
சிறப்பு மிக்க ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு, உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரியகோயிலில் பெருவுடையாருக்கு அக்டோபர் 25, 2026 (ஞாயிற்றுக்கிழமை) அன்று பச்சரிசி சாதம், காய்கறி, இனிப்பு வகையால் அலங்காரம் செய்யப்பட்டு அன்னாபிஷேகம் நடைபெறவுள்ளது.
கல்லினுள் தேரை முதல் கருப்பை உயிர்வரை எண்ணாயிரம் கோடி உயிர்களுக்கு உணவு அளிப்பவர் ஈசன். அன்னம்தான் உலகில் வாழும் அனைத்து ஜீவராசிகளுக்கும் உயிர்நாடி. உலக வாழ்க்கைக்கு அச்சாணி. 'அன்னம் பிரம்ம, விஷ்ணு, சிவ சொரூபம்' என்பர். உயிர்கள் அனைத்திற்கும் உயிர்நாடியாகவும், வாழ்க்கைக்கு ஆதாரமாகவும் விளங்குவது அன்னம். உலகுக்கு உணவளிக்கும் இறைவனுக்கு நன்றி செலுத்தும் விதமாக அன்னாபிஷேகம் நடைபெறுகிறது.
உயிர்களுக்கு உணவின் முக்கியத்துவத்தை உணர்த்துவதுடன், பிரம்மனின் கர்வத்தைப் போக்கியது மற்றும் சந்திரனின் சாபம் நீங்கியது போன்ற புராண நிகழ்வுகளோடும் அன்னாபிஷேகம் தொடர்புடையது.

அன்றைய தினம் அனைத்து சிவன் கோயில்களிலும் அன்னாபிஷேகம் நடைபெறும், என்றாலும் தஞ்சை பெரிய கோயிலில் இருக்கும் ஆவுடையாருக்கு நடத்தப்படும் அன்னாபிஷேகம் தனிச்சிறப்பு வாய்ந்தது.
அபிஷேகம் முடிந்தபின், சிவலிங்கத்திலிருந்து பிரிக்கப்படும் அன்னம் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும் மற்றும் நீர்நிலைகளில் உள்ள ஜீவராசிகளுக்கும் அளிக்கப்படும்.
இதற்கான ஏற்பாடுகளை உபயதாரர்களுடன் இணைந்து தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறையினர் செய்து வருகின்றனர்.
தஞ்சை பெரிய கோயில் பெருவுடையார் லிங்கம்:

தஞ்சாவூர் பெரிய கோயில் கருவறையில் வீற்றுள்ள மூலவரான பெருவுடையார் (பிரகதீஸ்வரர்) சிவலிங்கத்தின் திருமேனி இரண்டு அடுக்குகளை உள்ளடக்கிய கருவறைப் பகுதியை ஆக்கிரமிக்கும் அளவுக்குப் பிரம்மாண்டமாக, இந்தியாவின் மிகப்பெரிய ஏகக்கல் (Monolithic) சிவலிங்க வடிவங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. இந்த லிங்கத்தின் அளவை இரண்டு முக்கியப் பிரிவுகளாக வரலாற்று மற்றும் ஆன்மிக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
பானம் (மேல் பகுதி லிங்கம்) எனப்படும் பீடத்திற்கு மேல் காட்சியளிக்கும் லிங்கப் பகுதியின் உயரம் மட்டும் 12 அடிகள். (இது தமிழின் 12 உயிர் எழுத்துக்களைக் குறிப்பதாக ஒரு தத்துவ மரபும் கூறப்படுகிறது).
ஆவுடையார் (பீடம்)என அழைக்கப்படும் லிங்கம் அமர்ந்திருக்கும் கீழ்வட்டப் பீடத்தின் உயரம் 17 முதல் 18 அடிகள்வரை அமைகிறது. (இது தமிழ் மொழியின் மெய் எழுத்துக்கள் 18-ஐக் குறிக்கிறது)
இதன் மொத்தச் சுற்றளவு சுமார் 54 முதல் 55 அடிகள் ஆகும்.
பீடத்தையும் (ஆவுடையார்) அதன் மேல் உள்ள பாணத்தையும் சேர்த்தே ஒட்டுமொத்தமாகக் கணக்கிடும்போது அதன் முழு உயரம் 29 அடிகள் (8.7 மீட்டர்) என வரலாற்று ஆவணங்களிலும் இந்தியத் தொல்லியல் துறை பதிவுகளிலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. தஞ்சை பெருவுடையார் லிங்கம் அதன் பிரம்மாண்டத்திற்காகவும், கட்டிடக்கலை அமைப்பிற்காகவும் உலகப் புகழ்பெற்றது.
தஞ்சை பெரிய கோயிலில் அன்னாபிஷேகம்:

