அமெரிக்காவில் நியூயார்க் நகரத்தின் ஹட்சன் யாட்ஸ்(Hudson yards) பகுதியில் இருக்கும் தேன்கூடு வடிவத்தில் உள்ள இந்த Vessel கட்டிடம், கலை நயத்துடன் அருமையாகக் கட்டப்பட்டுள்ளது.மக்கள்,நகரின் அழகைப் பல கோணங்களில் ரசிக்கும் வகையில் கட்டிடத்தின் உள்ளே இருக்கும் அமைப்பு அமைக்கப்பட்டிருக்கின்றது.இந்தக் கட்டிடம் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்து இழுக்கின்றது.இது இந்தியாவின் படிக்கிணற்றை (Stepwell) அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டு இருக்கின்றது.
இந்தக் கட்டிடத்தின் உயரம் 150 அடி ;அகலம் அடிப்பகுதியில் 50 அடியையும்,உச்சியில் 150 அடியையும் கொண்டுள்ளது.இதன் உச்சி வரை சென்றுப் பார்க்கப் படிகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன.Vessel 2500 படிகள்,154 ஏற்றங்கள் மற்றும் 80 இடைமேடைகளை(landings) கொண்ட 16 அடுக்கு மாடி கட்டிடம் ஆகும்.
இது 200 மில்லியன் டாலர் செலவில் கட்டப்பட்டுள்ளது.வெளிப்புறப் பகுதி முழுவதும் (கட்டிடத்தின் உள்ளேயும் வெளியேயும்) தாமிரத்தில் ஆனது. இந்த கட்டிடத்தின் உள்ளே, ஒரே சமயத்தில் ஆயிரம் மக்கள் இருந்து பார்வையிட முடியும்.இங்கு மாற்றுத்திறனாளிகளும் வந்துப் பார்ப்பதற்கு வசதியாக சரிவுப்பாதையும்(Ramp)மின்தூக்கியும்(Lift) அமைக்கப்பட்டு உள்ளது.
இந்தக் கட்டிடத்தை,தாமஸ் ஹெதர்விக்(Thomas Heatherwick) என்னும் புகழ் வாய்ந்த பிரிட்டிஷ் கட்டிட கலைஞரும்,அவரது குழுவினரும் வடிவமைத்தார்கள்.தாமஸ் Vessel கட்டிடம் உருவாக முதன்மையான உந்துதலாக,இந்தியாவில் ராஜஸ்தானில் இருக்கும் “சாந்த் பௌரி”(Chand baori) யில் உள்ள புகழ்வாய்ந்த படிக்கிணறு (Stepwell), இருந்ததாகக் குறிப்பிட்டு இருக்கிறார்.கண்களைக் கவரும் விதத்தில் இருக்கும் ஒன்றோடு ஒன்று இணைந்துள்ள படிக்கட்டுகளின் அமைப்பு, ஆச்சரியப்படுத்தும் ஆழமானக்கிணறு மற்றும் சமூக நிகழ்வுகளுக்காக மக்கள் கூடும் இடமாகவும் இது இருந்தது என்பது இவரை மிகவும் ஈர்த்தது.இதனை அடிப்படையாக வைத்து செங்குத்தாக தேன்கூடு வடிவத்தில் கட்டிடத்தை உருவாக்கினார்.இந்த கட்டிடம் 2019ல் கட்டி முடிக்கப்பட்டது.
இங்கு ஹட்சன் ஆற்றையும்,சுற்றியுள்ள வானளாவிய உயர்ந்து நிற்கும் நியூயார்க்கின் கட்டிடங்களையும் மக்கள் பார்த்து மகிழ்கிறார்கள்.
Vessel நிலையான நினைவுச் சின்னமாக இல்லாமல், இதில் மக்கள் ஏறி இறங்கிப் பார்த்து மகிழ்ச்சி அடையவும், ஒருவருக்கொருவர் கூடி பழகவும் ஏற்ற வகையில் அமைக்கப்பட்டுள்ளது.இந்த தாமிரப் படிக்கட்டுகளின் அமைப்பை Jungle gym என்றும் மக்கள் குறிப்பிடுகிறார்கள்.கட்டிடத்தின் வெளிப்புறம்,கிறிஸ்மஸ் மரத்தின் தோற்றத்தை நினைவுபடுத்தும் விதமாகவும் உள்ளது.
இந்தக் கட்டிடத்தில் சில அசம்பாவிதங்கள் ஏற்பட்டு விட்டன.சிலர் கட்டிடத்தின் மேல் தளத்திலிருந்து கீழே விழுந்து தற்கொலை செய்து கொண்டார்கள்.அதனால் இப்போது தற்காலிகமாக உள்ளே செல்ல அனுமதி இல்லை.கட்டிடத்தின் வெளியே மட்டும் தான் பார்க்க முடியும்.இப்போது அங்கே பாதுகாப்பு வலை போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.இந்த ஆண்டின் இறுதியில் மக்கள் உள்ளே வந்து பார்வையிடவும் அனுமதி இருக்கும்.
நியூயார்க்கின் ஹட்சன் யாட்ஸ் பகுதியில்,கண்களைக் கவரும் கட்டிடங்களுக்கு இடையே தற்போது இந்த Vessel கட்டிடமும் இடம் பெற்றிருப்பது ‘அழகுக்கு அழகு சேர்ப்பது’ போல உள்ளது.
நியூயார்க் நகரத்தில் இந்த கட்டிடம், நவீன கட்டிடக்கலையின் புதுமைகளுக்கு வரலாற்று அம்சங்கள் எவ்வாறு உந்துதலாக இருக்கின்றது என்பதனையும் எடுத்துரைக்கின்றது.இதனால் Vessel நியூயார்க் நகரத்தின் தனித்துவமான அடையாளச் சின்னமாக விளங்குகின்றது.
Leave a comment
Upload