தொடர்கள்
தொடர்கள்
எங்க வாத்யார் – 17 -சுதாங்கன்

20180313160101517.jpg


"காய்கறியில் வரும் வருமானம் பலருக்குத் தெரிவதில்லை" என்று ஆரம்பித்தார்

எங்க வாத்யார் எஸ்.பாலசுப்ரமணியன்.

"அதாவது தோட்டமே இல்லாத ப்ளாட் வீடுகளில் கூட பத்து தொட்டிகளை வைத்து
வீட்டுக்கு தேவையான கத்திரிக்காய், தக்காளி போன்ற காய்கறிகளை வளர்க்க
முடியும் என்பதைச் செய்து காட்டிக் கொண்டிருக்கிறேன். அதற்குத் தேவையான
எல்லாப் பொருட்களையும் நான் கொடுக்கிறேன். பூச்செடிகளுக்காக
வருகிறவர்கள், கூடவே காய்கறிச் செடிகளையும் என்னிடம் வாங்குகிறார்கள்.
இதற்காகத்தான் பூச்செடிகள்!"

"காய்கறி பயிர் செய்வதில் வருமானம் குறைவு என்பார்களே?!"


"அது முற்றிலும் தவறான கருத்து. காய்கறியின் வருமானம் பலருக்குத்
தெரியாமலே இருக்கிறது. இந்த ஒட்டுரகக் காய்கறி விவசாயம் நல்லமுறையில்
கவனித்து பயிர் செய்தால் நல்ல லாபம் உண்டு. மற்ற விவசாயத்தைவிட அதிக
லாபம் உண்டு என்று என்னால் நீருபிக்க முடியும். ஆனால், இதில் மிகவும்
பயமுறுத்தக் கூடியது விதைகளின் விலை தான். சில காய்கறிகளில் ஒரு
ஏக்கருக்கு விதை மட்டும் 1,600 ரூபாய்க்கு மேல் ஆகும். உதாரணமாக,
குடமிளகாய் பயிரிட்டால் முதல் ரூபாய் வருமானம் வருவதற்குள் ஏக்கருக்கு
பத்தாயிரம் ரூபாய்வரை செலவு செய்ய வேண்டியிருக்கும். தக்காளிக்கு,
பன்னிரெண்டாயிரம் ரூபாய் ஆரம்பச் செலவு! ஆனால் போட்ட முதலீட்டுக்கு ஏற்றபடி

நல்ல லாபமும் வரும். ஏதாவது இயற்கைக் கோளாறினால் பூச்சியினால் முழு விவசாயமும்
கெட்டுப் போய் நாலில் ஒரு பங்கு காய்த்தால் கூட கவலையே வேண்டாம். நாம்
போட்ட பணம் வந்துவிடும். அந்த அளவுக்கு வீரிய ஒட்டு ரகக் காய்கறிகளில்
நல்ல லாபம் உண்டு. இதைப் புரிந்து கொண்டுதான் இரண்டு வருடங்களுக்கு
முன்பு, அரசாங்க விவசாய இலாக்கா ஒட்டுரகக் காய்கறி பயிர் செய்பவர்களுக்கு
சலுகை அளிப்பதாக அறிவித்தது. ` பாதி விலையில் விதைகளை கொடுக்கிறோம்’
என்று சில திட்டங்கள் கொண்டு வந்தார்கள். ஆனால் இங்கேயும் இதன் முழு
அளவுச் செலவையும் புரிந்து கொள்ளாமல் திட்டம் அறிவித்தார்கள். விதையைப்
பாதி விலையில் கொடுப்பது மிகவும் நல்ல தர்மம். ஆனா வங்கிக் கடன் ஒரு
ஏக்கருக்கு மூவாயிரத்திலிருந்து நாலாயிரம் வரைதான் கொடுக்க
முன்வந்தார்கள். இந்தப் பணத்தை வைத்துக் கொண்டு ஒன்றும் செய்ய முடியாது.
ஒட்டுரகக் காய்கறிகள் பயிரிட்டால் குறைந்த பட்சம் ஏக்கருக்கு ஒன்பதாயிரம்
ரூபாய் வரை செலவாகும். இதில் பாதிப் பணத்தை மட்டும் கொடுத்தால் அரைக்
கிணறுதான் தாண்ட முடியும். விவசாயத்தில் – தாண்டினால் முழுவதுமாக தாண்ட
வேண்டும். பாதி செலவு செய்துவிட்டு, பாதி கத்திரிக்காயை எடுத்துக் கொள்ள
முடியாது. முழுச் செலவு செய்தே ஆகவேண்டும். மற்றொன்றையும் கவனிக்க
வேண்டும். காய்கறிப் பண்ணை, நகரத்திலிருந்து இருபத்தைந்து அல்லது முப்பது
மைல்களுக்குள் தான் இருக்க வேண்டும். வெகு தொலைவு கிராமங்களில் பண்ணை
அமையக் கூடாது. ஏனென்றால், காய்கறிகளை நகருக்கு கொண்டு வரும், வண்டிச்
சத்தமே எல்லா வருமானத்தையும் விழுங்கிவிடும்!"

"இங்கே காய்கறிகள் விலை ஒரே சீராக இருப்பது இல்லையே ஏன் ?"

