தொடர்கள்
பொது
வாழிய பாரத மணித்திருநாடு : நினைவின் நிழலில் - மோகன் ஜி

20240715225748551.jpg

நினைவின் நிழலாய் நான்கு வருடங்களுக்கு முந்தி நடந்த சுதந்திர தின நாள் வந்தாடியது.

அன்று அதிகாலையே விழித்துக்கொண்டு விட்டேன். படுக்கையில் படுத்தபடியே அன்று என்ன நாள், செய்ய வேண்டுவன யாவை என்று தொகுத்துக் கொள்வதும் வழக்கம். பேத்தி அக்ஷரா எழுப்பும் நாட்களில் இவை சாத்தியப்படுவதில்லை. அவளே என் நாளை தீர்மானித்தும் விடுவாள்!

குடியரசு நாள் 69ஆ அல்லது 70ஆ என்று விரல்விட்டு எண்ணிக் கொண்டேன். சுதந்திர தினத்திற்கும் குடியரசு நாளுக்கும் உள்ள வித்தியாசத்தை ‘மோகி’யாய் இருந்தவனுக்கு விளக்கிய அக்கா நினைவுக்கு வந்தாள்.

எங்கோ மீண்டும் பிறந்திருப்பாள். ஏதோ பள்ளியில் கைநீட்டி இனிப்பை வாங்கி 'பாரத் மாதா கி ஜெய்' என்றோ ' வந்தே மாதரம்' என்றோ முழங்கிக் கொண்டிருப்பாள்.

ஆற அமரக் குளித்து, அவசரமாய் பூஜை செய்து மும்பைத் தமிழ்ச் சங்கத்துக்கு டாக்ஸி பிடித்தேன்.

எந்த நாள் கிழமையையும் கொண்டாடுவதற்கு மும்பைக்காரர்கள் போல எங்கும் பார்க்கவியலாது. வழிநெடுக வாகனங்களிலும் வீடுகளிலும் தேசியக்கொடி பட்டொளியுடன் படபடத்தன.

காய்கறி விற்கும் தள்ளுவண்டியில், சேனைக்கிழங்கில் செருகிய மூவண்ணக்கொடி மனதை அசைத்தது. அதைத் தள்ளிவந்த முஸ்லிம் தாத்தாவைக் கண்டு கையசைத்தேன், பதிலுக்கு பலமான தலையாட்டலையும் புன்னகையையும் பெற்றுக் கொண்டேன். ஏதோ பள்ளிக்கூடத்தின் பிள்ளைகள் வீதியோரம் ஊர்வலமாக போனார்கள். ஆனமட்டும் அந்த முகங்களை என் கண்கள் அள்ளிக் கொண்டன.

மும்பைத் தமிழ் சங்கத்திற்கு சற்று முன்னதாகவே சேர்ந்துவிட்டேன். அந்தக் கட்டிடத்தை ஒட்டியிருந்த சிறிய பூங்காவின் கிராதிக்கம்பிகளின் ஊடாக உள்ளே என் பார்வை படர்ந்தது. சில கிழவர்களும், மூவர்ண உடையணிந்த சில மாணவிகளையும் கண்டேன்.

அமர்ந்திருந்த மாணவிகளின் சளசளப்பு மராட்டியில் கீதம் போலானது. சட்டென்று ஒருத்தி எழுந்தாள். சற்று தூரம் நடந்து திரும்பினாள். ஒசிந்துஒசிந்து, அழகிப்போட்டியில் பங்கேற்கும் ஆரணங்குகளைப் போல 'ரேம்ப் வாக்கிங்' செய்தாள். நடைமுடிக்கும் நேரம் எங்கிருந்தோ திடுமெனக் கவிந்த வெட்கத்தில் முகத்தை இருகைகளாலும் மூடியபடி அமர்ந்தாள். ஓவென்ற கூச்சல் முடியுமுன் அடுத்தவள் நடக்கலானாள்... அவர்களின் சந்தோஷம் என்னையும் பற்றிக்கொண்டது. பிரயாசையுடன் மீண்டேன்.

தமிழ்ச்சங்கத்தில் கொடியேற்றம். மகாராஷ்ட்ர மாநிலத்தின் முன்னாள் டி.ஜி.பி திரு சிவானந்தம் அவர்கள் கொடியேற்றி வைத்துவிட்டு உரையாற்றினார். கோவை மாவட்டத்துக்காரர். திரு சிவானந்தம் 'ரோட்டி பேங்க்' எனும் அமைப்பை நடத்தி வருகிறார். இல்லாதவர்க்கு உணவளிக்கும் சேவை.

20240715231019848.png

விழாக்கூடுகைகளில் எஞ்சிய உணவுப் பண்டங்களை சேகரித்து, இல்லாதவர்களுக்குப் பகிர்ந்தளிக்கிறார்கள்.

நன்கொடைகளிலிருந்தும் உணவு தயாரிக்கப்பட்டு வழங்கப் படுகிறது.

பெரும்பதவிகளிலிருந்து ஓய்வு பெற்றவர்களின் ரிட்டையர்மெண்டு வாழ்க்கையைப் பார்த்திருக்கிறேன். அவர்களில் பலரும் அதிகாரம் செலுத்த ஆளின்றி கொந்தளிப்பில் சிடுசிடுவென இருப்பார்கள் . திடீர் ஆன்மீகவாதிகளாகி புது நியதிகளை வகுப்பார்கள்.

திரு சிவானந்தம் அவர்களோ பெரும்பணியை ஆத்மார்த்தமாக செய்கிறார். சல்யூட் டு யூ சார்!

கொடியேற்றத்திற்குப் பின் தமிழ்ச் சங்க செயற்கூட்டம், பொங்கல், வடை, காபி, வீடு திரும்பல்....

இந்த பாரத தேசத்துப் புழுதியில் புரள அருள் செய்த ஆண்டவனே! உனக்கு நன்றி.

போதும்... ரொம்ப சிரிக்காதே பகவானே!

தேர்தல் நேரத்தில் உன்னைத் திட்டுவேன்... அதற்கும் தயாராக இரு!