தொடர்கள்
கதை
குறையொன்றும் இல்லை-கேபியெஸ்

20240724084843422.jpeg

அது ஒரு ஆனந்தம் பொங்கும் வீடு தான்,... சின்னச் சின்னக் குறைகளை விட்டுட்டுப் பார்த்தால்.

மூன்று விசாலமான படுக்கை அறைகள் கொண்ட மேட்டுக்குடி ஃப்ளாட்டில், சுந்தரம் தாத்தா,மீனாட்சிப் பாட்டி ஒரு அறையிலும், அவர்களின் தாமதமாகப் பிறந்த பிள்ளை
ஆனந்த் B.E.,MBA. மற்றும் அவன் மனைவி கவிதா ACA, இன்னொரு அறையிலும், மூன்றாவது அறை எப்போதாவது வரும் விருந்தாளி களுக்காகவும் இருந்தது.

மகன் மருமகள் இருவருமே வேலைக்குப் போவதால் காலை 9 மணி முதல் அவர்கள் திரும்பி வரும் இரவு 8-30 மணி வரை சுந்தரம் தாத்தாவுக்கும் மீனாட்சி பாட்டிக்கும் தனிக்குடித்தனம் தான்.

சுந்தரம் எண்பது வயதை நெருங்கிக் கொண்டிருக்க, மீனாட்சி 75 வயதை மூச்சு முட்ட எட்டிப் பார்த்திருக்கிறாள்.

சுந்தரத்தால் வாக்கிங் ஸ்டிக் இல்லாமல் நடக்க முடியாது.
மீனாட்சிக்கு நடப்பதே சிரமம்.

ஆனந்தும் கவிதாவும் இவர்களுக்கு தேவையானவற்றை செய்து கொண்டு தான் இருந்தார்கள்.

தலையணைகளை முட்டுக் கொடுத்து கட்டில் சாய்ந்து புத்தகம் படித்துக் கொண்டிருந்த சுந்தரத்திடம் கேட்டாள் கேட்டாள் மீனாட்சி.
"ஏங்க,கால் குடைச்சல் தாங்கல. ஒரு
அயோடெக்ஸ் மருந்து வாங்கிட்டு வா என்று ஆனந்த் கிட்ட ஒரு வாரமா சொல்லிக்கிட்டு இருக்கேன். அவன் காதில் போட்டுக் கொண்டதாகவே தெரியவில்லை. " என்றாள்.

சுந்தரம் அவளைக் கனிவுடன் பார்த்து
"அவனுக்கு இருக்கிற கவலைல இதெல்லாம் எப்படி ஞாபகம் வச்சுப்பான்? போன வாரம் செருப்பு பிஞ்சிடுத்துனுசொன்னேன்.
அன்னைக்கு சாயங்காலமே ஏதோ Birken Stock கம்பெனியிலிருந்து ஒரு ஜோடி செருப்பு வாங்கி வந்து அவனே என் காலில் மாட்டி விட்டான். செருப்பு விலை என்ன தெரியுமா? 5000 ரூபாய்.
'இவ்வளவு ரூபாய் செலவழித்து வாங்கணுமா?' என்று கேட்டால் செருப்பு மருத்துவ குணம் நிறைந்தது என்று சொல்கிறான்."

மீனாட்சி குறுக்கிட்டாள்.
" அது எல்லாம் சரிதான், நம்ம ஆனந்த் எள்ளுன்னா எண்ணையா நிக்கிறவன் தான். வர வர புடவை கட்டிக்கிறதே கஷ்டமா இருக்குன்னு சொன்னேன்.உடனே போயி
பத்து மாக்ஸி வாங்கிக் கொண்டு வந்து வச்சுட்டான்."

சுந்தரம் தொடர்ந்தார்.

"மீனாட்சி,உனக்கு சமைக்க கஷ்டமா இருக்குன்னு சொல்லிட்டு சமையக்காரிய வேலைக்கு வச்சிருக்கான்.
எனக்கு கூட ரெண்டு பல்லு ஆடுறது.
பல் டாக்டர் கிட்ட யாராவது கூட்டிட்டு போகணும்னு அவன் கிட்ட ஜாட மாடியா சொன்னேன்.

