தொடர்கள்
கதை
ஏமாந்து போன பக்கிரி - முனைவர் என்.பத்ரி

20240724093836425.jpeg

அன்று விடியற்காலை மணி 3 இருக்கும். அது ஒரு குக்கிராமம். மணி செட்டியார் இயற்கை உபாதை கழிக்க வீட்டிற்கு வெளியே வந்தார். அவருடைய மளிகை கடை அவருடைய வீட்டுக்கு பக்கத்தில்தான் இருக்கிறது. கடைப்பக்கம் எதேச்சையாக திரும்பிப்பார்த்தார்..

கடையின் மேற்கூரையின் ஓடுகளின் இடையில் வெளிச்சம் தெரிந்தது.திடுக்கிட்டு போனார். கடையின் உள்ளே பத்து லட்ச ரூபாய்க்கான சரக்கு இருக்கு. உடனே தன்னுடைய மனைவியை எழுப்பி வீட்டை பூட்டிக்கச் சொன்னார். பக்கத்து வீட்டு நண்பன் வெற்றியைக் கூட அழைத்துக் கொண்டார்.வெற்றியும் வயதானவர்தான்..ஆனால் கூப்பிட்டகுரலுக்கு உடனே வந்து ஆதரவுக்கரம் நீட்டி உதவி செய்பவர்.அவர் உடனே அரைகுறையாய் சட்டை கூட போட்டுக் கொள்ளாமல் அவருடன் கடைக்கு புறப்பட்டார்.

கடைவாசலுக்குச் சென்ற அவர்கள் கடையின் வாசலில் ஒரு சைக்கிளைப் பார்த்தாங்கா. சைக்கிள் பக்கத்தில் யாருமே இல்லை. கடையின் பூட்டு பூட்டிய படியே இருந்தது. அது பழைய கால வீடு. யாரோ ஓடுகளை எடுத்துவிட்டு கடையில் உள்ளே இறங்கி திருடிக் கொண்டிருப்பதாக அனுமானித்தார்கள். பக்கத்து வீட்டு மொட்டைமாடியில் ஏறி நின்று கையிலிருந்த டார்ச்சால் ஒளியை பீச்சிப் பார்த்தார்கள்.யாரையும்காணவில்லை.

காலை மணி ஆறு ஆகிவிட்டது. இந்த செய்தி ஊர் முழுவதும் பரவியது.போலீசுக்கும் தகவல் போய்விட போலீஸ்ஸும் வந்தது. போலீஸ் வந்தவுடனே கையில் வைச்சிருந்த சாவியால் கதவைத் திறந்தார் செட்டியார். உள்ளே இருந்த கல்லாப் பெட்டி,பருப்பு மூட்டை, அரிசி மூட்டை, உப்பு மூட்டை என எல்லாம் கலைந்து போயிருந்தன.

போலீஸ் உள்ளே குரல் கொடுத்து, ’டேய், எவனா இருந்தாலும் மரியாதையா வெளியில் வந்துடு’ன்னு சொல்லிக் கொண்டே உள்ளே போனார். ஆனால் குண்டாகஒருத்தன் மட்டும் உப்பு மூட்டைக்கு பின்னாலே பதுங்கி இருந்தான்.’அவன்கிட்ட ஆயுதம்எதுவுமில்ல’ன்னு போலீஸ் தெரிஞ்சிகிச்சு.அதனால அவன் சட்டையப் பிடிச்சு ’தர,தர’ வென்னு கடைக்கு வெளியிலே இழுத்து வந்தாங்க. பார்த்தா அவன் உள்ளூர் பக்கிரி தான்.சின்ன சின்ன திருட்டு வேலை எல்லாம் பண்றவன்தான்.

விசாரணை தொடங்கிய வேகத்திலேயே முடிந்தது..

பக்கிரி கொடுத்த வாக்கு மூலம் இதுதான்.’நான் இன்னைக்கு காலையில நான் இந்த கடைக்கு வந்து இருந்தேன். செட்டியார் ’திங்கட்க்கெழம லேண்ட் ரெஜிஸ்ட்ரேஷன்க்காகவச்சிருக்க அஞ்சு லட்ச ரூபாய கடையிலேயே வச்சிட்டு வரேன்’ன்னு அவங்கசம்சாரத்துக்கிட்ட போன்ல சொல்லிட்டு இருந்தாரு.இத நான் கேட்டுட்டேன்.

குப்புவோட கூட்டணி போட்டு அதைத் திருட பிளான் போட்டோம்.அவன் என்னஉள்ள இறக்கிவிட்டுட்டு கூரைமேல இருந்தான்.நான் உள்ள போய் கல்லா,மூட்ட முடிச்சிஎல்லாத்தயும் ஒரு மணி நேரத்துக்கு மேல துழாவிப் பார்த்துட்டேன்.கல்லாவில இருந்துஇந்த ஐம்பது ரூபாதான் கெடச்சுது.எனக்கு முன்னாலேயே எவனோ வந்து அந்த ரூபாயஆட்டய போட்டுட்டுட்டான் போல இருக்கு’ன்னு சொல்லி ஒரு வழியா பெருமூச்சவிட்டான். செட்டியார் இருந்த பக்கமே அவன் பார்க்கல.

சரி திரும்பவும் கூரை வழியா மேல போகலாம்னு பாத்தா நம்ம உடம்பு கொஞ்சம் பெரிய சைஸ். செட்டியார் கடைல தான் ரெகுலரா அரிசி வாங்கறது. என்ன செய்ய அதான் மாட்டிக்கிட்டேன் !!

செட்டியாரை பார்த்து விவரத்தை கேட்டது போலீஸ்.செட்டியார் சொன்னார். ’ஆமாங்க என் பொண்டாட்டி கிட்ட சொன்னது நெஜந்தாங்க. ஆனா அடுத்த அரை மணி நேரத்துல எனக்கு என் சம்சாரமே போன் பண்ணி, காசு கல்லாவில் வைச்சுட்டு வராதீங்க. வீட்டுக்கு கொண்டு வந்துருங்க’ன்னு சொன்னாங்க..நானும் வீட்டுக்கு கொண்டு போயிட்டேன்’ன்னு சொல்லி முடிச்சார் செட்டியார்.

’சரி, சரி, பணம் ஜாக்கிரதையா இருக்கு இல்ல? என்று சொல்லிய படி போலீஸ் பக்கிரிய வண்டியில் ஏற்றியது.

செட்டியாரின் மனைவி செட்டியாரைப் ஓரக்கண்ணால் பார்த்து சிரித்தாள்.

செட்டியார் ஏனோ அவளிடம் வழிந்துக் கொண்டே வீட்டுக்கு போய்க்கொண்டிருந்தார்.,கடைக் கூரையை மூடவேண்டும் என்ற உணர்வு கூட இல்லாமல். சுவர்களுக்கும் காது உண்டு போல....

"என்ன இருந்தாலும் செட்டியார் கடை அரிசின்னு சொன்னான்ல பக்கிரி.... நம்ம கடை தரம் தனி தான். "