தொடர்கள்
கதை
டைட்டன் - கி.ரமணி

20240724094750459.jpeg

காலை 6 மணி.ஜூலை மாசம்.

அந்த பெரிய ஏ சி அறையில் நூறு இருக்கைகள் இருந்தன.ஒவ்வொரு இருக்கையும் கிட்டத்தட்ட ஒரு மூடி இல்லாமல் மேலே திறந்திருக்கும் ஃபெராரி ரேஸ் கார் மாதிரி வடிவத்தில் ஏகப்பட்ட உபகரணங்கள் அணிந்து அழகா இருந்தது.

ஒவ்வொரு இருக்கையில் இருப்பவருக்கும் செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தால் ஏராளமான வேறு வசதிகளும், கூடவே சில தொந்தரவுகளும் உண்டு.

காலை ஆறு மணிக்கு கதவுகள் திறந்தது . உள்ளே வருபவரை ஸ்கேன் செய்து அவர் பற்றிய எல்லா விவரமும்... உத்யோக பூர்வ பேர் உள்பட... பதிவிடப்படும் .

எல்லார் பெயரும் 16 இலக்கங்கள் கொண்டது. ஆங்கில எழுத்துக்கள், எண்கள்,நிறுத்தக்குறிகள் சேர்ந்தது.

காலை ஆறு.மணி ஐந்து நிமிடத்துக்கு சோமு தான் உள்ளே நுழைந்த முதல் மனிதர்.

உள்ளே நுழைந்தவுடன் ஸ்கேனர் தன் கடமை செய்து, அவரை அனுப்பியது.

பேர் TBSOMSUN: 84357-. என்று பதிவானது.

சோமு அந்த நூறு இருக்கைகள் நடுவில் போன போது, நடுவில் ஒரு இருக்கை கரகர குரலில் அவரை அன்புடன் அழைத்தது.

"டியர் TBSOMSUN:84357-. என் மீது அமருங்கள்."என்றது.

அமர்ந்த உடன் முதல் ஐந்து நிமிஷம்

குசலம் விசாரிப்பது போல பாவனையில், யந்திர இருக்கை, தோண்டித் தோண்டிப் பிரத்தியேக கேள்விகள் கேட்டது.பதில்களைப் பதிவு செய்தது.பொதுவான உடல் நலம் சோதித்து திருப்திப்பட்டுக் கொண்டது.

இப்போ,கொஞ்சம் கொஞ்சமாக கூட்டம் அங்கு உயிர் சேர்த்தது .

சோமு தனியாக இருந்தார். சோமு.... ரொம்ப தெரிந்தவர்கள் கூப்பிடும் பேர்.

மற்றவர்களுக்கு 16 இலக்கம்.

ஏழு மணிஆச்சு.இப்போ அவருக்கு பக்கத்தில் இருந்த இருக்கை தன்னை ஆட்கொள்ளும்படி யாரிடமோ கேட்டுக்கொண்டிருந்தது.

மிக நெட்டையாக,..ஆறு அடி மூன்று அங்குலம்,...

ஒருத்தர் வந்து பக்கத்து இருக்கையின் பக்கம் நின்றார்.

இருக்கை கூறியது." உங்கள் உயரம் எனக்குத் தெரியும். என் மேல் அமருங்கள். என் நீளம் உங்கள் சௌகரியத்துக்கு இன்னும் நீளும்."

என்று அறிவுறுத்தியது.

. அவர் அமர்ந்ததும் ஒரு நிமிஷம் கழித்து,

"உங்கள் உயரம் ரொம்ப அதிகம். அதனால் சி டி ஸ்கேன் செய்யும் கட்டாயம் உண்டு.

என் மைக்ரோ ஸ்கேனர் உங்கள் உள் உறுப்புகளைப்பார்த்துவிட்டது.. உங்களுக்கு உடல் நலம் ஓகே என தெரிந்தது .ப்ராஸ்டேட் கிளாண்ட் நல்லா தான் இருக்கு. சில ரொம்ப உயரமானவர்களுக்கு ப்ராஸ்டேட்டில் அதிகமாய் கேன்சர் வருகிறது சமீபத்தில். அதனால் சோதனை பண்ணினேன். " என்றது.

சோமு பக்கத்து சீட் ஆசாமியிடம் கேட்டார். "சார் உங்களை அழைக்கும் பேரு என்ன? 16 இலக்க நம்பரை சொல்லல ."

