
தாத்தாவிற்கு மனசே சரியில்லையாம் , ஏது என்ன என்று யாராவது கேட்டிங்களா ? என்று பெயரன் தன் அம்மாவையும் அப்பாவையும் கேட்டபோதுதான் அவர்களுக்கே தோன்றியது, ஆமாம் அப்பா இப்படி இருக்க மாட்டாரே என்று.
ஏதோ பாட்டியுடன் விவாதம் ஆகியிருக்கு என நினைத்து, ஏம்பா,ஒருமாதிரி இருக்கீங்க,உடம்பிற்கு ஏதும் செய்யுதா? என கேட்ட மகனிடம், மின்சாரவாரியத்திலிருந்து வந்த கடிதம் ஒன்றினை மகனிடம் கொடுத்தார்.
நீண்ட வருடங்களாக வீட்டு வாசலில் இருக்கின்ற வேப்பமரத்தை வெட்டுவதற்கான அறிவிப்புக் கடிதம் என படித்ததும் தெரிந்துக் கொண்ட மகன்,
அதனால் என்னப்பா, மின்பாதைக்கு இடைஞ்சலாக இருப்பதால் அகற்ற வருகின்றனர் என வெறும் ஒரு செய்தியாக சொன்னான்.
வந்த அறிவிப்புக் கடிதம் முதல் முறையல்ல, ஆனால் இம் முறை இறுதியானது என்றவர்,
இங்கு நிலம் வாங்கி வீடுகட்டி வந்தபின் தான் நீ பிறந்தாய் என்றவர், இன்று உனக்கு வயது என்ன ?
ஐம்பத்தி ஒன்று என்றான் மகன்.
உனது பத்தாவது பிறந்தநாளில் உன் கையால் வைத்த மரக்கன்று அது,
உன் வளர்ச்சியையும், அதன் வளர்ச்சியையும் ஒரு சேர ரசித்து வளர்த்து வந்தேன் நாற்பது வருடங்களாக என்றார்.
மரம்தானே தாத்தா ! வேறு இடத்தில் வைத்து விட்டால் போதுமே என்ற பெயரனிடமும், அதானே என்ற மகனிடமும்,
உங்களுக்கு வேண்டுமானால் அது மரமாகத் தோன்றலாம் எனக்கு தாய்மடி போன்று கிடைத்திட்ட வரம்பா...
பிறருக்கு உதவுவதைத் தவிர வேறு ஒன்றையும் அறியாதவை மரங்கள் என்றவருக்கு
தனிமையாக அமர்ந்து அதனுடன் பேசியதும், களைப்படைந்த நேரத்தில் காற்றாட மனைவியுடன் அமர்ந்து கதைப் பேசியதும், கோடையில் நீங்களெல்லாம் விளையாட பாதுகாப்பாக இருந்ததும்,அக்கம்
பக்கத்தினரோடு அமர்ந்து எத்தனை நியாயங்கள், தர்க்கங்கள்,
சுப துக்கங்கள் என பேசியவைகள் எல்லாம் நினைவில் வந்துப்போனது தாத்தாவிற்கு.
கடந்த இரண்டு ஆண்டுகளாகவே இந்த மரத்தை வெட்டுவதற்கு அறிக்கையினை தொடர்ந்து கொடுத்துக் கொண்ருடிருக்கிறார் கள்,நான்தான் அதன் கிளைகளை அவ்வப்போது கழித்து வெட்டுவதற்கு மறுப்புத்தெரிவித்து பாதுகாத்து வந்தேன்.
வீடுகள் பெறுகி மின்சாரம் உபயோகம் அதிகமானதும், மின்பாதைபை பராமரிக்க இதை வெட்டுவதற்கு
இரண்டு வருடங்களாக அறிக்கைகளை தீவிரமாக அனுப்பி வருகின்றனர்.
எத்தனையோ புயல், காற்று,மழை கடந்து வந்தமரம் இத்தனை ஆண்டுகளாக மக்களுக்கு நிழலும், ஆரோக்கியத்தையும் கொடுத்தது.
