
"அப்படி என்ன சக்தி அது பாட்டி?"
என்று நான் கேட்க,பாட்டி "சொல்றேன்" என்றாள்.
பின் பேரப் பிள்ளைகள் எல்லோருக்கும்ஆளுக்கு ஒரு சிறிய துண்டு நார்த்தங்காய் ஊறுகாயை கொடுத்து விட்டு மீண்டும் தயிர் சாதத்தை எங்கள் கையில் இட்டு கதையை விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தாள்.
" அது அற்புத சக்தியோ என்னவோ, அது அவனுக்கு எப்படி வந்தது என்பது ஆதியே சொல்லித்தான் மற்றவர்களுக்குத் தெரியும். நம்பற மாதிரி கதை இல்ல. ஆனா அவன் குறி சொல்றது எல்லாமே அப்புறம் ஒரு மாதிரியா சரியா நடந்தது என்பதுஆச்சரியமான உண்மைதான்.
1964 ம் வருஷம் தான்.
ஒரு நாள்நள்ளிரவில் வயிறு சரியில்லாமல் தூக்கம் வராத போது சானம்மா பாட்டி வீட்டுக்கு பின்னால இருக்கும் தாமிரபரணிக் கரை வழியாக நடந்துகொண்டிருந்தான் ஆதி.
கோவிலுக்கு தெற்கே உள்ள மாடசாமி சிலை பக்கத்திலிருந்து யாரோ அழைத்தது அவனுக்கு கேட்டுதாம்.ஆனால் அங்கு யாரும் இல்லை..பயத்தோடு மேலே நடந்து சென்ற ஆதியின் முதுகில் ஒரு கை விழுந்ததாம். திரும்பினால் மாடசாமியே தன் குதிரையில் தேஜசுடன் அமர்ந்து இருக்கிறாராம் . அவர் கையில் வெற்றிலை பாக்கு தாம்பூலத்தை வைத்துக்கொண்டு, சாப்பிடு என்று கொடுத்தாராம் . பயத்தில் விழுங்கி விட்டு வீட்டுக்கு ஓடி வந்து விட்டானாம் ஆதி..
அன்றிலிருந்து மூன்று நாள் ஏக ஜுரம். மாடசாமி பெயரை சொல்லி அனத்தி இருக்கிறான்.
பாட்டி ஆதிக்கு மொட்டை அடிப்பதாக மாடசாமியிடம் வேண்டிக் கொள்ள
ஒரு வழியா உயிர் பிழைச்சுட்டான்.
மொட்டை அடிச்ச அடுத்த வாரம். சுந்தரமூர்த்தி வீட்டில் இருந்து நெல் மூட்டைகளை அள்ளி மொட்டை மாட்டு வண்டியில் ஏற்றிக் கொண்டிருந்த பேச்சி முத்துக் கோனாரிடம். " கோனாரே வண்டியை பார்த்து ஓட்டுங்க. வழியில் குடை சாய்ந்திட போகுது.. உங்க காலும் ஜாக்கிரதை. " என்று சொல்லிவிட்டு போய்க் கொண்டே இருந்தானாம் ஆதி .
கோனார் இதைப்பற்றி பெரிசா மதிக்காமல் போயிருக்கிறார்.
ஆதி சொன்ன மாதிரி பெரிய வாய்க்கால் பாலம் ஏறும் போது அச்சு முறிந்து வண்டி குடை சாய்ந்து விழுந்து கோனாருக்கு காலில் அடி. நல்லவேளை எலும்பு முறிவில்லை.
இது அடுத்த நாள் கோனார் சொல்லி ஊரெல்லாம் தெரிந்து விட்டது.
அதன் பின்பு ஊர் மக்களில் பெரும்பாலோர் அவனைத் தனியாக பார்க்கும் போது தங்கள் எதிர்காலம் பற்றி கேட்காமல் இருக்க மாட்டார்கள். ஆதியின் அசட்டுத்தனமான பதில்களை உதாசீனப்படுத்தி விட்டு தங்கள் சம்பந்தமான விஷயங்களை மட்டும் வடிகட்டி,வேதமாக எடுத்துக் கொண்டார்கள்.
