ஏழே நாட்களில் திரும்பி பூமிக்கு வந்துவிடலாம் என்ற திட்டத்துடன் ஜூன் 5 அன்று ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஜம்மென்று தனது பார்ட்னருடன் பூமிக்கு மேலே மிதந்துக்கொண்டிருக்கும் சர்வதேச விண்வெளி மையத்துக்கு கிளம்பி சென்ற சுனிதா வில்லியம்ஸுக்கு தெரியாது தாம் அங்கேயே மாட்டிக்கொள்வோம் என்று..
ஜூன் 14 ந்தேதியே சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர், பூமிக்கு வந்திருக்க வேண்டும். தற்போதைய நிலையில் 2025 பிப்ரவரியில் தான் வர முடியும் என்று கூறுகிறார்கள்.
அதற்கு ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட கோளாறுகள் காரணம். விண்வெளியில் நீண்ட நாட்கள் தங்கும் வீரர்களுக்குஉடல் எதிர்ப்புசக்தி குறையும்,மனரீதியான பாதிப்பு, எலும்பு பாதிப்பு, கேன்சர் கூட வரலாம் என்கிறார்கள். ஆனால் சுனிதா, வில்மோர் இருவருக்கும் உடல்நிலையில் எந்த ஆபத்தும் இல்லாமல் நன்றாகவே இருப்பதாகவும் நாசா தெரிவித்துள்ளதால் இப்போதைக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்கிறார்கள்.
அமெரிக்க நாட்டின் போயிங் நிறுவனத்தோடு நாசா ஒப்பந்தம் செய்து , அதன் மூலம் இந்த ஸ்டார்லைனர் விண்கலம் திட்டமிட்டப்படி பூமியிலிருந்து கிளம்புவதற்கு முன்னரே சில கோளாறுகள் செய்திருக்கிறது..இந்த விண்கலம் இதுவரை மனிதர்களை ஏற்றிக்கொண்டு விண்வெளி சென்றதில்லையாம். இரண்டுமுறை தோல்வி அடைந்த நிலையில் இப்பொது தான் முதன்முதலாக மனிதர்களை ஏற்றிக்கொண்டு சென்றிருக்கிறது. கிளம்பும் போதே பிரச்சனை செய்த ஸ்டார்லைனர்,
விண்வெளிமையத்தை அடைந்ததும் ஹீலியம் வாயு கசிவு, டெஃப்லான் சீல் பாதிப்பு உண்டாகி, அதனால் சில பாகங்கள் செயலிழக்க, அங்கே சுனிதா வில்லிம்ஸும், புட்ச் வில்மோரும் மாட்டிக்கொண்டார்கள். ஏற்கனவே 7 விண்வெளி வீரர்கள் மையத்தில் இருக்கும் சூழ்நிலையில் புதிதாக 2 வீரர்கள் நீண்ட நாட்கள் தங்கும் சூழ்நிலை ஏற்பட்டால் உணவு , தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுமே என்ற கவலை வேண்டாம். அவ்வப்போது கார்கோ விண்வெளி கப்பல் உணவு, தண்ணீர் , ஆராய்ச்சிக்கு தேவையான பொருட்கள் போன்றவைகளை பூமியிலிருந்து கொண்டுப்போய் கொடுத்து வருகிறது. அதேப்போல் ஆகஸ்ட் 6 ஆம் தேதியும் சிக்நஸ் விண்வெளி கப்பல் (Northrop Grumman’s Cygnus) 8200 பவுண்ட் உணவு, நீர்,மருந்துகள் என எல்லாவற்றையும் மையத்துக்கு கொண்டு சேர்த்திருக்கிறது.
உலக விண்கல உந்து இயந்திரங்கள் உற்பத்தி நிபுண விஞ்ஞானிகள் “ஸ்டார்லைன் கிளம்பும் போதே ஹீலியம் வாயு கசிவு ஏற்பட்டதே? அதை சரி செய்த பின்னர் விண்வெளிக்கு அனுப்பியிருக்கலாமே!ஏன் இந்த அவசரம்?” என்று கவலையுடன் நாசாவை நோக்கி கேள்விகள் எழுப்புகிறார்கள்.
விண்கலம் கோளாறானாலும் வீரர்களை அதில் அவசர அவசரமாக நாசா அனுப்பியதற்கு அரசியல் ரீதியான காரணங்களும் இருக்கலாம் என சொல்கிறார்கள்.
அதாவது இந்த சர்வதேச விண்வெளிமையம் 15 நாடுகளின் கூட்டமைப்பில் 1998 ல் கட்டமைக்கப்பட்டது. அமெரிக்காவின் பரம வைரியான ரஷ்யாவும் இதில் பெரும் பங்குதாரர். எதிரியாக இருந்தாலும் அறிவியல், விண்வெளி ஆராயச்சிகளில் ஒருவருக்கொருவர் உதவிக்கொண்டு தான் இரு நாடுகளும் இருக்கின்றன. ஆனால் தற்போது உக்ரைன் ,ரஷ்யப்போரில் அமெரிக்க ரஷ்ய விரோதம் உச்சத்தை அடைய, அமெரிக்கா இனிமேலும் விண்வெளி காரியங்களில் ரஷ்யாவை நாம் ஏன் சார்ந்திருக்க வேண்டும் என எண்ணுகிறது.
