# இது புதுசு

இதற்கு முந்தைய தலைமுறை வரை புராணங்கள், இதிகாசங்கள், வரலாறு, சரித்திரம், வாய்வழிக்கதைகள் (telltales), நாடோடிக் கதைகள், போன்றவை மனித வாழ்வின் ஒரு இன்றியமையாத அங்கமாக இருந்தன. சுவடிகள், சான்றுகள், முன்னோர்கள் என்று வழி வழியாக பாட்டி தாத்தா வரை தொடர்ந்து நமக்கும் வந்து சேர்ந்தது. முந்தைய தலைமுறையினரின் சிறுபிராயம் என்பது எலக்ட்ரானிக் சாதனங்களின் ஆரம்ப கால கட்டமாக இருந்தாலும் அதுவரை காலையிலோ, மதியத்திலோ, அந்தி வேளையிலோ, இரவிலோ அல்லது விடுமுறை நாட்களின் ஏதோ ஒரு தருணத்திலோ தாத்தாவோ பாட்டியோ அம்மாவோ அப்பாவோ அல்லது ஏனைய சொந்தங்களோ கூடத்தில் அமர்ந்து கதைகள் சொல்லி உணவிடுவது வழக்கமாக இருந்தது. அந்தக் காலக்கட்டத்தில், அதாவது 1990களில் ஒரு twist.
Communication எனப்படும் தகவல் தொடர்பு பெரும் சிறகெடுத்துப் பறந்து, மனித மனங்களின், உணர்வுகளின் சிறகுகளை முறித்துப் போட்ட ஒரு twist.
கற்காலத்தில் பாறையில் கற்களால் எழுதியும், புராணங்களில் அன்னப் பறவையையும் அரசர்கள் காலத்தில் புறாக்களைத் தூது விட்டும், முரசு கொட்டியும், பிறகு ஆட்கள் மூலமும், பின்னர் கடிதம் மூலமும் வளர்ந்த தகவல் தொடர்பானது. படிப்படியாக வளர்ச்சி கண்டு, பேஜர், செல்ஃபோன், இருபத்தி நான்கு மணிநேரத் தொலைகாட்சி ஒளிபரப்பு, FM ரேடியோ என்று வியாபித்து, இப்போது இணையம், youtube, android, iphone, மற்றும் இன்னபிற electronic deviceகளின் பிரவாகத்தில் விரல் நுனியில் ஒரு தொடுதலில் வந்து நிற்கிறது.
ஐயா, அது விஞ்ஞான வளர்ச்சி என்று சொல்லும் மேதாவிகளை ‘அதெல்லாம் எங்களுக்கும் தெரியும்’ என்கிற ரீதியில் ஒரு அலட்சியப் பார்வையுடன் கடந்து செல்வோமாக.
நூறு வீடுகளுக்கு ஒரு வீட்டில் பொருத்தப்பட்டிருக்கும் தொலைபேசியை எப்போதோ ஒருமுறை உபயோகித்து, நாளிதழ்களில் செய்திகள் படித்து, ரேடியோவில் நிகழ்ச்சிகள் கேட்டு ரசித்து, தூரதர்ஷனில் ஒளியும் ஒலியும் மற்றும் வார இறுதி திரைப்படத்துக்காகக் காத்திருந்த காலம் வரை மனித மனங்களுக்குள் உறைந்திருந்த ஒரு இணக்கமும் பரிவும் பாசமும் பந்தமும் இப்போது இல்லை. சாதனங்களின் வடிவில் communication அபரிமிதமான வளர்ச்சி கண்டிருந்தாலும் மனதளவில் அந்த உணர்வுபூர்வமான தகவல் பரிமாற்றம் இல்லை. முந்தைய தலைமுறையின் அக்கறை கலந்த தவிப்பை இந்தத் தலைமுறைக்குப் புரிய வைக்கும் ஒரு சீரிய முயற்சிதான் தொடரப்போகும் இந்தப் படைப்புகளின் நோக்கம்.
கதைகள் உருவான கதை:
அது ஒரு காலம்.
BCE, CE, கி.மு., கி.பி. என்ற அளவுகளுக்குள் அடங்காமல் சென்ற காலம், நிகழ் காலம், எதிர்காலம் என்ற கோட்பாடுகளின் வரையறையில் மணித்துளிகளும் நாட்களும் நகர்ந்து கொண்டிருந்த ஒரு காலம் அது.
கல்தோன்றி மண்தோன்றா காலத்துக்கும் ஈடன் தோட்டத்தில் ஆதாமைப் புறக்கணித்து பாம்பின் சொல்கேட்டு ஏவாள் பழம் சாப்பிட்டு கொட்டை போட்ட காலத்துக்கும் இடைப்பட்டதொரு காலம் என்றும் வைத்துக் கொள்ளலாம். என்னிடம் அதற்கான சான்று இல்லை.
மயன் காலண்டர் தயாரித்த மூதாதையர்களின் வழிவந்தவர் என்று தன்னை பிரகடனப்படுத்திக்கொண்ட ஒருவரிடம் சற்று நேரம் பேசியபோது அவருடைய date of birth குறித்தே அவருக்கு சந்தேகம் இருப்பது புரிய வந்ததும், விட்டால் போதும் என்று வந்து விட்டேன். நல்லவேளை! என்னுடைய பிறப்பு குறித்த விவரங்கள் எனக்கு நினைவிருந்தது.
அத்தகைய கால கட்டத்தில்தான் telltales எனப்படும் வாய்வழிக்கதைகள் தோன்ற ஆரம்பித்தன. மனிதகுலம் அறிவை விட மனதை அதிகம் நம்பிய காலம் அது. அதனால்தானோ என்னவோ, கற்பனை வளம் இப்போதை விட அப்போது மிக அதிகமாக இருந்தது.
நிகழ்ந்தவைகளைக் கண்டவர்கள், காணாதவர்களிடம் உணர்ச்சிபூர்வமாகப் பகிர்ந்து கொண்டார்கள். கண்டவர்கள் சொல்வதைக் கேட்க ஊரே கூடியது. படம் பார்த்துக் கதை சொல்லும் குழந்தை போல் கண்டதை மட்டுமே சொன்னவர்கள் பின்னர் காலத்தின் மாற்றத்தில் காட்சிகளை மாற்றினார்கள். காணாதோரிடம் வகை வகையாய்ப் பகிரும் பேரார்வத்தில் கண்டவற்றை மிகைப்படுத்திச் சொன்னார்கள்.
ஒரு காலகட்டத்தில் இது மிகையென்று தெரிந்தும் சுவாரஸ்யம் கருதி அவற்றையும் ஆர்வமுடன் காது கொடுத்துக் கேட்டு ரசித்து, வெகுண்டு, மருண்டு, பிரமித்து, நிகழ்வுகளுடனும் கதைகளுடனும் இரண்டறக் கலந்தனர் வெள்ளந்தியான மாந்தர்.
அதுவே இன்றளவும் தொடர்கிறது.
பூமியில் மானிட ஜென்மம் எடுத்து, வாழ்ந்து, மறையும் எண்ணற்ற மாந்தரில் சிலரைப் பற்றிய கதைகளும் அவர்கள் சார்ந்த சம்பவங்களும் நம் அறிவை ஈர்த்து, மனதை மயக்கி, உணர்வுகளைத் தூண்டும் திறன் கொண்டவை.
அவற்றை இங்கே தொகுத்து வழங்குவதில் பெருமை அடைகிறேன்.
(மீண்டும் சந்திப்போம்)

Leave a comment
Upload