யாரு ? தெரியலையே, சத்தம்மட்டும் வருது ஆனால் பேச்சு ஒன்றும் வரலை என்று
கண்ணாடியைக் கழட்டி மொபைலை வெயிலில் காண்பித்தும் பார்த்தார், ம்..ம்..
தெரியலை என்றார் சீமாச்சு.
ஆமாம்! இல்லாட்டி அப்படியே உங்காதிலே விழுந்திடும் கொண்டா இங்கே, என
அவரை அதட்டி போனை வாங்கிய பிச்சை என்று அழைக்கப்படுகிற ராமசாமிக்கு வயது
அறுபது, சீமாச்சு என்கிற சீனுவாசனின் இளைய மகன்.
ஓ..ஓ சோ சேட் அப்படியா! சரி சொல்லிடுறேன்,முடிந்தால் அழச்சுண்டு வரேன் என
கூறிய பிச்சை பின் தன் அப்பாவிடம் போனைக் கொடுத்தான்,
இதை அப்பப்போ சார்ஜிலே போடுங்கோ, சுத்தமாக பேசறது கேட்கலை என்றான்.
அதைத் தாண்டா நானும் சொன்னேன் என்று சிரித்த சீமாச்சுவிற்கு வயது தொண்ணூறு..
கிளிமங்கலத்திலேலிருந்து போன், அங்கே மாமா, வயதானவர், நம்ம சொந்தம்னு கூட
நீங்கள் அடிக்கடி சொல்வேளே, அவர் பெயர் கூட .... என்னமோ சொல்வேள் ?
மறந்துட்டேன்.. அவர் காலமாகிட்டாராம்,
இப்படி மொட்டையா சொன்னா எப்படி ? யார் என்னனு சொல்லு என்றதும்...
ஆங்.. அதான் மொட்டை மாமா என்கிற சாமிநாதனு சொன்னார்கள் என்றவன்,
நேத்து ராத்திரி படுக்கையிலே உயிர் போயிடுத்தாம்... சாயந்திரமாதான்
எடுக்கப்போறாளாம், முடிந்தால் வாங்கோ என தகவல் சொல்லி கூப்பிடுகிறார்கள்
ஊரார்கள் என்றான் பிச்சை..
கிளியமங்கலம் அழகான சிற்றூர்,போஸ்ட் மாஸ்ட்ரா சீமாச்சு வேலைப்பார்த்த ஊர்..
பிச்சை மட்டுமே கிராமத்தில் தங்கிப் படிக்கலை,பாக்கி அத்தனை பிள்ளைகளும் அங்கே
படித்தவர்கள்தான்.
ஓய்விற்குப் பிறகு நகரத்தை நோக்கி இவர்கள் வந்ததினால் இழந்தது கிராமத்துவாசனை
மற்றும் இளங்காற்று மட்டுமல்ல.. இளங்காதல் வாசனையையும்தான்.
குலதெய்வமான அய்யனார் கோவிலுக்கு அவ்வப்போது குடும்பத்தோடு சென்று
அபிஷேகம் செய்வது சீமாச்சுவின் வழக்கம், கல்லூரியில் படித்த சமயத்தில் பிச்சை ஒரு
முறை குடும்பத்தாரோடு அபிஷேகத்திற்காக கிளிமங்களம் கிராம ஆலயத்திற்கு
சென்றபோது நிகழ்ந்த நிகழ்வு ஒன்று நினைவிற்கு வந்ததும் மனதிற்கு இதமாய் இருந்தது
பிச்சைக்கு. அறியாத வயதில் முளைத்த முதல் காதல் அல்லவா அது.
ஆலயத்தினுள்ளே கூட்டம் கூடியிருக்க, சிறுவர்களெல்லாம் குளக்கரையில் கற்களை
விட்டெறிந்து தவளைக்கல் (தட்டையான கற்களை நீரின் மேற்பகுதில் எறிந்தால்,அது
தவளப்போல தாவி தாவி செல்லும்) விளையாடிக் கொண்டிருந்தனர், ஆர்வமாக
அவர்களைப் பார்த்த பிச்சை அவர்களிடம்,என்ன செய்யுறீங்க என்றதும்,
ம்.... வேண்டுதல் என்று கூறி நகர்ந்து விட்டனர் சிறுவர்கள் கிராமத்தி்கே உரிய
நக்கலுடன்.