ஆதியிடம் ஒரு தொந்தரவு.! ஜோசியம் சொல்லிவிட்டு ஒரு ரூபாய் கேட்பான்.
ஆனால் உள்ளூரில் யாரும் அதை பெரிசா மதிச்சதில்லை. ஓசி ஜோசியம் கேட்டு விட்டு பணம் அப்புறம் தருகிறேன் என்று சொல்லிவிட்டு சென்று விடுவார்கள.
இப்படி இருக்கையில் தான் இன்னோர் முக்கியமான நிகழ்வு நடந்தது.
1964ஆம் வருஷம் மே மாசம் 26 ஆம் தேதி அன்று மேலத் தெருவில் இருக்கும் எலிமெண்டரி ஸ்கூல் வாசலில் நின்று பிள்ளைகளைப்
பார்த்து ஆதி கத்தினான்.
.
"டேய்! நாளைக்கு மத்தியானம், நாளன்னிக்கு எல்லாம் உங்களுக்கு லீவுடா. " என்று.
கோபத்துடன் வெளியே வந்த ஸ்கூல் ஹெட் மாஸ்டர்
பிரம்பை ஓங்கி ஆதியை விரட்டினார்...
"இந்த லூசுப் பய வந்து ஸ்கூலுக்கு வர்ற பசங்களையும் கலைச்சிடுவான் போல. " என்றார்.
அடுத்த நாள் ஜவகர்லால் நேரு மறைந்தார்.அன்று மத்தியானம் விடுமுறை. அடுத்த முழு நாள் லீவு.
ஆதி மீது இந்த நிகழ்ச்சிக்குப் பின் ஒரு பயம் பூசிய ஆச்சர்யம்
ஊர் முச்சூடும் பரவியது.
இப்போதெல்லாம் யாரும் ஆதியை இழுத்து வைத்து கிண்டல் செய்வது இல்லை. முடிந்தால் உண்டியலில் காலணா போட்டு விட்டுப் போய் விடுவார்கள்.
அதுக்கப்புறம் ஆதி குறி சொல்லி
நிறைய விஷயங்கள் ஊரில் நடந்தன.ஒரு ஆச்சரியம் என்ன வென்றால் எதிர் காலம் மட்டும் இல்லாமல் சில சமயம் பழைய காலத்தில் நடந்த விஷயங்களையும் சரியா சொன்னான்.
.
1964 அக்டோபர்.
பெருமாள் கோவிலில்
உற்சவம் முடிந்த அன்று ரொம்ப நாள் கழித்து கோவில் உண்டியல் திறந்து காசு எண்ணப்பட்டது.
நெல்லையிலிருந்து இரண்டு அறநிலைத்துறைக்காரர்கள்,.. ஒருவர் அதிகாரி, மற்றவர் அவர் உதவியாளர்..... இவர்கள் வந்திருந்தார்கள். தவிர கோவில் தர்மகர்த்தா,அர்ச்சகர்,. மற்றும் ஊரிலிருந்து மூன்று பேர். உண்டியல் பணத்தை எண்ண என்று முடிவாகியது.
உண்டியல் எண்ணுவதை பார்வையிட ஊர் மக்களில் யாராவது சாட்சியாக வேண்டும் என்று கேட்டனர்.'
"நான் இருக்கேன்' என்றான் ஆதி. தர்மகர்த்தா தலை அசைக்க அதிகாரிகள்" சரி" என்றனர்.
ஆதி தன் மண் உண்டியலை கக்கத்தில் இடுக்கிக் கொண்டு கோவில் உண்டியலுக்கு பக்கத்தில் வந்து அமர்ந்தான்.
ரொம்ப நாளாக திறக்காததால்
கோவில் உண்டியல் கிட்டத்தட்ட ரொம்பி இருந்தது. ரூபாய்கள் ஒரு பக்கமும் காசு ஒரு பக்கமும் எடுத்துக் குவிக்கப்பட்டன.
ஐந்து பேர் எண்ணஆரம்பித்தார்கள்.
எண்ணிய காசுகள், நோட்டுகள் எதிர் பக்கமாக குவிக்கப்பட்டன.