'அடுத்த வாரம் போகலாம் அடுத்த வாரம் போகலாம்' னு இப்ப ரெண்டு மாசம் ஆயாச்சு.
அவன் கம்பெனியில் அவன்தான் எம்டியா இருக்கான்.அவனப் போய் இதுக்கெல்லாம் தொந்தரவு பண்றது கஷ்டமா இருக்கு."
"நீங்க சொல்றதும் சரிதான்.சின்ன சின்ன விஷயங்களுக்காக அவனை எப்படி தொந்தரவு செய்கிறது என்று நானும் அவன ஒன்னும் கேட்பதே இல்லை.மடிப்பாக்கத்தில்இருக்கிற என்னோட அண்ணாவைப் போய் ஒரு வாட்டி பாத்துட்டு வரணும்.மூணு வருஷத்துக்கு முன்னாடி இவனுக்கு டெங்கு வந்தபோது முப்பாத்தம்மனுக்கு புடவை சாத்துறேன்னு வேண்டிண்டேன்.
இன்னும் போக முடியல.

எனக்கு இந்த கால் குடைச்சல் சரியாகவே போகல. அயோடெஸ் ஒண்ணுக்குத் தான் அது கேட்கும்.
ஆனா இவனும் மிகப் பெரிய ஆர்த்தோ டாக்டர் கிட்ட கூட்டிண்டு போறேன்னு சொல்லிண்டு இருக்கான். ஆனா
அவனுக்கு டைம் கிடைக்க மாட்டேங்குது என்ன செய்ய? "

"இத பாரு மீனாட்சி நம்ம ரெண்டு பேரால அவனுக்கு எந்த கஷ்டமும் வந்து விடக்கூடாது.இதெல்லாம் சின்னச் சின்ன விஷயங்கள்.
இது எல்லாத்தையும் நாமளே சமாளிச்சுக்கணும்." என்றார் சுந்தரம்.

மீனாட்சி குறுக்கிட்டாள்.

"அது சரி. இந்த வயசுல நமக்கு பெரிய தேவைன்னு எதுவுமே இல்லையே.
நம்ம தேவைகள் எல்லாமே சின்னது தானே!"
சுந்தரம் சிரித்துக் கொண்டே
இன்னிக்கு அவன் ஆபீஸ்ல இருந்து வந்த உடனே விளக்கமா பேசிடுறேன். நம் மேல அவன் வைத்திருக்கிற பாசம் தான் என்னைத் தடுக்கிறது.யோசிச்சுப் பார்த்தா அவன் நமக்காக ஆபீசுக்கு லீவு போட்டுட்டு மடிப்பாக்கத்துக்கு கூட்டிக் கொண்டு போக முடியுமா? இல்லை,புடவை கடைக்கு போய் புடவை வாங்கி அம்மனுக்கு சாத்த கூட வர முடியுமா?
இல்லை இந்த தெருமுனையில் இருக்கிற பார்மசிக்கு போய்" ஒரே ஒரு அயோடேக்ஸ் கொடுங்க" ன்னு கேட்டு வாங்கி வர முடியுமா?" என்று சொன்ன சுந்தரம் பின் யோசித்துத் தொடர்ந்தார்.

"நீ கொஞ்சம் பொறுமையா இரு. உன்னுடைய எல்லாத் தேவையும் நானே பூர்த்தி செய்கிறேன்."

அன்று இரவு ஆனந்த் ஆபீசிலிருந்து வரும்போது கையில் ஒரு பெரிய கைப்பையுடன் வந்தான். பை முழுவதும் விதவிதமான பழங்கள் மற்றும் பழச்சாறுகள்.
அவனுடைய ஆபீஸ் பிரச்சனைகள் பற்றியும் அவற்றை எப்படி அவன் சமாளித்தான் என்பது பற்றியும் சுவாரசியமாக எடுத்துரைத்தான்.சுந்தர த்துக்கும் மீனாட்சிக்கும் பெருமை பிடிபடவில்லை.இந்த மகிழ்ச்சியான தருணத்தில் தங்களது குட்டிப் பிரச்சனைகளை அவனிடம் சொல்ல அவர்களுக்கு மனம் வரவில்லை.