இவனும் ஒரு அரைக் கல்லெடுத்து குளத்தில் போடவும், அதிலிருந்து மூழ்கிய
நிலையிலிருந்து பெண் வெளிப்பட்டு பயந்து போய்
யப்பா.. என அலறியது.
பாவாடை சட்டையணிந்து சிகப்பாய் முகமும், எடுப்பாய் அவயங்களும் பதின்
வயதுப் பெண்ணை முதன் முதலில் நெருக்கமாய்ப் பார்த்த பிச்சைக்கு தொண்டை
அடைத்தது.
என்னம்மா! என பதறிபடி வந்த ஆலயக் குருக்களிடம், பிச்சையைக் காட்டி கல்
வீசியதைச்சொன்னதும்,
வேண்டிண்டு போட்டேன் மாமா வேறொன்றுமில்லை என்று பிச்சை சொன்னதற்கு,
அதற்கு ? அரைக்கல்லெடுத்து மண்டையில் போடுவேளா? என உதட்டினை சுழித்து
முகத்தை தோளில் இடித்து
கரையேறினாள் கைலாச குருக்களின் மகள் பார்வதி என்கிற பாரூ.
போம்மா! ஏதோ விளையாட்டுக்கு பண்ணியிருக்கான், ஆத்திற்கு போ, அம்மாண்ட
சொல்லி சாப்பாட்டிற்கு இலையறுத்து வைக்கச் சொல்லு, எல்லாரையும் ஆத்திற்கு
சாப்பிட அழச்சுண்டு வரேன்னு என தனது மகளிடம் சொல்லியனுப்பினார்.
வழிபாடுகள் முடிந்து, குருக்கள் வீட்டில் சாப்பிட அமர்ந்த பின்னே, பாரூவும் அவள்
அம்மாவும் ஆலய பிரசாதமான புளிசாதத்தையும், தயிர் சாதத்தையும் பறிமாறிட,
பிச்சைக்கு பறிமாறும் போதெல்லாம் பாரூ, புண்முறுவலோடு மெல்ல மெல்ல
பறிமாறினாள் அவள் இதயத்தையும்,பிரசாதத்தையும்.
நாளடைவில் இவர்களது விஷயம் கைலாச குருக்களுக்குத் தெரியவர வீட்டில் நிறைய
அர்ச்சனை நடந்ததில்,அபிஷேகத்திற்கான நான் செல்வது குறைந்து, பின் குருக்களும்
காலமாகிட, அந்த பெண்ணைப் பற்றிய நிலையே தெரியாமல் போனது.
கிளிமங்களத்து அக்ரஹாரத்துக்குள் கார் நுழைந்திருந்தது. அந்தக் காலத்தில் என்பது
வீடுகள் கொண்ட அக்ரஹாரம் தற்போது அதில் பாதிக்கும் மேற்பட்ட வீடுகள் கான்கீரீட்
வீடுகளாய் காட்சியளித்தன.
ஒன்றுகூடி அரட்டையடித்த திண்ணைகளெல்லாம் இடிக்கபட்டு பெரியபெரிய
காம்பவுண்ட் சுவர்களால் வீடே தெரியாமல் எழுப்பப் பட்டிருந்தன.
கைலாசக் குருக்கள் வீடு மட்டும் மாறாமல் பாதி இடிந்த நிலையிலே பராமரிப்பின்றி
இருந்தது.
"தெருவின் கடைசியில் இருக்கு சாமிநாதனின் வீடு" என சீமாச்சு சொன்னதும்,
ரொம்ப நேரம் பழங்கதைகளை பேசிண்டு உட்காரப்படாது, சட்டுனு கிளம்பிடனும் என
சொல்லி இறக்கியனுப்பிய பிச்சை காரிலேயே அமர்ந்திருந்தான்.
மொட்டைமாமா, வேட்டித்துண்டோடு உடல் முழுவதும் விபூதி பூசப்பட்டு சடலமாக
தரையில் கிடத்தி வைத்திருக்க, அருகில் சேரில் அமர்ந்திருந்த சம்பூரணத்திடம் சென்று
துக்கம் விசாரித்தார் சீமாச்சு..
என்ன இப்படி ஆயிடுத்து ? என கேட்டதும்..
என்ன ஆயிடுத்து இப்போ? அவரென்ன அல்பாயுசிலேயா போயிட்டார், எல்லாம்
ஆண்டு அனுபவிச்சாச்சு அப்புறமென்ன என கேட்ட சம்பூரணம்.
