
கடலூர் மாவட்டம் சிதம்பரத்திலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் பிச்சாவரம், வெறும் சுற்றுலாத் தலம் மட்டுமல்ல; இந்தியாவின் சுற்றுச்சூழல் வரைபடத்தில் மிக முக்கிய இடத்தைப் பிடித்துள்ள ஒரு இயற்கை அதிசயம். உலகின் இரண்டாவது மிகப்பெரிய சதுப்புநிலக் காடான (Mangrove Forest) பிச்சாவரம்,சூழலியல் ஆர்வலர்கள் முதல் சாகசப் பயணிகள் வரை அனைவரையும் தன் வசீகரிக்கும் அழகால் கட்டிப்போடுகிறது.
தியேட்டர் மால் என்று சுறறும் ரகமா நீங்கள் ஒரு வார இறுதியில் பிச்சாவரம் சென்று வாருங்கள். கொஞ்சம் வெயில் இருந்தாலும், நீருக்குள் படகில் போகும் போது ஒரு சிலுசிலுப்பை உணரலாம்.
சுமார் 1,100 ஹெக்டேர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள இந்த அடர்ந்த மாங்க்ரோவ் காடுகள், 4,400 சிறிய மற்றும் பெரிய நீர்வழிகளால் பிணைக்கப்பட்டுள்ளன. நீர்வழிகளில் சுமார் 400 வழித்தடங்கள் இருப்பதாக சொல்கிறார்கள்.
படகில் செல்லும்போது மரங்களின் கிளைகள் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்து, சூரிய ஒளி கூட கீழே விழ முடியாதபடி ஒரு 'பச்சை சுரங்கப் பாதையை' உருவாக்குவது இங்கு மட்டுமே காணக்கூடிய அரிய காட்சி.
2004-இல் தமிழகத்தைத் தாக்கிய பேரழிவு சுனாமியின் போது, பிச்சாவரத்தின் அடர்ந்த வேரமைப்புகளும் மரங்களும் அலைகளின் வேகத்தைக் குறைத்து, சுற்றியிருந்த பல கிராமங்களைக் காப்பாற்றியது இதன் சூழலியல் முக்கியத்துவத்திற்கு ஒரு சாம்பிள்.

வங்காள விரிகுடாவின் உப்புநீரும் ஆற்றின் நன்னீரும் சங்கமிக்கும் இந்தக் கழிமுகப் பகுதி, பல்லாயிரக்கணக்கான அரிய வகை மீன்கள், நண்டுகள் மற்றும் இறால் ரகங்களின் இனப்பெருக்க மையமாகத் திகழ்கிறது. அதுமட்டுமின்றி,அக்டோபர் முதல் பிப்ரவரி வரையிலான குளிர்காலத்தில், சைபீரியா, மத்திய ஆசியா போன்ற தொலைதூரப் பகுதிகளிலிருந்து நூற்றுக்கணக்கான புலம் பெயர் பறவைகள் இங்கு முகாமிடுகின்றன.
கான்கிரீட் காடுகளின் இரைச்சலிலிருந்து விலகி, இயற்கையின் மடியில் ஒரு சாகசப் பயணத்தை அனுபவிக்க நினைப்பவர்களுக்கு பிச்சாவரம் ஒரு 'மஸ்ட் விசிட்' ஸ்பாட்.
இப்படி ஒரு கட்டுரை எழுதிவிட்டு போய் விடுவோமா என்ன ?? அங்கிருக்கும் படகு ஊழியர்களின் வாழ்வாதாரம் பற்றி பேச்சு கொடுத்தோம்.
அங்கு யாருக்கும் அரசு நிரந்தர வேலை கொடுக்கவில்லையாம். எல்லாம் காண்டிராக்ட் அடிப்படையில் ஒரு டிரிப் அடித்தால் காசு என்ற ரீதியில் தான் வேலையில் வைத்திருக்கிறார்கள்.
மேலும் சில ஐடியாக்களை செய்யலாம். அதாவது ஒரு திருமண மேடை போல அமைத்து டெஸ்டினேஷன் வெட்டிங் செய்யலாம், அல்லது ஒரு குடில் அமைத்து இரவு கேம்ப் தங்க வைக்கலாம்.
பிரச்சினை என்னெவெனில் தண்ணீர் ஆழம் கிடையாது. பெரிய படகுகள் விட முடியாது. ஆனால் நிரந்தரமாக படகு போல சமாச்சாரங்களை கட்டலாம்.

இதற்குப் பின்னணியில் வேறு சில சுற்றுப்புற சூழல் பாதிப்புக்களும் வரக்கூடும்.
மேலும் நம்மாட்கள் இதையெல்லாம் ஒழுங்காக வைத்துக் கொள்வார்களா என்பதும் சந்தேகம் தான்.
மொத்தத்தில் தமிழத்தில் இருக்கும் ஒரு அருமையான சுற்றுலாத் தலம் பிச்சாவரம்.
பார்க்காதவர்கள் தயவு செய்து விசிட்டுங்கள்.
நமது படகு ஓட்டுனருடன் ஒரு குட்டி வீடியோ இங்கே.......
யாரேனும் இந்த படகு ஓட்டுனர்களின் வேலைக்கு முதல்வரை கவனத்திற்கு எடுத்துச் சென்றால் நல்லது.

Leave a comment
Upload