தொடர்கள்
தொடர்கள்
நயத்தகு    நற்றிணை 1 - மரியா சிவானந்தம் 

20240721194706221.jpg

தலைவாழை இலை இட்டு , அறுசுவை உணவுடன் முக்கனியும், தேனும் , தீம்பாலும் பரிமாறும் சுவையான விருந்து ஒன்று உங்களுக்காக காத்திருக்கிறது. புதிய இலக்கியத் தொடர் இனி வரும் வாரங்களில் வாசகர்களுக்காக படைக்கப்பட உள்ளது

சிலப்பதிகாரம், மணிமேகலை , குறுந்தொகை ஆகிய சங்க இலக்கியங்களின் சாரத்தை ஏற்கனவே பரிமாறிய நான் , இப்போது நற்றிணை என்னும் அமுதத்தின் சுவையை உங்களுக்கு அளிக்க இருக்கிறேன்.

சங்க இலக்கியங்கள் . தமிழரின் நாகரிகம் , கலாச்சாரம் , வாழ்க்கை முறை,பண்பாட்டினை தெள்ளத்தெளிவாக எடுத்துக் கூறுபவை . இந்த இலக்கியங்கள் கூறும் தமிழர் நாகரிகம் அக்காலத்தில் மேம்பட்ட நாகரிகமாக போற்றப்பட்ட கிரேக்க ,ரோம நாகரிகத்துடன் வைத்து மதிப்பிடத் தக்கவை ..

சங்க இலக்கியங்களில் எட்டுத்தொகையில் ஒரு நூலான நற்றிணை குறுந்தொகை ,அகநாநூறு போல ஒரு அகத்திணை நூல். 401 பாடல்கள் அடங்கிய நற்றிணை பல்வேறு புலவர்களால் பாடப்பட்ட தொகுப்பு நூல் .

இவற்றுள் சில பாடல்களைத் தேர்ந்தெடுத்து அவற்றின் பொருளும் ,சுவையும் நாம் ஒன்றாக அனுபவிப்போம்

இந்த வாரம் கபிலர் இயற்றிய பாடல் . கடவுள் வாழ்த்தைத் தொடர்ந்து வரும் முதல் பாடல் இது .

அகப்பொருள் பேசும் நூல் அல்லவா ? எனவே தலைவன் ,தலைவி, தோழி இவர்களே முக்கிய பாத்திரங்கள்

இப்பாடல் காட்சியில் தலைவியும் ,தோழியும் உரையாடிக் கொண்டு இருக்கிறார்கள். இருவரும் பேசுவது தலைவனைப் பற்றி தானே இருக்கும் ?

தோழி தலைவி யை நோக்கி ," தலைவன் பற்றி சற்று கவனமாக இரு. அவன் உன்னைப் பிரிந்து விடுவானோ என்று நான் அஞ்சுகிறேன் " என்கிறாள்.

மாறாக் காதல் கொண்ட தலைவி இந்தப் பாடலின் வழியாக தலைவனின் காதலைப் பெருமையுடன் பேசுகிறாள் .

"நீ அவரைப் பற்றி தவறாக நினைக்கிறாய். அவர் அப்படி ஒரு கீழ்மையான செயலைச் செய்ய மாட்டார் " என்று பதிலடி தரும் பாடல் இதோ .

நின்ற சொல்லர்; நீடுதோன்று இனியர்;
என்றும் என் தோள் பிரிபு அறியலரே
தாமரைத் தண் தாது ஊதி, மீமிசைச்
சாந்தில் தொடுத்த தீம் தேன் போல,
புரைய மன்ற, புரையோர் கேண்மை;
நீர் இன்று அமையா உலகம் போலத்
தம் இன்று அமையா நம் நயந்தருளி,
நறு நுதல் பசத்தல் அஞ்சிச்
சிறுமை உறுபவோ? செய்பு அறியலரே! ( பாடல் 1- கபிலர் )

“தோழி ,என் காதலர் வாக்கு தவறாதவர் என்றும் இனிமையானவர் .எப்போதும் என் தோள்களைப் பிரியாதவர்.

அத்தகைய சிறப்பு வாய்ந்தவரின் காதல் மிகவும் உயர்ந்தது.

தாமரையின் குளிர்ந்த மகரந்தங்களை ஊதி பின்னர் உயர்ந்த சந்தன மரத்தின் தாதினையும் ஊதி சந்தன மரத்தின் உச்சியில் கொண்டு தேனீ சேர்த்த தேனைப் போல உயர்வானது .

தண்ணீர் இல்லாமல் இந்த உலகம் இல்லை .அதைப் போலவே என் காதலன் இன்றி நான் இல்லை

அவர் என் மீது மிகுந்த அன்பு கொண்டவர் அல்லவா ?

அவர் என்னை விட்டுப் பிரிந்தால் என் நெற்றியில் பசலை படரும் . அதைப் பார்க்க அவர் பதறி விடுவார்

எனவே என்னைப்பிரியும் சிறுமையை என் காதலன் எனக்குச் செய்ய மாட்டார் .

குறிஞ்சி திணைக்குரிய பாடல் இது .

நின்ற சொல்லர் " "நீரின்றி அமையா உலகு போல " என்ற சொற்றொடர்கள் இப்பாடலின் அழகுக்கு அழகு சேர்க்கின்றன .

வேறு ஒரு பாடலுடனும் , நூல் பற்றிய வேறு பல சுவையான செய்திகளுடன் சந்திப்போம்

தொடரும்