என்ன ? நீ இருக்க வேண்டிய இடத்திலே அவர் இருக்கார் என்று பூடகமாய் அந்த
நேரத்திலும் சிரித்தபடி சொன்னவள்,
எல்லோரும் வந்தாச்சு, பார்த்தாச்சு,பசங்க வருவதற்கில்லை,அடுத்து ஆகவேண்டியதைப்
பாருங்கோ! மளமளனு என்றபடி அதிகாரத்தோடு பேசியபடி வாசலுக்கு சென்றாள்.
சம்பூரணம் மாறவேயில்லை, அப்படியே இருக்கிறாள்,அதே துடுக்கான பேச்சு என்று
நினைத்த சீமாச்சு, தான் போஸ்டாபீஸ் வேலையில் சேர்ந்த அந்த இளமைக்கால
நினைவுகளில் மூழ்கினார்.
அப்போதெல்லாம் காபி சம்பூரணத்தின் அகத்திலிருந்துதான் தினமும் வரும். அதுவும்
சம்பூரணமே வந்து கொடுத்துவிட்டுப்போவாள், பாவாடை தாவணியணிந்த சிற்பமாய்,
அனைத்து அழகினையும் ஒருங்கினைந்து படைத்தது போல் இருப்பாள். அவளின் அப்பா
பெரிய பண்ணை. நிலம் நீச்சு, கொல்லை நிறைய கறவை மாடுகள், மாட்டுவண்டி,
அததற்கு பணியாட்கள் என சகல வசதிகளும் உடைய மிராசுதார்.
தினமும் போஸ்ட்டாபீஸ் வந்தமர்ந்து தன் சக விவசாயிகளுடன், நண்பர்களுடனும் பேசி
விட்டுச்செல்வார். மகள் சம்பூரணத்தோட
நான் பேசிப்பழகுவது தெரிந்து ஒருநாள் தெருவில் அவர்கள் சீட்டுக்கட்டு
விளையாடும் இடத்திற்கு என்னைக் கூப்பிட்டு, "அன்றாடங்காச்சி அண்ணக்காவடி பய
நீ, உனக்கு
எம்புள்ளை கேக்குதோ ? எனக் கண்டித்தவர், அவசரவசரமாக
அதே அக்ரஹாரத்து எதிர்வீட்டு பணக்கார மிராசு ஜக்குய்யரோடைய மகனான
சாமிநாதனுக்கு பேசி முடிச்சுட்டார். அதோடு சம்பூரணத்தின் போக்குவரத்து எல்லாம்
பூரணமாக நின்றுப்போனது காபி உட்பட.. என நினைத்தவரிடம்,
காபி வந்ததா ? இல்லையா ? என கேட்ட சம்பூரணம்,
பார்வதி காபி கொடு நம்மாத்து காபினா சீமாச்சுவிற்குப்பிடிக்கும் என சொல்லி கண்ணீர்
விட்டாள் .
எதற்கு அழுகிறாள் இப்போ, கணவனைப் பிரிந்த துக்கத்தில் அழுகிறாளா ? இல்லை
பழசை நினைத்து அழறளா தெரியலையே என தனது முதல் காதலையும், தற்போதுள்ள
வயசையும் நினைத்து மனத்திற்குள் சிரித்துக் கொண்டார் சீமாச்சு.
தைரியமாகப் பேசினாய் இப்போது ஏன் அழுகிறாய் என அவளைத் தேற்றினார்.
இதே தெருவிலேயே பிறந்து, வளர்ந்து,தெருவிலேயே எதிராத்திலே வாக்கப்பட்டு,
என்பது வயதிலே இப்போ வீணாகவும் போனேனே அதை நினைத்தால்தான் அழுகையா
வருது, என்ன வாழ்க்கை இது ?
மனதிற்கு பிடிக்காத ஒரு வாழ்க்கை, யாருக்காக வாழ்ந்தோம், மகன்கள் இருவர்
இருந்தும் தந்தையின் சாவுக்கு கூட அருகிலில்லை, வரவும் முடிலை பணம்பணம்னு ஓடி
ஓடி காணமலே போயிடுத்துக இரண்டும், இந்த கோவிந்தா கொள்ளி போட்டுக்கறதுக்கா
இத்தனை கஷ்டப்பட்டோம் ?