அதனை வேரோடு வெட்டுவதை நினைக்கும்போது என் மனம் கவலைக் கொள்கிறது என சொல்லும்போதே மின்வாரிய ஆட்களும், எடைத்தூக்கி எந்திரங்களும் வீட்டு வாசலில் வந்து நின்றன. அதிகாரி ஒருவர் வந்து தாத்தாவைக் கூப்பிட,
சற்று இருங்கள் என மஞ்சள்,குங்குமம், பால்,பூக்கள் எல்லாம் எடுத்துவந்து வைத்து அதற்கு படைத்துப் பால் அபிடேஷகம் செய்து மாலைசாற்றி அதை இறுக்கமாக கட்டித்தழுவியவர் அதன் வெடித்திருந்த மேற்புறப் பட்டைகளில் தனது கைகளால் வருடி தனது ஆறுதலை அளித்தார் கண்ணீருடன்.
நிறைய உழைத்துவிட்டாய், நீயாக விழுவதற்கும் வாய்ப்பு உள்ளது, ஆகையால் உன்னை நாங்கள் இங்கியிருந்து அகற்றுகிறோம், எங்களை மன்னித்துவிடு, என தாத்தா கருணையோடுப்பேச,
அந்தசமயத்தில் வீசிய காற்றினில் அசைந்த மரத்தின் கிளைகள் அதனை ஆமோதிப்பது போல் ஆடியதைக் கண்டு மின்வாரிய ஊழியர்களும் கண்கள் கலங்கிட நின்றனர்.
ஐயா, வருத்தமே படாதீங்க. இன்றே, யாருக்கும் இடைஞ்சல் இல்லாமல் இதே பகுதியில் நீங்கள் சொல்லுமிடத்தில் வேப்பங்கன்றுகளை வைத்து விடலாம், நாங்கள் பத்துமரங்கள் நட்டுத் தருகின்ற ஏற்பாட்டோடுதான் வந்திருக்கின்றோம் என்ற அதிகாரி பேசியதும் சிறிது ஆறுதலடைந்தார் தாத்தா.
மரம் அங்கியிருந்து அகற்றப்பட்டு பெரிய, பெரியத் துண்டுகளாக்கி வீட்டு வாசலில் அடுக்கி வைத்ததைக் கண்ட தாத்தாவிற்கு தன்னுடமிருந்த எதையோ அடியோடு வலுக்கட்டாயமாகப் பரித்ததைப் போல் உணர்ந்தார்.
எடுத்துவந்த மரக்கன்றுகளை மின்பாதைக்கு இடையூறு இல்லாத இடங்களில் தாத்தா, மகனும்,பெயரனும் இணைந்து நட்டுவிட்டு கிளம்பினர் ஊழியர்கள்.
பிறகு பெய்த தொடர் மழையினால் நட்டு வைத்தவைகளில் புத்தம் புதுத்தளிர்கள் முளைத்து வந்திருந்தன.
வெட்டி அடுக்கி வைக்கப்பட்டியிருந்த பழைய மரத் துண்டுகளிலிலிருந்தும் புதியதாக துளிர் கிளம்பி வந்திருந் ததைக் கண்ட தாத்தா மகனிடம்,
இதோ பாரு..நம்மை என்றும் பிரிவதில்லை என்று சொல்வது போல திரும்பத் தளிர்கள் கிளம்பியிருக்கு என தன் மகனின் கண்ணத்தை வருடிய தாத்தா,பெயரனின் கைகளைப்பற்றிக் கொண்டார்.
அன்பால் நிறைந்து இதயம் சிலிர்த்த தந்தை கரங்களின் சில்லென்ற ஸ்பரிசத்தில் மெய் சிலிர்த்தது மகனுக்கு.
மரம் துளிர்க்கத்தான் மண்ணில் ஈரம் வேண்டும்.
மனத்தில் கருணைச் சுரக்க ஒரு சொட்டு உண்மையான கண்ணீரே போது மானதாக இருந்தது.
தொடர்கள்
கதை

Leave a comment
Upload