"தீனா "

"நான் சோமு.நீங்களும் டைட்டன் தான் போறீங்களா?"

"ஆமாம்."

"நீங்க எங்கெந்து வர்றீங்க.?"

" பேங்காக்."

"என்ன வேல "

"பைனான்ஸ் கண்ட்ரோலர்". என்றார்

தீனா.

"ஓய்வு தானே?" என்று கேட்டார் சோமு.

"ஆமாம். பின்னே?"

"பேமிலி எவ்வளவு பெரிசு."

"மனைவி இறந்துட்டா.5 வருஷம்முன் ஏர் கார் ஆக்சிடன்ட்."

சூ கொட்டினார் சோமு

" ஒரே பொண்ணு. தனியா .

"ஃபிஜி ல இருக்கா. சரி,.உங்களுக்கு பேமிலி ?." என்றார் தீனா.

"எனக்கு ஒரே பையன்."ஆஸ்திரேலியால இருக்கான்..

என் லாஸ்ட் மனைவி எப்பவோ

பிரிந்து விட்டாள். நான் ரொம்ப வருஷமா தனி.பையனுடன் ரொம்ப காண்டாக்ட் இல்லை. பேரன் ஒருவன் உண்டு.இப்போ படிக்கிறான் என்று நினைக்கிறேன். நீங்க தாய்லாந்துல தான் இருக்கீங்க இல்லையா ?"

"ஆமாம். பேங்காக்.நல்ல இடம். நினைச்சா ஏர் டாக்ஸில அரை மணில நம்ம ஊருக்கு வர முடியுது. என் உடம்பு உலக கவெர்மென்ட் புண்ணித்தில் நல்லா இருக்கு. .40 வருஷமா ஓய்வு.!"

" எனக்கும் அப்படிதான்.55 வருஷமா ரிட்டைர்மென்ட் .ஹைட்ரபாட் பக்கம் இருக்கேன். முன்னே சென்னை பீச் ஓரம் மரக்காணம் பக்கம் ஏராளமா லேண்ட், பார்ம் ஹவுஸ் எல்லாம் இருந்துச்சு. எங்க தாத்தா ப்ராபர்ட்டி. நான் விக்கல. எல்லாம் போச்சு."

"உங்களுக்குமா ?"

"என் ப்ராபர்ட்டி எல்லாம் கடலுக்குள் காணாம போச்சு. ம் என்ன செய்ய பீச் பக்கமே இல்லாத ஹைட்ரபாட் போய்ட்டேன்." என்று

.சோமு சிரித்து .பின்னர் தொடர்ந்தார்.

"நான் டெல்லில மின் அணு தொழில் நுட்ப ப்ரோஃபஸரா இருந்தேன்.

தொழில் நுட்பப் பெருக்கத்தின் அழுத்தம் தாங்கவில்லை. நானே ஓய்வு வாங்கிட்டேன்.காலைல விஷயம் தெரிஞ்ச பேராசிரியரா இருந்தவர் சாயுங்காலம் ஒண்ணும் தெரியாம மக்கு மாதிரி முழிக்கும் நேரம் இது . அவ்வளவு வேகமா தொழில் நுட்பம் மாறுது.ஒரு மணி நேரம் கிளாஸ் எடுத்தா அடுத்த ஓரு மணிநேரம் புதுசா வந்த டெக்னாலஜி படிக்கணும்.

ஒரு அழகான சீனப்பெண் ரோபோ, தள்ளு வண்டியுடன் வந்து" உங்கள் காலை உணவு" என்று சீட் நம்பரை சரிபார்த்து பொட்டலம் அளித்தது."பொட்டலம் மாறவே மாறாது.

"இந்த பார்முலா உணவு உங்களுக்கு பிடிக்கிறதா '? "என்றார் சோமு.

உணவுப்பொட்டலத்தை பிரித்துக்கொண்டே. ".வேறு வழி?

பின் "நூற்று இருபது வயது உங்களுக்கு என்று முடிந்தது?" என்று சோமுவிடம் கேட்டார்.

"ஒரு வாரம் முன். ஜூலை 24 ல். இன்று ஜூலை 31 இல்லையா.?"