சிவபெருமான் அபிஷேகப்பிரியர் என்பதால் பல பொருட்களைக் கொண்டு அவருக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. செய்யப்படும் அபிஷேகப் பொருள் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு பலன் கிடைப்பதாகப் புராணங்களில் கூறப்பட்டுள்ளது. அவற்றுள் ஒன்று சுத்த அன்னத்தால் (சாதம்) சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்வது மிகச் சிறப்பாகும்.
ஐப்பசி மாத பௌர்ணமி நாளில் சிவபெருமானுக்கு நடைபெறும் அன்னாபிஷேகம், ஐம்பூதங்கள் எனப்படும் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவற்றின் சேர்க்கையால் விளையும் நெல்லைச் சாதமாக்கி, சிவலிங்கத் திருமேனி முழுவதையும் அன்னத்தால் (சாதம்) மூடி அலங்கரித்து இந்த விழா கொண்டாடப்படுகிறது. இந்நன்னாளில், முதலில் ஐந்து வகைப் பொருட்களால் இறைவனுக்கு அபிஷேகம் செய்து, பின்னர் இந்தச் சிவலிங்கத்தை முழுமையாக மூடும் வகையில் சுமார் 1,000 கிலோ அரிசி கொண்டு சாதம் வடிக்கப்பட்டு, பெருவுடையாருக்கு சிறப்பு அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. சாதத்துடன் 500 கிலோவுக்கும் அதிகமான காய்கறிகள் மற்றும் பழங்களைக் கொண்டு சிவலிங்கம் மற்றும் ஆவுடையார் சிறப்பாக அலங்கரிக்கப்படுவர். இந்த அன்னாபிஷேகம் மாலை 6 மணி முதல் இரவு 8 . 30 மணி வரை அப்படியே வைக்கப்பட்டிருக்கும். அந்த நேரத்தில் வேத பாராயணமும், ருத்ரம், சமகம் போன்ற மந்திரங்களின் பாராயணமும் நடைபெறும். பூஜை முடிந்த பின், சிவலிங்கத்தின் மீது சாத்தப்பட்ட அன்னம் பிரசாதமாகப் பிரிக்கப்படுகிறது.

சிவலிங்கத்தின் 'பாணப் பகுதி' (மேல் பகுதி) மீது இருந்த அன்னம் மனிதர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இறைவனின் திருமேனியில் பட்ட இந்த அன்னத்தை உண்பதால் நோய்கள் நீங்கி, ஆரோக்கியம் பெருகும் என்பது நம்பிக்கை.
லிங்கத்தின் 'ஆவுடைப் பகுதி' (கீழ்ப் பகுதி) மற்றும் பிற இடங்களில் இருந்த அன்னம் குளம், ஆறு, கடல் போன்ற நீர்நிலைகளில் உள்ள மீன்கள் மற்றும் நீர்வாழ் உயிரினங்களுக்கு உணவாகப் போடப்படுகிறது. இதன் மூலம் உலகிலுள்ள அனைத்து உயிர்களும் பசியின்றி வாழ வேண்டும் என்ற உன்னத நோக்கம் நிறைவேறுகிறது. மற்றும் நீர் நிலைகளில் அன்னம் கரைக்கப்படுவதால் ஊரில் விளைச்சல் அதிகரிக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
அன்னாபிஷேகப் பலன்கள்:

அன்னாபிஷேகத்தில் சேர்க்கப்படும் ஒவ்வொரு அரிசியும் ஒரு லிங்கமாகக் கருதப்படுவதால், அன்னாபிஷேகத்தைத் தரிசனம் செய்வது என்பது கோடி லிங்கங்களைத் தரிசனம் செய்த பலன் கிட்டும்.
அன்னாபிஷேக நாளில் சிவபெருமானைத் தரிசிப்பதால் நம் வாழ்நாளில் உணவுப் பஞ்சம் (வறுமை) ஏற்படாது. விவசாயம் செழித்து, நாடு சுபிட்சம் அடையும்.
கிரக தோஷங்கள் நீங்கி, குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும்.
பித்ரு தோஷம் மற்றும் சாபங்கள் போன்றவையும் நீங்கும்.
நீண்ட நாட்களாகக் குழந்தைப் பேறு இல்லாத தம்பதிகள்
அன்னாபிஷேகத்தைக் கண்ணாரக் கண்டு பிரசாதம் உண்டால் குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது ஐதிகம்.
அன்னாபிஷேகப் பிரசாதத்தை உண்பதால் தோற்றப் பொலிவும், தன்னம்பிக்கையும் கை வரப் பெறும். அன்னாபிஷேகம் குறைவின்றி நடந்தால் அந்த வருடம் முழுவதும் நல்ல விளைச்சல் இருக்கும், ஊர் செழிக்கும், கலைகள் வளரும், மக்கள் மகிழ்ச்சியோடு இருப்பார்கள் என்பது நம்பிக்கை. சிவபெருமானுக்கு உகந்த அன்னத்தைக் கொண்டு அபிஷேகம் செய்யும் இந்த உன்னத நாளில், உணவின் முக்கியத்துவத்தையும்,
அதனை நமக்கு வழங்கும் இறைவனின் பெருங்கருணையையும் நினைவூட்டுகிறது. இந்நன்னாளில் நம்மால் இயன்ற அளவு ஏழை எளியோருக்கு உணவு வழங்கி, சிவபெருமானின் அருளினைப் பெறுவோம்.
அன்னாபிஷேகத்தைத் தரிசனம் செய்வோம்..!! அளவற்ற புண்ணியம் பெறுவோம்…!!!


Leave a comment
Upload