ரஷ்யா 2020 உடன் சர்வதேச விண்வெளிமையத்தில் தனது செயல்பாட்டை நிறுத்திக்கொண்டது. குறைந்தபட்சம் 2028-ஆம் ஆண்டு வரை தொடர்ந்துஈடுபட்டு மையத்தை வழிநடத்துவோம் என்று ரஷ்யா கூறினாலும், மற்ற நாடுகளும் 2030-ஆம்ஆண்டு வரை மட்டுமே மையத்துக்கு நிதி உதவிஅளிப்பார்கள் என்று கூறப்படுகிறது. ஏனென்றால் 1998 ல் ஆரம்பிக்கப்பட்ட சர்வதேச விண்வெளிமையம் 2031 வருடத்தோடு காலாவதி ஆகிவிடும் என்கிறார்கள்.
காலாவதி ஆகும் பட்சத்தில் சர்வதேச விண்வெளி மையத்தை பூமியின் வளிமண்டலத்திற்குள் இழுத்து , அதை எரித்து பாக்கியை கடலில் விழுந்து கரையும்படி செய்து விடுவார்கள். அதை அழித்து கடலில் தள்ள நாசா இப்போதே எலான்மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸுடன் ரூ7000 கோடிக்கு ஒப்பந்தம் போட்டிருக்கிறது .
எதிர்காலத்தில் விண்வெளியில் பல தனியார்நிறுவன கூட்டமைப்புகள் வணிகரீதியான விண்வெளி நிலையங்களைத் துவங்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. நிலவின் சுற்றுப்பாதையிலும் நிலவு நடைப்பாதை என்ற பெயரில் புது விண்வெளி மையம் அமைக்க ஏற்பாடு நடக்கிறது.
இந்தியாவும் அடுத்த வருடம் ஒரு விண்வெளி வீரரை அனுப்பவும், விண்வெளிமையம் அமைப்பதற்கும் 2045ல் நிலவில் கால் பதிக்கவும் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறது.
புதிதாக விண்வெளி மையங்கள் உருவாகும் பட்சத்தில் தங்கள் கை ஒங்கி இருக்க வேண்டும் என்பதற்காக சில முயற்சிகளை இப்போதே தொடங்கியுள்ளது அமெரிக்கா.
அதன் ஒரு பகுதி தான் தங்கள் நாட்டின் நிறுவனமான போயிங் உடன் ஒப்பந்தம் போட்டு அவர்களின் ஸ்டார்லைன் விண்கலத்தை உபயோகித்துள்ளது நாசா. அதோடு அமெரிக்காவில் தேர்தல் சமயமாகவும் இருப்பதால் உலகஅரசியல் காரணமாக விண்வெளி விவகாரங்களில் இனி ரஷ்யாவிடம் அதிக உதவி கேட்கக்கூடாது என்று முடிவு செய்து , அமெரிக்காவின் போயிங் நிறுவனத்தின் விண்கலத்தில் கோளாறுகள் ஏற்பட்டாலும் பயணம் தடைப்பட கூடாது என அதே கோளாறுப்பிடித்த ஸ்டார்லைன் விண்கலத்தில் சுனிதா அனுப்பிவைக்கப்பட்டுள்ளார். குறித்த நேரத்தில் பூமிக்கு விண்கலம் திரும்பி வராததால் போயிங் நிறுவனத்திற்கு ரூ1500 கோடிக்கு மேல் நஷ்டம் என்கிறார்கள். சுனிதாவையும், வில்லிமோரையும் எலான் மஸ்க்கின், ஸ்பேஸ் எக்ஸ் மூலம் பூமிக்கு கொண்டு வர நாசா அவர்களுடன் பேசிக்கொண்டிருக்கிறது.
குஜராத்தை பூர்விகமாக கொண்ட சுனிதா காந்தியை பெரிதும் மதிப்பவர். காந்தியின் சத்தியசோதனை புத்தகத்தையும் பத்திரப்படுத்தி வைத்திருக்கும் சுனிதா அடிக்கடி “கல்பனா சாவ்லாவின் கனவை நான் நிறைவேற்றுவேன்” என கூறுவார்.
ஒரு தேசமல்ல.., இரு தேசங்களல்ல, உலகம் முழுவதும் இந்த இருவருக்காகவும் பிரார்த்திக்கின்றன.
பத்திரமாக சுனிதா தனது சக வீரருடன் பூமி திரும்புவார். நிச்சயம்.
Leave a comment
Upload