தொடர்கள்
பொது
"போயஸ் கார்டனில் உள்ள என் சாதனைச் சான்றிதழ், கேடயம் வேண்டும்!"-ஊட்டி பிரசாத்.

20180313100755675.jpg சாதனை புரிய வேண்டும் என்பதற்கே பிறந்த மாதிரி தன் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கிறார் ஊட்டியை சேர்ந்த 31 வயது பிரசாத். பிரசாத் ஒரு ஆட்டோ ஓட்டுநர் என்பது குறிப்பிடத்தக்கது

அண்மையில் காந்தல் பகுதியில் உள்ள மைதானத்தில் ஐம்பது பைக்குகளை தன் கரத்தில் ஏற்றி இறக்கி பின் கழுத்தில் கடப்பாரை சப்போர்ட் கொடுத்து மாருதி வேனை தள்ளி ஒரு சாதனையை நீலகிரி எஸ் .பி . முரளி ரம்பா முன்னிலையில் நிகழ்த்திக் காட்டினார் இந்த பிரசாத் .

" சிறு வயதில் இருந்தே எதாவது சாதனை புரியவேண்டும் என்று புட் பால் , கேரம் போர்டு , வாலி பால் , கிரிக்கெட் விளையாடி வந்தேன். ஆனால் அதில் எந்த சாதனையும் செய்யமுடியவில்லை " என்று கூறும் பிரசாத், “2004 ஆம் ஆண்டு கும்பகோணம் பள்ளி தீ விபத்து என்னை ரொம்பவே பாதித்துவிட்டது . அந்த பிஞ்சு குழந்தைகளின் ஆன்மா சாந்தியடைய ஊட்டி புனித சூசையப்பர் மேல் நிலை பள்ளியில் 24 மணிநேரம் நிறுத்தாமல் (Non stop)சைக்கிள் ஓட்டி சாதனை புரிந்தேன். இதற்கு மிக உதவி புரிந்த தலைமை ஆசிரியர் டென்னிஸ் அடிகளாரை மறக்கமுடியாது , அது தான் என் முதல் சாதனை" என்கிறார் .

"அந்த சாதனையை எம் .எல் .ஏ எச் .எம் .ராஜு மற்றும் சுற்றுலா அலுவலர் சிவசங்கரன் முன்னிலையில் செய்தேன் . அந்த அலுவலர் ஒருலட்சம் ரூபாய் அப்துல் கலாம் கையால் பெற்றுத் தருகிறேன் என்று கூறி வருடங்கள் ஓடிவிட்டது தான் மிச்சம்” என்கிறார் .

20180313101509432.jpg

37 கிலோ காஸ் சிலிண்டரை தலைமுடியில் கட்டித் தூக்கியது , வாகனங்களை தலை முடியில் கட்டி இழுத்தது என பல சாதனைகள் புரிந்த பிரசாத் 2005 ஆம் ஆண்டு லயன்ஸ் கிளப் துணையுடன் 401 ஸ்ட்ராக்களை வாயில் வைத்து சாதனை நிகழ்த்தியுள்ளார் .1986 ஆம் வருடம் பெங்களூரை சேர்ந்த டி.எம் . திருமூர்த்தி என்பவர் 400 ஸ்ட்ராக்களை வாயில் வைத்து சாதனை புரிந்ததை முறியடித்தார் பிரசாத் . 2009 ஆம் வருடம் நீலகிரியில் ஏற்பட்ட புயல் நிலச்சரிவில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் 800 கிலோ எடை கொண்ட மாருதி காரை தன் தலைமுடியால் கட்டி இழுத்துள்ளார்!.

"2010 ஆம் ஆண்டு உலக வன நாள் மற்றும் நீர் நாள் சுற்றுசூழல் பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்த ஈரோடு ஐயாகண்ணு என்பவர் நாற்பதுஆயிரம் மரக்கன்றுகளை நட்டார். அவரைக் கவுரவிக்க ஊட்டியில் இருந்து ஈரோட்டுக்கு சைக்கிளில் சென்று சித்தார்த்தா பள்ளி தலைமை ஆசிரியர் கௌஸ் முன்னிலையில் ஐயாகண்ணுவை பாராட்டினேன்" என்கிறார் பிரசாத் .