"ஆமாம் சார். எனக்கும் ரெண்டு வாரம் முன்னாடி பதினெட்டாம் தேதி நூத்தி இருபது வயசு பூர்த்தி ஆச்சு.உடனே மாசம் முடியும் போது அவசரமா கூப்பிட்டுவிட்டார்கள்." என்றார் தீனா.

இருவரும் சிரித்தார்கள்.

சோமு சொன்னார்.

"நம் வாழ்க்கையில் நம் தொழில் தவிர நமக்கு வேறு எந்த வேலையும் இல்லை. நிறைய வசதி பணம்,பொருள் முழுமையான சுதந்திரம். நம் குடும்பம் பற்றி கவலை கிடையாது..இந்த உலகமே ஒரு தொழில் நுட்ப கிராமம் ஆகிவிட்டது.எல்லாவிதத்திலும் தான்.

, உலக நாடுகள் எல்லாம் ஒன்று சேர்ந்து,ஒன்றிணைக்கப்பட்ட பொது அரசு ஒன்றை நிர்மாணித்து, அந்த அரசு உலகம் முழுக்கவும் , தொழில் நுட்பத்தால் கவனித்துக் கட்டிக் காப்பாற்றுகிறது.

" ஆமாம் நோய் நொடி இல்லை. வறுமை இல்லை. ஏராள வசதி.அதனால் ஆண் பெண் இரு பாலருக்கும் ஏகப்பட்ட சுதந்திரம். இதனால் ஒன்று பட்ட குடும்ப வாழ்க்கையை மொத்தமாக இழந்தோம் இல்லையா சார். "

இவர்களுக்கு அடுத்த இருக்கையி லிருந்து ஒரு பெண் குரல் கேட்டது. அழகிய பெண்மணி.

முப்பதிலிருந்து ஐம்பதுக்குள் என்ன வயது வேணும்னாலும் இருக்கலாம் என்ற தோற்றம்.

"ஹல்லோ ஜெண்டில் மென். ஐ அம் சாரா.நீங்க இருவரும் டைட்டன் போறீங்க இல்லையா .?"

"ஹல்லோ லேடி. எஸ். டைட்டன் தான்." என்றார் சோமு.

"நீங்களுமா??"

"ஆம்."

"நம்ப முடியல. ஆர் யூ 120? டைட்டன் போக நூற்றி இருபது வயசு ஆகணுமே.! நீங்க டீன் ஏஜர் போல் இருக்கீங்களே!"

சாரா பாட்டி(?) யின் ஏற்கனவே ரோஸ் நிறத்தில் இருந்த ஜெர்மானிய முகம் மேலும் வெட்கத்தில் சிவக்க "எஸ்" என்றாள்.

மணி எட்டு ஆன போது நூறு பேர்களுக்கு மேல் வந்து விட்டார்கள். .

ஒன்பது மணிக்கு மீண்டும் ஒலி பெருக்கி.

இப்போது, உலக மக்கள் நலத் துறை யின் டெல்லி செயலாளர் பேசினார்.

"வணக்கம்.

நீங்கள் நூறு பேரும் டைட்டன் கிரஹத் துக்கு இன்று போவதற்கு உடல், வயசு, மேலும்,மற்ற தகுதிகளுடன் உள்ளீர்கள்.

என் வாழ்த்துக்கள். .டைட்டன் கிரஹம் ஒரு உன்னதமான உலகம். சனி கிரஹத்தை சுற்றி வரும் ஒரு பெரிய உப கிரஹம் அல்லது சந்திரன்..

இது நம் பூமியிலிருந்து நூற்று இருபது கோடி கி.மி தூரத்தில் உள்ளது.

அங்கு மீத்தேன், நைட்ரஜன்

கலந்த வாயு மண்டலம் தான் உள்ளது .

ரொம்ப ரொம்ப குளிர் பிரதேசம்.

ஆனால் அதல பாதாளத்தில் நிலத்தடி நீர் நிறைய உண்டு. அதிலிருந்து ஆக்சிஜன் பிரித்து எடுத்து மனித உயிர் வாழ்க்கை நடக்க முடிகிறது..நம் மனிதர்கள் அங்கு இப்போ நிறைய பேர் உள்ளனர். முப்பது வருஷமாக மனிதர்கள் நிறைய பேர் அங்கு சென்று அந்த கிரகத்தை நாம் வாழத் தகுந்ததாக மாற்றி உள்ளனர்.