மொபைல்போனில் அழைப்பு வந்ததும்,இது வேறு, பெரிய தொல்லை இது
வந்தாலும் வந்தது, தொலைவில் இருப்பவரை அருகிலேயும், அருகிலிருந்தோரை
தொலைவிலும் வைத்துவிட்டது என கொட்டித் தீர்த்தவள்,
நீ எப்படியிருக்கே ? உன் பையன் என்ன செய்யறான் என விசாரித்தாள் முந்தானையால்
முகத்தை துடைத்தபடி,
ரிடையர் ஆயிட்டான், நல்லா பார்த்துக்கிறான், அவன்தான் என்னை அழச்சுண்டு
வந்திருக்கான், வாசலிலே காரிலே காத்திருக்கான் என்றதும், பார்வதியைக் கூப்பிட்டு
வாசலிலே பாரு, காருக்கு காபி கொடுத்துவிடு என சொல்லிவிட்டாள்.
காருக்கு காபி எடுத்து வந்த பார்வதிமாமி தேடினாள், யாருமே இல்லையே என
காரைச் சுற்றி வந்தவள் பிச்சையைப் பார்க்க,
காரின் பின் வீலிலிருந்த அரை செங்கல் ஒன்றினை எடுத்து தூரப்போடவும்,
இன்னும் அந்த கல்லைத் தூக்கிப்போடற பழக்கத்தை விடலையாக்கும் என சிரித்தபடி
இந்தாங்கோ காபி ! என்று கொடுத்தவள், ஒன்பது கஜபுடவைத் தலைப்பினை இழுத்து
போர்த்தியபடி வீட்டிற்குள் நடந்தாள்.
அருமையான காபி என லயித்தது மனம், தன்னிடம் பேசிக்கொண்டியிருந்த ஊரார்கள்
அப்பாவைப் பற்றியும், என் அண்ணன்களைப்பற்றி விசாரித்தார்கள்,நான் பதிலுக்கு
கைலாச குருக்களைப் பற்றி விசாரிக்க, (எனக்கு இந்த ஊரில் தெரிந்த்து கைலாச
குருக்களும் அவர் பெண் மட்டும்தானே)
அவன் ஒருத்தன் வீணாப்போனவன், பெண்ணை இளம் வயதினிலே குடிகாரனுக்கு
கட்டிக் கொடுத்து இளமையிலே விதவையாகி திரும்ப ஊருக்கே வந்து தனியா இருந்து
இந்த வீட்டிலே சமையல் வேலை செய்து உழைச்சுகிட்டிருக்கு என்றதும்,
என்ன ? இந்த ஊரிலேதான் இருக்கிறாளா ? என ஆர்வம் முதலில் மேலிட்டது, அதனை
மறைத்து பாவம் என வருந்தினேன்.
இதோ உங்களுக்கு காபி கொடுத்தாங்களே, அந்தம்மாதான் என்றதும்,
அவளா! அதான் அப்படி சிரித்தாளா ? இன்னும் இந்தப் பழக்கத்தை விடலையா
என்றாளே! என நினைத்ததும் மனத்திலிருந்து ஆயிரம் பட்டம் பூச்சிகள் ஒன்றாய் கிளம்பி
பறப்பது போலிருந்தது.
ஆனால் ஏன் இப்படி ஆயிட்டாள், வயசாகிட்டது அவளுக்கும்தானே என்று நினைத்து
மனத்திற்குள் சிரித்துக்கொண்டான்.
அனைத்தும் தயாராகி, சம்பூரணத்திடம் அனுமதி பெற்று, உடலை எடுத்துக் கொண்டு
ஊரார் புறப்பட்டனர்.
குளத்திற்குப்போய் குளிச்சுட்டு உடை மாத்திண்டு ஊருக்கு புறப்படலாம் என பிச்சை
சீமாச்சுவை அழைத்துக் கொண்டு் புறப்பட்ட,
எங்களையும் குளத்திலே விட்டுவிடுங்கோ என்றவள்,
"வா இவாளோட போலாம் என பார்வதியையும் கூப்பிட்டுக்கொண்டு நால்வரும்
கிளம்பினார்கள் குளத்திற்கு தலை முழுக..
இந்தக்குளம் மட்டும் எனக்குத் தெரிந்து இதுநாள் வரை வற்றியதே இல்லை என ஊரார்
பெருமை பேசி்க் கொண்டிருந்தனர்.
முழ்கி எழுந்த நால்வரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு சொல்லிக்கொள்ளாமல்
கிளம்பினர் கண்ணீருடன்.
எப்படி வற்றும் ?
Leave a comment
Upload