பெற்றுள்ளது . தங்கம் , வெள்ளி, வெண்கலம் என்று இந்த மூன்று நாடுகளும் வாரிக் குவித்துள்ளன. பயிற்சியும், முயற்சியும் என்றும் தோற்பதில்லை என்பதற்கு இந்நாடுகள் எடுத்துக் காட்டாக விளங்குகின்றன.
இந்தியா இந்த ஒலிம்பிக் போட்டியில் 6 பதக்கங்களைப் பெற்றுள்ளது . 5 வெண்கலம் ,ஒரு வெள்ளிப் பதக்கத்தைப் பெற்று பதக்கப் பட்டியலில் 71 ஆம் இடத்தைப் பெற்றுள்ளது .10 மீ துப்பாக்கி சுடும் போட்டியில் மனு பாக்கர் ஒரு வெண்கலமும் , சரப் ஜோத் சிங்குடன் சேர்ந்து இன்னொரு வெண்கல பதக்கம் பெற்று , இரண்டு வெண்கல பதக்கம் பெற்ற இந்தியர் என்ற பெருமை பெற்றார். 50மீ துப்பாக்கி சுடும் போட்டியில் ஸ்வப்னில் குசாலே ஒரு வெண்கலம் பெற்றுள்ளார் . ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா ஒரு வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார் . ஆண்களுக்கான மல்யுத்தப்போட்டியில் அமன் செராவத் ஒரு வெண்கலம் வென்றுள்ளார் .குழு விளையாட்டுகளில் இந்திய ஹாக்கி டீம் மூன்றாம் இடத்தைப் பிடித்து வெண்கலப் பதக்கத்தைத் தட்டி வந்துள்ளது .
தங்கத்துக்கு வெகு அருகில் சென்ற வினேஷ் போகட் வெள்ளியையும் அடைய முடியவில்லை. மல்யுத்த போட்டியின் கடுமையான விதிமுறையால் 100கிராம் எடை அதிகமான காரணத்தைக் காட்டி, வினேஷ் வெளியேற்றப்பட்டார். இந்தியர்கள் இதை சுலபமாக எடுத்துக் கொள்ள இயலாமல் துயர் அடைந்தனர். வலைத்தளங்களில் "You are a Champion, We stand with you " என்று வினேஷுக்கு செய்தி தந்து ஆதரவு தந்தனர் . ஒரு கடின உழைப்பாளியின் கனவுகள் தகர்வதை இந்திய மக்கள் கண்ணீர் மல்க பார்த்துக் கொண்டு இருக்கிறோம் .இந்த வரலாற்று வலி சுலபமாக மறையப் போவதில்லை .
அவ்வாறே , இந்திய விளையாட்டுத் துறையை புதுப்பித்து ,புத்துணர்வு தந்து ஒலிம்பிக்கில் பதக்கங்களைக் குவிக்க வேண்டும் என்ற ஒருமித்த உணர்வு நம் அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது . நம் நாடு 71 ஆம் இடத்தில் இருந்து , முன்னணிக்குச் செல்ல நாம் பயணிக்க வேண்டிய தொலைவு நெடியது.. அதற்கான உழைப்பும் , செலவும் பெரியது. ஆயினும் நாம் அதை செய்தே தீர வேண்டும்
நமக்கென ஆறு பதக்கங்கள் ஆறுதலாக இருந்தாலும் , அபினவ் பிந்த்ரேவுக்கு உயர்ந்த விருதான "ஒலிம்பிக் ஆர்டர்" விருது வழங்கப்பட்டது நமக்குப் பெருமையையும், ஆனந்தத்தையும் தருகிறது.இவர் 2008 ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்று சாதனை பெற்றதை நாம் மறக்க முடியாது . இந்தியர்களாக நாம் பெருமை கொள்ளும் தருணத்தை நமக்கு அளித்தார் அபினவ் .
இந்திய ஹாக்கி அணியின் கோல் கீப்பரான பி.ஆர் ஸ்ரீஜேஷ் இன்னுமொரு பெருமைக்குரிய செயலைச் செய்தார் . கேரளாவைச் சேர்ந்த ஸ்ரீஜேஷ் , தென்னிந்தியாவின் பாரம்பரிய உடையான வேட்டி ,சட்டை அணிந்து பாரிஸின் ஈபிள் டவர் முன்பு நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டார். தன் சொந்த மண்ணின் மகத்துவத்தை உணர்த்த ஸ்ரீஜேஷ் செய்த இச்செயல் ஒரு அசாதாரண உணர்வை ஏற்படுத்தி,அந்த புகைப்படம் உலககெங்கும் வைரல் ஆகி இருக்கிறது .
அது மட்டுமன்றி ஸ்ரீஜேஷ், மனு பாக்கர் உடன் சேர்ந்து நிறைவு விழாவில் இந்தியக் கொடியை ஏந்தி அணிவகுத்துச்சென்றார் "ஸ்டேட் டீ பிரான்ஸ்: அரங்கில் நடை பெற்ற இந்த நிறைவு விழாவில் -80 ஆயிரம் பேர் கலந்துக் கொண்டனர். வண்ணமயமான இந்த விழாவில் ஆயிரக்கணக்கான ஆண் ,பெண் கலைஞர்கள் ஆடிப்பாடினர் . அக்ரோபாட்ஸ், சர்க்கஸ் நிகழ்ச்சிகள் நடந்தன." Mission impossible" என்ற ஒலிம்பிக் தீம் பாட்டுக்கு ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் டாம் க்ரூஸ் , விழா அரங்கின் உச்சியில் இருந்து இறங்கி வந்தார் .
மெய்சிலிர்க்க வைக்கும் கொண்டாட்டத்துடன் ஒலிம்பிக் -2024 நிறைவுக்கு வந்தது .
நிறைவு விழா முடிவில் வில் ஒலிம்பிக் சுடர் அணைக்கப்பட்டது .ஒலிம்பிக் கொடி இறக்கப்பட்டு 2028 ல் ஒலிம்பிக்கை நடத்த இருக்கும் லாஸ் ஏஞ்செல்ஸ் மேயரிடம் ஒப்படைக்கப்பட்டது .
சாகசங்களும் ,சாதனைகளும் நிறைந்த கோடை ஒலிம்பிக் 2024 விளையாட்டு போட்டிகள்இவ்வாறு நிறைவு பெறுகிறது .
அத்தனை ஏற்பாடுகளையும் செய்த பாரிஸ் நகருக்கு நன்றி சொல்லி உரத்த குரலில் Merci Paris (Thank You, Paris)என்ற ஒலி உலகெங்கும் ஒலிக்கிறது.
விளையாட்டு வீரர்கள் தம் பதக்கங்களை அணிந்துக் கொண்டு au revoir Paris (Good Bye Paris ) என்று உணர்வு பூர்வமாக விடை பெற்றுக் கொண்டார்கள் .
Bienvenue Los Angeles (Welcome Los Angeles )....
மீண்டும் லாஸ் ஏஞ்செல்ஸில் சந்திப்போம்..!
Leave a comment
Upload