"காய்கறிகளைப் பாதுகாக்க நல்ல கிடங்கு வசதிகள் இல்லாதது தான் பெரிய பிரச்னை ! ஒரு
உதாரணத்துக்கு வத்தலகுண்டு பகுதியை எடுத்துக் கொள்வோம். இந்த வருடம்
மழை குறைவாக இருந்ததால், அமோகமான தக்காளி விளைச்சல். விவசாயிகள் கூடை
கூடையாகத் தக்காளியை கொண்டு வந்து மொத்த வியாபாரிகளிடம் குவிக்கிறார்கள்.
சரக்கு அதிகமாக வந்திருப்பதனால் விலை குறைகிறது. ஏலம்
விட்டுக்கொண்டிருக்கிறார் வியாபாரி! அந்த விவசாயி தலையில் கையை
வைத்துக்கொண்டு 'இந்தக் காயைப் பறித்து கூடையில் போட்டு இங்கு கொண்டு
வர வண்டிச் சத்தம் கொடுத்ததே என் கைக்கு வரப்போவதில்லை! இனி ஊருக்கு திரும்பி
போவதற்குக் கூட என் கைக்காசைத்தான் செலவு செய்ய வேண்டும்' என்று வருந்திக்
கொண்டிருக்கிறார். சீசன் இல்லாத சமயமோ இதே கூடை இருபது ரூபாய் என்று விலை
போகிறது.

இந்த அரசு ` பசுமைப் புரட்சி’ என்று பேசுவதோடு சரி! அங்கு
நல்லதொரு பெரிய cold storage கொண்டு வந்து உருளைக்கிழங்கு, தக்காளி
என்று வருடம் முழுவது பயன்படக்கூடிய காய்கறிகளைப் பாதுகாத்து அரசாங்கமே
கொஞ்சம் கொஞ்சமாக சீராக வினியோகிக்கலாம். அமெரிக்காவில் ஜனவரி 1 ந்தேதி
தக்காளிக்கு ஒரு விலை நிர்ணயம் செய்துவிட்டால், டிசம்பர் 31 ந்தேதி வரை
அதே விலைதான்! அந்த அளவுக்கு அற்புதமான cold storage வசதிகள்! அதே
மாதிரி இங்கும் செய்ய முடியும். நான் பிப்ரவரி மாதம் தக்காளியை மொத்த
விலைக்கு கிலோ ஒரு ரூபாய்க்குக் கொடுத்தேன். கடையில் ஒண்ணரை ரூபாய்க்கு
விற்றார்கள். இன்று அதை விட மட்டரகமான தக்காளி ஐந்து ரூபாய்!(இந்த பேட்டி

1989ம் வருடம் எடுத்தது என்பதை விகடகவி வாசகர்கள் நினைவில் கொள்க!) இன்றைக்கு
குடமிளகாய் விலை பன்னிரெண்டு ரூபாய் ! இரண்டு மாதத்திற்கு முன் விலை
இரண்டு ரூபாய். இப்படி விலையில் மிகவும் விளையாடி, ஏழை விவசாயிகளின்
வயிற்றில் அடிக்கிறோம். விளைபொருளுக்கு வருடம் முழுவதும் சீரான விலை
கிடைக்க அரசு ஆங்காங்கே குளிர்சாதன கிடங்குகள் தொடங்கி, பதப்படுத்திக் கொடுக்கலாம்
அல்லவா? அப்படி செய்யாதது தான் மிகவும் வருத்தப்பட வேண்டிய விஷயம்.

"பல விஷயங்களை உங்கள் தந்தையிடமிருந்து தெரிந்த கொண்டதாக இந்த பேட்டியின்
ஆரம்பத்தில் குறிப்பிட்டீர்கள். விவசாயமும் அவர் மூலமாக கற்றுக் கொண்டதுதானா ?

"ஒரு விதத்தில் அவர்தான் காரணம். தந்தை ஆரம்பத்தில் சின்ன சின்னதாகப் பல
வியாபாரங்கள் செய்து வந்தார். விளம்பரங்களை சேகரித்து
பத்திரிகைகளுக்குக் கொடுத்து கமிஷன் பெறுவார். நாவல்கள் எழுதினார்.
பிரசுரகர்த்தர்களிடம் போய் ப்ரூஃப் திருத்திக் கொடுப்பார். பிறகு ஜெமினி
ஃபிலிம் சர்க்யூட்டைத் துவக்கி சினிமா வினியோகத்தில் இறங்கினார். பிறகு
1940ல் ஜெமினி ஸ்டூடியோ வாங்கினார். படமெடுக்க ஆரம்பித்தார். அதன் பிறகு
நடந்ததெல்லாம் ஏற்கெனவே சொல்லிவிட்டேன். ஜெமினி ஸ்டுடியோ ஆரம்பித்த போது
நடந்த ஒரு சுவையான சம்பவம் சொல்லவேண்டும். ஜெமினி ஸ்டூடியோ ஒரு
ஞாயிற்றுக் கிழமை மாலை 5 மணிக்கு ராகு காலத்தில் துவக்கப்பட்டது! ஒருவர்
'என்ன சரியான ராகு காலத்தில் துவக்குகிறீர்களே?' என்று தந்தையிடம்
கேட்டார். அதற்கு என் தந்தை சொன்ன பதில் என்ன தெரியுமா ?"

சஸ்பென்ஸாக நிறுத்தினார் எங்க வாத்யார்.

( தொடரும்)