ஒரு நாள் மாலை 5 மணி அளவில் ஆனந்தை செல்போனில் முன்பின் தெரியாத ஒரு எண்ணில் இருந்து யாரோ அழைத்தார்கள்.

" மிஸ்டர் ஆனந்த் பேசுறீங்களா? "

"ஆமாம். நீங்க யாரு.?"

"மிஸ்டர் ஆனந்த் உங்க அப்பா பேரு சுந்தரமா? " என்று அவசரமாக ஒலித்தது அந்தக் குரல்.

ஆனந்துக்கு குப்பென்று
வியர்த்தது. அப்பாவுக்கு என்ன ஆச்சு.?
"
சார் உங்க அப்பா மேல ஒரு ஸ்கூட்டர் மோதி அவர் கீழே விழுந்துட்டார். பலமா ஒன்னும் அடி இல்லை.கொஞ்சம் சிராய்ப்பு.அவ்வளவுதான்.நீங்க கொஞ்சம், நேர வந்து அவரை கூட்டிகிட்டு போங்க.கோபாலபுரம் சரவணா தெரு முனையில் ஸ்டேட் பேங்க் பக்கத்துக்கு வாங்க."என்றார்.

"சார்! அது என்னோட அப்பாவா இருக்காது.அவரால் அதிக தூரம் நடக்கக்கூட முடியாது.வீட்டை விட்டு வெளியே வரவே கூடாதுன்னு அவர்கிட்ட சொல்லி இருக்கேன்."
என்றான் ஆனந்த் பதட்டத்துடன்.

"சார்! அந்தப் பெரியவர் தான் உங்க போன் நம்பர் கொடுத்தார். உடனே வாங்க." என்றார் எரிச்சலுடன் அந்த ஆசாமி.

நெஞ்சு பதைபதைக்க தொப்பமாக வியர்வையில் நனைந்து காரை சூறா வளியாக ஓட்டி அடுத்த பத்தாவது நிமிடத்தில் அந்த இடத்தை அடைந்தான் ஆனந்த்.

முழங்கையிலும் நெற்றிலும்
ப்ளாஸ்திரிகள் ஒட்டி, பிளாட்பாரத்தில் இருந்த ஒரு கடையின் படிக்கட்டில் பரிதாபமாக அமர்ந்திருந்தார் சுந்தரம்.

அருகிலேயே உடைந்து போன அவரது கைத்தடி.அதிர்ச்சி அவர் முகத்தை விட்டு இன்னும் அகலவில்லை.

ஆனந்த் காரை விட்டு இறங்கி ஓடி வந்தான்.அவன் கண்ணில் கண்ணீர் முட்டிக் கொண்டிருந்தது.அப்படியே சுந்தரத்தைக் கட்டிக்கொண்டான்.

"அப்பா! உன்னை :வீட்டை விட்டு வெளியே தனியா வராதே என்று எவ்வளவு தடவை சொல்லி இருக்கேன். உன்னை யார் இவ்வளவு தூரம் நடந்து இங்கு வரச் சொன்னது. அடி பலமா படலையே! என்னப்பா, உன் மேல நான் உயிரையே வச்சிருக்கேன், உனக்கு என்ன குறை வச்சேன் நான் ."
படபடவென்று ஆனந்த் பேசும் போது சுந்தரம் அவன் முகத்தையே புன்னகையுடன் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தார்.

"சொல்லுப்பா உனக்கு நான் என்ன குறை வச்சேன். கையை இப்படி இறுக்கி மூடி கொண்டிருக்கே.ஏதாவது அடிபட்டு இருக்கா?"

சுந்தரத்தின் மூடியிருந்த வலது கை விரல்களை மெல்லப் பிரித்தான்.
சுந்தரத்தின் கைக்குள் இருந்த,.. மீனாட்சி கேட்டிருந்த..அந்த அயோடெக்ஸ் மருந்து
ஆனந்தைப் பார்த்து ஏளனமாக சிரித்தது.

ஆனந்துக்கு இப்போது எல்லாமே புரிந்து விட்டது.