திடீரென்று காற்று அடிக்க எண்ண ப்பட்டிருந்த ஒரு ரூபாய் நோட்டுகளில் ஒன்று பறந்து ஆதி மடியில் வந்து விழுந்தது. ஆதி அதை எடுத்து சாவகாசமாக தன் உண்டியலில் போட்டுக்கொண்டான்.
அறநிலையத்துறை அதிகாரி அதை பார்த்து "டேய் கோவில் பணத்தை உன் உண்டியல்ல போட்டுக்கிறியா ராஸ்கல்" என்றார்.
" இது எனக்கு பெருமாள் கொடுத்தார் மாமா. என் பாட்டிக்காக.. பெருமாளுக்கு நான் எவ்வளவு வேலை செஞ்சு இருக்கேன் இந்தக் கோவில்ல. ஒரு ரூபாய் பெருமாள் தாராளமா எனக்கு கொடுக்கணும். "
என்றான் ஆதி.
"பெருமாள் பணத்தை திருடறான் ராஸ்கல்" என்று எழுந்தார் அதிகாரி.
தர்மகர்த்தா, "அவன் பைத்தியம். அவனை விட்டு விடுங்கள். பணத்தை தானே கொண்டு வந்து அப்புறம் கொடுத்துடுவான். "என்றார்.
அதிகாரி கோபமானார்.
"ஒழுங்கா பணத்தை வந்து கொடுக்கிறியா இல்லாட்டி உதை வாங்கறியா" என்றவுடன் அவருடைய உதவியாளர் ஆதியின் கைகளைப் பிடித்துக் கொள்ள அதிகாரி ஆதியின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார்.
ஒரு வினாடி அதிர்ச்சியுடன் நின்ற ஆதி அழ ஆரம்பித்தான்.
பின் அதிகாரியை பார்த்து "எனக்கு கொடுக்க வேண்டிய ஒரு ரூபாயை பெருமாள் கிட்ட இருந்து நான் வாங்கிக் கொண்டது
தப்புங்கறேள்..
போன மாசம் வீரவநல்லூர் பக்கத்துல பெருமாள் கோவில் உண்டியலில் பணம் எண்ணிய போது உண்டியல் பணம்40 ரூபாயை -நாலு பத்து ரூபாய.. நீங்க யாருக்கும் தெரியாம உங்க ஜிப்பா பையில் வச்சுக்கலையா? பெருமாள் கிட்ட சம்மதம் வாங்கினேளா?அது மட்டும் சரியா" என்றான்?
அதிகாரி அதிர்ந்தே போனார். முகம் முழுக்க வியர்வை துளிர்த்தது.
பயம் தெரிந்தது.
"பைத்தியத்துக்கு என்ன திமிரு பாருங்க.என்னையே சொல்றியாடா?" என்று கையை ஓங்கியவாறு ஆதி யைப் பார்த்து வரும்போது.ஆதி நிதானமாக "சார் அடிக்காதீங்க . பத்தமடை கோவிலில் போன வருஷம் அம்பாள் நெத்திச்சூட்டியை என்ன பண்ணுனீங்கன்னு இங்கே சொல்லட்டுமா? " என்றான்.
அதிகாரி ஆடிப் போய் நிற்க தன் கைகளைப் பிடித்துக் கொண்டிருந்த உதவியாளரை தள்ளிவிட்டு, ஆதி தன் மண் உண்டியலை எடுத்துக் கொண்டு கோவிலை விட்டு வெளியே ஓட ஆரம்பித்தான். "நான் இனிமே இந்த ஊருல இருக்க மாட்டேன். நான் போறேன்.. "
என்று கத்திக் கொண்டே சென்றான்.
தர்மகர்த்தா அதிகாரியை ஆசு வாசப்படுத்தினர்.
"அவன் தான் பைத்தியம் என்று தெரியுமா இல்லையா! அவன் வார்த்தையை ஏன் பெருசுபடுத்த வேண்டும். அவன் எடுத்துக் கொண்டு போன ஒரு ரூபாயும் நாங்க கொடுத்து விடுவோம். அவனை விடுங்கோ.நீங்க வாங்கோ. " என்று உள்ளே கூட்டிக் கொண்டு போனார். .
.
