தொடர்கள்
கவிதை
இரும்பு ஸ்கேல் - மணிகண்டன்

20240724091918242.jpeg

அன்றும் வழக்கம்போல்

நிக்கல் குந்தல்

ஒப்பந்தம் போட்டுக்கொண்ட, நண்பர்களின் முதுகை

நையப்புடைக்கவே பள்ளிக்குச்

சென்றோம்!

எங்கள் கொடுக்கல் வாங்கலால்

ஐயோ, அம்மா சத்தம்

வகுப்பறையை யுத்தக்களம்

ஆக்கியது!

நீண்ட நாள்களுக்குப் பின்

வகுப்பறையில்

இரும்பு ஸ்கேலுடன்

அடியெடுத்து வைத்த

சமூக அறிவியல் ஆசிரியை,

"எல்லாரும க்ளாஸ்வொர்க் நோட்ட

எடுங்க"

முழங்கினார்!

அதிர்ச்சியில் எங்கள் முகம்

ஒருவரையொருவர் பார்த்துக்

கொண்டது!

ஆட்டுமந்தையில் புகுந்த புலிபோல்

எங்கள் கூட்டத்துக்குள் நுழைந்த

ஆசிரியை

ஸ்கேலை வாளாகச் சுழற்றினார்!

எங்களில் சிலர் ஸ்கூல் பையை

கேடயமாக்கினோம்

ஓரளவு தப்பித்தோம்!

நாளைக்கு நோட்டோடதான் வரணும்

என்றபடியே வெளியேறினார் அவர்!

சிறு அமைதிக்குப்பின்

காயங்கள் கணக்கெடுக்ப்பட்டது!

என் முன்கையில்

கீறல்!

என்தோழனுக்கு

முழங்காலில் குருதி

எட்டிப்பார்த்தது!

ஒரே ரூபாய்

ஒரே பாக்கெட்

தேங்காய் எண்ணை

அனைவருக்கும் பகிரப்பட்டு

சிறு மருத்துவ முகாமை

நடத்தி முடித்தோம்!

இரும்பு ஸ்கேல் என்றாலே

ஒரு புன்னகை

வந்துவிடத்தான் செய்கிறது,

இப்போதும்!