ஏராளமான ஹைட்ரோகார்பன் அங்கு கிடைக்கிறது. வேற்று கிரகங்களில் மனிதன் குடியேற முடியும் என்று டைட்டன் தான் முதலில் நிரூபித்தது.

நூற்றி இருபது ஆண்டு வாழ்க்கையில் பூமியில் நிறைய சேவை செய்தபின் , நீங்கள் எங்களை விட்டு வேறு கிரஹம் செல்வது ரொம்ப வருத்தம் அளித்தாலும்...

வாழ்க பூமி.வாழ்க உங்கள் தொண்டு.

இனி உங்கள் அயராத தொண்டு இப்போ டைட்டனுக்குத் தேவை.

என்று சொல்லி உங்களை வணங்குகிறேன் .

உங்கள் யாருக்கானும் டைட்டன் போக வேண்டாம். என்று இப்போது தோன்றினால் கூட பரவாயில்லை.

உடனே கை தூக்கவும். 3 நிமிஷ நேரம் தான் அவகாசம் உண்டு.

தீனா, சோமு, சாரா எல்லாரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டிருந்த போது

சாரா திடீர்னு கை தூக்க முயல மற்ற இருவரும் அவளைத் தடுத்தனர்.

சோமு அவள் கையை ஆதரவாகப் பிடித்து " என்ன காரியம் செய்யப் பார்த்தீர்கள். உங்களுக்கு வாழ்க்கை வாழ்ந்தது போறுமா? உடனே சாக வேண்டுமா? "

சாராவின் கண்ணில் நீர்.

"இந்த 120 வயதில், தனிமையில் இனிமேல் டைட்டனில் எல்லாம் என்னால் இருக்க முடியுமா? அது அவசியம்தானா?" என்றாள்.

தீனா தொடர்ந்தார்.

"கடந்த ஐம்பது வருஷங்களாக மனிதர்களுக்கு மூப்பு வருவதில்லை. நோய்ச் சாவு அபூர்வம். அதனால் நம் பூமியின் மக்கள் தொகை வேகமாகக் கூடுகிறது.. கடந்த காலத் தொழில் நுட்பப் பாவத்தால் பூமியின் வெப்பம் அதிகமாகி கடல் நீர் மட்டம் உயர்ந்து பூமியின் ஏராளமான நிலப்ரதேசம் கடலுக்குள் செல்ல,மனிதர்கள் வருங்

காலத்தில் இனி சௌகரியமாக இருக்க இடம் இல்லாமல் போக வாய்ப்பு அதிகமாகிறது.... அதனால் தானே நூற்றி இருபது வயதான நாம் வெளி கிராகமான டைட்டனுக்கு பிழைக்கச் செல்கிறோம்., அல்லது அனுப்பப்படுகிறோம்.

இனி நாம் பூமியில் வாழ முடியாது.நம் கோட்டாவான நூற்று இருபது வருஷம் இங்கே பூமியில் முடிந்தது.

போனால் டைட்டன் என்ற வேற்று கிரஹம் போய் நாம் எல்லாரும் சேர்ந்து உழைப்போம்,போராடுவோம். இல்லை என்றால் இங்கு ஹீலியம் வாயு நிரம்பிய சேம்பருக்குள் அனுப்பப்பட்டு சில செகண்டுக்குள் துளிக்கூட வலி தெரியாமல், மூச்சு திணறாமல் இறப்போம்.

என்ன சொல்றீங்க ? டைட்டனில் வாழலாமா ,? ஹீலியம் வாயு அறையில் சாகலாமா ?"

சாரா மௌனமாகி கண் துடைத்து க்கொண்டு பின் சிரித்து " சரி.! டைட்டன் தான் இப்போ என் சாய்ஸ் "

என்றாள்.

வெளியே ஸ்பீக்கர் குரல் அலறியது.

"வருஷம் 2144, மாசம் ஜூலை, நாள் 31.

பூமியிலிருந்து டைட்டன் கிரகம் செல்லும் விண் கலமான..டைட்டன் வாயேஜர் TI 44321... நூறு பயணிகள், மற்றும் பதினோறு விண்வெளி விமானிகள், சிப்பந்திகள் சேர்ந்த பணிக்குழுவுடன் இன்று காலை 10 மணி 30 நிமிடங்களில் ஸ்ரீஹரிக்கோட்டாவிலிருந்து விண்வெளிக்கு ஏவப்படும். "