லிம்கா புக் ஆப் ரெகார்டஸ் க்கு 2007 சுதந்திர தின விழாவில் அன்றைய கலெக்டர் சந்தோஷ் கே மிஸ்ரா முன்னிலையில் 700 ஸ்ட்ராக்கள் வாயில் வைத்து சாதனை நிகழ்த்தியுள்ளார் .

20180313101154927.jpg

பின்னர் இந்தியன் புக்ஸ் ஆப் ரெகார்டஸ்க்கு கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் முன் 710 ஸ்ட்ராக்களை வாயில் வைத்து 25 கிலோ எடையை பல்லில் கடித்து தூக்கி சாதனை படைத்த பிரசாத்தின் சான்றிதழ் மற்றும் கேடயம் கிடைக்கப் பெற்று, அதை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தன் கரத்தால் வழங்க இருந்தாராம். ஆனால் அந்தச் சான்றிதழ்க் கேடயம் போயஸ் கார்டனில் காத்திருக்க, பலமுறை அதைப் பெற எடுத்த முயற்சிகள் பலன் அளிக்கவில்லையாம் . முதல்வரும் இறந்து போக இன்னும் தன் கைக்குச் சாதனை சான்றிதழ் கேடயம் வந்துசேரவில்லை . இன்னும் அதற்காக முயற்ச்சி எடுத்துக் காத்துக்கொண்டிருக்கிறார் இந்த சாதனை நாயகன் .

மும்பை குண்டுவெடிப்பு மற்றும் மதநல்லிணக்கம், நிஷா புயல் பாதிப்பிற்காக ஊட்டி அரசு பள்ளி மைதானத்தில் எட்டு மணிநேரம் ஒரே பெடலில் சைக்கிள் ஓட்டி சாதனை புரிந்துள்ளார் .

20180313101241455.jpg

இரண்டு கண்ணுக்குள் காயின் வைத்து பல்லால் பளு தூக்குவது. ஒண்டர் வேர்ல்ட் ரெகார்ட் சாதனைக்கு ஊட்டி படகு இல்லத்தில் உள்ள 12 டன் டாய் ட்ரைனை இழுத்துள்ளார் பிரசாத் .

20180313101928388.jpg

இப்படித் தொடர்ந்து சாதனைகளை செய்து வரும் பிரசாத் உலக சாதனை நிகழ்த்திய பின் தான் திருமணம் என்கிறார் . எப்படியாவது கின்னஸ் சாதனை நிகழ்த்த வேண்டும் என்று ஆவலாக இருக்கிறார்.

நீங்கள் செய்யும் இந்த அசாதாரண சாதனைகளால் உடல் நலம் பாதிக்கப்படுகிறதா? என்று கேட்க, "சே அப்படியெல்லாம் இல்லை மன உறுதி மற்றும் ஆண்டவனின் அருள் இருப்பதால் தான் இந்த சாதனைகளை நிகழ்த்தி வருகிறேன்" என்கிறார் பிரசாத் கூலாக.

இவரின் தாய் கமலா, "ஒரு பக்கம் மகனின் சாதனை பெருமையான ஒன்று அதே வேளையில் பயம் கவலை உண்டு!" என்கிறார்.

" எது எப்படியோ என் உலக சாதனை கட்டாயம் நடக்கும். அதே வேளையில் போயஸ் கார்டனில் உள்ள என் சான்றிதழ் மற்றும் கேடயம் எனக்கு வேண்டும்” என்று ஆவலாக இருக்கிறார் இந்தச் சாதனை நாயகன் .

20180313102017814.jpg

இந்த சான்றிதழ் தான் போயஸ் கார்டனில் உள்ளது .

- ஸ்வேதா அப்புதாஸ்.