அன்றைய விஷயம் முடிந்தது.
கோவிலை விட்டுப் போன ஆதி ஊரை விட்டு போய்விட்டான்.
அப்புறம் திரும்பவே இல்லை.
ரெண்டு நாள் இந்த விஷயத்தைப் பற்றிய எல்லாரும் பேசினார்கள். அப்புறம் வழக்கம் போல மறந்து விட்டார்கள்.
சானம்மா பாட்டி இதை பெரிசாக எடுத்துக் கொள்ளவே இல்லை.
வருத்தமோ கவலையோ தெரியவில்லை.
இது போல் ஒரு நாள் நடக்கும் என்று அவள் எதிர்பார்த்த மாதிரி தான் பேசினாள்.
அவளிடம் கேட்டபோது,
" அன்னைக்கு ராத்திரி ஆதி கோவிலில் இருந்து வரும் போது நான் தூக்க கலக்கத்தில படுத்து இருந்தேன். ஆதி உள்ளே நுழைந்து . ரெண்டு நிமிஷம் தான் வீட்டுல இருந்தான். என்னை எழுப்பலை.அப்புறம் வீட்டை விட்டு வேகமா வெளியே போயிட்டான்.
எனக்கு பிள்ளை கிடையாதே.இந்த பய எனக்கு கர்மம் பண்ணுவன் என்று நினைத்தேன். ஆனா ஓடிப்போயிட்டான். போறான் போ. எங்கேயோ நல்லா இருந்தா சரி."
என்று சொல்லிவிட்டாள் பாட்டி
ஆதி திரும்பி வரவே இல்லை.
ஆறு மாசம் கழிச்சு, ஒரு நாள் அதிகாலையில் சானம்மா பாட்டி யாரையும் படுத்தாமல் தனது 76வது வயதில் எளிதாக இறந்து விட்டாள்.
பாட்டிக்கு யார் கர்மம் பண்ணுவது என்பது பெரிய பிரச்சனை இல்லை.ஆனால் யார் எல்லாம் அதற்கு பணம் தரப் போகிறார்கள். என்பது பெரிய கேள்வியாக இருந்தது.முதலில் தகனம் பண்ணிடலாம். அப்புறம் மற்ற காரியம் பற்றி யோசிக்கலாம் என்று முடிவு செய்தார்கள்.
பாட்டியின் உடலை தரையில் கிடத்த, பரணிலிருந்து ஒரு பாயை ஊர்க்காரர் ஒருவர் உருவி எடுத்த போது அதன் இடுக்கில் இருந்த ஆதியின் மண்சட்டி உண்டியல் கீழே விழுந்து நொறுங்க சில்லறைகள் பரவின. எண்ணிப் பார்த்தால் சரியாக முப்பது ரூபாய் சில்லறை. அப்புறம் கோவில் உண்டியலில் இருந்து எடுத்த அந்த ஒரு ரூபாய்.
13ம் நாள் காரியமும் பாட்டிக்கு நன்றாக, ஜோராக முடிந்த போது மொத்தமாக ஆன செலவு சரியாக 31 ரூபாய்தான். "
என்று நிறுத்தினாள் பாட்டி.!
எல்லாரும் சாப்பிட்டு முடித்து
பாத்திரங்கள் காலி.
"அப்புறம் ஊருக்கு திரும்பி வந்தானா ஆதி" என்று கேட்டேன் நான்.
இன்னைக்கு வரைக்கும் அவன் வரலை. ஆதி ரொம்ப நல்ல ஆத்மா.அப்புறமா வயசான பின்னால் இந்த ஊருக்கு வருவானோ என்னவோ.தெரியல.
அது அந்த பகவானுடைய விருப்பம்.
ஆனா இந்த தாமிரபரணியில் சாக்கடையை கலக்குறான் பாரு. அவனை எல்லாம்
இந்த பகவான் சும்மா விடக்கூடாது என்பது என் விருப்பம் . "
என்று சொல்லிவிட்டு பாத்திரங்களைக் கழுவ ஆற்று படித்துறைப் படிகளில் நிதானமாக இறங்கினாள் பங்கஜம் பாட்டி!!
(முற்றும் )

Leave a comment
Upload